search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பற்கள் உடைந்ததற்கும், காவல் துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை- அந்தர் பல்டி அடித்த சூர்யா
    X

    பற்கள் உடைந்ததற்கும், காவல் துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை- அந்தர் பல்டி அடித்த சூர்யா

    • அம்பாசமுத்திரம் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்து இன்று முதலமைச்சர் உத்தரவிட்டார்.
    • நெல்லையில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக கூறப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங், சில வழக்குகள் தொடர்பாக விசாரணைக்கு அழைத்து சென்ற 30 பேரின் பற்களை பிடுங்கி கொடூரமாக தாக்கியதாக புகார் எழுந்தது.

    இதைத்தொடர்ந்து உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதுதொடர்பாக விசாரணை நடத்த நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்படி சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகம்மது சபீர் ஆலம் பாதிக்கப்பட்டவர்களிடமும், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசாரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசாரும் இன்று சேரன்மகாதேவியில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி சப்-கலெக்டர் முகம்மது சபீர் ஆலம் முன்னிலையில் விளக்கம் அளித்தனர்.

    இந்த விவகாரத்தில் விரும்பத்தகாத சம்பவத்தில் ஈடுபட்ட அம்பாசமுத்திரம் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    இந்நிலையில் நெல்லையில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக கூறப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

    தான் காவல்துறையால் தாக்கப்படவில்லை என்றும், கீழே விழுந்ததிலேயே தனது பற்கள் உடைந்ததாகவும் பாதிக்கப்பட்ட சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.

    சேரன்மகாதேவி சப்-கலெக்டரிடம் விசாரணைக்கு ஆஜரான நிலையில் பற்கள் உடைந்ததற்கும், காவல்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சூர்யா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×