என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாளை ராஜகோபால சுவாமி கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெற்றதையும், தொடர்ந்து கொடிமரத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டதையும் படத்தில் காணலாம்.
பாளை ராஜகோபால சுவாமி கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம்
- கடந்த 17-ந் தேதி பங்குனி பிரம்மோற்சவத்திற்கான கால்நாட்டு நடைபெற்றது.
- கருடக்கொடியானது சக்கரத்தாழ்வாருடன் சீவிலியில் 4 மாட ரத வீதிகளில் வலம் வந்தது.
நெல்லை:
பாளையில் 800 ஆண்டுகள் பழமையான ராஜகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 3 மூலவா்கள் அருள்பாலிக்கின்றனா்.
3 நிலைகளில் பெருமாள்
அஷ்டாங்க விமானத்தின் கீழ் சுதைச் சிற்பமாக சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேத அழகிய மன்னாரும், மூலஸ்தானத்தில் வேதவல்லி குமுதவல்லி சமேத வேதநாராயணரும், உற்சவராக ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபாலா் என 3 நிலைகளில் பெருமாள் அருள்பாலிக்கின்றாா்.
சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
பிரம்மோற்சவ கால்நாட்டு
அதன்படி கடந்த 17-ந் தேதி பங்குனி பிரம்மோற்சவத்திற்கான கால்நாட்டு நடைபெற்றது. அதனை தொடா்ந்து திருவிழாவிற்காக நேற்று இரவு அங்குரார்ப்பணம் நடைபெற்று, சேனை முதலியாா் புறப்பாடு நடைபெற்றது.
ரோகிணி நட்சத்திரமான இன்று அதிகாலை நடை திறந்ததும், விஸ்வரூப தரிசனம், திருமஞ்சனம் நடைபெற்றது. அா்த்த மண்டபத்தில் உற்சவா் ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபாலார் ராஜ அலங்காரத்தில் காட்சி கொடுத்தாா்.
கொடியேற்றம்
கருடக்கொடியானது சக்கரத்தாழ்வாருடன் சீவிலியில் 4 மாட ரத வீதிகளில் வலம் வந்தது. தொடா்ந்து கொடிமரத்திற்கும், கொடிப் பட்டத்திற்கும் பூஜைகள் நடைபெற்று, வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.
தொடா்ந்து மாபொடி, மஞ்சள், வாசனைபொடி, பால், தயிா், இளநீா், தேன், சந்தனம் மற்றும் நவகும்ப கலசத்தால் திருமஞ்சனம் நடைபெற்றது. கொடி மரத்திற்கு பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று நிறைவாக கோபுர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. உற்சவருக்கும், நட்சத்திர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
தேரோட்டம்
நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 11 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபாலா் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறுகின்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 5-ந்தேதி பங்குனி உத்திரத்தில் நடைபெறுகின்றது.






