என் மலர்
திருநெல்வேலி
- தென்மாவட்டங்களில் இளவட்டக் கல்லை தூக்கிச் சுமக்கும் வீர விளையாட்டு நடைபெற்று வருவது இயல்பு.
- வெற்றி பெற்றவர்களுக்கு தற்போது பரிசுகள் மட்டுமே வழங்கப்படுகிறது.
பணகுடி:
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டிற்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. இதற்கு அடுத்த கட்டமாக இளவட்டக்கல் தூக்கும் போட்டி பிரசித்தி பெற்றது.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள வடலிவிளை கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டு தோறும் இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்று வருவது வியப்பை அளித்து வருகிறது.
தமிழகத்தில் தென்மாவட்டங்களில் இளவட்டக் கல்லை தூக்கிச் சுமக்கும் வீர விளையாட்டு நடைபெற்று வருவது இயல்பு. இளவட்டக் கல்லைத் தூக்கிச் சுமக்கும் இளைஞனுக்கு பெண்ணை மணமுடித்துக் கொடுத்தது அந்த காலத்தில் ஒரு வழக்கமாக இருந்தது. நாகரிக காலத்தில் அந்த வழக்கம் மறைந்து போனாலும் தென்மாவட்டங்களில் பல சிற்றூர்களில் இன்றளவும் இளவட்டக் கல்லைச் தூக்கும் போட்டி நடத்தப்படுகிறது.
தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு தற்போது பரிசுகள் மட்டுமே வழங்கப்படுகிறது. இளவட்டக்கல் பொதுவாகச் சுமார் 55, 60, 98, 114 மற்றும் 129 கிலோ எடை கொண்டதாகவும் முழு உருண்டையாக வழுக்கும் தன்மை கொண்டதாக எந்தப்பிடிப்பும் இல்லாமல் கைக்கு அகப்படாத வடிவத்தில் இருக்கும். இளவட்டக் கல்லுக்குக் கல்யாணக்கல் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
இளவட்டக்கல்லைச் சுமப்பதில் பல படிநிலைகள் உண்டு. முதலில் குத்துக்காலிட்டு உட்கார்ந்த நிலையில் கல்லை இருகைகளாலும் சேர்த்தணைத்து லேசாக எழுந்து கல்லை முழுங்காலுக்கு நகர்த்தி பின்னர் முழுதாக நிமிர்ந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லை நெஞ்சின் மீது ஏற்றி பின்னர் தோள்பட்டைக்கு நகர்த்தி முழுதாகச் சுமக்க வேண்டும். தோள்பட்டைக்கு இளவட்டக்கல் வந்துவிட்டால் பின்பக்கமாக தரையில் விழுமாறு செய்யவேண்டும்.

தமிழரின் உடல் பலத்திற்கும், வீரத்திற்கும் சாட்சியாகத் திகழ்ந்த இந்த இளவட்டக் கற்கள் இன்றைக்குப் பல ஊர்களில் தம்மைத் தூக்கிச் சுமப்பார் யாரும் இல்லாமல் பாதியளவு மண்ணில் புதைந்துகிடக்கும் பரிதாபத்தை காணமுடிகிறது . இருந்தபோதிலும் தற்போது நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளை கிராமத்தில் இளவட்டக்கல் தூக்கும் விளையாட்டு போட்டி வழக்கம்போல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
அதேபோல் உரல் தூக்கும் போட்டியிலும் பங்குபெற இளைஞர்களுக்கு இணையாக இளம் பெண்களும் தங்களை தயார்படுத்தி விளையாடினர். இப்போட்டியில் உரலை ஒரு கையால் ஏந்தி தலைக்கு மேல் நீண்டநேரம் தூக்கி நிறுத்திவைக்கும் சாதனையும் நடைபெற்றது.
இதில் 55 கிலோ இளவட்ட கல்லை தூக்கும் போட்டியில் பெண்கள் பிரிவில் ராஜகுமாரி என்ற பெண்மணி 23 முறை கழுத்தை சுற்றி முதலிடத்தை பிடித்தார். 2-வது இடத்தை தங்க புஷ்பம் என்ற பெண் வெற்றி பெற்றுள்ளார்.

ஆண்களுக்கான 98 கிலோ இளவட்ட கல்லை கழுத்தை சுற்றி போடும் போட்டியில் முதல் பரிசை விக்னேஸ்வரனும் 2-வது பரிசை பாலகிருஷ்ணனும் தட்டி சென்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசும் பொன்னாடை அணிவித்து கவுர விக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வடலிவிளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திக்குளம் கிராமத்தில் இந்த போட்டி நடத்தப்பட்டது.
- வெற்றி பெற்ற தம்பதிகளுக்கு கொப்பரை அண்டா பரிசாக வழங்கப்பட்டது.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருநெல்வேலியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தம்பதிகளுக்காக வித்தியாசமான விளையாட்டு போட்டி ஒன்று நடைபெற்றுள்ளது.
ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திக்குளம் கிராமத்தில் தம்பதிகள் தங்களது வாயில் பந்துகளை வைத்து கீழே விழாமல் பத்திரமாக கொண்டு போய் சேர்க்கும் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் அதிக பந்துகளை சேர்த்து வெற்றி பெற்ற தம்பதிகளுக்கு கொப்பரை அண்டா பரிசாக வழங்கப்பட்டது.
- தூய்மையான காற்றின் தரத்தை அனுபவிக்கும் நகரங்களை எடுத்துக்காட்டுகிறது.
- இந்தியா முழுவதும் உள்ள நகரங்களுக்கான சமீபத்திய காற்று தரக் குறியீட்டு தரவை வெளியிட்டுள்ளது.
நெல்லை:
இந்தியாவில் காற்றின் தரம் ஒரு முக்கியமான சுற்றுச்சூழல் சவாலாக இருக்கிறது. எனினும் பல்வேறு நகரங்களில் குறிப்பிடத்தக்க மாறுபாடுகளுடன், இந்தியா முழுவதும் உள்ள நகரங்களை மதிப்பிடுவது அவற்றுக்கிடையே உள்ள வேறுபாட்டை எடுத்துக்காட்டுகிறது. இந்நிலையில் 2025-ல் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், இந்தியா முழுவதும் உள்ள நகரங்களுக்கான சமீபத்திய காற்று தரக் குறியீட்டு தரவை வெளியிட்டுள்ளது.
இந்த அட்டவணை தற்போது சிறந்த மற்றும் தூய்மையான காற்றின் தரத்தை அனுபவிக்கும் நகரங்களை எடுத்துக்காட்டுகிறது. அதில் இந்திய நகரங்களில் மிகச்சிறந்த காற்றின் தரம் இருக்கும் நகரமாக நெல்லை திகழ்கிறது.
தமிழ்நாட்டின் நெல்லை முதல் இடத்திலும், அருணாச்சல பிரதேசத்தின் நாகர் லகுன் 2-வது இடத்தையும், கர்நாடகாவின் மடிக்கேரி பகுதி 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. தஞ்சாவூர் 5-வது இடத்தை பிடித்துள்ளது. காற்றின் தரம் சிறப்பாக இருக்கும் மாநிலங்களில் கர்நாடகாவின் கப்பல், உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி மற்றும் கேரளாவின் கண்ணூர் நகரமும் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காற்றின் தரம் மிக மிக மோசமாக இருக்கும் நகரத்தில் முதல் இடத்தை இந்திய தலைநகரான புது டெல்லி பிடித்துள்ளது. மோசமான காற்று தரம் உள்ளதாக 2-வது இடத்தை உத்தரபிரதேச மாநிலத்தின் காசியாபாத்தும், 3-வது இடத்தினை மேகாலயாவின் பிரின் ஹேட் நகரமும் பிடித்துள்ளன. சண்டிகர், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், ஹிமாச்சல் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகியவை காற்றின் தரம் மோசமாக உள்ள முதல் 10 மாநில பட்டியலில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- அருவியை பார்வையிட சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
- பாளை கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவிலிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
நெல்லை:
பொங்கல் பண்டிகையின் மறுநாள் மாட்டு பொங்கல் என்ற போதிலும் நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் அந்நாளை காணும் பொங்கலாக கொண்டாடி வருகின்றனர்.
இந்தநிலையில் காணும் பொங்கல் தினமான இன்று பாபநாசம், அகஸ்தியர் அருவி மற்றும் சொரிமுத்து அய்யனார் கோவில் தாமிரபரணி ஆற்றில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. பாபநாசம் வனத்துறை சோதனை சாவடியில் கடுமையான சோதனைக்கு பின்னரே வாகனங்கள் அனுப்பப்பட்டன.
மக்கள் இப்பகுதிகளுக்கு தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கார், வேன்களில் வந்ததால் வனப்பகுதிகளில் பல இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தாமிரபரணி ஆறு பகுதிகளில் மக்கள் உற்சாகமாக குளித்து பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
களக்காடு தலையணை, வடக்கு பச்சையாறு அணைப்பகுதி, தேங்காய் உருளி அருவி உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு குவிந்தனர். மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அதேநேரம் அருவியை பார்வையிட சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
நெல்லை மாநகர பகுதியில் காணும் பொங்கலையொட்டி அறிவியல் மையத்தில் பொதுமக்கள் குவிந்தனர். அங்கு பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காட்சி அளித்தது. பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் அறிவியல் மையத்திற்கு வந்து இருந்தனர். வீட்டில் சமைத்த உணவை அறிவியல் மையத்திற்கு கொண்டு வந்து சாப்பிட்டனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
பாளை கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவிலிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் நெல்லை மாநகர பகுதியில் உள்ள பாளை மார்க்கெட், மேலப்பாளையம், நெல்லை டவுன், தச்சநல்லூர், பாளையில் உள்ள இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதேபோன்று மாவட்டம் முழுவதும் காலை முதலே இறைச்சி கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆட்டு இறைச்சி ஒரு கிலோ ரூ.900 முதல் ரூ.1000 வரைக்கும், பிராய்லர் கோழி கிலோ ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- பயணிகள் கோரிக்கையை ஏற்று தூத்துக்குடியில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த ரெயிலில் 3-ம் வகுப்பு ஏசி பெட்டிகள் 7 இணைக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. 9 நாட்கள் வரை விடுமுறை இருப்பதால் சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு வந்துள்ளனர்.
மீண்டும் அவர்கள் விடுமுறை முடிந்து சென்னை உள்ளிட்ட பணிபுரியும் ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு ரெயில்கள் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி பயணிகள் கோரிக்கையை ஏற்று தூத்துக்குடியில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி -தாம்பரம்(வண்டி எண்:06168) ரெயில் வருகிற 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடியில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரெயில் தூத்துக்குடி மேலூர், வாஞ்சி மணியாச்சி, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், மதுரை, சோழவந்தான், திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
இந்த ரெயிலில் 3-ம் வகுப்பு ஏசி பெட்டிகள் 7 இணைக்கப்பட்டுள்ளது. 6 படுக்கை வசதி பெட்டிகள் உள்ளது. அதேநேரம் இந்த ரெயிலில் முன்பதிவு பெட்டிகள் எதுவும் கிடையாது.
- 6 நாட்கள் இயக்கப்படும் இந்த ரெயில் மொத்தம் உள்ள 650 கிலோமீட்டர் தூரத்தை 7 மணி நேரம் மற்றும் 50 நிமிடங்களில் சென்றடைகிறது.
- கூடுதல் பெட்டிகள் இணைப்பால் தென் மாவட்டட பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை:
தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் சென்று திரும்பும் விதமாக குறைந்தபட்ச மணி நேரங்களில் செல்லும் வகையில் ரெயில் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து ரெயில்வே நிர்வாகம் சார்பில் கடந்த ஆண்டு நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டது.
டிக்கெட்டின் விலை அதிகமாக இருந்தாலும், பயணிகள் இடையே இந்த ரெயில் மிகுந்த வரவேற்பை பெற்றது. தற்போது இந்த வந்தே பாரத் ரெயில் சேவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ரெயில் நெல்லையில் இருந்து தினமும் காலை 6.05 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் மதுரைக்கு 7.50-க்கும், 9.45 மணிக்கு திருச்சிக்கும் செல்கிறது. தொடர்ந்து மதியம் 1.55 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடைகிறது.
இந்த ரெயில் மறுமார்க்கத்தில் மதியம் 2.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மாலை 6.35 மணிக்கு திருச்சி, இரவு 8.20 மணிக்கு மதுரை வழியாக இரவு 10.30 மணிக்கு நெல்லை வந்தடைகிறது. இந்த ரெயிலில் 7 ஏசி சேர் கார் பெட்டிகளும், ஒரு எக்ஸிகியூட்டிவ் சேர் கார் பெட்டியும் என மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து, 6 நாட்கள் இயக்கப்படும் இந்த ரெயில் மொத்தம் உள்ள 650 கிலோமீட்டர் தூரத்தை 7 மணி நேரம் மற்றும் 50 நிமிடங்களில் சென்றடைகிறது.
இந்நிலையில் இந்த ரெயிலில் டிக்கெட்டுகள் சீக்கிரம் தீர்ந்து விடுவதால் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து நெல்லை-சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரெயிலை 16 பெட்டிகளாக மாற்றி கடந்த 11-ந்தேதி முதல் இயக்க தென்னக ரெயில்வே திட்டமிட்டு அறிவிப்பை வெளியிட்டது.
பயணிகளின் வசதியை மேம்படுத்தும் விதமாக அறிவிக்கப்பட்ட நிலையில், 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் தேதியானது மாற்றி அமைக்கப்பட்டு இன்று முதல் இயங்கும் என தென்னக ரெயில்வே அறிவித்தது. அதேநேரம் 11-ந்தேதி முதல் முன்பதிவு தொடங்கியது.
தொடர்ந்து இன்று காலை நெல்லை-சென்னை (வண்டி எண்:20666) தனது இயக்கத்தை நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து 16 பெட்டிகளுடன் காலை 6.19 மணிக்கு புறப்பட்டது. வழக்கமாக 6.05 மணிக்கு புறப்படும் இந்த ரெயில், இன்று 16 பெட்டிகளுடன் முதல் முறையாக இயக்கப்பட்டதால் 14 நிமிடங்கள் தாமதமாக இயக்கத்தை தொடங்கியது.
தற்போது பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காலகட்டத்தில் வந்தே பாரத் ரெயில் 16 பெட்டிகளுடன் இயக்கப்பட்டதால் ஏற்கனவே காத்திருப்பு பட்டியலில் இருந்த பயணிகளுக்கு இடம் கிடைத்தது. இதனால் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.
டிக்கெட் விலை அதிகமாக இருந்தாலும், இந்த விடுமுறை நாளில் சென்னைக்கு ரெயிலில் பயணித்தால் போதும் என்ற மனநிலையில் இருப்பதால் மகிழ்ச்சியுடன் செல்வதாக பயணிகள் தெரிவித்தனர். இன்று முதல் இயக்கப்பட்ட இந்த ரெயிலில்14 சேர் கார் பெட்டிகளும், 2 எக்ஸிகியூட்டிவ் சேர் கார் பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
நாளை முதல் வருகிற 20-ந் தேதி வரை 16 பெட்டிகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. இன்று காலை நிலவரப்படி மேற்கண்ட நாட்களில் காத்திருப்பு பட்டியலில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் உள்ளனர்.
கூடுதல் பெட்டிகள் இணைப்பால் தென் மாவட்டட பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ராமகிருஷ்ணன் நகையையும் கொள்ளையடித்து கொண்டு சென்றுவிட்டார்
- தெலுங்கானா, ஆந்திராவில் 7-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி சிவா தெருவை சேர்ந்தவர் ஆரோக்கிய ரெமன். இவர் மூலைக்கரைப்பட்டி பஜார் பகுதியில் ஒரு வணிக நிறுவனத்தின் மாடியில் அடகு கடை நடத்தி வந்தார். கீழ் தளத்தில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ந்தேதி அதிகாலையில் அடகு கடைக்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் அங்கிருந்து ரூ. 3 லட்சம் பணம் மற்றும் 250 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றார்.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் தொடர்பாக மூலைக்கரைப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சி.சி.டி.வி.க்களை ஆய்வு செய்த போது மங்கி குல்லா அணிந்து வந்த மர்மநபர் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து நெல்லை சரக டி.ஜ.ஜி. மூர்த்தி ஆலோசனையின்பேரில், போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் நேரடி கண்காணிப்பில் நாங்குநேரி டி.எஸ்.பி. பிரசன்னகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ராஜகுமாரி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள ரெட்டார் குளத்தை சேர்ந்த ஆறுமுகநயினார் மகன் ராமகிருஷ்ணன் (வயது 35) என்பவர் இந்த கொள்ளையை நிகழ்த்தியதும், அவர் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் பதுங்கியிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 137 பவுன் தங்க நகைகளை மீட்டுள்ளனர்.
விசாரணைக்கு பின்னர் நாங்குநேரி கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தி இன்று காலை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தை அறிந்த ராமகிருஷ்ணனின் தாய் மீனாட்சி (65) விசாரணைக்கு பயந்து நேற்று அதிகாலை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவத்தில் ராமகிருஷ்ணன் ஈடுபட்டது எப்படி?. வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன.
ராமகிருஷ்ணன் பல ஆண்டுகளாக தெலுங்கானா மாநிலத்தில் ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கே தன்னுடன் பணிபுரிந்த ஒரு இளம்பெண்ணை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் மீது தெலுங்கானா, ஆந்திராவில் 7-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன.
இவர் ஏற்கனவே மங்கி குல்லா அணிந்து நாசரேத் பகுதியில் திருட்டை நிகழ்த்தியதை அடிப்படையாக கொண்டு நடத்திய விசாரணையில் தற்போது அவர் சிக்கினார்.
இவர் திட்டமிட்டோ, கூட்டாளிகளோடு சேர்ந்தோ எங்கும் கொள்ளையடிக்க செல்வதில்லை. தனியாக சாதாரணமாக சென்று பூட்டிய வீடுகளில் நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு பின்னர் 1 வருடம் வரை தெலுங்கானாவில் போய் தங்கி கொள்வார். பின்னர் சொந்த ஊருக்கு வந்து மீண்டும் கைவரிசை காட்டி விட்டு சென்றுவிடுவதாக அவர் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் அடகு கடையில் கொள்ளை அடிக்கும் நாளுக்கு முந்தைய நாள் கோவில் கொடை விழாவுக்காக அவர் சொந்த ஊர் வந்துள்ளார். வந்த இடத்தில் தான் அடகு கடையில் கொள்ளையடிக்க அவர் உள்ளே சென்றுள்ளார். அப்போது பணத்திற்கு அருகிலேயே லாக்கரின் சாவியும் இருந்துள்ளது.
அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ராமகிருஷ்ணன் நகையையும் கொள்ளையடித்து கொண்டு சென்றுவிட்டார். அன்றைய தினமே அந்த நகைகளில் பாதியை தனது தாய் மீனாட்சியிடம் கொடுத்துவிட்டு மீதி நகைகளுடன் தெலுங்கானா சென்றுள்ளார்.
இந்நிலையில் அங்கு தனது வழக்குகளை நடத்தி வரும் தெலுங்கானாவை சேர்ந்த வக்கீலிடம் பாதி நகைகளை கொடுத்துள்ளார். இவ்வாறாக நகைகளை மேலும் 2 பேரிடமும் கொடுத்து விட்டு அவ்வப்போது அதனை வாங்கி விற்று சொகுசாக குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
மீனாட்சியிடம் கொடுத்த நகைகளை அவர் தனது மற்ற குழந்தைகளுக்கு பங்கு வைத்து கொடுத்துள்ளார். இதனை அறிந்த ராமகிருஷ்ணன் தனது தாயாரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்த சம்பவங்கள் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே பல்வேறு துப்புகளின் அடிப்படையில் ராமகிருஷ்ணனை போலீசார் நெருங்கிய நிலையில் இந்த சம்பவமும் அவர்களது சந்தேகத்தை உறுதியாக்கியது. தொடர்ந்து அவரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய வக்கீல் மற்றும் 2 பேரை போலீசார் கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். மீதமுள்ள 113 பவுன் தங்க நகைகளையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும் சாமி தரிசனம்.
- பக்தர்கள் சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம்.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.
ஆண்டுதோறும் தைப்பொங்கலை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து அலகு குத்தியும்,காவடி எடுத்து வந்தும், சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

அந்த வகையில் நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) பொங்கல் திருநாள் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் சாலையில் சாரை, சாரையாக காவடி எடுத்தும், சுமார் 10 அடி, 12 அடி நீள அலகு குத்தி வந்தவாறு உள்ளனர்.
தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, போன்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
பக்தர்கள் வருகை அதிகரிப்பால் திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரு புறம் சாரை சாரையாக பக்தர்கள், மறுபுறம் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணி வகுத்ததால் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன.

இன்று (ஞாயிற்றுக் கிழமை) விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மார்கழி மாதத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
- யானையை மீண்டும் எழுந்து நிற்க வைக்க பாகன்கள் முயற்சி செய்தனர்.
- யானைக்கு தொடர்ந்து மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் நெல்லை டவுன் நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் 56 வயதுடைய காந்திமதி என்ற பெண் யானை உள்ளது.
வயது முதிர்வு காரணமாக இந்த யானைக்கு கால்களில் மூட்டு வலி ஏற்பட்டு நடமாட முடியாமல் அவதிப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு முதல் மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த சில நாட்களாக யானை கீழே படுத்து உறங்காமல் நின்றபடியே தூங்கிக் கொண்டிருந்தது.
நேற்று அதிகாலை 3 மணி அளவில் யானை திடீரென்று கீழே படுத்தது. ஆனால் அதன் பிறகு அதனால் எழுந்திருக்க முடியவில்லை.
யானையை மீண்டும் எழுந்து நிற்க வைக்க பாகன்கள் முயற்சி செய்தனர். ஆனால் அது கைகொடுக்கவில்லை. இதுகுறித்து பாகன்கள் இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் நெல்லை ஸ்ரீபுரம் கால்நடை மருத்துவமனை தலைமை டாக்டர் முருகன், நெல்லை வனகால்நடை டாக்டர் மனோகரன், மதுரை வனகால்நடை டாக்டர் கலைவாணன், நெல்லை ராமையன்பட்டி கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் செல்வமணிகண்டன், நெல்லை வனச்சரகர் சரவணகுமார் ஆகியோர் உடனடியாக கோவிலுக்கு வந்து யானையை பார்வையிட்டனர். இந்த மருத்துவ குழுவினர் யானையின் ரத்த மாதிரியை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று மாலையில் 2 பெரிய கிரேன்கள் கோவிலுக்குள் கொண்டு வரப்பட்டன. அந்த கிரேன்கள் மூலம் யானையின் உடலில் பெல்ட் கட்டி தூக்கி நிறுத்தினார்கள்.
சிறிது நேரம் நின்றிருந்த யானை மீண்டும் கீழே படுத்துக்கொண்டது. யானைக்கு தொடர்ந்து மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உயிரிழந்தது.
யானையை எழ வைத்து சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி காந்திமதி யானை உயிரிழந்தது.
- அங்குலம் அங்குலமாக ஒவ்வொரு கட்டிடத்தையும் சோதனை செய்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தின் மையப்பகுதியான வண்ணார்பேட்டை கொக்கிரகுளம் பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது.
இங்கு ஊரக வளர்ச்சி முகமை, வருவாய்த்துறை, மகளிர் திட்டம், மாற்றுத்திறனாளிகள் துறை என 20-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் பாளை தாலுகா அலுவலகம், இ-சேவை மையம், தபால் நிலையம் உள்ளிட்டவையும் இயங்கி வருகிறது.
இங்கு பல்வேறு பணிகளுக்காகவும் தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு கருதி இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சுழற்சி முறையில் பணியாற்றி கொண்டு இருப்பார்கள். மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் பணியில் ஈடுபடுவது வழக்கம்.
இந்நிலையில் நெல்லை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று அதிகாலை 1.20 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் போன் செய்துள்ளார். அப்போது பேசிய நபர், நெல்லையில் இருந்து பேசுகிறேன். நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன் என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டார்.

இந்த தகவல் மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹடிமனிக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவரது உத்தரவின்பேரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கலெக்டர் அலுவலகத்துக்கு விரைந்து சென்றனர்.
வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் அங்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து மெட்டல் டிடெக்டர் மூலமாக அங்குலம் அங்குலமாக ஒவ்வொரு கட்டிடத்தையும் சோதனை செய்தனர்.
மேலும் போலீசாரும் மோப்பநாய் மூலமாக கட்டிடங்கள், அரசு வாகனங்கள் உள்ளிட்டவற்றை சோதனை செய்தனர். கலெக்டர் அலுவலகம் முழுவதும் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த சோதனையில் வேறு எதுவும் சிக்கவில்லை. இதனை தொடர்ந்து அனைவரும் நிம்மதி அடைந்தனர்.
பின்னர் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் அழைப்பு வந்த செல்போன் எண்ணை போலீசார் செல்போன் சிக்னல் மூலமாக ஆய்வு செய்தனர். அப்போது அந்த சிக்னல் பேட்டை ஆசிரியர் காலனியை காட்டியது. உடனடியாக பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் அங்கு விரைந்தனர்.
அங்குள்ள 3-வது தெருவில் விசாரணை நடத்தியபோது கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் செய்யது அப்துல் ரஹ்மான்(வயது 45) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் பேட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து நடத்திய விசாரணையில், செய்யது அப்துல் ரஹ்மான் பேட்டை பகுதியில் கார் டிங்கரிங் மற்றும் வெல்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வருவரு தெரியவந்தது. இவருக்கு மனைவி , ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
சமீபத்தில் செய்யது அப்துல் ரஹ்மானின் மனைவி, தமிழக அரசின் திட்டமான மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ரூ.1000 கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதனிடையே பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், பணம் வழங்கப்படவில்லை என்பதால் செய்யது அப்துல் ரஹ்மான் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.
ஏற்கனவே மகளிர் உரிமை தொகையும் கிடைக்காத நிலையில், பொங்கலுக்கு எதிர்பார்த்த ஆயிரம் ரூபாயும் தரவில்லையே என்று செய்யது அப்துல் ரஹ்மான் ஆத்திரம் அடைந்துள்ளார்.
உடனே நேற்று மாலை பேட்டையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்திய அவர், இரவில் மதுபோதையின் உச்சத்தில் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து செய்யது அப்துல் ரகுமானை பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
- ஏராளமானவர்கள் கும்பமேளாவில் கலந்து கொள்ள செல்வார்கள்.
- கட்டணத்திற்கு ஏற்ப ரெயில் பயண வகுப்பு, தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து வசதி ஆகியவை வழங்கப்படுகிறது.
நெல்லை:
உத்தரபிரதேசம் மாநிலம் காசியில் வருகிற 13-ந்தேதி முதல் பிப்ரவரி 26-ந்தேதி வரை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் கும்பமேளா நடைபெற இருக்கிறது.
இந்த விழாவில் காசி கங்கை நதியில் புனித நீராட பொதுமக்கள் விரும்புவார்கள். அவ்வாறு நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால் ஏராளமானவர்கள் கும்பமேளாவில் கலந்து கொள்ள செல்வார்கள்.
இந்த பயணிகளின் வசதிக்காக நெல்லையில் இருந்து தென்காசி, ராஜபாளையம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் வழியாக காசிக்கு சுற்றுலா ரெயில் இயக்க இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி சிறப்பு சுற்றுலா ரெயில் நெல்லையில் இருந்து அடுத்த மாதம் 5-ந்தேதி அன்று அதிகாலை 1 மணிக்கு புறப்பட்டு மதுரை வந்து, மதுரையில் இருந்து அதே நாளில் காலை 6 மணிக்கு காசிக்கு புறப்படுகிறது.
இந்த ரெயில் பிப்ரவரி 7-ந்தேதி மதியம் 12.30 மணிக்கு காசி பனாரஸ் சென்றடைகிறது. அன்று மாலை கங்கா ஆரத்தி பார்த்து மறுநாள் முழுவதும் பிராக்யாராஜ் பகுதியில் சுற்றுலா செல்லுதல், பிப்ரவரி 9-ந்தேதி காசி விஸ்வநாதர், விசாலாட்சி, காலபைரவர், சாரநாத் கோவில்களுக்கு சுற்றுலா செல்லுதல், 10-ந்தேதி அயோத்தியா சரயு நதி மற்றும் ராம ஜென்ம பூமி கோவிலில் வழிபாடு செய்து அன்று இரவு நெல்லைக்கு புறப்படும்படி சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த சுற்றுலா ரெயில் பிப்ரவரி 13-ந்தேதி அதிகாலை 2.50 மணிக்கு மதுரை வந்து, காலை 7.30 மணிக்கு நெல்லை வந்தடைகிறது. இந்த ரெயில் தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் போன்ற ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த சுற்றுலாவுக்கு ரெயில் பயண கட்டணம், தங்குமிடம், பயண வழிகாட்டி, பாதுகாப்பு அலுவலர், தென்னிந்திய உணவு வகைகள், உள்ளூர் சுற்றுலா போக்குவரத்து உட்பட குறைந்த கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ.26 ஆயிரத்து 850 வசூலிக்கப்படுகிறது. குளிர்சாதன ரெயில் பெட்டி பயணம் மற்றும் உயர் சிறப்பு வசதிகளுக்கு கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ.38 ஆயிரத்து 470 மற்றும் ரூ.47 ஆயிரத்து 900 வசூலிக்கப்படுகிறது. கட்டணத்திற்கு ஏற்ப ரெயில் பயண வகுப்பு, தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து வசதி ஆகியவை வழங்கப்படுகிறது.
- கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் விக்னேஷ் மீது குண்டு பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
- விக்னேஷ் உயிரிழந்து 15 நாட்களுக்கு மேல் ஆகியும் அவரது உடல் தாயகம் கொண்டு வரப்படவில்லை.
நெல்லை:
ஜமைக்கா நாட்டில் தென்காசி மாவட்டம் சுரண்டையை சேர்ந்த சுபாஷ் அமிர்தராஜ் என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்த சூப்பர் மார்க்கெட்டில் நெல்லை சந்திப்பு மீனாட்சி புரம் புளியந்தோப்பு நடுத்தெருவை சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் விக்னேஷ் (வயது 31) என்பவர் ஓராண்டுக்கு மேலாக சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் அந்நாட்டில் கடந்த மாதம் 18-ந்தேதி அதிகாலையில் சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் விக்னேஷ் மீது குண்டு பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் வேலை பார்த்த மேலும் 2 பேர் காயமடைந்தனர். இதையறிந்த அவர்களின் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
விக்னேஷின் உறவினர்கள் அவரது உடலை விரைந்து இந்தியா அனுப்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று தச்சை பகுதி தி.மு.க. செயலாளர் தச்சை சுப்பிரமணியன் தலைமையில் மனு அளித்தனர். எம்.பி ராபர்ட் புரூஸ் விக்னேஷின் உடல் விரைவில் தாயகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த நிலையில் விக்னேஷ் உயிரிழந்து 15 நாட்களுக்கு மேல் ஆகியும் அவரது உடல் தாயகம் கொண்டு வரப்படவில்லை. இதனால் அவரது உறவினர்கள் கடும் சோகத்தில் உள்ளனர்.
இதுகுறித்த விக்னேஷின் உறவினர்கள் கூறுகையில், விக்னேஷின் உடலுக்கு நேற்று தான் பிரேத பரிசோதனை நிறைவு பெற்றதாக அந்நாட்டில் இருந்து எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து விக்னேஷின் உடல் விமானம் மூலம் தாயகம் கொண்டு வர ரூ.16 லட்சம் வரை செலவாகும் என தெரிவித்துள்ளார்கள். அதுதொடர்பாக பேசி வருகிறோம். அடுத்த வாரத்தில் விக்னேஷின் உடல் நெல்லைக்கு கொண்டு வரப்படும் என நம்புகிறோம் என்றனர்.






