என் மலர்
திருவாரூர்
- பா.ஜ.க.விடம் தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்தவர் இ.பி.எஸ்.
- கொடுத்த காசுக்கு மேல் கூவுகிறார் இ.பி.எஸ். என பா.ஜ.க.வினரே பேச ஆரம்பித்துள்ளனர்.
திருவாரூர்:
திருவாரூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி, புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:
* அ.தி.மு.க.வை மீட்க முடியாதவர் தமிழ்நாட்டை மீட்க போகிறாராம்.
* பா.ஜ.க.விடம் தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்தவர் இ.பி.எஸ்.
* துரோகம் செய்வது மட்டும்தான் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்தது.
* ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்தவர் இ.பி.எஸ்.
* தன்னை ஆட்சிக்கு கொண்டு வந்தவர்களுக்கே துரோகம் செய்தவர் இ.பி.எஸ்.
* கீழடி என்றால் கீழே படுத்து செல்வது மட்டும்தான் இ.பி.எஸ்.-க்கு தெரியும்.
* பா.ஜ.க.வின் ஒரிஜினல் குரலாக பேச ஆரம்பித்து விட்டார் இ.பி.எஸ்.
* பழனியாண்டவர் கல்லூரியில் புதிய கட்டிடத்தை மயக்கத்தில் போய் திறந்து வைத்தாரா இ.பி.எஸ்.
* கொடுத்த காசுக்கு மேல் கூவுகிறார் இ.பி.எஸ். என பா.ஜ.க.வினரே பேச ஆரம்பித்துள்ளனர்.
* தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் பறித்தவர்களுடன் கூட்டணி வைத்துவிட்டு எப்படி பயணம் மேற்கொள்கிறார் இ.பி.எஸ்.
* கோவில் பணத்தில் கல்லூரி கட்டுவது அறநிலையத்துறை சட்டத்திலேயே உள்ளது. இது தெரியாமல் எப்படி முதல்வராக இருந்தார் இ.பி.எஸ்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருவாரூர் என்றாலே திருவாரூர் தேரும், கலைஞர் கருணாநிதியும் தான் நினைவுக்கு வருவார்கள்.
- தி.மு.க. ஆட்சியில் வளர்ச்சியும், மகிழ்ச்சியும் கரைபுரண்டு ஓடும்.
திருவாரூர்:
திருவாரூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி, புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:
* வேளாண்மையும் கலையும் செழித்து வளரும் திருவாரூர் மண்ணில் கலைஞரின் கொள்கை வாரிசாக விழாவில் பங்கேற்கிறேன்.
* திருவாரூர் என்றாலே திருவாரூர் தேரும், கலைஞர் கருணாநிதியும் தான் நினைவுக்கு வருவார்கள்.
* தொட்ட துறையில் எல்லாம் வெற்றி பெற்று தொலைநோக்கு பார்வையால் நவீன தமிழகத்தை உருவாக்கியவர் கலைஞர்.
* மற்ற மாவட்டங்களில் உங்களில் ஒருவன் என பேசும் என்னை திருவாரூர் மக்கள் மட்டும் எங்களில் ஒருவன் என அழைக்கின்றனர்.
* தம்பிமார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்கள் என அண்ணா கூறுவார்.
* அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உயரத்தில் மட்டுமல்ல அவரது செயல்பாடுகளாலும் உயர்ந்து நிற்கிறார்.
* செய்தி சேனல் வளர்ச்சியை டிஆர்பி மதிப்பை வைத்து சொல்வது போல் தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியை டி.ஆர்.பி. ராஜாவை வைத்து சொல்லலாம்.
* 22 ஆண்டுகள் ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை நவீன முறையில் புதுப்பித்து இயங்க வைத்தவர் கலைஞர்.
* தி.மு.க. ஆட்சியில் வளர்ச்சியும், மகிழ்ச்சியும் கரைபுரண்டு ஓடும்.
* திருவாரூரில் 2.37 லட்சம் பேர் மகளிர் உரிமை தொகை பெற்று வருகின்றனர்.
* தமிழகத்தில் தொழில்துறை தலைநிமிர்ந்து நிற்கிறது.
* ஓடாத ஆழித்தேரை ஓட வைத்தவர் கலைஞர் கருணாநிதி.
* திருவாரூரில் சிப்காட் வளாகங்கள் அமைக்கும் முயற்சிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
* திருவாரூரில் மட்டும் இதுவரை ரூ.143 கோடி பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது.
* நன்னிலம், பட்டாம்பாளையத்தில் புதிதாக மாதிரி பள்ளி அமைக்கப்படும்.
* திருவாரூரில் பழமை வாய்ந்த ஜூபிலி மார்க்கெட்டில் ரூ.11 கோடி மதிப்பில் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும்.
* மன்னார்குடியில் புதிய அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும்.
* திருத்துறைப்பூண்டியில் நெல் ஜெயராமனுக்கு திருவுருவச் சிலை நிறுவப்படும்.
* திருவாரூரில் வாய்க்கால், நீர் மதகுகள் உள்ளிட்டவை 43 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்படும்.
* இடையூறாக இருக்கும் மத்திய அரசையும் சமாளித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- சில வீடுகளில் முதலமைச்சருக்கு தேனீர், இனிப்பு கொடுத்து மக்கள் வரவேற்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை வருகை தந்தார். தொடர்ந்து, திருவாரூர் பவித்திரமாணிக்கம் பகுதியில் இருந்து ரோடு-ஷோவாக சென்று மக்களை சந்தித்து, அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, ரெயில்வே மேம்பாலம் அருகில் நிறுவப்பட்டுள் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், இரவு சன்னதி தெருவில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்தார்.
அதனைத் தொடர்ந்து, இன்று காலை அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆயத்தமானார். அப்போது திடீரென சன்னதி தெருவில் 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள ஒவ்வொரு வீடுகளுக்கு நடந்தே சென்ற முதலமைச்சர் மக்களிடம் தி.மு.க. அரசின் சாதனை எடுத்துக்கூறி, பரப்புரையில் ஈடுபட்டார். எதிர்பாராத விதமாக திடீரென முதலமைச்சர் தங்களது வீட்டிற்கு வந்ததும் செய்வதறியாத பொதுமக்கள் ஆனந்த பெருக்குடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது மக்களிடம் சகஜமாக பேசிய முதலமைச்சர், வீட்டில் கை குழந்தையுடன் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து குழந்தையை வாங்கி கொஞ்சி மகிழ்ந்தார். மேலும், சில வீடுகளில் முதலமைச்சருக்கு தேனீர், இனிப்பு கொடுத்து மக்கள் வரவேற்றனர். சன்னதி தெரு முழுவதும் நடந்தே சென்று பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் அரசு நலத்திட்ட உதவிகள் நடைபெறும் விழா இடத்திற்கு புறப்பட்டார்.
- திருவாரூர் ரெயில் நிலையம் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்.
- பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 9 மற்றும் 10-ந்தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதற்காக 9-ந்தேதி காலை அவர் சென்னையில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்டு திருச்சி செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு கலைஞர் கோட்டத்தில் ஓய்வெடுக்கிறார்.
மாலை அங்கிருந்து புறப்பட்டு காட்டூர் செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கு அவருடைய பாட்டி அஞ்சுகம் நினைவகத்தில் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.
பின்னர், அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் ரெயில் நிலையம் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள செல்லும் முதலமைச்சருக்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
அங்கு நடைபெறும் ரோடு ஷோ நிகழ்ச்சியிலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் நடந்து சென்று அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொள்கிறார்.
9-ந்தேதி இரவு திருவாரூரில் தங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10-ந்தேதி காலை திருவாரூர் புதிய பஸ் நிலையம் அருகே நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு திருவாரூரில் இருந்து சாலை மார்க்கமாக திருச்சி விமான நிலையம் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
- அடுத்த முறை அவர்கள் சிறப்பாக உற்சாகத்துடன், ஊக்கத்துடன் பணிபுரிய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- கோட்டூர், கொரடாச்சேரி, நன்னிலம், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான-2025 ஆண்டுக்கான அடைவு தேர்வு குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் மாவட்டத்தில் உள்ள 370 தலைமை ஆசிரியர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சவுந்தர்ராஜன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்திற்கு பிறகு, தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் எந்த பாடத்தில் திறன் குறைந்து இருக்கிறார்கள்? என்பதை ஆய்வு செய்து, அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை வைத்து மாவட்டம் முழுவதும் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 8-வது மாவட்டமாக திருவாரூரில் இன்று குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பகுதியை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களை நேரடியாக வரவழைத்து, அடுத்த முறை அவர்கள் சிறப்பாக உற்சாகத்துடன், ஊக்கத்துடன் பணிபுரிய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாநில அடைவு திறனாய்வு மூலம் ஒவ்வொரு பள்ளிக்கும் பிராகரஸ் ரிப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக கோட்டூர், கொரடாச்சேரி, நன்னிலம், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும், முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் இதனை செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மகனை பள்ளியில் விடுவதற்காக சிவகணேஷ் தனது மோட்டார் சைக்கிளில் அமரேசை அழைத்து சென்றார்.
- விபத்து குறித்து மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராவணன் குட்டை தெருவை சேர்ந்தவர் சிவகணேஷ். கேபிள் தொழில் செய்து வருகிறார்.
இவரது மகன் அமரேஷ் (வயது 13). இவர் மன்னார்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலையில் மகனை பள்ளியில் விடுவதற்காக சிவகணேஷ் தனது மோட்டார் சைக்கிளில் அமரேசை அழைத்து சென்றார்.
மோட்டார் சைக்கிள் மன்னார்குடி ருக்மணிகுளம் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாரதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர்.
அப்போது பள்ளி மாணவன் அமரேஷ் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார். சிவகணேஷ் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவகணேசை மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் பலியான அமரேஷ் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளியில் விடுவதற்காக அழைத்து சென்ற போது விபத்தில் சிக்கி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கடந்த ஆண்டு கிலோ ரூ.81-க்கு கொள்முதல் செய்யப்பட்ட பருத்தி, இன்று அதிகபட்சமாக ரூ.52-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
- மேட்டூர் அணை குறிப்பிட்ட தேதியில் திறந்தும் இதுவரை திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை.
திருவாரூர்:
பருத்தி விவசாயிகளுக்கு ஆதரவாகவும், பருத்தி ஏலத்தில் உள்ளூர் ஏஜெண்டுகளின் நடவடிக்கையை தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் தி.மு.க. அரசை கண்டித்தும் திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ரெயில் நிலையம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர்கள் கோபால், சிவா.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஒரு கிலோ பருத்தியை ரூ.100-க்கு கொள்முதல் செய்ய வேண்டும், அனைத்து ஏஜெண்டுகளையும் பருத்தி ஏலத்தில் பங்கேற்க வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின் முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
டெல்டா பகுதிகளில் பருத்தி செடிகள் இளம் பயிராக இருந்தபோது 2 முறை பருவம் தவறி பெய்த மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டது. தற்போது பருத்தி சாகுபடி முடிவடைந்துள்ள நிலையில் பருத்தி பஞ்சுகளுக்கு உரிய விலை இல்லை எனக்கூறி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஆண்டு கிலோ ரூ.81-க்கு கொள்முதல் செய்யப்பட்ட பருத்தி, இன்று அதிகபட்சமாக ரூ.52-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் நடைபெறும் பருத்தி ஏலங்களில் கோவை, ஈரோடு போன்ற பெருநகரங்களில் உள்ள பஞ்சு மில் உரிமையாளர்களின் முகவர்கள் கலந்து கொள்வதில்லை. திருவாரூரை சுற்றியுள்ள இடைத்தரகர்களை வைத்தே ஏலம் விடப்படுகிறது.
இதனை கண்டித்தும், பருத்தி விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திருவாரூரில் இன்று ஆர்ப்பாட்டத்தை அ.தி.மு.க. நடத்தியது. இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடவாசல் பகுதியில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் அதிகபட்சமாக கிலோ ரூ.71-க்கு விலை போனது.
மேட்டூர் அணை குறிப்பிட்ட தேதியில் திறந்தும் இதுவரை திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை. மின் கட்டணம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகள் துரிதமாக நடைபெறுவதில்லை. கொள்முதல் செய்யப்படும் நெல்லும் பாதுகாப்பான முறையில் இருப்பு வைக்கப்படுவதில்லை. விவசாயிகளின் பிரச்சனைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைவது மட்டும் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வருகிற 9-ந்தேதி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் வருகை தருகிறார்.
- கூட்டணி கட்சியினர் ஏதாவது பிரச்சனை என்றால் முதலமைச்சரிடம் தெரிவிப்பார்கள்.
திருவாரூர்:
திருவாரூர் தி.மு.க. மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் பிஎல் 2 பாக நிலை முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, சட்டமன்ற உறுப்பினர் பூண்டி. கலைவாணன் உள்ளிட்ட ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற 9-ந்தேதி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் வருகை தருகிறார். 9 மற்றும் 10-ம் தேதி திருவாரூருக்கு வருகை தந்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
கூட்டணி கட்சியினர் ஏதாவது பிரச்சனை என்றால் முதலமைச்சரிடம் தெரிவிப்பார்கள். உடனடியாக அதனை முதலமைச்சர் சரி செய்து வைப்பார்.
கட்சி தலைமையை பொறுத்தவரை ஆங்காங்கே கட்சியில் இருப்பவர்கள் அங்குள்ள பிரச்சனைகளை கூறுவார்கள். அதனை முதலமைச்சர் உடனடியாக சரி செய்து வைப்பார். தோழமை கட்சியினர் முதலமைச்சர் உடன் இணக்கமான முறையில் உள்ளனர்.
சிவகங்கை காவலாளி மரணம் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர்.
- போலீசார் பணத்தை கைப்பற்றி அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கீரனூர் சோதனை சாவடியில் போலீசார் காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதியில் இருந்து வெளிமாநில மதுபானம் கடத்தி வரப்படுகிறதா? என்பது குறித்து தினசரி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர்.
அதில் பயணித்த பயணி ஒருவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அந்த பையில் ரூ.20 லட்சம் இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த பணத்தை கைப்பற்றி அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அவர் தஞ்சாவூர் மாவட்டம் கோலாலம் பள்ளம் பகுதியை சேர்ந்த முகமது யூனுஸ் என்பதும், அவரிடம் ரூ.20 லட்சத்தை திருவாரூரை சேர்ந்த நபர் ஒருவர் கொடுத்து அனுப்பியதும் தெரியவந்தது.
மேலும் முகமது யூனுஸ் வீட்டிற்கு வந்து ஒருவர் குறியீடு ஒன்றை வழங்குவார் என்றும், அதனை பெற்றுக்கொண்டு அந்த நபரிடம் பணத்தை தர வேண்டும் என்றும் தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து முகமதுயூனுசை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருவனந்தபுரத்தில் இருந்து ஆம்னி வேனில் வேளாங்கண்ணிக்கு புறப்பட்டனர்.
- விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருத்துறைப்பூண்டி:
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து நாகை மாவட்டம், வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வருவதற்காக நண்பர்களான சாஜிநாத், சாபு, சுஜித், ராஜேஷ், ராகுல், ரெஜினேஷ் மற்றும் ஒருவர் முடிவு செய்தனர்.
அதன்படி, அவர்கள் திருவனந்தபுரத்தில் இருந்து ஆம்னி வேனில் வேளாங்கண்ணிக்கு புறப்பட்டனர். ஆம்னி வேனானது இன்று அதிகாலை திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கருவேப்பஞ்சேரி என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் எதிரே நாகப்பட்டினத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் வேனில் பயணித்த சாஜிநாத், ராஜேஷ், சுஜித், ராகுல் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், உள்ளே இருந்த 3 பேர் படுகாயத்துடன் சாலையில் கிடந்துள்ளனர். இதனை கண்ட அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, அங்கே வந்தவர்கள் அனைவரையும் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான 4 பேரின் உடல்கள் திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எடையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் நடந்த இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கருண் கரட், முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த நண்பர்கள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மின் கசிவு ஏற்பட்டு கடை முழுவதும் தீ பிடித்த எரிய தொடங்கியது.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் துர்காலயா சாலையை சேர்ந்த மகாலிங்கம் மகன் அசோக்குமார். இவர் எல்லையம்மன் கோவில் சன்னதி தெருவில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இந்த நிலையில் நள்ளிரவில் திடீரென கடையில் வைக்கப்பட்டிருந்த யு.பி.எஸ் பேட்டரியில் மின் கசிவு ஏற்பட்டு கடை முழுவதும் தீ பிடித்த எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் கடை முழுவதும் மளமளவென பற்றி எரிந்தது.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர்.
இதில் பெரும்பாலான தங்க நகைகள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்ததால் தப்பித்தது. இருந்தாலும் கடை ராக்கரில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், பொருட்கள் தீயில் உருகி சேதமானது என்று நகைக்கடை உரிமையாளர் தெரிவித்தார்.
இந்த தீ விபத்து குறித்த புகாரின் பேரில் திருவாரூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தலைமை பீடமாகவும் பெரிய கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
- நீண்ட வரிசையில் நின்று பாத தரிசனம் செய்து வருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் தியாகராஜர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் பெரிய கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த மாதம் 15 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் ஆழி தேரோட்டம் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது.
இந்தநிலையில் பங்குனித் திருவிழாவின் அடுத்த முக்கிய நிகழ்வான தியாகராஜர் இடதுபாத தரிசனம் அருளும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று பாத தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு முசுகுந்த சகஸ்ரநாம அர்ச்சனை, மகாஅபிசேகம், நடராஜன் அபிசேகம் ஆகியவை நடைபெற்றது. பாத தரிசனத்தை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்: கருண் கரட் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






