என் மலர்
திருநெல்வேலி
- போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:
ரெயில் உதிரி பாகங்களை ஏற்றிக் கொண்டு கன்னியாகுமரியில் இருந்து கனரக லாரி ஒன்று குஜராத் மாநிலத்திற்கு சென்றது.
இன்று அதிகாலை 1 மணியளவில் நெல்லை ரெட்டியார்பட்டி அருகே டி.வி.எஸ். நகர் 4 வழிச்சாலையில் சென்ற போது டீசல் இல்லாமல் திடீரென சாலையில் நின்றுவிட்டது.
இதற்கிடையே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கல்லூரி பஸ்சில் சுற்றுலா சென்றனர்.
அவர்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு மீண்டும் சொந்த ஊர் திரும்பினர். கல்லூரி பஸ்சை முனியசாமி என்பவர் ஓட்டிச் சென்றார். கிளீனராக வீரசெல்வம் என்பவர் இருந்தார்.
கல்லூரி பஸ் இன்று அதிகாலை டி.வி.எஸ். நகர் பகுதிக்கு வந்தபோது ஏற்கனவே டீசல் இல்லாமல் நின்ற கனரக லாரியின் பின்னால் வேகமாக சென்று மோதியது.
இதில் டிரைவர் முனியசாமி, கிளீனர் வீரசெல்வம், மாணவிகள் அன்னை தெரசா, ரஞ்சிதா, சசிகலா, பொன்மலர், சாந்தி உள்பட 15 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிறிதளவு காயம் அடைந்த 12 மாணவிகள் குணம் அடைந்து இன்று காலை ஊர் திரும்பினர். இதில் சுமித்ரா, முனியசாமி, வீரசெல்வம் ஆகிய 3 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நவாஸ்கான் பஸ் ஏறுவதற்காக புதிய பஸ் நிலையத்தில் காத்திருந்தார்.
- திருட முயன்றவர் தூத்துக்குடியை சேர்ந்த அப்துல் அஜிஸ் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
நெல்லை:
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் வியாபாரி நவாஸ்கான் (30) என்பவர் பஸ் ஏறுவதற்காக காத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் நவாஸ்கான் சட்டை பையில் இருந்து ரூ.500-ஐ திருட முயன்றார். சுதாரித்து கொண்ட வியாபாரி அவரை கையும் களவுமாக பிடித்து அங்கிருந்த போலீ சாரிடம் ஒப்படைத்தார்.
இது தொடர்பாக மேலப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா பர்வின் விசாரணை நடத்தினார். அதில் திருட முயன்றவர் தூத்துக்குடியை சேர்ந்த அப்துல் அஜிஸ் (55), தொழிலாளி என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
- நெல்லை மாவட்டத்தில் இன்று 500-க்கும் மேற்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போராட்டத்தால் பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டது.
நெல்லை:
வருவாய் துறையில் துணை கலெக்டர் நிலையில் பதவி உயர்வு வழங்கும் பட்டியலை கடந்த 4 ஆண்டுகளாக தமிழக அரசு வெளியிடாமல் இருப்பதனால் பலர் பதவி உயர்வு பெறும் முன்பே ஓய்வு பெற்று விடுகின்றனர்.
இதுபோல் பல ஆண்டுகளாக துணை தாசில்தாராக பணி செய்து வருபவர்கள் பட்டியல் திருத்தங்கள் காரணமாக முதல் நிலை வருவாய் ஆய்வாளராக பணி இறக்கம் செய்யும் நடைமுறையை மாற்ற வேண்டியும் கடந்தவாரம் வருவாய் துறை அதிகாரிகள் விடுப்பு எடுத்து ஒருநாள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் இன்று 500-க்கும் மேற்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அலு வலகங்கள் அலுவலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பொதுமக்களின் அத்தியாவசிய பணிகளான சான்றிதழ்கள் பெறுவது, பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டது.
நெல்லை கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள வருவாய் துறை அலு வலங்களில் பணிபுரியும் பெரும்பாலான அதிகாரிகள் இன்று பணிக்கு வரவில்லை.
- கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
- அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
47-வது வார்டு கவுன்சிலர் ஷபிஅமீர் அளித்த மனுவில், நெல்லை மேலப்பாளையத்தை அடுத்துள்ள கன்னிமார் குளம் பராமரிப்பின்றி கிடக்கிறது. அந்த கன்னிமார் குளத்தின் ஓடை பிளாஸ்டிக், குப்பை கழிவுகள் உள்ளிட்டால் நிரம்பிக் கிடக்கிறது. அதனை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வி.எம் சத்திரம் கிளை செயலாளர் கனகமணி அளித்த மனுவில், 38-வது வார்டுக்கு உட்பட்ட வி. எம் சத்திரம் பகுதி அப்துல் ரகுமான் முதலாளி நகர், வி.வி நகர், விஜய் நகர், காவிரி நகர், ஆதித்தனார் நகர், சரண்யா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
38-வது வார்டில் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும். சீனிவாசன் நகர் கிழக்கு பகுதியில் கழிவுநீர் கால்வாய் உடனடியாக அமைத்திட வேண்டும். ஹவுசிங் போர்டு 1-ல் உள்ள பயன்பாடற்ற கிணற்றுக்கு இரும்பு வலை மூடி போட வேண்டும் என்று கூறியிருந்தார்.
- எரிவாயு நுகர்வோர் குறை தீர்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற உள்ளது.
- எரிவாயு நுகர்வோர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கல்கள் மற்றும் எரிவாயு உருளைகள் வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் குறித்து நுகர்வோர்கள் தங்கள் குறைகளை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர் மற்றும் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறை தீர்வு கூட்டம் வருகிற 30-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு நுகர்வோர் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
- தச்சை கணேசராஜா தலைமையில் அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
- நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை:
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் சுதாபரமசிவன், அவைத்தலைவர் பரணிசங்கரலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராய ணன், ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டிபாண்டியன், பகுதி செயலாளர்கள் திருத்து சின்னத்துரை, சிந்துமுருகன், ஜெனி, டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால்கண்ணன், கவுன்சிலர் சந்திரசேகர், வக்கீல் ஜெயபாலன், தச்சை மாதவன் மற்றும் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
- கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல் தலைமை தாங்கினார்.
- வள்ளியூரில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா சிறப்புரையாற்ற உள்ள பொதுக்கூட்டத்தில் திரளானோர் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் பாளை மகாராஜ நகரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் முன்னிலை வகித்தார்.
உறுப்பினர்கள் சேர்க்கை
இதில் தொகுதி பொறுப்பாளர்கள் சிவராஜ்(அம்பை), ஜோசப் ஸ்டாலின்(நாங்குநேரி), தாமரை பாரதி(ராதாபுரம்) ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
மேலும் வருகிற 3-ந்தேதி முதல் ஜூன் 3-ந்தேதிக்குள் தொகுதிக்கு 50 ஆயிரம் பேர் வீதம் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் 1½ லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, 2024 மக்களவை தேர்தல் முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பங்கேற்றவர்கள்
வருகிற 31-ந்தேதி வள்ளியூரில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா சிறப்புரையாற்ற உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்விழா பொதுக்கூட்டத்தில் திரளான நிர்வாகிகள் பங்கேற்கவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆ.பிரபாகரன், கே.கே.சி. பிரபாகரன், சித்திக், கணேஷ்குமார் ஆதித்தன், மாவட்ட துணை செயலாளர் தமயந்தி, வக்கீல் அணி செல்வசூடாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தடுமாறி விழுந்த அந்த பெண் மீது லாரி டயர் ஏறியது.
- உயிரிழந்த பெண் ரம்மதபுரத்தை சேர்ந்த மாதவி என்பது விசாரணையில் தெரியவந்தது.
நெல்லை:
ராதாபுரம் அருகே சீலாத்திகுளத்தில் இருந்து முடவன்குளத்திற்கு செல்லும் சாலையில் இன்று காலை கனரக வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. எதிரே ஒரு பெண் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக லாரியின் பின்பக்க டயரில் மொபட் சிக்கியது.
இதில் தடுமாறி விழுந்த அந்த பெண் மீது லாரி டயர் ஏறியது. இதனால் சம்பவ இடத்திலேயே அந்த பெண் ரத்த வெள்ளத்தில் பலியானார். உடனே லாரி டிரைவர் அங்கேயே லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
தகவல் அறிந்த ராதாபுரம் போலீசார் அங்கு விரைந்த சென்றனர். விபத்தில் சிக்கி இறந்த பெண் யார் என்று விசாரணை நடத்தியதில், அவர் திசையன்விளை அருகே உள்ள ரம்மதபுரத்தை சேர்ந்த மாதவி(வயது 45) என்பதும், அவர் தெற்கு கள்ளிகுளம் அருகே ஆறுபுளியில் ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ராதாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- பங்குனி உத்திரத்தையொட்டி ஏராளமானோர்கள் கோவில்களில் ஆடுகளை நேர்த்தி கடன் கொடுத்து வழிபடுவார்கள்.
- பங்குனி உத்திரம் நெருங்குவதையொட்டி இன்று மேலப்பாளையம் சந்தையில் ஆடுகளை வாங்குவதற்காக ஏராளமானோர் குவிந்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் முக்கூடல், வள்ளியூர், மேலப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் கால்நடை சந்தைகள் செயல்பட்டு வருகிறது.
இதில் மேலப்பாளையம் சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறுகிறது. இங்கு ஆடுகள் மட்டுமல்லாது மாடு, கோழி, கருவாடு உள்ளிட்டைவைகளும் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
இதனை வாங்க ஏராளமான வியாபாரிகளும், பொதுமக்களும் திரள்வார்கள். இதனால் வாரந்தோறும் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும். ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கூடுதலாக விற்பனை நடைபெறும்.
இந்நிலையில் பங்குனி உத்திரத்தையொட்டி ஏராளமானோர்கள் கோவில்களில் ஆடுகளை நேர்த்தி கடன் கொடுத்து வழிபடுவார்கள். பங்குனி உத்திரம் நெருங்குவதையொட்டி இன்று மேலப்பாளையம் சந்தையில் ஆடுகளை வாங்குவதற்காக ஏராளமானோர் குவிந்தனர்.
இதற்காக நேற்று இரவு முதலே வியாபாரிகள் தங்களது ஆடு, மாடுகளுடன் சந்தைக்கு வந்தனர். இன்று வியாபாரிகள், பொதுமக்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் சந்தையில் குவிந்தனர். இதனால் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் விற்பனைக்காக சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டது. அவை தரத்திற்கு ஏற்ப ரூ.5 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது. கிடா வகை ஆடுகள் ரூ.30 ஆயிரத்திற்கு விற்பனையானது.
இதனால் மேலப்பாளையம் சந்தை இன்று களைகட்டி காணப்பட்டது.
- 4 நாட்கள் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
- அகஸ்தியர் அருவிக்குச் செல்ல எவ்வித தடையும் இல்லை.
பாபநாசம் - காரையாறு மலை சாலையில் கீழ் அணையில் இருந்து காரையாறு வரை தார்ச்சாலை சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் நேற்று முதல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வரை சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல 4 நாட்கள் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அகஸ்தியர் அருவிக்குச் செல்ல எவ்வித தடையும் இல்லை.
இந்த தகவலை, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்ட துணை இயக்குனர் செண்பகப்ரியா தெரிவித்துள்ளார்.
- சிறுசிறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 14 பேர் தங்களது பற்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
- அம்பை, கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையங்களில் சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகள் உள்பட அனைவரும் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று வாயில் கற்களை போட்டு, அவர்களது பற்களை பிடுங்கி கொடூர செயலில் அவர் ஈடுபடுவதாக சிலர் புகார் கூறினர்.
இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் காட்சிகள் வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதனை விசாரிக்க, சேரன்மாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
அதன்படி பாதிக்கப்பட்ட லெட்சுமி சங்கர், வெங்கடேஷ், சூர்யா உள்ளிட்ட 3 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அந்தந்த கிராம வி.ஏ.ஓ.க்களுடன் நேரில் ஆஜராக சப்-கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.
நேற்று பகல் முழுவதும் யாரும் வராமல் இருந்த நிலையில், கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த திம்மராஜசமுத்திரத்தை சேர்ந்த லெட்சுமி சங்கர், ஜமீன் சிங்கம்பட்டியை சேர்ந்த சூர்யா ஆகிய 2 பேரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இதுவரையில் அம்பை சரகத்திற்கு உட்பட்ட அம்பை, கல்லிடைக்குறிச்சி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிறுசிறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 14 பேர் தங்களது பற்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுக்கும் அடுத்தடுத்த நாட்களில் சம்மன் அனுப்பி விசாரிக்கப்பட உள்ளது.
அதேநேரத்தில் பெரும்பாலானோர் விசாரணைக்கு ஆஜராக அச்சம் அடைந்து வருகின்றனர். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்தால் சாட்சியம் அளிப்பதாக தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட உள்ளது.
அதன் பின்னர் அம்பை, கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையங்களில் சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகள் உள்பட அனைவரும் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 2 போலீஸ் நிலையங்களிலும் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே புகாரில் சிக்கிய உதவி போலீஸ் சூப்பிரண்டை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதனால் அங்கு பொறுப்பு துணை போலீஸ் சூப்பிரண்டாக வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- டாக்டர் முன்பு இருக்கும் பெயர் பலகையில் பல்வீர்சிங் என எழுதப்பட்டு காட்சிகள் வைரலாகி வருகிறது.
- வடிவேலு டாக்டர் போல் நடித்த காட்சியில் பல் வலியால் வரும் நபருக்கு கட்டிங் பிளேடு மூலமாக பல்லை பிடுங்கும் காட்சிகள் எடுக்கப்பட்டு அதில் கைதி, போலீஸ் என பெயர் எழுதப்பட்டுள்ளது.
அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங், குற்றசெயல்களில் ஈடுபட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அவரை உடனடியாக கைது செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காமெடி மீம்ஸ் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சினிமா ஒன்றில் நகைச்சுவை நடிகர் வடிவேலு டாக்டர் போல் நடித்த காட்சியில் பல் வலியால் வரும் நபருக்கு கட்டிங் பிளேடு மூலமாக பல்லை பிடுங்கும் காட்சிகள் எடுக்கப்பட்டு அதில் கைதி, போலீஸ் என பெயர் எழுதப்பட்டுள்ளது.
மேலும் டாக்டர் முன்பு இருக்கும் பெயர் பலகையில் பல்வீர்சிங் என எழுதப்பட்டு காட்சிகள் வைரலாகி வருகிறது. உங்கள் ஈறுகளில் பிரச்சினையா அம்பை போலீஸ் நிலையத்துக்கு வாங்க என்ற வாசகத்துடன் அந்த பகுதி பொதுமக்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.






