என் மலர்
தமிழ்நாடு

30 பேரின் பல்லை பிடுங்கிய விவகாரம்- இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசாரிடம் விசாரணை
- கல்லிடைகுறிச்சி இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் உள்ளிட்ட 10 போலீசாரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டது.
- வழக்கு விசாரணையை சேரன்மகாதேவிக்கு பதில் வேறு இடத்தில் நடத்த வேண்டும்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங், சில வழக்குகள் தொடர்பாக விசாரணைக்கு அழைத்து சென்ற 30 பேரின் பற்களை பிடுங்கி கொடூரமாக தாக்கியதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ காட்சிகள் வெளியானது. இதைத்தொடர்ந்து உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்த நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்படி சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகம்மது சபீர் ஆலம் பாதிக்கப்பட்டவர்களிடமும், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசாரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் 2 பேர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில் இன்று கல்லிடைகுறிச்சி இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் உள்ளிட்ட 10 போலீசாரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசாரும் இன்று சேரன்மகாதேவியில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி சப்-கலெக்டர் முகம்மது சபீர் ஆலம் முன்னிலையில் விளக்கம் அளித்தனர்.
இந்த 10 போலீசாரும் சம்பவத்தன்று பணியில் இருந்தவர்கள் ஆவார்கள். இதற்கிடையே பாதிக்கப்பட்டவர்களும், அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினரும் உதவி போலீஸ் சூப்பிரண்டு மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.
விசாரணைக்காக அழைத்து செல்பவர்களை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் கற்களை கொண்டு தாக்கியும், பற்களை உடைத்தும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
அவர் மீது சட்ட நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்வதுடன் சஸ்பெண்டும் செய்ய வேண்டும். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த சக போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதொடர்பாக சப்-கலெக்டர் விசாரணைக்கு பதில் மாவட்ட கலெக்டர் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம், பாதுகாப்பு வழங்க வேண்டும்.
வழக்கு விசாரணையை சேரன்மகாதேவிக்கு பதில் வேறு இடத்தில் நடத்த வேண்டும். போலீஸ் நிலைய சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை உடனடியாக கைப்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.