search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லையில் ரெயில்வே மேம்பாலம் சாலையில் அரசு பஸ் மீது கார் மோதி வாலிபர் பலி
    X

    நெல்லையில் ரெயில்வே மேம்பாலம் சாலையில் அரசு பஸ் மீது கார் மோதி வாலிபர் பலி

    • கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் பஸ்சில் உரசியபடி பஸ்சின் பின்பக்க டயர் பகுதியில் மோதி அப்பளம்போல் நொறுங்கியது.
    • விபத்து குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இருந்து கோவில்பட்டி நோக்கி இன்று அதிகாலை அரசு பஸ் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு கோவில்பட்டிக்கு பஸ் புறப்பட்டது.

    வண்ணார்பேட்டையை கடந்து தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகே சென்றபோது எதிரே மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று பஸ்சின் முன்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் பஸ்சில் உரசியபடி பஸ்சின் பின்பக்க டயர் பகுதியில் மோதி அப்பளம்போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த வாலிபர் இடிபாட்டில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த கோர விபத்து தொடர்பாக அக்கம் பக்கத்தினர் உடனடியாக பாளை தீயணைப்பு துறையினர் மற்றும் தச்சநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக தீயணைப்பு துறையினர் அங்கு வந்து காரில் சிக்கிய வாலிபர் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசாரும் அங்கு விரைந்து வந்து காரை ஓட்டி வந்த வாலிபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே போக்குவரத்து அதிகம் உள்ள வடக்கு புறவழிச் சாலையில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    ஆனாலும் தீயணைப்பு துறையினர் ஜே.சி.பி. எந்திரம் மூலமாக விபத்தில் சிக்கிய காரையும், இடிபாட்டில் சிக்கிய வாலிபர் உடலையும் சுமார் 1 மணி நேரம் போராடி மீட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் காரை ஓட்டி வந்தது தச்சநல்லூர் சிதம்பரம் நகர் பகுதியை சேர்ந்த நீர் காத்தலிங்கம்(வயது 39) என்பது தெரியவந்தது.

    இவர் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். இன்று காலை வண்ணார்பேட்டை செல்வதற்காக காரில் அவர் புறப்பட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×