என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • கடந்த 11-ந் தேதி முதல் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
    • ரொசிங்டன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள கூடுதாழை மீனவர் கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி கடந்த 11-ந் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

    மேலும் தினமும் பல்வேறு வகையான போராட்டங்களையும் நடத்தினர்.

    இந்த நிலையில் நேற்று 19 -வது நாளாக கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் போராட்டக்குழு தலைவர் ரொசிங்டன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாலையில் போராட்ட பந்தலில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. மாநில மீனவர் அணிசெயலாளர் ஜோசப் ஸ்டாலின் முன்னிலை வகித்தார். பங்குதந்தை வில்லியம் வரவேற்று பேசினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் கூறியதாவது:-

    கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைக்க சபாநாயகர் அப்பாவு தீவிர முயற்சி செய்துவருகிறார். சென்னை யில் மீன்வளத்துறை, பொதுப்பணித்துறை, வனத்துறை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை அழைத்து தூண்டில் வளைவு அமைப்பதற்கான முயற்சி களை செய்துவருகிறார்.

    நாளை (வெள்ளிக் கிழமை) அதற்கான ஆணை பெற்று விடுவதாக உறுதியளித்துள்ளார். 3 மாதத்திற்குள் தூண்டில் வளைவு அமைக்கும் பணி தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து தொடர் போராட்டம் முடிவுக்கு வந்தது.

    • கருத்தரங்கிற்கு கல்லூரி செயலாளரும், தாளாளருமான வி.பி.ராமநாதன் தலைமை தாங்கினார்.
    • சிறப்பு விருந்தினராக பேராசிரியர் கண்ணன் நாராயணன் கலந்து கொண்டு பேசினார்.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் தமிழ் துறை சுயநிதிப்பிரிவு, கிராமிய கலை இலக்கிய மன்றம், போதி பன்னாட்டு ஆய்விதழ் சார்பில், 'இலக்கியமும் ஆன்மிக அறிவியலும்' என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது. கல்லூரி செயலாளரும், தாளாளருமான வி.பி.ராமநாதன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் சவரி ராயம்மாள் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் ராஜன் தொடக்க உரையாற்றினார்.

    கல்லூரிக்குழு உறுப்பினர் எஸ்.கே.டி.பி.காமராஜ், பண்ணை கே.செல்வகுமார், தமிழ் துறை தலைவர்கள் நிர்மலா, கிரிஜா ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஜெர்மனி நாட்டின் கேல் கிறிஸ்டியன் அல்பிரைட் பல்கலைக்கழக பேராசிரியர் கண்ணன் நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மேலூர் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் சிங்காரவேலன் முன்னிலையில், ஆய்வு கட்டுரைகளை வாசித்தனர். பின்னர் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

    கல்லூரி செயலாளர் வி.பி.ராமநாதன் ஆய்வுக்கோவையை வெளியிட, அதனை பேராசிரியர் கண்ணன் நாராயணன் பெற்று கொண்டார். இதில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பல்வேறு கல்லூரிகளில் இருந்து பேராசிரியர்கள், மாணவர்கள் தங்களது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். ஒருங்கிணைப்பாளர் சோனா கிறிஸ்டி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கிராமிய கலை இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் முருகவேல், பால்மோகன், சித்ரா, கிரேஸ் புஷ்பா ஜூலியட், பீட்டர் ராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்.

    இதேபோல் கல்லூரியில் யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார். அகதர மதிப்பீட்டு குழு துணை ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வரவேற்று பேசினார். யோகா பயிற்சியாளர் ஆனந்த குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு யோகாசன பயிற்சி அளித்தார். சிறப்பான உடல் ஆரோக்கியத்திற்கு யோகாவின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கி கூறினார். பேராசிரியர் ராஜேந்திரன் ரவிக்குமார் நன்றி கூறினார்.

    • கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப், 2 பெண் போலீசார் உள்பட 4 போலீசார் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
    • பாதிக்கப்பட்ட வெங்கடேஷ் போலீசாருக்கு ஆதரவாக சூர்யா போல் வாக்குமூலம் அளிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பல்வீர்சிங் என்பவர் பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரால் நேற்று அவர் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    அவர் மீதான புகார் தொடர்பாக சேரன்மாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் விசாரணை நடத்தி வருகிறார். கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த லெட்சுமி சங்கர் ஏற்கனவே ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார்.

    இந்தநிலையில் நேற்று காலை கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த சூர்யா என்பவர் உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் முன்பு ஆஜரானார். அவரிடம் உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார். பின்னர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறும்போது, தான் கீழே விழுந்ததில் பல் உடைந்து விட்டது என்றார்.

    அதன்பின்னர் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப், 2 பெண் போலீசார் உள்பட 4 போலீசார் ஆஜராகி விளக்கம் அளித்தனர். மேலும் 7 பேர் சேரன்மாதேவி உதவி கலெக்டர் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க அலுவலகம் முன் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

    இதில் சம்மன் அனுப்பப்பட்ட சுபாஷ் என்பவரிடம் மட்டுமே உதவி கலெக்டர் விசாரணை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து இரவு 7.30 மணியளவில் கல்லிடைக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, பாதிக்கப்பட்ட வெங்கடேஷ் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக வந்தனர். ஆனால் இரவு நேரம் ஆகிவிட்டதால் சம்மன் திருத்தி அனுப்பிய பின்னர் இன்று காலை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் உத்தரவிட்டார்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, வெங்கடேஷ் ஆகியோர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இன்று அவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட வெங்கடேஷ் போலீசாருக்கு ஆதரவாக சூர்யா போல் வாக்குமூலம் அளிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • கடந்த 2 வாரத்திற்கு முன்பு நெல்லை-திருச்செந்தூர் இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
    • மின்சார ரெயில் இயக்கப்படுவதால் திருச்செந்தூர்-நெல்லை ரெயில் மார்க்கத்தில் இயக்கப்படும் ரெயில்களின் பயண நேரமும் வெகுவாக குறையும்.

    நெல்லை:

    நெல்லை, திருச்செந்தூர் ரெயில் பாதை மின்மயமாக்கும் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்து உள்ளது.

    கடந்த 2 வாரத்திற்கு முன்பு நெல்லை-திருச்செந்தூர் இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

    இதனைத்தொடர்ந்து மின்சார ரெயில் என்ஜின் மூலம் நெல்லை-திருச்செந்தூர் மார்க்கத்தில் அனைத்து ரெயில்களும் இயக்கப்படுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

    இந்நிலையில் நெல்லை-திருச்செந்தூர் மார்க்கத்தில் மின்சார ரெயில் சேவை இன்று தொடங்கியது. இதில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.

    ரெயில்களில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்டுள்ள நிலையில் ரெயில்களின் வேகமும் அதிகரிக்க செய்யப்பட்டுள்ளது. இதனால் நெல்லை-திருச்செந்தூர் மற்றும் திருச்செந்தூர்-சென்னை ரெயில்களின் நேரமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரெயில்கள் இயக்கப்படும் புதிய நேரம் நாளை மறுநாள் (31-ந்தேதி) அறிவிக்கப்பட உள்ளது.

    மின்சார ரெயில் இயக்கப் படுவதால் திருச்செந்தூர்-நெல்லை ரெயில் மார்க்கத்தில் இயக்கப்படும் ரெயில்களின் பயண நேரமும் வெகுவாக குறையும்.

    திருச்செந்தூர்-நெல்லை வழியாக சென்னை செல்லும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் நேரத்திலும் ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் பயண நேரம் குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அம்பாசமுத்திரம் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்து இன்று முதலமைச்சர் உத்தரவிட்டார்.
    • நெல்லையில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக கூறப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங், சில வழக்குகள் தொடர்பாக விசாரணைக்கு அழைத்து சென்ற 30 பேரின் பற்களை பிடுங்கி கொடூரமாக தாக்கியதாக புகார் எழுந்தது.

    இதைத்தொடர்ந்து உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதுதொடர்பாக விசாரணை நடத்த நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்படி சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகம்மது சபீர் ஆலம் பாதிக்கப்பட்டவர்களிடமும், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசாரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசாரும் இன்று சேரன்மகாதேவியில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி சப்-கலெக்டர் முகம்மது சபீர் ஆலம் முன்னிலையில் விளக்கம் அளித்தனர்.

    இந்த விவகாரத்தில் விரும்பத்தகாத சம்பவத்தில் ஈடுபட்ட அம்பாசமுத்திரம் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    இந்நிலையில் நெல்லையில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக கூறப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

    தான் காவல்துறையால் தாக்கப்படவில்லை என்றும், கீழே விழுந்ததிலேயே தனது பற்கள் உடைந்ததாகவும் பாதிக்கப்பட்ட சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.

    சேரன்மகாதேவி சப்-கலெக்டரிடம் விசாரணைக்கு ஆஜரான நிலையில் பற்கள் உடைந்ததற்கும், காவல்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சூர்யா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விசா வாங்க ரூ.3¼ லட்சம் செலவு ஆகும் என சுப்பிரமணியனிடம் அந்த வாலிபர் கூறியுள்ளார்.
    • மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் சுப்பிரமணியன் கூறியுள்ளார்

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வீ.கே.புரம் ராமலிங்கம் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 50), தொழிலாளி.

    இவர் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    வெளிநாட்டில் வேலை

    நான் குடும்பத்துடன் வீ.கே.புரத்தில் வசித்து வருகிறேன். எனது மூத்த மகன் ஸ்ரீவிஷ்ணு. இவர் டிப்ளமோ படித்து விட்டு வேலை தேடி வருகிறார்.

    இந்நிலையில் சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபர், எனது மகன் வேலை தேடுவதை அறிந்து வெளிநாட்டில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக என்னிடம் கூறினார். இதற்கு விசா வாங்க ரூ.3¼ லட்சம் செலவு ஆகும் என அவர் கூறினார். இதனை நம்பி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 4 தவணைகளில் ரூ.3¼ லட்சத்தை அவர் கூறிய 3 வங்கி கணக்குகளில் செலுத்தினேன். அதன் பின்னர் அவரிடம் போன் செய்த போது ஒரு சில நாட்களில் வேலை வாங்கி தருவதாக கூறி காலத்தை கடத்தி வந்தார்.

    இந்நிலையில் தற்போது அவரது செல்போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது. அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பேச்சிமுத்து இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
    • மாடசாமி என்பவர் பேச்சிமுத்துவை மிரட்டி செல்போனை பறித்து சென்றார்.

    நெல்லை:

    சிவந்திப்பட்டியை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது65). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று பணியில் இருந்த பேச்சிமுத்துவிடம் நாலாட்டின்புதூரை சேர்ந்த மாடசாமி (33) என்பவர் மிரட்டி செல்போனை பறித்து சென்றார். இது தொடர்பாக அவர் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிவு செய்து மாடசாமியை கைது செய்தார். 

    • திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான நெல்லையப்பர் சுயம்பு வாக தோன்றும் திருவிளையாடல் காட்சி இன்று நடைபெற்றது.
    • விழாவையொட்டி சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வரலாற்று நிகழ்ச்சி

    11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான சுவாமி நெல்லையப்பர் வேணு வனத்தில் சுயம்பு வாக தோன்றும் திருவிளை யாடல் காட்சி 4-ம் நாளான இன்று நடைபெற்றது.

    இந்த வரலாற்று திருவிளையாடல் நிகழ்ச்சி கோவில் உட்பிரகாரத்தில் தாமிர சபை மண்டபம் அருகே அமைந்திருக்கும் ஸ்தல விருட்சம் முன்பு நடைபெற்றது. தொடர்ந்து சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாரா தனையும் நடைபெற்றது.

    வீதி உலா

    நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    பங்குனி உத்திர திருவிழா வின் 4-ம் நாளான இன்று இரவு சுவாமி நெல்லை யப்பர்- காந்திமதியம்மாள் பஞ்ச மூர்த்திகளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதிஉலா நடக்கிறது.

    • சித்தூர் தென்கரை சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
    • 1-ந் தேதி இரவு கிடா வாகனத்தில் ஐயன் வீதி உலா நடைபெறும்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் அருகே கண்ணநல்லூர் கிராமம் நம்பி ஆற்றின் கரையில் அய்யப்பனின் அவதாரம் என்று அழைக்கப்படுகின்ற சித்தூர் தென்கரை மகாராசேசுவரர் சாஸ்தா கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்தூர் தென்கரை சுவாமிக்கு பல்வேறு அபிஷே கங்கள் செய்யப்பட்டது.திருப்பணிக்கு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    வேத மந்திரங்கள் மேளதாளங்கள் முழங்க மகா மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. மேலும் கொடிமரத்துக்கு 21 வகையான அபிஷேக திரவியம் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மகா தீபாராதனையும் நடந்தது. மதியம் உச்சிகால பூஜையும், இரவு விசேஷ வாகனத்தில் ஐயன் வீதியுலா நடைபெற்றது

    வருகிற 1-ந் தேதி இரவு கிடா வாகனத்தில் ஐயன் வீதி உலா நடைபெறும். 2-ந் தேதி காலை தளவாய் சுவாமி க்கு கற்பூர தீப ஆராதனை மற்றும் வன்னிய ராஜாக்கள், வீரமணி ஐயனுக்கும், மஹா ராஜேஸ்வரர் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பங்குனி உத்திரம் மதியம் உச்சிகால பூஜை, இரவு வெள்ளிக்குதிரை வாக னத்தில் ஐயன் பாரி வேட்டை வீதி உலா நடைபெறும்.

    5-ந் தேதி காலை தேரோட்டம், மதியம் உச்சிகால பூஜை, இரவு புலி வாகனத்தில் ஐயன் வீதி உலா நடைபெறும்.7-ந் தேதி மதியம் உச்சிகால பூஜை, மஞ்சள் நீராட்டு வைபவம் ஐயன் சன்னதி அமரும் தருணம், இரவு கொடி இறக்கத்துடன் முடிவடையும்.

    திருவிழா 11 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் கோவில் நிர்வாகிகள், அனைத்து பூசாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கண்ண நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மகாராஜன், செயல் அலுவலர் பொன்னி திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • சதீஷ் நெல்லையில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்.
    • சுடலைக் கண்ணு கத்தியை காட்டி மிரட்டி சதீஷிடம் பணம் பறிக்க முயன்றார்.

    நெல்லை:

    ஈரோட்டை சேர்ந்தவர் சதீஷ் (வயது34). இவர் நெல்லையில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். இவர் சந்திப்பு பகுதியில் நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது சி.என். கிராமத்தை சேர்ந்த சுடலைக் கண்ணு (27) என்பவர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார்.

    அங்கிருந்து தப்பிய சதீஷ் இது தொடர்பாக சந்திப்பு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வி சுவாதிகா வழக்குப்பதிவு செய்து சுடலைக்கண்ணுவை கைது செய்தார். 

    • சோழபுரம், செங்கோட்டையில் மேலும் 2 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
    • எடமன்-பகவதிபுரம் இடையே 34.677 கி.மீ. தொலைவுக்கான மின்மயமாக்கல் பணிகள் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மதுரை:

    விருதுநகர்-தென்காசி-செங்கோட்டை-பகவதிபுரம், இடமன்-புனலூர் இடையேயான ரெயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு உள்ளன. இந்த மின்மாயமக்கபட்ட ரெயில் தண்டவாளத்தில் இன்று காலை மின்சார அதிவேக ரெயில் எஞ்சின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

    தெற்கு ரெயில்வே முதன்மை தலைமை மின் பொறியாளர் சித்தார்த்தா தலைமையில் மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் சோதனை ஓட்டத்தை நேரில் ஆய்வு செய்தனர்.

    விருதுநகரில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்ட ஆய்வு ரெயில், மதியம் புனலூருக்கு சென்றது. அடுத்தபடியாக புனலூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்படும் அதிவேக என்ஜின் ரயில், 4.35 மணிக்கு எடமன் செல்லும். இதனைத் தொடர்ந்து பகவதிபுரத்தில் இருந்து மாலை 4:55 மணிக்கு புறப்படும் அதிவேக ரயில், இரவு 8.30 மணிக்கு விருதுநகர் வரும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    விருதுநகர்-தென்காசி-செங்கோட்டை பிரிவில் ஒட்டுமொத்தமாக 140.89 கி.மீ. தொலைவுக்கு ரெயில் பாதைகள் உள்ளன. இதில் 129.99 கி.மீ. தொலைவிற்கு மின்மயம் ஆக்கப்பட்டு உள்ளது. இந்த பிரிவில் 8 ரெயில் நிலையங்கள் உள்ளன. இதற்காக மின்சார நுகர்வு விருதுநகர், வஞ்சி மணியாச்சி துணை மின் நிலையங்களில் இருந்து பெறப்படுகிறது. இது தவிர சோழபுரம், செங்கோட்டையில் மேலும் 2 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

    அடுத்தபடியாக திருத்தங்கல்-பாம்பு கோவில் சந்தை பிரிவில் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன் கோவில், கடையநல்லூர், தென்காசி ஆகிய பகுதிகளில் துணை செக்சன் போஸ்டர்கள் அமைக்கப்பட உள்ளது.

    விருதுநகரில் உள்ள ஓவர் ஹெட் எலக்ட்ரிக் டிராக்ஷன் டிப்போ, ராஜபாளையத்தில் புதிதாக அமைய உள்ள டிப்போ ஆகியவை மேற்கண்ட பிரிவின் மின்சார பராமரிப்பு தேவையை பூர்த்தி செய்யும். விருதுநகரில் உள்ள டவர் வேகன் சைடிங்குடன், புதிதாக ராஜ பாளையத்தில் டவர் வேகன் சைடிங் வருகிறது.

    செங்கோட்டை-பகவதிபுரம் மற்றும் எடமன்-புனலூர் பிரிவில் ஒட்டு மொத்தமாக 16.71 கி.மீ தொலைவுக்கு ரெயில் பாதைகள் உள்ளன. இதில் 14.70 கி.மீ. ரயில் பாதை மின்மயம் ஆக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயில் பாதையில் 2 பிளாக் ஸ்டேசன்கள் உள்ளன. இதற்காக தென்மலையில் செக்ஷனிங் போஸ்டர்கள் உள்ளன.

    அடுத்தபடியாக புதிய ஆரியங்காவு, எடமன், பகவதிபுரம் ஆகிய இடங்களில் துணை செக்ஷனிங் போஸ்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றுக்கான மின்சார பராமரிப்பு தேவையை விருதுநகர், ராஜபாளையத்தின் ஓவர் ஹெட் எலக்ட்ரிக் டிராக்ஷன் டிப்போக்கள் பூர்த்தி செய்யும். விருதுநகரில் ஏற்கனவே டவர் வேகன் சைடிங் உள்ளது. இதுதவிர ராஜபாளையத்தில் புதிய டவர் வேகன் சைடிங்கும் அமைய உள்ளது. எடமன்-பகவதிபுரம் இடையே 34.677 கி.மீ. தொலைவுக்கான மின்மயமாக்கல் பணிகள் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புனலூர்-கொல்லம் இடையே ஏற்கனவே மின் மயமாக்கல் முடிக்கப்பட்டு, அங்கு கடந்த மார்ச் மாதம் முதல் செயல்படத் தொடங்கி உள்ளது.

    • கல்லிடைகுறிச்சி இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் உள்ளிட்ட 10 போலீசாரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டது.
    • வழக்கு விசாரணையை சேரன்மகாதேவிக்கு பதில் வேறு இடத்தில் நடத்த வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங், சில வழக்குகள் தொடர்பாக விசாரணைக்கு அழைத்து சென்ற 30 பேரின் பற்களை பிடுங்கி கொடூரமாக தாக்கியதாக புகார் எழுந்தது.

    இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ காட்சிகள் வெளியானது. இதைத்தொடர்ந்து உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

    இதுதொடர்பாக விசாரணை நடத்த நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்படி சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகம்மது சபீர் ஆலம் பாதிக்கப்பட்டவர்களிடமும், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசாரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் 2 பேர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

    இந்நிலையில் இன்று கல்லிடைகுறிச்சி இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் உள்ளிட்ட 10 போலீசாரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசாரும் இன்று சேரன்மகாதேவியில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி சப்-கலெக்டர் முகம்மது சபீர் ஆலம் முன்னிலையில் விளக்கம் அளித்தனர்.

    இந்த 10 போலீசாரும் சம்பவத்தன்று பணியில் இருந்தவர்கள் ஆவார்கள். இதற்கிடையே பாதிக்கப்பட்டவர்களும், அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினரும் உதவி போலீஸ் சூப்பிரண்டு மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.

    விசாரணைக்காக அழைத்து செல்பவர்களை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் கற்களை கொண்டு தாக்கியும், பற்களை உடைத்தும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

    அவர் மீது சட்ட நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்வதுடன் சஸ்பெண்டும் செய்ய வேண்டும். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த சக போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதுதொடர்பாக சப்-கலெக்டர் விசாரணைக்கு பதில் மாவட்ட கலெக்டர் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம், பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    வழக்கு விசாரணையை சேரன்மகாதேவிக்கு பதில் வேறு இடத்தில் நடத்த வேண்டும். போலீஸ் நிலைய சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை உடனடியாக கைப்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×