என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

களக்காடு அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
- மறுநாள் அதிகாலையில் ரித்திகா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, கண்ணனூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் ரித்திகா (வயது23). இவரும் நெல்லை மாவட்டம் களக்காடு அருகே பொத்தை சுத்தி, இந்திரா காலனியை சேர்ந்த அஜித்குமாரும் காதலித்து வந்தனர்.
இவர்களது காதலுக்கு ரித்திகா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி ரித்திகாவும், அஜித்குமாரும் கடந்த 30.4.2021-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதனால் ரித்திகாவின் பெற்றோர்கள் ரித்திகாவுடன் பேசாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் சமாதானம் அடைந்த ரித்திகாவின் தாயார் தமிழரசி கடந்த 2 மாதமாக, ரித்திகாவுடன் பேசி வந்துள்ளார். கடந்த 29-ந்தேதி இரவில் ரித்திகா தனது தாயார் தமிழரசிக்கு போனில் தொடர்பு கொண்டு தனக்கும், தனது கணவர் அஜித்குமாருக்கும் தகராறு என்றும், காலையில் ஊருக்கு புறப்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையே மறுநாள் அதிகாலையில் ரித்திகா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தமிழரசி களக்காடு போலீசில் புகார் செய்தார். நாங்குநேரி டி.எஸ்.பி. ராஜூ மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






