search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பல் பிடுங்கிய விவகாரம்: சப்-கலெக்டர் விசாரணைக்கு ஆஜராக இரவில் வந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்
    X

    பல் பிடுங்கிய விவகாரம்: சப்-கலெக்டர் விசாரணைக்கு ஆஜராக இரவில் வந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்

    • கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப், 2 பெண் போலீசார் உள்பட 4 போலீசார் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
    • பாதிக்கப்பட்ட வெங்கடேஷ் போலீசாருக்கு ஆதரவாக சூர்யா போல் வாக்குமூலம் அளிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பல்வீர்சிங் என்பவர் பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரால் நேற்று அவர் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    அவர் மீதான புகார் தொடர்பாக சேரன்மாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் விசாரணை நடத்தி வருகிறார். கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த லெட்சுமி சங்கர் ஏற்கனவே ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார்.

    இந்தநிலையில் நேற்று காலை கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த சூர்யா என்பவர் உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் முன்பு ஆஜரானார். அவரிடம் உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார். பின்னர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறும்போது, தான் கீழே விழுந்ததில் பல் உடைந்து விட்டது என்றார்.

    அதன்பின்னர் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப், 2 பெண் போலீசார் உள்பட 4 போலீசார் ஆஜராகி விளக்கம் அளித்தனர். மேலும் 7 பேர் சேரன்மாதேவி உதவி கலெக்டர் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க அலுவலகம் முன் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

    இதில் சம்மன் அனுப்பப்பட்ட சுபாஷ் என்பவரிடம் மட்டுமே உதவி கலெக்டர் விசாரணை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து இரவு 7.30 மணியளவில் கல்லிடைக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, பாதிக்கப்பட்ட வெங்கடேஷ் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக வந்தனர். ஆனால் இரவு நேரம் ஆகிவிட்டதால் சம்மன் திருத்தி அனுப்பிய பின்னர் இன்று காலை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் உத்தரவிட்டார்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, வெங்கடேஷ் ஆகியோர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இன்று அவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட வெங்கடேஷ் போலீசாருக்கு ஆதரவாக சூர்யா போல் வாக்குமூலம் அளிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Next Story
    ×