என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • பள்ளியில் இருந்த பழமையான கட்டிடம் ஒன்று இடியும் தருவாயில் இருந்ததால் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அந்த கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
    • சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன.

    சிங்கை:

    நெல்லை மாவட்டம் அம்பையில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் மன்னார் கோவில் உள்ளது. இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் மன்னார்கோவில், வாகை குளம், பிரம்மதேசம், வெயிலான் காலனி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் இருந்த பழமையான கட்டிடம் ஒன்று இடியும் தருவாயில் இருந்ததால் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அந்த கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்படவில்லை.

    இதனால் அங்கு படித்து வந்த மாணவ-மாணவிகள் அமர்ந்து படிக்க வழியில்லாமல் மரத்தடி நிழலிலும், அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்திலும் இருந்து படித்து வந்தனர். இதனால் சிரமம் அடைந்த அவர்கள், தங்கள் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தரக்கோரி மாவட்ட கலெக்டர் மற்றும் முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்துள்ளனர். ஆனாலும் கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பள்ளி மாணவ-மாணவிகள் இன்று காலை தங்களது பெற்றோர்களுடன் புறப்பட்டு பள்ளிக்கு சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் மன்னார்புரம் ஊருக்கு அருகே அம்பை-தென் காசி சாலையில் திடீரென அவர்கள் அமர்ந்து மறியல் செய்தனர். தகவல் அறிந்து அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ் குமார், இன்ஸ் பெக்டர் மகேஷ் குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

    ஆனாலும் மாணவ-மாணவிகள், பெற்றோர் சாலைமறியலில் தொடர்ந்து ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன. அவர்களிடம் தாசில்தார் சுமதி மற்றும் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவ, மாணவிகளுடன் அவர்களுடன் பெற்றோரும் சேர்ந்து மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

    • பாரதியார் படித்த வகுப்பறை இன்றளவும் நாற்றங்கால் என்ற பெயரில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
    • பாரதியாரின் சிலைக்கு மாணவிகள் மலர் தூவி மரியாதை செய்தனர்.

    நெல்லை:

    மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 102-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. நெல்லை சந்திப்பு ம.தி.தா. இந்து கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் மகாகவி சுப்ரமணிய பாரதியார் படித்த வகுப்பறை இன்றளவும் நாற்றங்கால் என்ற பெயரில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    பெண் கல்வி, பெண் முன்னேற்றத்திற்காக பல்வேறு கவி பாடி குரல் கொடுத்த மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவுகளை போற்றும் வகையில் அந்த வகுப்பறையில் மாணவிகள் மட்டும் கல்வி கற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வகுப்பறைக்கு பாடம் படிக்க மாணவிகள் செல்லும்போது பாரதியாரின் நினைவுகளை போற்றும் வகையில் அவர் அமர்ந்திருந்த இடத்தில் காலணி கூட அணியாமல் சென்று பராமரித்து வருகின்றனர்.

    இந்நிலையில் மகாகவி பாரதியாரின் 102-வது நினைவு தினத்தையொட்டி அவர் படித்த வகுப்பறையில் வைக்கப்பட்டுள்ள பாரதியாரின் மார்பளவு சிலைக்கு பள்ளி மாணவிகள் மகாகவி பாரதியாரின் பாடல்கள் பாடி இசையஞ்சலி செலுத்தி மலர் தூவி மரியாதை செய்தனர்.

    நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் உலகநாதன், பள்ளி ஆசிரியர்கள் சொக்கலிங்கம்,ராமலட்சுமி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

    • வெற்றி விஸ்வா சென்னையை சேர்ந்த ஒரு கப்பல் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.
    • 3 மாடிகளை கொண்ட கப்பல் முழுவதும் தேடியும் வெற்றி விஸ்வா கிடைக்கவில்லை.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    பாளை டேனியல் தாமஸ் தெருவை சேர்ந்த மகாராஜா என்பவரது மனைவி மகாலட்சுமி மற்றும் அந்த பகுதி மக்கள் திரளானோர் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர்.

    தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலக பகுதிக்குள் நுழைய முயன்றனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணிக்கு நின்ற போலீசார் கலெக்டர் அலுவலக நுழைவாயில் கதவை அடைத்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    தொடர்ந்து மகாலட்சுமி கண்ணீர் மல்க கூறியதாவது:-

    எங்களது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் தேவர்குளம். எனது கணவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். எங்களது மூத்த மகன் வெற்றி விஸ்வா. இவர் கடற்படை துறையில் இளங்கலை அறிவியல் படிப்பு முடித்துவிட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த ஒரு கப்பல் நிறுவ னத்தில் பணிக்கு சேர்ந்தார்.

    கடந்த 7-ந் தேதி இரவு எனது மகன் வீடியோ கால் மூலமாக எங்களிடம் பேசி விட்டு அதிகாலை 4 மணிக்கு பணிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றார். அதன் பின்னர் அவர் போன் எதுவும் செய்யவில்லை.

    இந்நிலையில் தனியார் கப்பல் நிறுவனத்தில் இருந்து அதிகாலை 5 மணிக்கு எங்களுக்கு செல்போனில் அழைப்பு வந்தது. அப்போது அவர்கள் பேசும்போது, உங்களது மகனை காணவில்லை. செல்போன் மற்றும் அவரது உடமைகள் மட்டும் கப்பலிலேயே உள்ளது என்று தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியபோது, வெற்றியை 3 மாடிகளை கொண்ட கப்பல் முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. அவர் எங்கே சென்றார்? என்பது தெரியவில்லை. அதனால் தகவல் கிடைத்தவுடன் தொடர்பு கொள்வதாக கூறிவிட்டு அதன் பின்னர் அழைப்பை ஏற்கவில்லை.

    எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மாயமான எனது மகனை மீட்டு தர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    • நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்சினை அதிகமாக இருக்கிறது.
    • கலெக்டர் தனிக்கவனம் செலுத்தி சிறப்பு குழு அமைத்து குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என ரெட்டியார்பட்டி நாராயணன் கோரிக்கை வைத்துள்ளார்.

     நெல்லை:

    நாங்குநேரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்சினை அதிகமாக இருக்கிறது. தொகுதி மக்களின் அழைப்பின் பேரில் பல்வேறு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளேன். அப்போது பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வந்து கோரிக்கை வைக்கின்றனர். நாங்குநேரி தொகுதியில் கடந்த 50 ஆண்டுகளில் இதுபோன்ற குடிநீர் தட்டுப்பாட்டை பார்த்ததில்லை. மாவட்ட நிர்வாகம் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணாதது வருத்தமளிக்கிறது. ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பணம் இருக்கிறது. ஆனால் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் கொடுக்கப்படவில்லை. எனவே கலெக்டர் தனிக்கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில் சிறப்பு குழு அமைத்து நாங்குநேரி சட்டமன்ற தொகுதி முழுவதும் குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளளது.

    • அய்யப்பன் ஜோதிடம் பார்க்கும் தொழில் செய்து வந்தார்.
    • குடும்ப தகராறில் ஆத்திரமடைந்த அய்யப்பன் மனைவியை அடித்து உதைத்துள்ளார்.

    நெல்லை:

    சேரன்மகாதேவி அருகே உள்ள கங்கணாங்குளம் குடுகுடுப்பான் நகரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 30). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். அய்யப்பன் ஜோதிடம் பார்க்கும் தொழில் செய்து வந்தார்.

    இந்நிலையில் நேற்றிரவு கணவன்- மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அய்யப்பன் மனைவியை அடித்து உதைத்துள்ளார். பின்னர் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டு தூக்கில் தொங்கியுள்ளார்.

    இதனைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சேரன்மகாதேவி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அய்யப்பன் பிணமாக கிடந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அமிர்தலெட்சுமியும், சரண்யாவும் பொது நல்லியில் குடிநீர் பிடித்துக் கொண்டிருந்தனர்.
    • காயமடைந்த சரண்யா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பருத்தி பாட்டை சேர்ந்த பால கிருஷ்ணன் மனைவி அமிர்தலெட்சுமி (வயது 47). நேற்று இவரும், இவரது மகள் சரண்யாவும் (27) அங்குள்ள பொது நல்லியில் குடிநீர் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அவர்களுக்கும், அதே ஊரைச் சேர்ந்த விஜயகுமார் மனைவி செல்வ குமாரிக்கும் (44) தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த செல்வகுமாரியின் மகன் நாகராஜன் (29) சரண்யா மீது மோட்டார்சைக்கிளை ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

    மேலும் அமிர்த லெட்சுமி, சரண்யா ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டவும் முயற்சி செய்துள்ளார். இதில் காயமடைந்த சரண்யா சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுபற்றி மூலைக்கரைப் பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் நாங்குநேரி டி.எஸ்.பி. ராஜூ மற்றும் போலீசார் செல்வகுமாரி, அவரது மகன் நாகராஜன் மீது கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான வன்முறை சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி நாகராஜனை கைது செய்தனர். அவரது தாயார் செல்வகுமாரியை தேடி வருகின்றனர்.

    • போட்டியில் 100-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.
    • முதல் 4 இடங்களை வென்ற அணிகளுக்கு ரொக்க பரிசு, கோப்பை வழங்கப்பட்டன.

    பணகுடி:

    பணகுடியில் மாநில அளவிலான இறகு பந்து போட்டி நடைபெற்றது. போட்டியை திசையன்விளை பேரூராட்சி தலைவர் ஜான்சி ராணி, துணைத் தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டியில் சென்னை, பாண்டிச்சேரி, மதுரை சிவகாசி உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. போட்டியில் முதல் பரிசு சென்னை அணியும், 2-ம் பரிசு பணகுடி அணியும், 3-ம் பரிசு தூத்துக்குடி அணியும், 4-ம் பரிசு நெல்லை அணியும் பெற்றது. போட்டியில் முதல் 4 இடங்களை வென்ற அணிகளுக்கு ரொக்க பரிசும், கோப்பைகளும் வழங்கப்பட்டன. இதில் முன்னாள், இந்நாள் விளையாட்டு வீரர்கள், தொழிலதி பர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பணகுடி

    அ.தி.மு.க. நகர செயலாளர் ஜெய்னூல் ஆப்தின், வக்கீல் ராஜா செய்திருந்தனர்.

    • அடித்த கடல் அலையின் காரணமாக மிதவை படகின் ஒரு பகுதியானது அருகில் இருந்த பாறையின் ஒரு பகுதியில் அமர்ந்து சரிந்த நிலையில் காணப்பட்டது.
    • கலனில் எந்தவிதமான பாதிப்பும் இதுவரை இல்லை என அணுமின் நிலைய உயர் மட்ட ஆய்வுக் கூட்டத்தில் தகவலை தெரிவித்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5-வது மற்றும் 6-வது அணு உலைகள் கட்டுமான பணிகள் சுமார் ரூ.49 ஆயிரத்து 621 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

    வருகிற 2027-ம் ஆண்டுக்குள் இதன் கட்டுமான பணிகளை முடித்து மின் உற்பத்திகள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஏற்கனவே உக்ரைன்-ரஷ்ய போரின் காரணமாக இந்த அணு உலைகளுக்கு வர வேண்டிய உதிரி பாகங்கள் வருவதில் மிகுந்த கால தாமதம் ஏற்பட்டது.

    இதனால் இதன் திட்ட காலம் மேலும் சில ஆண்டுகள் ஆகும் எனவும், 2030-ல் தான் மின் உற்பத்தி தொடங்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகின. இந்த சூழ்நிலையில் கடந்த 7-ந்தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இழுவை கப்பல் மூலமாக 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான தலா 300 டன் எடை கொண்ட 2 ஸ்டீம் ஜெனரேட்டர்கள் கடல் மார்க்கமாக எடுத்து வரப்பட்டது.

    கூடங்குளம் அணுமின் நிலைய சிறிய துறைமுக நுழைவு வாயில் பகுதியில் வரும்போது இழுவை கப்பலின் பின்னால் இழுத்து வரப்பட்ட பார்ஜி எனப்படும் மிதவை கப்பல் பாறை இடுக்கில் சிக்கியதால் இழுவை கப்பலில் உள்ள உலகத்தரத்திலான கயிறு அறுந்து தரை தட்டி நின்றுவிட்டது. அப்பொழுது அடித்த கடல் அலையின் காரணமாக மிதவை படகின் ஒரு பகுதியானது அருகில் இருந்த பாறையின் ஒரு பகுதியில் அமர்ந்து சரிந்த நிலையில் காணப்பட்டது.

    இதனை மீட்கும் பணிகள் 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னை துறைமுக பகுதியில் இருந்து நேற்று காலை வல்லுனர் குழுவினர் வந்து ஆராய்ந்து 3 பரிந்துரைகளை செய்தனர். அதன் பின் மும்பை துறைமுகத்தை சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களும் வரவழைக்கப்பட்டு படகை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    மிதவை படகு பாறையில் மோதியதினால் 3 இடங்களில் சேதம் அடைந்துள்ளதாகவும், அதனை கடலுக்குள் மூழ்கி சென்று வெல்டிங் செய்யும் பணிகளை செய்வதற்காக நேற்று மதியத்திற்கு பிறகு வந்த மும்பை துறைமுக தொழில்நுட்ப குழுவினர், தொடர்ந்து அந்த பணியில் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து மிதவை கப்பலின் உள்ளே தண்ணீர் அடைக்கப்பட்டு சாய்ந்த நிலையில் இருந்த மிதவைக் கப்பலை சமன் செய்த பணிகள் முடிவடைந்தன. உடனடியாக இழுவை கப்பலை கொண்டு அதனை மீட்கும் பணிகள் மாலை 3 மணி அளவில் தொடங்கினர். ஆனாலும் மிதவை கப்பலின் ஒரு பகுதி பாறையின் மேல் அமர்ந்திருந்ததினால், இழுவை கப்பலால் அதனை இழுக்க முடியாமல் மீண்டும் உலோக கயிறு அறுந்துவிட்டது.

    இதனால் நேற்று மாலையில் மீண்டும் பணிகள் நிறுத்தப்பட்டது. அதிக விசை கொண்ட இழுவை கப்பல்கள் மும்பை அல்லது கொச்சின் துறைமுகத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட பின்னர் தான் இந்த மீட்டுப் பணிகள் இனி தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்திய அனுமின் உற்பத்திக்கழக விஞ்ஞானிகளும், கூடங்குளத்தில் தங்கியிருக்கும் ரஷ்ய அணுசக்தி ஏற்றுமதி கழகம் எனப்படும் அட்டம்ஸ்ட்ராய் நிறுவனத்தின் ரஷ்ய விஞ்ஞானிகளும் மிதவை கப்பலில் உள்ள நீராவி உற்பத்தி கலனை ஆய்வு செய்தனர். ஸ்டீம் ஜெனரேட்டர் எனப்படும் அந்த கலனில் எந்தவிதமான பாதிப்பும் இதுவரை இல்லை என அணுமின் நிலைய உயர் மட்ட ஆய்வுக் கூட்டத்தில் தகவலை தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் மும்பையில் இருந்து மீட்பு கப்பல் வந்த பின்னரே மிதவை கப்பலை மீட்க முடியும் என்பதால், மேலும் சில நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது.

    • சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை.
    • தேரோட்டம் வருகிற 13-ந் தேதி காலை 6 மணிக்கு நடக்கிறது.

    திருச்செந்தூர்,செப்.10-

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    7-ம்திருவிழா இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சியும், தொடர்ந்து 8.45 மணிக்கு சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் சேர்ந்தார்.

    அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை 4 மணிக்கு தங்க சப்பரத்தில் சிவப்புசாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    நாளை 8-ம் திருவிழாவில் சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் காலை 5 மணிக்கு பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச்சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து மேலக்கோவில் சேர்ந்து, அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது.

    தொடர்ந்து மதியம் 12 மணிக்கு பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவில் வந்து சேர்கிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 13-ந் தேதி காலை 6 மணிக்கு நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையில் இதற்காக 4 மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
    • நெல்லை மாவட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு ஆகியோர் இப்பணிகளை கண்காணித்தனர்.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் இன்று ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக வட்டார கல்வி அலுவலருக்கான தேர்வு நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையில் இதற்காக 4 மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. தேர்வு எழுத மாவட்டத்தில் மொத்தம் 1,451 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

    இதில் இன்று 1,206 பேர் தேர்வு எழுதினர். 245 பேர் தேர்வு எழுத வரவில்லை. காலை 10 மணிக்கு தொடங்கி தேர்வு மதியம் 1.30 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்வை கண்காணிக்க மாநில அளவில் கல்வித்துறை குழுவை அமைத்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு ஆகியோர் இப்பணிகளை கண்காணித்தனர். தேர்வர்கள் செல்போன், லேப்டாப் மற்றும் கால்குலேட்டர்கள் போன்ற உப கரணங்களை தேர்வு மையங்களின் உள்ளே கொண்டு செல்ல அனுமதி வழங்கவில்லை.

    • ராஜா தனது உறவினர்களான அழகனேரியை சேர்ந்த சங்கர் உள்ளிட்ட சிலரை வரவழைத்து மனோவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
    • இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் அவர்களை சமரசம் செய்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பை அடுத்த தச்சநல்லூர் அருகே உள்ள கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் மனோ (வயது21). அதே பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் ராஜா (21) ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் ராஜா தனது உறவினர்களான அழகனேரியை சேர்ந்த சங்கர் உள்ளிட்ட சிலரை வரவழைத்து மனோவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (60) என்பவர் அவர்களை சமரசம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜா உள்ளிட்ட 7 பேர் அவரை கட்டையால் அடித்து தாக்கினர். இதில் காயமடைந்த அவர் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை தாக்கிய இசக்கிராஜா, உச்சிமாகாளி, பாலாஜி, விக்னேஷ், சுந்தர், இசக்கி, பால்துரை ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இதில் இசக்கிராஜா, உச்சிமாகாளி ஆகிய 2 பேரை இன்று போலீசார் கைது செய்தனர். மற்ற 5 பேரை தேடி வருகின்றனர்.

    • 14-வது தென் மாவட்ட அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் நெல்லை டவுன் லிட்டில் பிளவர் பள்ளியில் நடைபெற்றது.
    • அறக்கட்டளை தலைவர் அமல் தாமஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட யோகாசன சங்கம் மற்றும் விவேகா கலாசார கல்வி விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் 14-வது தென் மாவட்ட அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் நெல்லை டவுன் லிட்டில் பிளவர் பள்ளியில் நடைபெற்றது.

    போட்டிகளை பள்ளி சேர்மன் மரிய சூசை தொடங்கி வைத்தார். விவேகா அறக்கட்டளை நிறுவனர் அழகேச ராஜா வரவேற்று பேசினார்.

    நெல்லை மாவட்ட யோகாசன சங்க பொரு ளாளர் பால சுப்பிர மணியன், அமைப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பள்ளி முதல்வர் ரெனால்ட் முன்னிலை வகித்தார். அறக்கட்டளை தலைவர் அமல் தாமஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு களை வழங்கினார். இயக்குனர் சத்யா நன்றி கூறினார்.

    இப்போட்டிக்கான ஏற்பாடுகள் மற்றும் நடுவர்களாக டாக்டர் அதிசயராஜ், டாக்டர் குமார், டாக்டர் செல்வராஜ் ஆகியோர் செயல் பட்டனர். இப்போட்டிகளில் நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 680 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். சிறந்த மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு பரிசாக சைக்கிள் வழங்கப்பட்டது.

    ×