என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • படிக்கட்டில் அமர்ந்து குளித்த கவியரசன் திடீரென கால் தடுமாறி ஆற்றுக்குள் விழுந்தார்.
    • எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் மாங்கனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே திருநாட்டியாத்தங்குடி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மாங்கனி (வயது 39). இவரது கணவர் கலியபெருமாள். இவர் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

    மாங்கனி சம்பவத்தன்று தனது வீட்டிற்கு எதிரில் உள்ள வெள்ளையாற்று தடுப்பணை பகுதியில் வழக்கம் போல் காலை குளிப்பதற்காக சென்றுள்ளார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியன்-சத்தியகலா தம்பதியின் மகன் ஹேம்சரண் (10), பெரும்புகலூர் பகுதியை சேர்ந்த கலியபெருமாளின் மகன் கவியரசன் (11) ஆகியோர் குளிப்பதற்காக ஆற்றுக்கு வந்துள்ளனர்.

    இதில் படிக்கட்டில் அமர்ந்து குளித்த கவியரசன் திடீரென கால் தடுமாறி ஆற்றுக்குள் விழுந்தார். அப்போது அவர் அருகில் இருந்த ஹேம்சரணின் கையைப் பிடித்துள்ளார். இதனால் ஹேம்சரணும் ஆற்றுக்குள் விழுந்துவிட்டார். இதில் 2 பேரும் ஆற்று நீரில் சிக்கி தத்தளித்தனர். இதனை கண்ட மாங்கனி உடனடியாக ஆற்றில் குதித்து இருவரையும் காப்பாற்ற முயற்சி செய்தார்.

    ஆனால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் இருவரையும் அவரால் கரைக்கு கொண்டு வர முடியவில்லை. இருப்பினும் அவர் தனது உயிரை பணயம் வைத்து சிறுவர்கள் இருவரையும் மேடான பகுதிக்கு இழுத்து வந்து கூச்சலிட்டார்.

    அப்போது அவ்வழியாக சென்ற சிலர் இவரது கூச்சல் சத்தத்தை கேட்டு அங்கு ஓடிவந்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதில் கவியரசன் ஆற்றுநீரை குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதையடுத்து அவர் உடனடியாக ஆம்புலன்சில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் இருக்கிறார்.

    இதையடுத்து துணிச்சலாக செயல்பட்டு ஆற்றில் குதித்து தனது உயிரை பணயம் வைத்து 2 சிறுவர்களையும் காப்பாற்றிய மாங்கனியை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர். மேலும் அவரது செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    இந்த சம்பவம் குறித்து அறிந்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளபக்கத்தில் மாங்கனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், "பிறருக்கொரு துயரெனில் முன்னின்று காப்பது தமிழர்களின் இயல்பு, பண்பு. அப்பண்பின் தைரியமிகு இலக்கணமாய் திகழும் சகோதரி மாங்கனிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்" என பதிவிட்டுள்ளார்.

    • ஒவ்வொரு கட்சியும் அவர்களது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
    • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூரில், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அ.தி.மு.க. 210 தொகுதிகளில் வெற்றி பெறும் என்பது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கை. ஒவ்வொரு கட்சியும் அவர்களது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. அதில் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை. அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையனின் பதவியில் பறிக்கப்பட்டது உட்கட்சி பிரச்சினை.

    வருகின்ற 13-ந்தேதி திருச்சியில் இருந்து தனது அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கும் த.வெ.க. தலைவர் விஜய்-க்கு வாழ்த்துக்கள் என்றார்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. போதை பழக்கம் தமிழகத்தில் அதிகமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த வேண்டும். தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றவில்லை. தற்போது அனைத்து விலைவாசியும் உயர்ந்து விட்டது. தங்கம் விலை, சொத்து வரி உள்பட அனைத்தும் உயர்ந்து விட்டது. இதையெல்லாம் மத்திய, மாநில அரசுகள் சேர்த்து குறைக்க வேண்டும்.

    ஜெயலலிதா ஆளுமை மிக்க தலைவர். ஒரு பெண் தலைவர் எனது 'ரோல் மாடல்' என நான் பலமுறை ஜெயலலிதாவை சொல்லி இருக்கிறேன். எடப்பாடி பழனிசாமியும் கடந்த ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டார். ஆனால், அவர் முதலமைச்சராக மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவருக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்களிடம் தே.மு.தி.க.விற்கு எழுச்சி மிகுந்த வரவேற்பு கிடைக்கிறது.
    • தே.மு.தி.க.வுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது.

    திருவாரூர்:

    "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற பெயரில் தே.மு.தி.க. பிரசாரத்தை கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி உள்ளார்.

    இந்த பிரசாரத்தின் ஒரு பகுதியாக விஜயகாந்த் நினைவாக கேப்டன் ரதயாத்திரை நடைபெற்று வருகிறது. அதன்படி  திருவாரூரில் பிரேமலதா விஜயகாந்த் பிரசார பயணம் மேற்கொண்டார்.

    அப்போது அவர் பழைய பஸ் நிலையத்தில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அவர் ரோடுஷோ மேற்கொண்டார். இதில் அவர் கடைவீதி, நேதாஜி ரோடு, கீழவீதி வரை நடந்து சென்றார். அவருக்கு வழி நெடுகிலும் தே.மு.தி.க. தொண்டர்கள், பெண்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர்.

    மேலும் பெண்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் முரசை அடித்து தொண்டர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.

    அதனைத்தொடர்ந்து அவர் அங்கு கூடியிருந்து பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று கொண்டிருக்கிறோம்.

    அங்கெல்லாம் மக்களிடம் தே.மு.தி.க.விற்கு எழுச்சி மிகுந்த வரவேற்பு கிடைக்கிறது.

    வருகிற 2026-ம் ஆண்டு தே.மு.தி.க.விற்கான காலம். அப்போது நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும். நீங்கள் விரும்பும் கூட்டணியை அமைத்து வெற்றி பெறுவோம்.

    கேப்டன் விஜயகாந்த் நம்முடன் தான் இருக்கிறார். நம்முடைய உணர்விலும், உள்ளத்திலும் என்றும் இருக்கிறார். அவரது சொத்து தமிழக மக்கள் தான். சந்திரகிரகணம் இன்று இரவு (அதாவது நேற்று) பிடிக்கிறது என்கிறார்கள்.

    அதுபோல் அரசியலில் யார் யாருக்கு கிரகணம் பிடிக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    தே.மு.தி.க.வுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது. 2026-ல் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி வைக்கிறதோ அவர்கள் தான் தமிழகத்தில் ஆட்சி அமைப்பார்கள்.

    வருகிற ஜனவரி மாதம் 9-ந் தேதி கடலூரில் நடைபெற உள்ள தே.மு.தி.க. மாநாட்டில் தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    திருவாரூருக்கு நான் வந்தவுடன் பொதுமக்கள் நேரடியாக என்னிடம் வந்து ரோடு வசதி இல்லை, ரெயில் வசதி இல்லை, படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை என குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

    இவையெல்லாம் 2026-ல் களையப்படும். இன்றிலிருந்து தே.மு.தி.க.வின் 2.0 கவுண்ட்டவுன் ஆரம்பித்து விட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கோவில் இடத்தை காணவில்லை என்பதை தாண்டி இப்போது கோவில் மாட்டையும் காணவில்லை.
    • தேர்தலில் அனைவரும் இதயத்தில் இருந்து கொஞ்சம், மூளையில் இருந்து கொஞ்சம் யோசித்து வாக்களிக்க வேண்டும்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் நேற்று மாலை நடைபெற்ற விநாயகர் ஊர்வல விசர்ஜன நிகழ்ச்சியில் பா.ஜ.க. கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள ஏரி, குளங்களில் தண்ணீர் வற்றிவிட்டது. விநாயகரை கரைப்பதற்கு கூட சென்னையில் தண்ணி லாரி கொண்டு வந்து குளத்தில் தண்ணீர் நிரப்பி கரைக்க வேண்டி இருக்கிறது.

    எனவே, இளைஞர்கள் இதனை ஒரு சபதமாக ஏற்று முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரி மேம்படுத்த வேண்டும். ஊருக்கு 100 இளைஞர்கள் இப்பணியில் ஈடுபட வேண்டும்.குளங்களை பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

    இந்து அறநிலையத்துறை தனது பணியை ஒழுக்கமாக செய்தால் தமிழ்நாடு பட்ஜெட்டுக்கு கோவில் வருமானம் மட்டும் போதும். இந்து அறநிலையத்துறையின் நடவடிக்கை அதள பாதாளத்தில் உள்ளது. இன்று சுமார் ஒரு லட்சம் ஏக்கர் கோவில் நிலம் காணாமல் போய்விட்டது. திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான மாடுகள் தானமாக தரப்பட்டது. அதில் ஒரு மாட்டையும் காணவில்லை.

    கோவில் இடத்தை காணவில்லை என்பதை தாண்டி இப்போது கோவில் மாட்டையும் காணவில்லை. தமிழ்நாட்டில் உள்ள 46 ஆயிரம் கோவில்களில் ஒருகால பூஜை கூட பெரும்பாலான கோவில்களில் நடக்கவில்லை.

    வருங்காலத்தில் இந்து அறநிலையத்துறை என்கிற துறை இருக்கவே கூடாது. எனவே, இந்த தேர்தலில் அனைவரும் இதயத்தில் இருந்து கொஞ்சம், மூளையில் இருந்து கொஞ்சம் யோசித்து வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டு திருமண வேலைகள் முழுவீச்சில் நடந்து வந்தன.
    • காதலனை கரம்பிடிக்க பச்சைக்கொடி காட்டி விட்டதால் அமிர்தாவும் திருமண நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வரம்பியம் ஊராட்சி கிழக்கு தெருவை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி சித்ரா. இவர்களுடைய மகள் அமிர்தா (வயது 30). எம்.எஸ்சி. பட்டதாரி. புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா மாத்தூரை சேர்ந்த தனக்கோடி- விஜயா தம்பதியின் மகன் சஞ்சய்குமார் (32). பி.பி.ஏ. பட்டதாரி.

    இவர்கள் 2 பேரும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அமிர்தா, சஞ்சய்குமாரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் சஞ்சய்குமார் வீட்டில் காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    திடீர் திருப்பமாக கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சஞ்சய்குமார் குடும்பத்தை சேர்ந்த சிலரும், அமிர்தாவின் குடும்பத்தாரும் கலந்து பேசி 27.8.2025 அன்று (நேற்று) நாகை மாவட்டம் எட்டுக்குடியில் உள்ள முருகன் கோவிலில் வைத்து சஞ்சய்குமார்- அமிர்தா திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.

    இதற்காக அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டு திருமண வேலைகள் முழுவீச்சில் நடந்து வந்தன. காதலனை கரம்பிடிக்க பச்சைக்கொடி காட்டி விட்டதால் அமிர்தாவும் திருமண நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தார்.

    சஞ்சய்குமார் மற்றும் குடும்பத்தினர் திருமணத்துக்காக நேற்று முன்தினம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணமகளின் வீட்டுக்கு வருவதாக கூறி இருந்தனர். ஆனால் அவர்கள் நேற்று முன்தினம் இரவு வரை வரவில்லை. திருமண நாள் வந்து விட்ட நிலையில் மணமகன் குடும்பத்தார் யாரும் வராததால் அதிர்ச்சி அடைந்த அமிர்தா, சஞ்சய்குமாரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது, செல்போன் சுவிட்ச் ஆப் என வந்தது.

    இதனால் பதற்றம் அடைந்த அவர் மணமகனின் சகோதரிகளிடம் பேசியபோது, உறவினர்கள் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சஞ்சய்குமாரை எங்கேயோ அழைத்துச் சென்று விட்டதாக தெரிவித்தனர். சஞ்சய்குமார் திடீரென மாயமானது அமிர்தா மற்றும் குடும்பத்தினரை மிகுந்த பதற்றத்துக்குள்ளாக்கியது.

    இதுதொடர்பாக அமிர்தாவின் சகோதரர்கள் கண்ணன், கார்த்தி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கருண் கரட்டிடம் புகார் தெரிவித்தனர். அவர், உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் கிராமத்துக்கு சென்று விசாரித்தபோது சஞ்சய்குமாரை உறவினர்கள் அழைத்துச்சென்றது தெரியவந்தது. நேற்று அதிகாலை கமுதியில் உள்ள உறவினர்கள் வீட்டில் சஞ்சய்குமார் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். அங்கிருந்து அவரை போலீசார் அழைத்து வந்து அவருடைய காதலி அமிர்தா வீட்டில் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து திருத்துறைப்பூண்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நேற்று மதியம் சஞ்சய்குமாருக்கும், அமிர்தாவுக்கும் முறைப்படி திருமணம் நடந்தது.

    கட்சியின் மாவட்ட செயலாளர் முருகையன், மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் காரல் மார்க்ஸ், நகர செயலாளர் கோபு, சி.ஐ.டி.யூ. பொறுப்பாளர் முரளி ஆகியோர் முன்னிலையில் சஞ்சய்குமார், அமிர்தாவின் கழுத்தில் தாலி கட்டினார்.

    திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்துக்கு சென்று தஞ்சம் அடைந்தனர். அங்கு மணமக்கள் அளித்த புகாரில், 'வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதன் காரணமாக திருமணத்துக்கு எதிர்ப்பு உள்ளதால் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்' என கூறி உள்ளனர்.

    துணை போலீஸ் சூப்பிரண்டு பவுனியா, இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் புகாரை பெற்றுக்கொண்டு இருதரப்பையும் அழைத்து சமாதானம் பேசினர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சண்முகம் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, 'தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணங்கள் செய்துகொள்ள தனி ஏற்பாடு இல்லை. எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம்.

    காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கின்றன' என கூறினார். இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் காதல் ஜோடியின் திருமணம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • இன்று காலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
    • கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு மாணவர்கள் மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த ஆலங்குடி பூனாயிருப்பு கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம்வகுப்பு வரை மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் இன்று காலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அதனை மாணவர்கள் சாப்பிட்டனர். அப்போது சில மாணவர்கள் சாம்பாரில் பல்லி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் ஆசிரியர்களிடம் கூறினர்.

    இதையடுத்து காலை உணவை சாப்பிட்ட 8 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களை ஆசிரியர்கள் ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு மாணவர்கள் மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார்.
    • கடந்தாண்டு மோசமான வானிலை காரணமாக ஜனாதிபதியின் வருகை கடைசி நேரத்தில் ரத்தானது.

    திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா வருகிற செப்டம்பரில் நடைபெற உள்ளது.

    செப்டம்பர் 3-ந்தேதி நடைபெறும் 10-வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பார் என தமிழ்நாடு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்க உள்ளார்.

    கடந்தாண்டு மோசமான வானிலை காரணமாக ஜனாதிபதியின் வருகை கடைசி நேரத்தில் ரத்தான நிலையில் இந்த ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
    • முதலமைச்சருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.

    "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    அந்த வகையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

    அப்போது எடப்பாடி பழனிசாமி கூறுகையில்," மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரண நலம் பெற என் சார்பாகவும், மக்கள் சார்பாகவும் பிரார்த்திக்கிறேன்" என கூறினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்டபோது லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. இதனால் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • விவசாயிகளுக்கு எவ்வளவு இடம் வைத்திருந்தாலும், சேதம் இருந்தாலும் ஒழுங்காக கணக்கிட்டு இழப்பீடு தந்தது அதிமுக அரசு.
    • திருவாரூரில் நான் தங்கியிருந்த ரூமில் அடிக்கடி மின்வெட்டு, திமுக ஆட்சியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது இயல்பே.

    மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    அந்த வகையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அதிமுக ஆட்சியில் தான் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை எல்லாம் முறையாக அதிகாரிகளை நியமித்து முழுமையாக தூர்வாரினோம்.

    விவசாயிகளுக்கு அதிமுக அரசு செய்த நன்மைகளை திமுக அரசு முடக்கிவிட்டது.

    குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டத்தில் இடம்பெற செய்யவில்லை.

    12,000 கோடி ரூபாய் வரை விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டம் மூலம் இழப்பீடு பெற்றுத்தந்தது அதிமுக அரசு.

    விவசாயிகளுக்கு எவ்வளவு இடம் வைத்திருந்தாலும், சேதம் இருந்தாலும் ஒழுங்காக கணக்கிட்டு இழப்பீடு தந்தது அதிமுக அரசு.

    திருவாரூரில் நான் தங்கியிருந்த ரூமில் அடிக்கடி மின்வெட்டு, திமுக ஆட்சியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது இயல்பே.

    18,000 நெல் மூட்டைகள் திறந்த வெளியில் அடிக்கி உள்ளதாக செய்தி பார்த்தேன், மழை வந்தால் வீணாகிவிடும்.

    அதிமுக ஆட்சியில் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்து உரிய பணத்தையும் தந்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மு.க.ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4.38 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளனர்.
    • 2026 தேர்தலில் எங்களது கூட்டணி வெற்றி பெறும், அ.தி.மு.க. தலைமையில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்று ஆட்சி அமையும்.

    திருத்துறைப்பூண்டி:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' பிரசார பயணத்தை நேற்று (சனிக்கிழமை) இரவு திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொண்டார். அப்போது திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    திருத்துறைப்பூண்டி நகரம் குலுங்கும் அளவுக்கு மக்கள் கூட்டம் உள்ளது. எப்போது பார்த்தாலும் கூட்டணி..கூட்டணி.. என்று கூட்டணியை நம்பி இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் கூடியுள்ள கூட்டமும், மக்கள் முகத்தில் உள்ள எழுச்சியை பார்க்கும்போதே அ.தி.மு.க.வுக்கு வெற்றியின் அறிகுறி தெரிகின்றது.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் விவசாய தொழிலாளர்களுக்கு பசுமை வீடுகளை கொடுத்தோம், முதியோர் உதவித்தொகையை அதிகமாக கொடுத்தோம், விவசாய தொழிலாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்திற்கு சரியான நேரத்தில் பணம் வந்து கிடைத்தது. ஆனால், இந்த தி.மு.க. ஆட்சியில், மு.க.ஸ்டாலின் 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்துவோம் என்றார். ஆனால், அந்த 100 நாள் வேலை திட்டம், தற்போது 50 நாளாக குறைந்துவிட்டது. வேலை பார்த்தவர்களுக்கு சம்பளம் கூட கொடுக்கப்படவில்லை. அதன் பின்னர் நான் 100 நாள் வேலை செய்கின்ற ஏழைகளுக்கு தேவையான நிதியை விடுவியுங்கள் என மத்திய மந்திரியிடம் கோரிக்கை விடுத்தேன். அதன் பின்னர் ரூ.2 ஆயிரத்து 995 கோடி நிதி ஒதுக்கிடப்பட்டது.

    மு.க.ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4.38 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளனர். இன்னும் ஒரு லட்சம் கோடி கடன் வாங்கவும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். அதையும் வாங்கினால் ரூ.5 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் ஆகிவிடும். இந்தியாவில் கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம், அம்மா மினி கிளினிக் திட்டம் உள்ளிட்ட அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தி விட்டார்கள். மீண்டும் அ.தி.முக. ஆட்சி அமைந்ததும் இந்த திட்டம் தொடரும்.

    இதையெல்லாம் இங்கு இருக்கின்ற கம்யூனிஸ்டுகள் கேட்க மாட்டார்கள். மக்கள் பிரச்சனை வந்தால் முதலில் எதிர்த்து குரல் கொடுப்பது கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால், இன்று தி.மு.க.வை எதிர்த்து கம்யூனிஸ்டுகள் போராடுவதில்லை. 4 வருடத்தில் கம்யூனிஸ்டுகள் ஏதேனும் போராட்டம் நடத்தி உள்ளார்களா? பருத்தி விலை குறைவாக சென்றதற்கு முத்தரசன் ஏன் போராட்டம் நடத்தவில்லை? என்றார்.

    பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததை விமர்சனம் செய்கின்றனர். கூட்டணி வைத்தால் என்ன தவறு? ஏற்கனவே, தி.மு.க.-பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததா இல்லையா? நீங்கள் கூட்டணி வைத்தால் பா.ஜ.க. நல்ல கட்சி, ஆனால் நாங்கள் கூட்டணி வைத்தால் மதவாத கட்சி என்பதா?.

    இந்த நியாயத்தை கேட்காமல், கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை, காங்கிரஸ் கட்சிகள் தி.மு.க.வுக்கு மத்தளம் தட்டிக் கொண்டிருக்கின்றனர். பா.ஜ.க.வுடன் நாங்கள் கூட்டணி வைத்ததுமே தி.மு.க.வும், கூட்டணி கட்சிகளும் அச்சம் அடைந்துவிட்டன. எங்களுக்கு தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும், அதற்கு ஒன்று சேர்ந்து வருகின்ற கட்சிகளை இணைத்து கூட்டணி அமைத்துள்ளோம்.

    எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வுக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பாரான்னு கேட்கிறார்கள். ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல. அ.தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

    எங்கள் கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும் வேண்டாம் என்றால் வேண்டாம். எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. தி.மு.க.வை போல் வாரிசுக்காக ஆட்சிக்கு வர நினைக்கவில்லை. மக்கள் விருப்பத்திற்காக மட்டுமே ஆட்சிக்கு வர நினைக்கிறோம். தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் ஓரணியில் திரள வேண்டும்.

    2026 தேர்தலில் எங்களது கூட்டணி வெற்றி பெறும், அ.தி.மு.க. தலைமையில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்று ஆட்சி அமையும். இன்னும் சில கட்சிகள் இந்த கூட்டணியில் வந்து இணைய உள்ளனர். இந்த சட்டமன்ற தேர்தலில் யார் ஆட்சிக்கு வர வேண்டும்? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

    ஆட்சிகாலம் முடிவடைய உள்ள நிலையில், 'உங்களுடன் ஸ்டாலின்' என வீடு, வீடாக தி.மு.க.வினர் சென்று வருகின்றனர். மக்களின் பிரச்சனைகள் 45 நாட்களில் தீர்த்து வைக்கப்படும் என்கிறார்கள். 4 ஆண்டு காலமாக இந்த பிரச்சனை இருப்பதாக தெரிந்து கொண்ட நீங்கள் ஏன் தீர்த்து வைக்கவில்லை? சதுரங்க வேட்டை படத்தில் சொல்வதை போல ஏழை மக்களின் ஆசையை தூண்டி மீண்டும் ஆட்சிக்கு வர 'உங்களுடன் ஸ்டாலின்' போன்ற திட்டங்களை அறிவித்து ஆட்சிக்கு வர தி.மு.க.வினர் துடிக்கிறார்கள். மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியை அகற்றி ஒரு குடும்பப் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்போம், மக்களை காப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிச் சிறுமியை போதை ஆசாமி தூக்கிட்டுப் போகிறான்.
    • குற்றவாளிக்கு அச்சம் இல்லை. சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை.

    மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப் பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் பேருந்து நிலையத்தில் கூடியிருந்த மக்களிடம் உரை நிகழ்த்தினார்.

    அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    அதிமுக அரசு உங்க அரசு, அது உங்க கட்சி. அதிமுக நன்மை செய்யும் கட்சி, திமுக கொள்ளையடிக்கும் கட்சி. இன்றைக்கு சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைபொருள், கஞ்சா இல்லாத இடமே இல்லை.

    திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிச் சிறுமியை போதை ஆசாமி தூக்கிட்டுப் போகிறான். குற்றவாளிக்கு அச்சம் இல்லை. சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை. அப்பா என்று சொல்கிறார். பிள்ளை கதறும்போது எங்கே போனார் அப்பா? அப்பானு சொன்னால் மட்டும் போதுமா? இதுவரை அவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

    நான் வேண்டுமென்றே வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்கிறேன் என்கிறார், நான் பொய் சொல்கிறேனா..? உண்மைதான் பேசுகிறேன். நல்லாட்சியை நாங்கள் மீண்டும் கொடுப்போம். நன்னிலம் தொகுதியில் நிறைய திட்டம் அதிமுக ஆட்சியில் கொடுத்திருக்கிறோம். நன்னிலம் அரசு கலைக்கல்லூரி, குடவாசல் கலைக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, பேருந்து நிலையம், தூர் வாரும் பணிகள், நெல் சேமிப்பு கிடங்குகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், பாலங்கள் என நிறைய கொடுத்திருக்கிறோம். உங்களுக்குதான் ஒண்ணும் தெரியாதே, பொம்மை முதல்வரே.

    நன்னிலம் உணவு பதப்படுத்தும் பூங்கா, அரசி ஆலை, புதிய ஊராட்சி ஒன்றியம், புறவழிச்சாலை, தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனை தரம் உயர்த்தல் என நிறைய கோரிக்கைகள் கூறியிருக்கிறீர்கள். அதிமுக ஆட்சி அமைந்ததும் செய்துகொடுப்போம்.

    மீண்டும் ஆட்சி அமைக்கப்போவது அதிமுக, மிரண்டு ஓடப்போவது திமுக. மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    • ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால் மதகுகள் மற்றும் நீர் ரெகுலேட்டர்கள் ஆகியவை ரூ.43 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
    • நெல் ஜெயராமனின் அரும்பணியை போற்றும் வகையில் திருத்துறைப்பூண்டியில் அவருக்கு நினைவுச்சிலை அமைக்கப்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு:-

    திருவாரூர் மாவட்டத்தில் பழமைவாய்ந்த ஜூபிலி மார்க்கெட் பகுதியில் ரூ.11 கோடி செலவில் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும். மாணவர்கள் பயன்பெறும் வகையில் நன்னிடம் வட்டம், வண்டாம்பாலை ஊராட்சியில் ரூ.56 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் திருவாரூர் மாவட்ட மாதிரி பள்ளி புதிதாக அமைக்கப்படும்.

    மாணவிகள் பயன்பெறும் வகையில் மன்னார்குடி நகராட்சியில் ரூ.18 கோடி செலவில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிதாக அமைக்கப்படும். ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால் மதகுகள் மற்றும் நீர் ரெகுலேட்டர்கள் ஆகியவை ரூ.43 கோடி செலவில் புனரமைக்கப்படும். பூந்தோட்டம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புறவழிச்சாலை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

    பாரம்பரிய நெல் ரகங்களை தனது வாழ்நாள் முழுவதும் பேணி பாதுகாத்த நெல் ஜெயராமனின் அரும்பணியை போற்றும் வகையில் திருத்துறைப்பூண்டியில் அவருக்கு நினைவுச்சிலை அமைக்கப்படும்.

    மேற்கண்ட அறிவிப்புகள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    ×