search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pottery workers"

    • மாநில தலைவர் டாக்டர் சேம நாராயணன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
    • 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

    நெல்லை:

    மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை வழங்காமல் தாமதப்படுத்துவதை கண்டித்து நெல்லை மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்கத்தினர் இன்று வண்ணார்பேட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்க மாவட்ட தலைவர் முருகானந்த வேளார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் அய்யப்பன், பொருளாளர் பிச்சாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில தலைவர் டாக்டர் சேம நாராயணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் தலையில் மண் பானையை சுமந்தபடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    கடந்த 2022-ம் ஆண்டு மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய மழைக்கால நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரம் இன்று வரை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லை. இந்த மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். மழைக்காலம் முடிந்தும் இன்று வரை அவர்களுக்கு பணம் வந்து சேரவில்லை. அதனை உடனடியாக வழங்கி எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

    மின்சாரத்தால் இயங்கக்கூடிய மின்விசை சக்கரம் வழங்கிட வேண்டும். நாங்கள் மண்பாண்டங்கள் செய்வதற்கு களிமண் விரைவாக கிடைக்கவும், சூளை வைக்கும் இடத்திற்கு அடிமனை பட்டா வழங்கிடவும், தயார் செய்த சுட்ட மண்பாண்ட பொருட்களை விற்பனை செய்வதற்கு 150 சதுர அடி அளவுள்ள சிறிய இடத்தினை ஒதுக்கீடு செய்து தரவும் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கிறோம்.

    மேலும் வீட்டு வசதி திட்டத்தின் மூலமாக கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.4 லட்சம் மானியம் வழங்கியது போல மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் ரூ.4 லட்சம் மானியம் வழங்க வேண்டும். மண்பாண்ட தொழிலை மேம்படுத்த தொழிற்பயிற்சி கூடம் அமைத்து தர வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஆர்ப்பாட்டத்தில் துணைத் தலைவர்கள் மந்திரமூர்த்தி, அய்யப்பன், ஆறுமுகம், கவுரவ தலைவர் கணேசன், துணைச் செயலாளர்கள் மாரியப்பன், ஆறுமுகம், துரை, மாநகர செயலாளர் பேராட்சி செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முருகன், மணி, இளைஞரணி கார்த்தீசன் மற்றும் நிர்வாகிகள் முனியசாமி, கிருஷ்ணன் ராஜ், ஆனந்தராஜ், முத்துராமன், கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து அவர்கள் தலையில் மண்பானையை சுமந்தபடி கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று மனு அளித்தனர்.

    • இயற்கை ஒத்துழைக்காத காரணத்தாலும் தீபம் தயாரிப்பு பணிகள் மந்தமான நிலையில் உள்ளது.
    • 1.5 லட்சம் அகல் விளக்குகள் மட்டும் தயாரிக்க முடிந்துள்ளது.

    காங்கயம் :

    கார்த்திகை தீபத்திருநாள் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகள் தான். அன்றைய தினம் வீடுகள் தோறும் விதவிதமான அகல் விளக்குகள் கண்ணைக் கவரும் வகையில் வரிசை கட்டியிருக்கும். வருகிற 6-ந் தேதி கார்த்திகை தீபத்திருநாள் வரும் நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த அகல் விளக்குகள் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, காங்கயம், அவிநாசி, தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண்பாண்ட கைவினை கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது.

    காங்கேயம் பகுதியில் சம்பந்தம்பாளையத்தில் பாரம்பரியமாகமண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வரும் குடும்பத்தினர் கடந்த இரு மாத காலமாக அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வண்டல்மண், செம்மண் மற்றும் காற்றுமண் என்று சொல்லப்படும் மணல்கலந்த மண் சேர்த்து தண்ணீரில் ஊறவைத்து பின்னர் சக்கர உருளையில் வைத்து நேர்த்தியாக பல்வேறு விதமான அகல்விளக்குகளை வார்த்தெடுக்கின்றனர்.

    இவ்வாறு தயாரான அகல்விளக்குகளை சூளையில் வைத்து சுட்டு பக்குவப்படுத்தி விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். கடந்த 25ஆண்டுகளுக்கு முன்புவரை கிராமங்கள்தோறும் மண்பாண்டத் தொழிலாளர்கள் இருந்தபோது மண்பாண்டங்கள் மற்றும் அகல் விளக்குகள் பண்டமாற்று முறையில் கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது மண்பாண்டங்களுக்கு பதில் பித்தளை, அலுமினியம், எவர்சில்வர் பாத்திரங்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டதால் மண்பாண்டங்களின் பயன்பாடு குறைந்ததால் அந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்த பெரும்பாலான குடும்பத்தினர் வேறு தொழில்களுக்கு சென்று விட்டனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் மட்டுமே இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருவதால் பண்டமாற்று முறை போய் ரொக்கத்திற்கு அகல்விளக்குகளை விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் மழைக்காலங்களில் அகல் விளக்குகள் தயாரிப்பு குறைவாக உள்ளது. போதிய களிமண் இல்லாத சூழலும், இயற்கை ஒத்துழைக்காத காரணத்தாலும் தீபம் தயாரிப்பு பணிகள் மந்தமான நிலையில் உள்ளது. இருப்பினும் மக்கள் தேவைக்கேற்ப காங்கயம்,திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளுக்கு தீபங்கள் தயாரித்து அனுப்பப்பட்டு வருகிறது. சிறிய விளக்குகள் ரூ.1 முதல் ரூ.3 வரையிலும், பெரிய மண் விளக்குகள் ரூ.5 முதல் ரூ.8 வரையிலும், ஐந்து முக தீபங்கள் ரூ.15 வரையிலும், குத்து விளக்கு போன்ற தீப வகைகள் ரூ.20க்கும் விற்க்கப்படுகிறது.

    இதுகுறித்து சம்பந்தம்பாளையத்தைச் சேர்ந்த மண்பாண்ட கைவினை கலைஞர் ஒருவர் கூறுகையில், நாங்கள் 5 தலைமுறையாக மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். அருகில் உள்ள குளத்தில் வண்டல் மண் எடுத்து வந்து அதனுடன் செம்மண், காற்றுமண் கலந்து பிசைந்து உருவாக்கி வருகிறோம். நாளொன்றுக்கு தலா ஆயிரம் அகல் விளக்குகள் வரை தயாரித்து வருகிறோம்.

    இதில் சாதாரண விளக்கு, பஞ்சமுக அகல்விளக்குகள், கோயில்களில் ஏற்றப்படும் பெரிய அளவிலான விளக்குகள் என பல்வேறு வகையிலான விளக்குகளை தயாரித்து வருகிறோம். நாங்கள் தயாரிக்கும் விளக்குகளை காங்கயம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறோம். இந்த சீசனில் மட்டும் 3 லட்சம் விளக்குகளுக்கு மேல் சப்ளை செய்வோம். ஆனால் களிமண் போதிய அளவில் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் மண் கொண்டு வருவதற்கு பல கெடுபிடிகள் உள்ளது.

    தாலுகா விட்டு பக்கத்து தாலுகாவுக்கு மண் கொண்டு செல்ல முடிவதில்லை. அடையாள அட்டையை காண்பித்தால் எங்கிருந்து வேண்டுமானாலும் களிமண் கொண்டு வரலாம் என அரசு அனுமதிக்க வேண்டும். இந்த ஆண்டு குறைந்த அளவில் மண் கிடைத்ததால், உற்பத்தியும் குறைந்தது. இதனால் 1.5 லட்சம் அகல் விளக்குகள் மட்டும் தயாரிக்க முடிந்துள்ளது.

    பாரம்பரியமாக தொன்று தொட்டு இந்த தொழிலை செய்து கொண்டு வருகிறோம். மக்கள் அனைவரும் களிமண்ணால் கையால் செய்த விளக்குகளை வாங்கி பயன்படுத்தினால் கிராமப்புறங்களில் உள்ள ஏழை மண்பாண்ட தொழிலாளர்கள் பயன்பெறவும் அவர்களின் வாழ்வாதாரம் காக்கவும் வசதியாக இருக்கும் என தெரிவித்தார்.

    • அனுப்பர்பாளையம், வேலம்பாளையம், ஆத்துப்பாளையம், அங்கேரிபாளையம், உள்ளிட்ட பகுதிகளில் 250க்கு மேற்பட்ட பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன.
    • இங்கு பாத்திரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    அனுப்பர்பாளையம் :

    அனுப்பர்பாளையம், வேலம்பாளையம், ஆத்துப்பாளையம், அங்கேரிபாளையம், உள்ளிட்ட பகுதிகளில் 250க்கு மேற்பட்ட பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன. இங்கு எவர்சில்வர், பித்தளை, செம்பு ஆகிய உலோகங்களில் பாத்திரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    3ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு பாத்திர தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டு விட கூடுதல் போனஸ், ஒரு வாரத்திற்கு முன் வழங்க வேண்டும் என அனைத்து தொழிற்சங்கத்தினர், உற்பத்தியாளர் சங்கத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.உலோகத்தின் அடிப்படையில் உற்பத்தியை பொறுத்து 16 சதவீதம் முதல், 18 சதவீதம் வரை போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 95 சதவீதத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டு விட்டதாக உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    ரூ.42 லட்சம் மதிப்பில் மண்பாண்ட தொழிலாளர்கள் 760 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெஞ்சமின் வழங்கினார். #ADMK

    சென்னை:

    தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் மாவட்ட மாநாடு காஞ்சீபுரத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் விநாயகம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சேம.நாராயணன் தொடங்கி வைத்தார்.

    மாநாட்டில் அமைச்சர் பெஞ்சமின் கலந்து கொண்டு மண்ணிலான கைவினை பொருட்கள் கண்காட்சியை திறந்து வைத்தார்.

    அதை தொடர்ந்து நலவாரியத்தில் உறுப்பினர்களாக இருக்கும் தொழிலாளர்கள் 760 பேருக்கு இலவச மின்சக்கரம், ஓய்வூதியம், நிவாரண உதவிகள், கல்விக் கடன் உள்பட சுமார் ரூ.42 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழா மலரையும் வெளியிட்டார்.

    பின்னர் அமைச்சர் பெஞ்சமின் மாநாட்டில் பேசும் போது, மண்பாண்ட தொழிலாளர்களுக்கு பல சலுகைகளை அறிவித்து செயல்படுத்தியவர் ஜெயலலிதா.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், மாவட்டங்களில் மண்பாண்ட தொழில் செய்ய குளங்களில் மண் எடுப்பது, அனைத்து தொழிலாளர்களுக்கும் இலவச மின்சக்கரம் உள்பட 10 கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகளை உடனடியாக அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வேன் என்றார்.

    மாநாட்டில் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு, வாலாஜாபாத் கணேசன், ஆம் ஆத்மி கட்சி வசீகரன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த இரா.கீதா, பழனி, ஹென்றி, சிட்டிபாபு, லீலாவதி குலாலர், சங்க நிர்வாகிகள் பாவலர் கணபதி, மகேஷ்கண்ணன், எஸ்.என். பழனி, மணி, பெருமாள் பத்தர், கவிஞர் தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். #ADMK

    ×