என் மலர்
திருநெல்வேலி
- 5 போலீஸ் நிலையங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்ட சுமார் 30 பேர் வரை தங்களது பற்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
- பற்களை பிடுங்கி காயம் ஏற்படுத்தியதாக சமூக வலைதளங்களில் தகவல்களும் பரப்பப்பட்டு வந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் குற்ற சம்பவங்கள் தொடர்பாக உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் விசாரணை நடத்தி வருகிறார்.
அவர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று அவர்களது பற்களை பிடுங்கி கொடூர செயலில் ஈடுபடுவதாக சமீபத்தில் சிலர் புகார் கூறினர். அவர் பற்களை பிடுங்கி காயம் ஏற்படுத்தியதாக சமூக வலைதளங்களில் தகவல்களும் பரப்பப்பட்டு வந்தது.
இதுவரையிலும் அம்பை சரகத்திற்கு உட்பட்ட அம்பை, கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம், பாப்பாக்குடி, அம்பை மகளிர் போலீஸ் உள்ளிட்ட 5 போலீஸ் நிலையங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்ட சுமார் 30 பேர் வரை தங்களது பற்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உதவி எஸ்.பி. பல்வீர் சிங் போலீஸ் விசாரணைக்கு வந்தவர்களின் பல்லை பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
- கடந்த 17-ந் தேதி பங்குனி பிரம்மோற்சவத்திற்கான கால்நாட்டு நடைபெற்றது.
- கருடக்கொடியானது சக்கரத்தாழ்வாருடன் சீவிலியில் 4 மாட ரத வீதிகளில் வலம் வந்தது.
நெல்லை:
பாளையில் 800 ஆண்டுகள் பழமையான ராஜகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 3 மூலவா்கள் அருள்பாலிக்கின்றனா்.
3 நிலைகளில் பெருமாள்
அஷ்டாங்க விமானத்தின் கீழ் சுதைச் சிற்பமாக சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேத அழகிய மன்னாரும், மூலஸ்தானத்தில் வேதவல்லி குமுதவல்லி சமேத வேதநாராயணரும், உற்சவராக ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபாலா் என 3 நிலைகளில் பெருமாள் அருள்பாலிக்கின்றாா்.
சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
பிரம்மோற்சவ கால்நாட்டு
அதன்படி கடந்த 17-ந் தேதி பங்குனி பிரம்மோற்சவத்திற்கான கால்நாட்டு நடைபெற்றது. அதனை தொடா்ந்து திருவிழாவிற்காக நேற்று இரவு அங்குரார்ப்பணம் நடைபெற்று, சேனை முதலியாா் புறப்பாடு நடைபெற்றது.
ரோகிணி நட்சத்திரமான இன்று அதிகாலை நடை திறந்ததும், விஸ்வரூப தரிசனம், திருமஞ்சனம் நடைபெற்றது. அா்த்த மண்டபத்தில் உற்சவா் ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபாலார் ராஜ அலங்காரத்தில் காட்சி கொடுத்தாா்.
கொடியேற்றம்
கருடக்கொடியானது சக்கரத்தாழ்வாருடன் சீவிலியில் 4 மாட ரத வீதிகளில் வலம் வந்தது. தொடா்ந்து கொடிமரத்திற்கும், கொடிப் பட்டத்திற்கும் பூஜைகள் நடைபெற்று, வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.
தொடா்ந்து மாபொடி, மஞ்சள், வாசனைபொடி, பால், தயிா், இளநீா், தேன், சந்தனம் மற்றும் நவகும்ப கலசத்தால் திருமஞ்சனம் நடைபெற்றது. கொடி மரத்திற்கு பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று நிறைவாக கோபுர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. உற்சவருக்கும், நட்சத்திர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
தேரோட்டம்
நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 11 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபாலா் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறுகின்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 5-ந்தேதி பங்குனி உத்திரத்தில் நடைபெறுகின்றது.
- கூட்டத்திற்கு கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
- கலெக்டர் அலுவலகத்தில் கிராமிய கலைஞர்களும் மனு அளித்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
சீவலப்பேரி அருகே உள்ள பாலாமடை இந்திரா நகரை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவனர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு ரேஷன் கார்டுகளுடன் வந்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் பால்பண்ணை கட்டி டத்தை இடிப்பது குறித்து அதே ஊரைச் சேர்ந்த இரு தரப்பினர் இடையே மோதல் இருந்து வருகிறது. இதற்கிடையே அப்பகுதியை சேர்ந்த சிலர், 25 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர்.
இவர்கள் பொது குழாயில் தண்ணீர் பிடிக்கவும், அங்குள்ள கடைகளில் பொருட்கள் வாங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் போலீஸ் நிலையம், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. ஓராண்டு ஆகிய நிலையில் இதுதொடர்பாக இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்து நாங்கள் எங்களது ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்துள்ளோம் என்றனர்.
அவர்களுடன் அதி காரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து இந்த விவ காரத்தில் நடவடிக்கை எடுக்காத போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து அவர்கள் பொதுமக்களுக்கு லட்டு வழங்கி நூதன முறையில் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
இதேபோல் கிராமிய கலைஞர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நெல்லை, பாளை வட்டத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் கிராமிய கலையில் நையாண்டி மேளம், கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு சொந்த வீடு இல்லை . எனவே அவர்களுக்கு இலவசமாக வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
- நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
- நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி மேம்பாட்டுப் பணிகளை விரைவாக முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின்பகிர்மான வட்டத்தின் ஆய்வு கூட்டம் நெல்லை மின் பகிர்மான வட்ட தலைமை அலுவலகத்தில் இன்று காலை நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருசாமி தலைமையில் நடைபெற்றது.
இதில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வன விலங்குகள் மின் பாதையில் தொடாமல் இருப்பதற்கு தேவைப்படும் இடங்களில் மின்பாதையின் உயரத்தை அதிகரிப்பதற்கு கள ஆய்வு செய்து உடனடியாக பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
கூட்டத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு தொடர்ந்து நடைபெற இருப்பதால் நெல்லை, தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தங்குதடையின்றி சீரான மின் விநியோகம் வழங்க அனைத்து அதிகாரி களுக்கும் உத்தரவிட்டார்.
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக முடிக்க உத்தரவு பிறப்பித்தார்.
கூட்டத்தில் நெல்லை மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் (பொது மற்றும் பொறுப்பு, கிராமப்புற கோட்டம்) வெங்கடேஷ்மணி, நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குட்டி, வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்னரசு, கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள், தென்காசி மற்றும் கடையநல்லூர் (பொறுப்பு) கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம், சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், மின் அளவி சோதனை பிரிவு செயற்பொறியாளர் ஷாஜஹான், மேற்பார்வை கட்டுப்பாடு மற்றும் தரவுகள் கையப்படுத்துதல் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு, உதவி செயற்பொறியாளர்கள் சைலஜா, முத்துசாமி, சண்முகராஜ், உதவி செயற்பொறியாளர் பேச்சிமுத்து மற்றும் மத்திய அலுவலக அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லு நர்கள் கலந்து கொண்டனர்.
- நெல்லை மாவட்டத்தில் இதுவரை 12 வழக்குகளில் 1,304 கிலோ கஞ்சா பிடிப்பட்டது.
- விஜயநாராயணம் அருகே உள்ள ஒரு பயோ மெடிக்கல் வேஸ்ட் ஆலையில் கஞ்சா தீ வைத்து அழிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கஞ்சா புழக்கத்தை ஒழிக்கும் வகையில் தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் மேற்பார்வையில் மாவட்டங்கள் தோறும் கஞ்சா விற்பனை செய்பவர்களை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி கைது செய்தனர்.
அதன்படி நெல்லை மாவட்டத்தில் இதுவரை 12 வழக்குகளில் 1,304 கிலோ பிடிப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.3.26 கோடி ஆகும்.
அவை இன்று நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் முன்னிலையில் விஜயநாராயணம் அருகே உள்ள ஒரு பயோ மெடிக்கல் வேஸ்ட் ஆலையில் தீ வைத்து பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டது.
அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- லிங்கதுரை தனது காரில் திருச்சியில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்றார்.
- வேகமாக சென்ற கார் அங்குள்ள மரத்தின் மீது மோதியது.
நெல்லை:
திசையன்விளை அருகே உள்ள இட்டமொழியை சேர்ந்தவர் வெள்ளதுரை. இவரது மகன் லிங்க துரை(வயது 28).
மரத்தில் மோதியது
இவர் தனது காரில் திருச்சியில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்றார். நேற்று அங்கிருந்து மீண்டும் காரில் இட்டமொழிக்கு திரும்பினார். அப்போது அவருடன் அவரது சகோதரியின் 6 வயது மகன் அமலேஷ் புறப்பட்டு வந்தார்.
நேற்று மதியம் நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் சிப்காட் அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து கீழே இறங்கியது. வேகமாக சென்ற கார் அங்குள்ள மான் பூங்கா அருகே மரத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் இடிபாட்டில் சிக்கி காரை ஓட்டி வந்த லிங்கதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதிர்ஷ்டவசமாக சிறுவன் அமலேஷ் காயமின்றி உயிர் தப்பினான்.
இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் கங்கைகொண்டான் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து இடிபாட்டுக்குள் சிக்கியிருந்த லிங்கதுரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பார்வதி அம்மன் கோவிலில் இருந்த 2 பித்தளை குத்துவிளக்குகளை காணாமல் போனது
- விசாரணையில் குத்துவிளக்குகளை திருடியது தங்கச்செல்வம் என்பது தெரியவந்தது.
நெல்லை:
பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பார்வதி அம்மன் கோவிலில் கடந்த 18-ந்தேதி 2 பித்தளை குத்துவிளக்குகளை காணாமல் போனது. இது தொடர்பாக பேட்டை அசோக் நகரை சேர்ந்த சக்திவேல் முருகன் (வயது 54) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் வள்ளியம்மாள் மற்றும் போலீசார் மர்மநபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் கோவிலில் குத்துவிளக்குகளை திருடியது பேட்டையை சேர்ந்த தங்கச்செல்வம் (39) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.5 ஆயிரம் மதிப்புடைய 2 பித்தளை குத்துவிளக்குகளை பறிமுதல் செய்தனர்.
- மாநில தலைவர் டாக்டர் சேம நாராயணன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
- 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
நெல்லை:
மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை வழங்காமல் தாமதப்படுத்துவதை கண்டித்து நெல்லை மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்கத்தினர் இன்று வண்ணார்பேட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்க மாவட்ட தலைவர் முருகானந்த வேளார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் அய்யப்பன், பொருளாளர் பிச்சாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில தலைவர் டாக்டர் சேம நாராயணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் தலையில் மண் பானையை சுமந்தபடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
கடந்த 2022-ம் ஆண்டு மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய மழைக்கால நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரம் இன்று வரை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லை. இந்த மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். மழைக்காலம் முடிந்தும் இன்று வரை அவர்களுக்கு பணம் வந்து சேரவில்லை. அதனை உடனடியாக வழங்கி எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
மின்சாரத்தால் இயங்கக்கூடிய மின்விசை சக்கரம் வழங்கிட வேண்டும். நாங்கள் மண்பாண்டங்கள் செய்வதற்கு களிமண் விரைவாக கிடைக்கவும், சூளை வைக்கும் இடத்திற்கு அடிமனை பட்டா வழங்கிடவும், தயார் செய்த சுட்ட மண்பாண்ட பொருட்களை விற்பனை செய்வதற்கு 150 சதுர அடி அளவுள்ள சிறிய இடத்தினை ஒதுக்கீடு செய்து தரவும் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கிறோம்.
மேலும் வீட்டு வசதி திட்டத்தின் மூலமாக கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.4 லட்சம் மானியம் வழங்கியது போல மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் ரூ.4 லட்சம் மானியம் வழங்க வேண்டும். மண்பாண்ட தொழிலை மேம்படுத்த தொழிற்பயிற்சி கூடம் அமைத்து தர வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆர்ப்பாட்டத்தில் துணைத் தலைவர்கள் மந்திரமூர்த்தி, அய்யப்பன், ஆறுமுகம், கவுரவ தலைவர் கணேசன், துணைச் செயலாளர்கள் மாரியப்பன், ஆறுமுகம், துரை, மாநகர செயலாளர் பேராட்சி செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முருகன், மணி, இளைஞரணி கார்த்தீசன் மற்றும் நிர்வாகிகள் முனியசாமி, கிருஷ்ணன் ராஜ், ஆனந்தராஜ், முத்துராமன், கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் தலையில் மண்பானையை சுமந்தபடி கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று மனு அளித்தனர்.
- பெருமாள் மற்றும் தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
- கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகளும் நடைபெற்றது.
களக்காடு:
களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவ திருவிழா விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு விழா முதல் நாளான இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றம்
இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, பெருமாள் மற்றும் தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பெருமாள் ஸ்ரீ பூமி, நீலா தேவியர்களுடன் முன் மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
அதன் பின் கோவில் கொடி மரத்தில் கருடன் படம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடை பெற்றது. முன்னதாக கொடிப் பட்டம் பல்லக்கில் வைக்கப்பட்டு, ரதவீதிகளில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருக்கல்யாணம்
இரவில் தோளுக்கினி யான் வாகனத்தில் எழுந்த ருளி வரதராஜபெருமாள் காட்சி அளிக்கிறார். திருவிழாவை முன்னிட்டு தினசரி பகலில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், இரவில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் திருவீதி உலா வருதலும் நடக்கிறது.
விழாவின் 5-ம் நாளான 31-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவில் 2 கருட வாகனங்களில் பெருமாளும், வெங்கடாஜல பதியும் உலா வருகின்றனர்.
7-ம் நாளான 2-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) மாலை 5 மணிக்கு திருக்கல்யாண விழா நடத்தப்படுகிறது. 8-ம் நாளான 3-ந்தேதி (திங்கட்கிழமை) இரவில் பெருமாள் குதிரை வாகனத்தில் திருவீதி உலா வருகிறார்.
தேரோட்டம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்ட விழா 10-ம் நாளான 5-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 11-ம் நாளான 6-ந் தேதி (வியாழக்கிழமை) தீர்த்தவாரி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழா மண்டகப்படிதாரர்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
- இடிந்தகரை கடற்கரையில் இருந்து சுமார் 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் நாட்டு படகு ஒன்று மிதந்து கொண்டு இருந்தது.
- மீனவர்கள் உதவியுடன் போலீசார் அந்த நாட்டு படகை மீட்டு வந்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் இடிந்தகரை கடற்கரையில் இருந்து சுமார் 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் நாட்டு படகு ஒன்று மிதந்து கொண்டு இருந்தது. அதில் மீனவர்கள் யாரும் இல்லை.
இதனை அப்பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பார்த்து கூடங்குளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் தலைமையிலான போலீசார் மீனவர்கள் உதவியுடன் அந்த நாட்டு படகை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அந்த படகில் லம்பாடி என்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. அதில் பதிவெண் எதுவும் எழுதப்படவில்லை.
கடற்கரையோர மாவ ட்டத்தில் கடலோரத்தில் கட்டப்பட்டிருந்த நாட்டு படகு ஏதேனும் கயிறு அறுந்து காற்றின் வேகத்தால் கடலுக்குள் இழுத்து வரப்பட்டதா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த படகின் மதிப்பு ரூ.3 லட்சம் என்று கூறப்படுகிறது.
- பற்களை பிடுங்கி காயம் ஏற்படுத்தியதாக சமூக வலைதளங்களில் தகவல்களும் பரப்பப்பட்டு வந்தது.
- 5 போலீஸ் நிலையங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்ட சுமார் 30 பேர் வரை தங்களது பற்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் குற்ற சம்பவங்கள் தொடர்பாக உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் விசாரணை நடத்தி வருகிறார்.
அவர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று அவர்களது பற்களை பிடுங்கி கொடூர செயலில் ஈடுபடுவதாக சமீபத்தில் சிலர் புகார் கூறினர். அவர் பற்களை பிடுங்கி காயம் ஏற்படுத்தியதாக சமூக வலைதளங்களில் தகவல்களும் பரப்பப்பட்டு வந்தது.
மேலும் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்காக சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலமை விசாரணை அதிகாரியாக அவர் நியமித்துள்ளார். சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட தகவல் உண்மை தன்மையை ஆராய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலும் இந்த விசாரணை நடைபெறும் எனவும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட கலெக்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் திட்டமிட்டிருந்தது. இதற்காக 2 நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்டவர்களை ஒன்று திரட்டி சிலர் விளக்கங்களை கேட்டனர். இந்நிலையில் நீதி விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
இதுவரையிலும் அம்பை சரகத்திற்கு உட்பட்ட அம்பை, கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம், பாப்பாக்குடி, அம்பை மகளிர் போலீஸ் உள்ளிட்ட 5 போலீஸ் நிலையங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்ட சுமார் 30 பேர் வரை தங்களது பற்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் தனது விசாரணையை இன்று முதல் தொடங்க உள்ளார். முதல்கட்டமாக அவர் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்துகிறார்.
அதன்பின்னர் போலீசாரிடம் விசாரணை நடத்திவிட்டு, உதவி போலீஸ் சூப்பிரண்டிடம் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- போராட்டத்தில் பங்கேற்ற கட்சியினர் அனைவரும் வாயில் கருப்பு துணி கட்டியிருந்தனர்.
- ராகுல்காந்தியின் பதவி நீக்கம் என்பது ஜனநாயக படுகொலைக்கு நிகரானது.
நெல்லை:
அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை தகுதிநீக்கம் செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
நெல்லையில் மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் தச்சநல்லூரில் உள்ள காந்தி சிலையிடம் மனு அளிக்கும் அறவழி மவுன போராட்டம் இன்று நடைபெற்றது.
மாநகர மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டார்.
போராட்டத்தில் பங்கேற்ற கட்சியினர் அனைவரும் வாயில் கருப்பு துணி கட்டியிருந்தனர்.
பின்னர் தனுஷ்கோடி ஆதித்தன், சங்கரபாண்டியன் ஆகியோர் காந்தி சிலையிடம் மனு அளித்தனர். இதில் பொதுச்செயலாளர் மகேந்திர பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் கவிபாண்டியன், சொக்க லிங்ககுமார், மண்டல தலைவர்கள் கெங்கராஜ், ராஜேந்திரன், பரணி இசக்கி மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போராட்டம் குறித்து முன்னாள் மத்தியமந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கூறியதாவது:-
ராகுல்காந்தி எம்.பி.யின் பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று அறவழியில் மவுன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அதானி குறித்து பாராளுமன்றத்தில் பேசவிடாமல் தடுப்பதற்காகவே ராகுல்காந்தியை பதவிநீக்கம் செய்துள்ளனர். எனவே எங்களின் மக்கள் போராட்டம் தொடரும்.
ராகுல்காந்தியின் பதவி நீக்கம் என்பது ஜனநாயக படுகொலைக்கு நிகரானது. அவர் இந்திய பிரதமர் ஆவதற்கு ஏதுவாக எங்களது இந்த போராட்டம் அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் தூத்துக்குடி 1-ம் கேட் காந்திசிலை முன்பு அறவழி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமை தாங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ. டேனியல்ராஜ் போராட்டத்தை தொடங்கிவைத்தார். மாநில துணை தலைவர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






