என் மலர்
திருநெல்வேலி
- நெல்லை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ-மாணவிகளுக்கு என்று மொத்தம் 40 விடுதிகள் செயல்பட்டு வருகிறது.
- விடுதி மாணவ- மாணவிகளுக்கு உணவும், உறைவிடமும் இலவசமாக அளிக்கப்படும்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாணவர் விடுதி
தமிழக அரசால் நெல்லை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ-மாணவிகளுக்கு என்று மொத்தம் 40 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இதில் பள்ளி மாணவர் களுக்கு என்று 18 விடுதிகளும், பள்ளி மாணவிகளுக்கு என்று 15 விடுதிகளும், கல்லூரி மாணவர்களுக்கு என்று 3 விடுதிகளும், கல்லூரி மாணவிகளுக்கு என 3 விடுதிகள், முதுகலை பட்டப்படிப்பு மாணவர் களுக்கான ஒரு விடுதியும் செயல்பட்டு வருகின்றன.
இந்த விடுதிகளில் 2023-2024-ம் ஆண்டில் புதிதாக மாணவ- மாணவிகள் சேர்க்கப்பட உள்ளனர். பள்ளிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவ-மாணவிகள், கல்லூரியில் பட்டப்படிப்பு, பட்டம் மேற்படிப்பு படிக்கும் மாணவ-மாண விகள் இந்த விடுதிகளில் சேரலாம். ஆதிதிராவிடர் நல விடுதிகளில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர் 85 சதவீதமும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 10 சதவீதமும், இதர வகுப்பினர் 5 சதவீதமும் சேர்க்கப்படு கின்றனர்.
அனைத்து விடுதி மாணவ- மாணவிகளுக்கும் உணவும், உறைவிடமும் இலவசமாக அளிக்கப்படும். 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 4 செட் சீருடைகள், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகள் இலவசமாக வழங்கப்படும். 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வினா வங்கி இலவசமாக வழங்கப்படும்.
இலங்கை தமிழர்
இந்த விடுதிகளில் மதிப்பெண் அடிப்படையில் மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விடுதிக்கும், மாணவர் வசிக்கும் இடத்திற்கும் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் இருக்க வேண்டும். 5 கிலோமீட்டர் நிபந்தனை மாணவிகளுக்கு பொருந்தாது. ஒரு விடுதிக்கு தலா 5 நபர்கள் வீதம் அனைத்து விடுதிகளிலும் இலங்கை தமிழர்களின் குழந்தைகள் சேர்க்கப் படுவார்கள்.
தகுதி உடைய மாணவ-மாணவி கள் விண்ணப்ப ங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பாஸ்போர்ட் அளவு போட்டோ 3, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ் நகல், மதிப்பெண் பட்டியல் நகல் நடத்தை சான்று, ரேஷன் கார்டு நகல், ஆதார் அட்டை நகல், கல்வி நிலைய தலைவரால் அளிக்கப்படும் படிப்பு சான்றிதழ் ஆகியவற்றுடன் பள்ளி விடுதிகளுக்கு நாளையும் (வியாழக்கிழமை), கல்லூரி விடுதிக்கு வருகிற 14-ந் தேதிக்குள்ளும் காப்பா ளரிடம் ஒப்படைத்துவிட்டு https://tnadw-hms.in என்ற இணைய தளத்தில் பதி வேற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரெயில் நிலைய பழைய கட்டிடத்தில் முகப்பு பகுதியில் மேற்கூரை பெயர்ந்து விழுந்த வண்ணம் இருப்பதாக பயணிகள் அச்சப்படுகின்றனர்.
- சந்திப்பு ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு ரூ.5-க்கு குடிதண்ணீர் வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
நெல்லை:
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் தட்கல் டிக்கெட் எடுக்க வரும் பயணிகள் இருக்கை இல்லாததால் தரையில் அமர்ந்து இருப்பதாக ரெயில் பயணிகள் சங்கத்தினர் புகார் தெரி வித்தனர். இதுதொடர்பாக சமீபத்தில் மாலைமலரில் கடந்த 28-ந் தேதி செய்தி வெளியானது.
காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் தட்கல் டிக்கெட் எடுக்க வரும் பயணிகளுக்கு இருக்கை அமைத்து தர ரெயில்வே நிர்வாகம் முன் வர வேண்டும், சந்திப்பு ரெயில் நிலைய பகுதியில் இருந்து ஸ்ரீபுரம் செல்லும் வழியில் மேம்பாலத்தில் உள்ள நடைபாதை படிக்கட்டுகளை சீரமைத்து தர வேண்டும், ரெயில் நிலைய பழைய கட்டிடத்தில் முகப்பு பகுதியில் மேற்கூரை பெயர்ந்து விழுந்த வண்ணம் இருப்பதாக பயணிகள் அச்சப்படுகின்றனர். எனவே அதனையும் உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார். தச்சை மண்டல தலைவர் கெங்கராஜ் முன்னிலை வகித்தார். தொடர்ந்து அவர்கள் ரெயில்வே நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
சந்திப்பு ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு ரூ.5-க்கு குடிதண்ணீர் வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தற்போது அந்த திட்டம் நடை முறைப்படுத்தப்படாமல் பயணிகள் கூடுதல் விலை கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டியுள்ளது.
இது மிகவும் கண்டிக்கத் தக்கது என்று கூறியும் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். அவர்களுடன் ரெயில் நிலைய மேலாளர் முருகேசன், சந்திப்பு உதவி கமிஷனர் ராஜேஸ்வரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
எனினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் கோஷங்கள் எழுப்பியவாறு ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். இதைத்தொடர்ந்து மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கவி பாண்டியன், சொக்க லிங்ககுமார், மாவட்ட பொதுச்செய லாளர் மகேந்திர பாண்டி யன், மாவட்ட துணைத்தலைவர் மணி, வண்ணை சுப்பிர மணியன், மண்டல தலைவர்கள் ராஜேந்திரன், முகமது அனஸ் ராஜா, அபி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மார்சலும், விகுபாயும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
- காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
களக்காடு:
வள்ளியூர் அருகே உள்ள மேலசண்முகபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் செல்வின் மகன் மார்சல் (வயது 24). கட்டிட தொழிலாளி. இவரும், அதே ஊரை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் விகுபாய் (25) என்பவரும் ஏர்வாடி அருகே உள்ள ஆவரந்தலையில் நடந்த கபடி போட்டியை பார்க்க சென்றனர்.
அப்போது இவர்களுக்கும், பொத்தையடியை பகுதியை சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மார்சலும், விகுபாயும் மோட்டார் சைக்கிளில் ராஜபுதூர்-வள்ளியூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அங்குள்ள சாஸ்தா கோவில் ஆர்ச் அருகே சென்ற போது, பொத்தை யடியை சேர்ந்த முத்துக்கு மார் மகன் வைகுண்டராஜா, பெருமாள் மகன் மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து மார்சலையும், விகுபாயையும் வழிமறித்து, அவதூறாக பேசி அரிவாளால் வெட்டினர்.
இதில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, இது தொடர்பாக வைகுண்ட ராஜா, மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர்.
- சிறப்பு விருந்தினராக அம்பை ஒன்றிய சேர்மன் பரணிசேகர் கலந்து கொண்டார்.
- தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனைகளை வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் எடுத்து கூறினார்.
திசையன்விளை:
தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தலைமையிலான 2 ஆண்டு கால ஆட்சி முடிவடைந்து மூன்றாம் ஆண்டு தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பின் படி, தமிழ்நாடு முழுவதும் திராவிட மாடல் ஆட்சியின் ஈடில்லா ஆட்சி தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ராதாபுரம் கிழக்கு ஒன்றியத்தில் க.புதூர் பஞ்சாயத்தில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தலைமையில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது.
ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி மற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜான் ரபிந்தர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தலைமை கழக பேச்சாளரும், அம்பை ஒன்றிய பெருந்தலைவர் பரணிசேகர் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் கலந்து கொண்டு பேசுகையில், தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனைகளை எடுத்து கூறினார்.மேலும் அரசு எவ்வாறு அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகிறது.இலவச மகளிர் திட்டம் மற்றும் அரசு அமைந்த பிறகு பகுதிகளில் நடைபெற்ற, நடந்து முடிந்த மற்றும் நடக்க உள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து எடுத்து கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் அருண் தவசு, ஒன்றிய கவுன்சிலர் நட ராஜன், இசக்கி பாபு, பிரேமா, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் நாகமணி மார்த்தாண்டம் அமைச்சியார், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் முரளி, தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கி ணைப்பாளர் கெனி ஸ்டன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முரு கன், ஊராட்சி மன்ற தலை வர்கள் ராதிகா சரவண குமார், பொன் மீனாட்சி அரவிந்தன், பேபி முருகன், சாந்தா மகேஷ்வரன், மணி கண்டன், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், நடேஷ் அரவிந்த், திசையன்விளை பேரூர் இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ராஜ சேகர், பொற்கி ழி நடராஜன், முன்னாள் ஊராட்சி செயலாளர் ராம கிருஷ்ணன், ராம் கிஷோர் பாண்டியன், சங்கர், எழில் ஜோசப், டெ ன்னிஸ், காமில், சாகுல், கோகுல், சுடலை மணி, முத்தையா, ஸ்டா ன்லி, சுபாஷ், சுரேஷ், முத்து, ராஜா, வசந்தகுமார் மற்றும் நிர்வாகிகள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் பஸ்சில் உரசியபடி பஸ்சின் பின்பக்க டயர் பகுதியில் மோதி அப்பளம்போல் நொறுங்கியது.
- விபத்து குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இருந்து கோவில்பட்டி நோக்கி இன்று அதிகாலை அரசு பஸ் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு கோவில்பட்டிக்கு பஸ் புறப்பட்டது.
வண்ணார்பேட்டையை கடந்து தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகே சென்றபோது எதிரே மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று பஸ்சின் முன்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் பஸ்சில் உரசியபடி பஸ்சின் பின்பக்க டயர் பகுதியில் மோதி அப்பளம்போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த வாலிபர் இடிபாட்டில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த கோர விபத்து தொடர்பாக அக்கம் பக்கத்தினர் உடனடியாக பாளை தீயணைப்பு துறையினர் மற்றும் தச்சநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக தீயணைப்பு துறையினர் அங்கு வந்து காரில் சிக்கிய வாலிபர் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசாரும் அங்கு விரைந்து வந்து காரை ஓட்டி வந்த வாலிபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே போக்குவரத்து அதிகம் உள்ள வடக்கு புறவழிச் சாலையில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
ஆனாலும் தீயணைப்பு துறையினர் ஜே.சி.பி. எந்திரம் மூலமாக விபத்தில் சிக்கிய காரையும், இடிபாட்டில் சிக்கிய வாலிபர் உடலையும் சுமார் 1 மணி நேரம் போராடி மீட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் காரை ஓட்டி வந்தது தச்சநல்லூர் சிதம்பரம் நகர் பகுதியை சேர்ந்த நீர் காத்தலிங்கம்(வயது 39) என்பது தெரியவந்தது.
இவர் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். இன்று காலை வண்ணார்பேட்டை செல்வதற்காக காரில் அவர் புறப்பட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மறுநாள் அதிகாலையில் ரித்திகா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, கண்ணனூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் ரித்திகா (வயது23). இவரும் நெல்லை மாவட்டம் களக்காடு அருகே பொத்தை சுத்தி, இந்திரா காலனியை சேர்ந்த அஜித்குமாரும் காதலித்து வந்தனர்.
இவர்களது காதலுக்கு ரித்திகா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி ரித்திகாவும், அஜித்குமாரும் கடந்த 30.4.2021-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதனால் ரித்திகாவின் பெற்றோர்கள் ரித்திகாவுடன் பேசாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் சமாதானம் அடைந்த ரித்திகாவின் தாயார் தமிழரசி கடந்த 2 மாதமாக, ரித்திகாவுடன் பேசி வந்துள்ளார். கடந்த 29-ந்தேதி இரவில் ரித்திகா தனது தாயார் தமிழரசிக்கு போனில் தொடர்பு கொண்டு தனக்கும், தனது கணவர் அஜித்குமாருக்கும் தகராறு என்றும், காலையில் ஊருக்கு புறப்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையே மறுநாள் அதிகாலையில் ரித்திகா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தமிழரசி களக்காடு போலீசில் புகார் செய்தார். நாங்குநேரி டி.எஸ்.பி. ராஜூ மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொது சுகாதாரத்திற்கு ஆபத்து ஏற்படும் அளவிற்கு செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மாநில அளவில் முதலிடம் பெறும் பள்ளியாக செயல்பட்டு வருகிறது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சியில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மேயர் சரவணன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். துணை மேயர் ராஜு முன்னிலை வகித்தார்.
பா.ஜனதா மனு
பா.ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி அளித்த மனுவில், பாளை மண்ட லத்துக்குட்பட்ட 33-வது வார்டில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி அருகே சுகாதாரத் துறையை சேர்ந்த ஊழியர்கள் பாளை மாண்டல பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை, கட்டிடக்கழிவுகளை குவித்து வைத்துள்ளனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பொது சுகாதாரத்திற்கு ஆபத்து ஏற்படும் அளவிற்கு செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
பாளை மகாராஜா நகர் பொதுமக்கள் அளித்த மனுவில், நெல்லை மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளில் வறட்சியின் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே வணிக ரீதியான மற்றும் பொதுமக்கள் குடிபுகாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிதாக குடிநீர் இணைப்பு வழங்குவதை கோடை காலம் முடியும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
கல்லணை பள்ளி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை தாலுகா குழு செயலாளர் துரை நாராயணன் அளித்த மனுவில், கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மாநில அளவில் முதலிடம் பெறும் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இங்கு 6 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 4,300 மாணவிகள் பயின்று வருகின்றனர். பழைய கல்லணை கட்டிடத்திலும் ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர். மாநகர மக்களின் பெண் குழந்தைகள் படிப்பதற்கு இங்கு கட்டிடங்கள் போதுமானதாக இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக காலை, மாலை என சுழற்சி முறையில் மாணவிகள் பயின்று வருகின்றனர்.இந்த பழைய கல்லணை பள்ளியில் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு சுமார் 4 வருடங்களாக புதிய கட்டிடம் கட்டப்படாமல் உள்ளது. பழைய கல்லணை பள்ளியில் 56 ஆசிரியர்களுக்கு 2 கழிப்பிடம் தான் உள்ளது. எனவே கூடுதல் கழிப்பிடம் கட்டித் தர வேண்டும். தினசரி பயன்படுத்தும் பகுதியான குடிநீர் குழாய், கைகள் கழுவும் பகுதிகளையும் சீரமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
பழைய பேட்டை வாணியர் தெற்கு தெருவை சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் அளித்த மனுவில், சந்திப்பு ரெயில் நிலையம் செல்லும் சாலையில் ஓரத்தில் இட்லி வியாபாரம் செய்து வந்தேன். போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி அதனை அதிகாரிகள் அகற்றி விட்டனர். எனவே எனக்கு இட்லி கடை நடத்துவதற்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
- கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடங்களை கிருஷ்ணா புரத்தில் உள்ள தனி நபர்கள் ஆக்கிரமித்து வைத்து உள்ளனர்.
- இடம் தொடர்பாக ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
நெல்லை:
இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் பிரம்மநாயகம் தலைமையில் மத்திய அரசு வக்கீல்கள் குற்றாலநாதன், பாலாஜி கிருஷ்ணசுவாமி, மாவட்ட தலைவர் சிவா மற்றும் கிருஷ்ணாபுரம் கிராம மக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
பாளை தாலுகா நொச்சி குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் கிராமத்தில் அனைத்து சமுதாய மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு 800 வருடங்களுக்கு முன்னர் பாண்டிய மன்னர்க ளால் கட்டப்பட்ட பெருமாள் கோவில், சிவன் கோவில் மற்றும் திருச் செந்தூர் செல்லும் பாதை யாத்திரை பக்தர்கள் தங்கி செல்வதற்கு கல் மண்டபமும் உள்ளது. இந்த மண்டபத்தில் யாரால் அமைக்கப்பட்டது என்ற பெயருடன் கூடிய பதிக்கப்பட்ட கல்வெட்டுகள் சுவர்களில் இருந்து வருகிறது.
இந்த சத்திரம் மற்றும் கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடங்களை கிருஷ்ணா புரத்தில் உள்ள தனி நபர்கள் ஆக்கிரமித்து வைத்து உள்ளனர்.
அந்த இடத்திற்கு போலி ஆவணங்கள் தயார் செய்து மோசடியாக சிலர் பட்டா பெற்றுள்ளனர். இதனை மீட்க போராடிய நபர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.
இந்த இடம் தொடர்பாக ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வழக்கு போடப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது. அந்த இடம் தற்போது கோடிக்கணக்கில் இருக்கும் என்பதால் அதனை தனி நபர்கள் ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருகின்றனர்.
எனவே மாவட்ட கலெக்டர் இந்த பிரச்சினையில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு செய்ய முயலும் தனி நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும். அந்த இடத்தையும் மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
அப்போது அவர்களுடன் மாவட்ட செயலாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாகி கள் விமல், தாஸ், ரமேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- மின் தடங்கள் ஏற்பட்டால் உடனடியாக மின் வினியோகம் வழங்குவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
- மின் நுகர்வோர்கள் கேட்கிற கேள்விகளுக்கு உரிய பதிலை கனிவுடன் தெரிவிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
நெல்லை:
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் செயற்பொறியாளர் அலுவலகம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இதில் நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள், பிற அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.
முகாமில் கல்லிடைக்குறிச்சி கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர். குறைதீர்க்கும் முகாம் முடிந்தவுடன் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி பேசுகையில், கோடைகாலத்தில் ஏற்படும் இயற்கை இடர்பாடுகள், நெல்லை , தென்காசி மாவட்டங்களில் கடும் இடி, மின்னலுடன் மழை பொழிவு, சூறைக்காற்று அதிகமாக இருக்கிறது. இதனால் அனைத்து மின் பொறியாளர்களும் தொடர் கண்காணிப்பில் பணிபுரிந்து மின் தடங்கள் ஏற்பட்டால் உடனடியாக மின் வினியோகம் வழங்குவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
மேலும் மின் நுகர்வோர்கள் கேட்கிற கேள்விகளுக்கு உரிய பதிலை கனிவுடன் தெரிவிக்கவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார். மேலும் பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொண்டு மின்சாரம் சம்பந்தமான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.
- ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
- தாசில்தாரிடம் விவரம் கேட்கும் போது அலட்சியமாக பதில் சொல்வதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
நெல்லை:
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் பெருமாள், செயலாளர் முத்து மணிகண்டன் ஆகியோர் தலைமையில் டவுன் தாலுகா அலுவலகத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் டவுன் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500-க்கு விண்ணப்பித்து காலதாமதத்தை கண்டித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.இது தொடர்பாக தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரிடம் விவரம் கேட்கும் போது அலட்சியமாக பதில் சொல்வதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் செந்தில், புஷ்பா, சுப்பையா, சண்முகத்தாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அயன் சிங்கம்பட்டி ஊரின் எல்லையில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை உடைத்ததாக சூர்யா என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
- சூர்யா பல் பிடுங்கப்பட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களை பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அயன் சிங்கம்பட்டி ஊரின் எல்லையில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை உடைத்ததாக அதே ஊரை சேர்ந்த சூர்யா என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதற்காக கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான சூர்யா பல் பிடுங்கப்பட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங், இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, காவலர்கள் ராமலிங்கம், ஜோசப் ஆகியோர் பெயர் சேர்த்து உள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சூர்யாவை கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய போது பணியில் இருந்த 15 போலீசார் நெல்லையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் துருவி, துருவி விசாரணை நடத்தினார்.
பின்னர் அவர்கள் வாக்குமூலத்தை பதிவு செய்தார். தொடர்ந்து விக்கிரமசிங்கபுரம் போலீசாரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
- இரவு 12 மணிக்கு புனித அந்தோணியார் தேரில் எழுந்தருளி ரத வீதிகளில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
- 10-ம் திருவிழாவான இன்று காலை 6.30 மணிக்கு அருள் பிரபாகரன் தலைமையில் திருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.
வள்ளியூர்:
வள்ளியூர் அருகே உள்ள தெற்குபுதூர் புனித அந்தோணியார் ஆலயதிருவிழா கடந்த 21-ந் தேதி பங்குதந்தை லூர்துசாமி மற்றும் தெற்கு கள்ளிகுளம் அவர் லேடி ஆப் ஸ்னோஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் எஸ்.கே. மணி ஆகியோர் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தேர்ப்பவனி
திருவிழா நாட்களில் தினமும் காலையில் திருயாத்திரை, திருப்பலி, மறையுறை, நற்கருணை ஆசீர் வழிபாடுகள் நடைபெற்றது. 9-ம் திருவிழாவான நேற்று மாலை பாதிரியார் போஸ் தலைமையில் பாதிரியார்கள் சந்தியாகு, செல்வின், கோட்டார் ஷிபு ஆகியோர் முன்னிலையில் பெருவிழா மாலை ஆராதனை மற்றம் நற்கருணை ஆசீர் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் போது வி.பி.எஸ். மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து அசனவிருந்து வழங்கப்பட்டது. பின்னர் இரவு 12 மணிக்கு புனித அந்தோணியார் தேரில் எழுந்தருளி ரத வீதிகளில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
10-ம் திருவிழா
10-ம் திருவிழாவான இன்று காலை 6.30 மணிக்கு அருள் பிரபாகரன் தலைமையில் திருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. விழாவில் பல்வேறு ஊர் பங்குகளை சேர்ந்த பங்கு தந்தையர்கள், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை தெற்குபுதூர் பங்குதந்தை லூர்துசாமி, சி.எம். அடிகளார், தெற்குபுதூர் புனித அந்தோணியார் ஆலய நிர்வாகிகள், இளைஞர்கள், பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.






