என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்ட வட்டமாக கூறி உள்ளார்.
    • மும்மொழி கொள்கை பற்றி அரசியலமைப்பு சட்டத்தில் எங்கே கூறப்பட்டு உள்ளது.

    மும்மொழி கொள்கையை ஒரு போதும் ஏற்க போவதில்லை. இதற்காக மத்திய அரசு ரூ.2,152 கோடியை நிறுத்தி வைத்திருந்தாலும் சரி. ஏன், பத்தாயிரம் கோடி தருவதாக இருந்தாலும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்ட வட்டமாக கூறி உள்ளார்.

    பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு ஆர்வம் காட்டினாலும் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்து வதை ஏற்கவில்லை. அதற்கு காரணம் மும்மொழி கொள்கையை அது வலியுறுத்துகிறது என்பதால்தான்.

    இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் எழுதிய கடிதத்தில் மொழியை வைத்து அரசியல் வேண்டாம். அரசியலமைப்பு சட்டத்துடன் ஒத்துப் போக வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    மும்மொழி கொள்கை பற்றி அரசியலமைப்பு சட்டத்தில் எங்கே கூறப்பட்டு உள்ளது என்று மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.

    இந்நிலையில், இந்தி மொழி திணிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆங்காங்கே இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

    அந்த வகையில், மத்திய அரசின் இந்தித் திணிப்பை கண்டித்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ரெயில் நிலைய பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை கருப்பு மை பூசி திமுகவினர் அழித்தனர்.

    "தமிழ் வாழ்க.." என முழக்கமிட்டபடியே இந்தி எழுத்துகளை அழித்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    • ராமகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகி உள்ளது.
    • மணி மகன் விஜயன், ஆவரைகுளம் சென்று ராமகிருஷ்ணனிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பழவூரை அடுத்த ஆவரைகுளம் அருகே உள்ள சவுந்தரலிங்கபுரத்தை சேர்ந்தவர் மணி. இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் விஜயன் (வயது 37). நிலத்தரகர்.

    நேற்று முன்தினம் நள்ளிரவு இவரது வீட்டின் மீது மர்ம நபர்கள் 2 பேர் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அந்த பகுதிகளில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது, ஆவரைக்குளத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது மகன் சாமிதுரை(21) என்பவர், தனது நண்பரான ஹரிகரன்(21) என்பவருடன் சேர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடினர். ஆனால் எந்த சம்பவமும் நடக்காதது போலவே 2 பேரும் தங்களது வீடுகளில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் பிடித்து வந்து போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    சாமிதுரையின் தந்தை ராமகிருஷ்ணன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது நண்பர் ஒருவருடன் மணி வைத்துள்ள டீக்கடைக்கு டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ராமகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகி உள்ளது. இதனை மணி சமரசம் செய்ய முயன்றபோது அவர் தாக்கப்பட்டார்.

    இதனால் மணி மகன் விஜயன், ஆவரைகுளம் சென்று ராமகிருஷ்ணனிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பதிலுக்கு ஆத்திரத்தில் விஜயன் வீட்டில் சாமிதுரை மற்றும் அவரது நண்பர் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • ஆனைக்குடியில் எலெக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்ததில் ஜான்சி பாப்பா என்பவர் படுகாயம் அடைந்தார்.
    • இன்குபேட்டர் அறையில் சார்ஜ் போடப்பட்ட பேட்டரிகள் வெடித்து சிதறியது தெரிய வந்துள்ளது.

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஆனைக்குடியில் எலெக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்ததில் ஜான்சி பாப்பா என்பவர் படுகாயம் அடைந்தார்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோழி முட்டைகள் அடைகாப்பதற்கான இன்குபேட்டர் அறையில் சார்ஜ் போடப்பட்ட பேட்டரிகள் வெடித்து சிதறியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • இளம்பெண் தச்சநல்லூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியில் சேர்ந்தார்.
    • இளம்பெண் பாளை டக்கம்மாள்புரம் அருகே வந்தபோது காரில் இருந்து இறங்கிவிட்டார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள கட்டாரங்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜூ (வயது 38).

    இவர் செல்போன் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கும் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த 24 வயதான ஒரு இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    அந்த பெண் தனியார் கால்நடை ஆஸ்பத்திரியில் தற்காலிகமாக பணியாற்றி வந்தார். அவர் தினமும் வேலைக்கு சென்று வரும்போது அவருக்கும், ராஜூவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் 2 பேரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர்.

    இதனிடையே இளம்பெண் நெல்லையை அடுத்த தச்சநல்லூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியில் சேர்ந்தார். இதனால் ராஜூவுக்கு அந்த பெண்ணை பார்க்க முடியாமல் போய்விட்டது. இதனால் சற்று மன வேதனையில் ராஜூ இருந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று இளம்பெண் வேலையை முடித்துவிட்டு, ஊருக்கு செல்வதற்காக பள்ளியில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு ஒரு காரில் ராஜூ கூறி வந்துள்ளார். பேசிக்கொண்டே ஊருக்கு போகலாம். ஊரில் கொண்டு விடுகிறேன் என்று ராஜூ அந்த இளம்பெண்ணை அழைத்துள்ளார். ஆனால் இளம்பெண் அச்சம் அடைந்து காரில் ஏற மறுத்துவிட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ராஜூ, அந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றார். பின்னர் அவரை ஊருக்கு அழைத்து செல்லாமல், காரில் குமரி நோக்கி அழைத்து சென்றுள்ளார். அங்கு அறை எடுத்து பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுக்க ராஜூ திட்டமிட்ட நிலையில், அதனை அறிந்து கொண்ட இளம்பெண் பாளை டக்கம்மாள்புரம் அருகே வந்தபோது காரில் இருந்து இறங்கிவிட்டார்.

    பின்னர் அவரிடம் இருந்து தப்பிக்க போலீசுக்கு போன் செய்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாநகர போலீசார், ராஜூவை பிடித்து தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், காரில் வைத்தே இளம்பெண்ணை ராஜூ பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து பெண்ணை கடத்த முயற்சி மற்றும் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜூவை கைது செய்தனர்.

    • 2 பேரின் உடல்களும் நெல்லைக்கு கொண்டு வரப்பட்டது.
    • தந்தை-மகன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாது அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

    நெல்லை:

    நெல்லை டவுன் புட்டா ரத்தி அம்மன் கோவில் அருகே உள்ள மினிகுடி தெருவை சேர்ந்தவர் மாதவன். இவர் துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார்.

    இவரது ஒரே மகன் கிருஷ்ண சங்கர் (வயது 22). இவர் சென்னையில் சி.ஏ. படித்து வரும் நிலையில் கல்லூரி இன்டர்ன்ஷிப் பணிக்காக தனது நண்பர்களுடன் துபாய் சென்றுள்ளார். அங்கே கல்லூரிக்கான பணிகள் முடிந்த நிலையில் தந்தையுடன் துபாயில் விடுமுறையை ஒரு வாரம் தங்கி இருந்து கழிக்க முடிவு செய்துள்ளார்.

    இந்த நிலையில் தனது தந்தையுடன் கடந்த 12-ந்தேதி அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு நீச்சல் குளத்தில் குளித்தபோது நிலை தடுமாறி அதிக ஆழமான பகுதியில் கிருஷ்ண சங்கர் மூழ்கினார். இதைக்கண்ட அவரது தந்தை மாதவன், மகனை காப்பாற்ற நீச்சல் குளத்தில் குதித்த போது இருவரும் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

    இதையடுத்து 2 பேரின் உடல்களும் நெல்லைக்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது. பின்னர் இறுதி சடங்கிற்கு பின் சிந்து பூந்துறை மின் மயானத்தில் 2 பேரின் உடல்களும் எரியூட்டப்பட்டது.

    சுற்றுலா சென்ற இடத்தில் தந்தை-மகன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாது அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

    இதனிடையே கணவனும், மகனும் இறந்த துக்கம் தாங்காமல் மாதவனின் மனைவி கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவருக்கு நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • கல்வி அனைவருக்கும் கிடைத்தால் தான் ஜாதி ஆதிக்கம் ஒழியும்.
    • கல்வி கடனை ஏன் பா.ஜ.க. அரசால் ரத்து செய்ய முடியவில்லை.

    நெல்லை:

    பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் நெல்லை மாநகர், மாவட்ட காங்கிரஸ் சார்பில் அரசியல் சாசன விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், ராபர்ட் புரூஸ் எம்.பி., மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வரவேற்றார்.

    இதில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு, காங்கிரஸ் இயக்க சீரமைப்பு மேலாண்மைக்குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-

    வடமாநிலங்களில் ஏற்குறைய பல மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. ஒரு நாடு ஒரு மதம், ஒரு நாடு - ஒரு மொழி, ஒரு நாடு - ஒரே கலாச்சாரம், ஒரு நாடு - ஒரு சட்டம், ஒரு நாடு-ஒரு உடை என சொல்லி பா.ஜ.க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இப்படி தொடர்ச்சியாக செய்தால் இந்தியா ஒற்றுமையாக இருக்காது.

    அம்பேத்கர் கொண்டுவந்த அரசியல் சாசனத்தை பா.ஜ.க ஏற்று கொள்ளாது. இந்த அரசியல் சாசனத்தை காலனி ஆதிக்க சாசனம் என பா.ஜ.க சொல்லி வருகிறது. இன்றும் ஜாதிய ஆதிக்கம் உள்ளது. கல்வி அனைவருக்கும் கிடைத்தால் தான் ஜாதி ஆதிக்கம் ஒழியும்.

    மாறுதல்களுக்கு உந்து சக்தியாக காங்கிரஸ் இருக்கிறது. அதனை வரவிடாமல் பா.ஜ.க. தடுக்கிறது. நாடு முழுவதும் பா.ஜ.க. ஆட்சி செய்தால் ஏழை எளிய மக்கள் வாழவே முடியாது.

    இந்திய நாடு வளரவில்லை என நான் சொல்லவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் 6.8 சதவீதம் வளர்ச்சியை பெற்றது. தற்போது 5.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்திய நாட்டில் மக்கள் பட்டினியால் சாகவில்லை. ஆனால் மக்கள் பசியால் வாடுகிறார்கள்.

    பல குடும்பங்கள் இரவில் உணவில்லாமல் இருப்பதை கருத்தில் கொண்டு தான் 100 நாள் வேலை திட்டம் கொண்டு வரப்பட்டது.

    ஆனால் இந்த திட்டத்தை குஜராத் முதல்-அமைச்சராக இருந்த மோடி எதிர்த்தார். பிரதமரான பின்னர் அதனை எதிர்க்க முடியவில்லை. சராசரியாக 100 நாள் வேலை திட்டத்தில் கடந்த ஆண்டு மக்களுக்கு 57 நாட்கள் மட்டுமே வேலை கிடைத்தது. இப்போது 44 நாட்களாக குறைந்து விட்டது.

    இந்த ஆண்டு ரூ.86 ஆயிரம் கோடி மட்டுமே அந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது. காலப் போக்கில் 100 நாள் திட்டத்தை ஒழிக்க போகிறார்கள். வருமான வரி கட்டும் அனைவருக்கு ஒரே நிலையில் சலுகையை மத்திய அரசு அளிக்கிறது.ஏழை எளிய மக்கள் குறித்த ஒரு வார்த்தை கூட பட்ஜெட்டில் இல்லை.

    இந்தியாவில் ஏறத்தாழ 35 கோடி மக்கள் பரம ஏழைகளாக பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளனர். இளைஞர்களில் 10 சதவீதம் பேரும், படித்த பட்டதாரிகள் 13 சதவீதம் பேர் 40 வயது வரையிலும் வேலை இல்லாமல் உள்ளனர்.

    மத்திய அரசின் பட்ஜெட் மேல்தட்டு மக்களுக்கும், எந்த மாநிலத்தில் தேர்தல் நடக்கிறதோ அந்த மாநிலத்து மக்களுக்காகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்தை இருட்டடிப்பு செய்ய நினைக்கிறார்கள். பெரும் பணக்காரரகளுக்கு 2 லட்சம் கோடி கார்ப்பரேட் கடனை ரத்து செய்ய முடியும் என்றால் கல்வி கடனை ஏன் பா.ஜ.க. அரசால் ரத்து செய்ய முடியவில்லை.

    இந்த அரசு மேல் தட்டு மக்களுக்கும் மேல் வர்க்கத்திற்குமான அரசு. சாதாரண பின் தங்கிய ஏழை மக்களுக்கான அரசு இது அல்ல.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 3 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
    • பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் செல்வகுமரேசன் (வயது 38). இவர் நக்சல் தடுப்பு பிரிவில் பணியாற்றி வருகின்றார்.

    இந்நிலையில் கடந்த 10-ந்தேதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் செல்வகுமரேசன் வீட்டுக்குள் புகுந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவருடைய காரை, அரிவாளால் வெட்டியும் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றனர்.

    இதுகுறித்து முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது, சேரன்மகா தேவி அருகே உள்ள சங்கன்திரடு பகுதியை சேர்ந்த முப்புடாதி என்பவர் தனது கூட்டாளிகளுடன் வந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்வகுமரேசன் சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போது, வழக்கு ஒன்று தொடர்பாக முப்புடாதி மற்றும் அவரது கூட்டாளிகளை செல்வகுமரேசன் கைது செய்தார். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் முப்புடாதி உள்பட 3 பேரும் கொடைக்கானலில் உள்ள நண்பர் ஒருவருக்கு சொந்தமான கட்டிடத்தில் பதுங்கி இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையின் கீழ் இயங்கும் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று 3 பேரையும் சுற்றி வளைத்தனர். போலீசாரை பார்த்ததும் முப்புடாதி, சேரன்மகா தேவியை சேர்ந்த செல்வகுமார் மற்றும் அய்யப்பன் ஆகிய 3 பேரும் தப்பிப்பதற்காக கட்டிடத்தின் மாடியில் இருந்து குதித்துள்ளனர். இதில் முப்புடாதிக்கு முதுகு மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

    அதேபோல் அய்யப்பனுக்கு கையில் சவ்வு விலகி இறங்கியது. செல்வகுமாருக்கு கையில் முறிவு ஏற்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்து சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த சம்பவத்தில் மேலும் 2 பேருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    போலீசாரிடம் சிக்கிய முப்புடாதிக்கு சென்னையில் பாலியல் பலாத்கார வழக்கும், அய்யப்பனுக்கு திருச்சியில் ரூ. 30 லட்சம் திருட்டு வழக்கிலும், செல்வகுமாருக்கு சேரன்மகாதேவியில் பெட்ரோல் பங்கில் அரிவாளை காட்டி மிரட்டியது உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பூக்களை எடுத்துக் கொண்டு கடையில் கொடுக்க சென்றார்.
    • மோட்டார் சைக்கிள் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் வாசலில் பூக்கடை நடத்தி வருபவர் கண்ணன். இவரது கடையில் சரவணன் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் சந்திப்பு பூ மார்க்கெட்டில் இருந்து பூக்கடைக்கு தேவையான பூக்களை வாங்கிக் கொண்டு டவுனுக்கு சென்றார். பின்னர் நெல்லையப்பர் கோவில் முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பூக்களை எடுத்துக் கொண்டு கடையில் கொடுக்க சென்றார்.

    பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் பார்த்து நெல்லை மாநகராட்சி வளாகத்தில் உள்ள டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    மேலும் மோட்டார் சைக்கிள் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்தது. இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • தேனிலவு கொண்டாட வந்துள்ள பறவைகளால் கூந்தன்குளம் களை கட்டி உள்ளது.
    • ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தாய் நாடுகளுக்கு திருப்பி செல்லும்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள கூந்தன்குளம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயத்தை சார்ந்தே பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

    இங்குள்ள குளத்தில் தான் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. கூந்தன்குளம் விவசாயிகளுக்கு மட்டுமின்றி, பறவைகளுக்கும் வாழ்வு கொடுத்து வருகிறது.

    ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து இங்கு வரும் ஆயிரக்கணக்கான பறவைகள் முட்டையிட்டு, குஞ்சு பொறித்து, அந்த குஞ்சுகள் பறக்க பழகியதும் தாய் நாட்டுக்கு திரும்பிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன.

    அதுபோல இந்த ஆண்டிலும் சைபீரியா, மியான்மர், ஐரோப்பியா நாடுகளில் இருந்து அரிவாள்மூக்கன், ஊசிவால் வாத்து, பட்ட தலை வாத்து, பட்டை வாயன், கரண்டி வாயன், செங்கல்நாரை, பாம்பு தாரா, வெள்ளை ஐஸ்பீஸ், கிங்பிஷரஸ், பெலிகன்ஸ், கிரேட்டர் பிளமிங்கோ, கிரே பெலிகன்ஸ் உள்பட 43 வகையிலான ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு குவிந்துள்ளன.

    இந்த பறவைகள் முட்டையிட்டு, குஞ்சு பொறித்ததும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தங்களது தாய் நாடுகளுக்கு திருப்பி செல்லும். இவ்வாறு தேனிலவு கொண்டாட வந்துள்ள பறவைகளால் கூந்தன்குளம் களை கட்டி காணப்படுகிறது.

    குளத்தில் உள்ள மரங்களில் மட்டுமின்றி ஊருக்குள் உள்ள மரங்களிலும் பறவைகள் கூடு கட்டி வாழ்வதை காணமுடிகிறது. ஊருக்குள் நுழைந்ததுமே முதலில் வரவேற்பது பறவைகளாகத்தான் இருக்கும்.

    கூந்தன்குளத்தில் வட்டமிடும் பறவைகளை காண கண்கள் கோடி போதாது. சர், சர் என விமானங்கள் பறந்து செல்வதை போல பறவைகள் பறந்து செல்வது தனி அழகாகும். எங்கு பார்த்தாலும் பறவைகள் கூட்டம், கூட்டமாக உலா வருவதைதான் காண முடிகிறது.

    கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக பறவைகளின் தேனிலவு மையமாக திகழும் கூந்தன்குளத்தில் தமிழக அரசு சார்பில் கடந்த 1994-ம் ஆண்டு பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பறவைகளை பராமரிக்க ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். அழையா விருந்தாளிகளான பறவைகளை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர். 

    • போலீசார் வழக்குப் பதிவு செய்து நாகராஜனை தேடவே அவர் அங்கிருந்து தப்பி சொந்த ஊரான மேலகடம்பன்குளத்திற்கு வந்துள்ளார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள மேல கடம்பன்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அய்யாபிச்சை. இவரது மகன் நாகராஜன்(வயது 35). இவரது மனைவி ரம்யா(32). நாகராஜன் தனது மனைவியுடன் கோவையில் வசித்து வந்த நிலையில் அங்கு கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நாகராஜனும், அதே ஊரை சேர்ந்த சுதாகர் என்பவரும் கோவையில் கார் ஓட்டி வருகின்றனர். இதனிடையே ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் நாகராஜன் வீட்டுக்கு சுதாகர் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

    அப்போது சுதாகரிடம் ரம்யா பேசி பழகியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நாகராஜன் கடந்த 9ந்தேதி சுதாகரை கத்தியால் குத்தியுள்ளார்.

    இச்சம்பவம் குறித்து கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்து நாகராஜனை தேடவே அவர் அங்கிருந்து தப்பி சொந்த ஊரான மேலகடம்பன்குளத்திற்கு வந்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து தன்னை போலீசார் பிடித்து விடுவார்கள் என்ற பயத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜன் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து பணகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரை அரிவாளால் வெட்டியும், வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் ரகளை.
    • முக்கூடல் போலீசார் 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    முக்கூடல்:

    நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் செல்வ குமரேசன் (வயது 38).

    இவர் நக்சல் தடுப்பு பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று வேலை விஷயமாக மதுரையில் உள்ள நக்சல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு சென்றிருந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் வடக்கு அரியநாயகிபுரம் ஊருக்குள் சென்றது. அங்கிருந்த செல்வகுமரேசன் வீட்டுக்குள் புகுந்த அந்த கும்பல் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த அவரது காரை அரிவாளால் வெட்டியும், வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் ரகளையில் ஈடுபட்டது.

    பின்னர் அரிவாளை வீட்டின் கதவு மேல் வீசிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக வீட்டில் இருந்த செல்வ குமரேசன் குடும்பத்தினர், மதுரைக்கு சென்றிருந்த செல்வகுமரேசனிடம் செல்போனில் தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக முக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று செல்வகுமரேசன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தபோது, 3 பேர் கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    அதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய நபர் ஹெல்மட் அணிந்திருந்த நிலையில், பின்னால் அமர்ந்திருந்த நபரின் முகம் தெளிவாக தெரிந்தது.

    அந்த காட்சிகளை கொண்டு நடத்திய விசாரணையில், அட்டகாசத்தில் ஈடுபட்டவர்கள் சேரன்மகாதேவி அருகே உள்ள சங்கன்திரடு பகுதியை சேர்ந்த முப்புடாதி (வயது 28), அவரது நண்பர் முத்துக்குமார் (27) மற்றும் அவரது கூட்டாளி ஒருவர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் எதற்காக செல்வகுமரேசன் வீட்டில் புகுந்தனர் என்பது குறித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு செல்வகுமரேசன் சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். அப்போது முப்புடாதியும், முத்துக்குமாரும் அரிய நாயகிபுரம் காட்டுப்பகுதியில் அமர்ந்து மதுகுடித்துவிட்டு தகராறு செய்ததாகவும், அதனை அந்த வழியாக சென்ற செல்வகுமரேசன் தட்டி கேட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அங்கு வந்த செல்வகுமரேசனின் உறவினர் ஒருவர், முப்புடாதியை தாக்கியுள்ளார். இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட முன்விரோதத்தில் நேற்று இரவு முப்புடாதி தனது கூட்டாளிகளுடன் வந்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சம்பவத்தில் தொடர்புடைய முப்புடாதி மீது 2 கொலை வழக்குகளும், முத்துகுமார் மீது சில வழக்குகளும் நிலுவையில் இருக்கிறது. இதனால் இவர்கள் பெயர் ரவுடிகள் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் முப்புடாதி அவரது நண்பருடன் இணைந்து அரிவாளால் தாக்குவது, பின்னர் மோட்டார் சைக்கிளில் தப்பிச்செல்வது உள்ளிட்ட சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன் அடிப்படையில் முக்கூடல் போலீசார் 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    • தற்கொலை செய்தவர்கள் எழுதிய கடிதம் சிக்கியது.
    • கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை.

    நெல்லை:

    சென்னை ராயபுரம் துரை தெருவை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் விஜயன்(வயது 26). சென்னை திருவொற்றியூர் ஒண்டிக்குப்பத்தை சேர்ந்த வர் காந்தி. இவரது மகள் பவித்ரா(24).

    இவர்கள் 2 பேரும் காதலித்து வந்த நிலையில் அவர்களது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ள னர். இதனால் கடந்த 1 வாரத்திற்கு முன்பு 2 பேரும் தங்களது வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். பின்னர் விஜயனின் நண்பர் வீட்டில் 2 பேரும் தங்கியிருந்த நிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

    தொடர்ந்து, புதுமண தம்பதி சென்னையில் இருந்து கடந்த 7-ந்தேதி நெல்லைக்கு வந்துள்ளனர். பாளையங்கோட்டை கோட்டூர் ரோடு பார்வதி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேறினர். இந்நிலையில் நேற்று மதியம் வரை அவரது வீட்டு கதவு திறக்கப்படவில்லை.

    சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னலை எட்டிப்பார்த்த போது, அவர்கள் தூக்குப் போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. தகவல் அறிந்த பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று 2 பேர் உடலையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் இன்று காலை நெல்லை வந்து சேர்ந்தனர். இதனிடையே புதுமண தம்பதியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்ததில் பல்வேறு தகவல்கள் வெளியாகின.

    தற்கொலை செய்து கொண்ட விஜயனும், பவித்ராவும் உறவு முறையில் அண்ணன்-தங்கை ஆவர். பட்டதாரிகளான இவர்கள் 2 பேரும் அடிக்கடி ஒருவர் வீட்டுக்கு ஒருவர் சென்று வந்த நிலையில் செல்போனில் பேச்சை தொடர்ந்தனர். இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியது.

    இந்த விஷயம் அவர்களது பெற்றோருக்கு தெரிய வரவே, இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனாலும் 2 பேரும் காதலை கைவிட மறுத்து யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தனியாக வாழ்வதற்காக நெல்லைக்கு வந்த நிலையில் வீடு கொடுக்க யாரும் முன்வரவில்லை.

    இதையடுத்து தனது உறவினர் ஒருவரின் மூலமாக விஜயனுக்கு பாளை கோட்டூரில் வீடு கிடைத்தது. அந்த வீட்டுக்கு முன்பணமாக ரூ.15 ஆயிரம் செலுத்திவிட்டு 2 பேரும் அங்கு வசித்து வந்தனர்.

    நெல்லையில் உள்ள ஒரு கார் நிறுவனத்தில் இன்று முதல் விஜயன் வேலைக்கு செல்வதற்காக முடிவு செய்திருந்த நிலையில் அவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது தெரியவந்தது.

    இதனிடையே அவர்களது அறையில் கடிதம் ஒன்று சிக்கியது. அதில், எங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எங்களது உடல்களை பெற்றோரிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்தையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×