என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விநாயகர் சிலைகளை கரைப்பதுடன் நீர்நிலைகளை தூர்வாரி மேம்படுத்த வேண்டும்- அண்ணாமலை வேண்டுகோள்
- கோவில் இடத்தை காணவில்லை என்பதை தாண்டி இப்போது கோவில் மாட்டையும் காணவில்லை.
- தேர்தலில் அனைவரும் இதயத்தில் இருந்து கொஞ்சம், மூளையில் இருந்து கொஞ்சம் யோசித்து வாக்களிக்க வேண்டும்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் நேற்று மாலை நடைபெற்ற விநாயகர் ஊர்வல விசர்ஜன நிகழ்ச்சியில் பா.ஜ.க. கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள ஏரி, குளங்களில் தண்ணீர் வற்றிவிட்டது. விநாயகரை கரைப்பதற்கு கூட சென்னையில் தண்ணி லாரி கொண்டு வந்து குளத்தில் தண்ணீர் நிரப்பி கரைக்க வேண்டி இருக்கிறது.
எனவே, இளைஞர்கள் இதனை ஒரு சபதமாக ஏற்று முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரி மேம்படுத்த வேண்டும். ஊருக்கு 100 இளைஞர்கள் இப்பணியில் ஈடுபட வேண்டும்.குளங்களை பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
இந்து அறநிலையத்துறை தனது பணியை ஒழுக்கமாக செய்தால் தமிழ்நாடு பட்ஜெட்டுக்கு கோவில் வருமானம் மட்டும் போதும். இந்து அறநிலையத்துறையின் நடவடிக்கை அதள பாதாளத்தில் உள்ளது. இன்று சுமார் ஒரு லட்சம் ஏக்கர் கோவில் நிலம் காணாமல் போய்விட்டது. திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான மாடுகள் தானமாக தரப்பட்டது. அதில் ஒரு மாட்டையும் காணவில்லை.
கோவில் இடத்தை காணவில்லை என்பதை தாண்டி இப்போது கோவில் மாட்டையும் காணவில்லை. தமிழ்நாட்டில் உள்ள 46 ஆயிரம் கோவில்களில் ஒருகால பூஜை கூட பெரும்பாலான கோவில்களில் நடக்கவில்லை.
வருங்காலத்தில் இந்து அறநிலையத்துறை என்கிற துறை இருக்கவே கூடாது. எனவே, இந்த தேர்தலில் அனைவரும் இதயத்தில் இருந்து கொஞ்சம், மூளையில் இருந்து கொஞ்சம் யோசித்து வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.






