என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விவசாயிகள் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைவது தான்- காமராஜ் பேட்டி
    X

    விவசாயிகள் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைவது தான்- காமராஜ் பேட்டி

    • கடந்த ஆண்டு கிலோ ரூ.81-க்கு கொள்முதல் செய்யப்பட்ட பருத்தி, இன்று அதிகபட்சமாக ரூ.52-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
    • மேட்டூர் அணை குறிப்பிட்ட தேதியில் திறந்தும் இதுவரை திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை.

    திருவாரூர்:

    பருத்தி விவசாயிகளுக்கு ஆதரவாகவும், பருத்தி ஏலத்தில் உள்ளூர் ஏஜெண்டுகளின் நடவடிக்கையை தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் தி.மு.க. அரசை கண்டித்தும் திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ரெயில் நிலையம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர்கள் கோபால், சிவா.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஒரு கிலோ பருத்தியை ரூ.100-க்கு கொள்முதல் செய்ய வேண்டும், அனைத்து ஏஜெண்டுகளையும் பருத்தி ஏலத்தில் பங்கேற்க வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு பின் முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்டா பகுதிகளில் பருத்தி செடிகள் இளம் பயிராக இருந்தபோது 2 முறை பருவம் தவறி பெய்த மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டது. தற்போது பருத்தி சாகுபடி முடிவடைந்துள்ள நிலையில் பருத்தி பஞ்சுகளுக்கு உரிய விலை இல்லை எனக்கூறி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடந்த ஆண்டு கிலோ ரூ.81-க்கு கொள்முதல் செய்யப்பட்ட பருத்தி, இன்று அதிகபட்சமாக ரூ.52-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் நடைபெறும் பருத்தி ஏலங்களில் கோவை, ஈரோடு போன்ற பெருநகரங்களில் உள்ள பஞ்சு மில் உரிமையாளர்களின் முகவர்கள் கலந்து கொள்வதில்லை. திருவாரூரை சுற்றியுள்ள இடைத்தரகர்களை வைத்தே ஏலம் விடப்படுகிறது.

    இதனை கண்டித்தும், பருத்தி விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திருவாரூரில் இன்று ஆர்ப்பாட்டத்தை அ.தி.மு.க. நடத்தியது. இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடவாசல் பகுதியில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் அதிகபட்சமாக கிலோ ரூ.71-க்கு விலை போனது.

    மேட்டூர் அணை குறிப்பிட்ட தேதியில் திறந்தும் இதுவரை திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை. மின் கட்டணம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகள் துரிதமாக நடைபெறுவதில்லை. கொள்முதல் செய்யப்படும் நெல்லும் பாதுகாப்பான முறையில் இருப்பு வைக்கப்படுவதில்லை. விவசாயிகளின் பிரச்சனைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைவது மட்டும் தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×