search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Floating Ship"

    • இழுவை கப்பல் மூலமாக கூடங்குளத்துக்கு கொண்டு செல்லப்பட்டபோது தரை தட்டியது.
    • மிதவைப் கப்பலை மீட்க முடியும் என்பதால் அதிகாரிகள் அதுவரை மீட்பு பணிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு 4 அணு உலைகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இதில் 5, 6-வது அணு உலைகளுக்கான 4 நீராவி ஜெனரேட்டர்கள் ரஷியாவில் இருந்து கடந்த மாதம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து 2 ஜெனரேட்டர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு கடல் வழியாக ஏற்கனவே கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து மற்ற 2 நீராவி ஜெனரேட்டர்களும் கடந்த 7-ந்தேதி மிதவை கப்பலில் ஏற்றி, இழுவை கப்பல் மூலமாக கூடங்குளத்துக்கு கொண்டு செல்லப்பட்டபோது தரை தட்டியது.

    இதில் மிதவை கப்பல் கடலில் சிக்கிக் கொண்டது. அதனை மீட்பதற்காக இலங்கை கொழும்புவில் இருந்து ஓரியன் என்ற மீட்பு கப்பல் கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் மிதவை கப்பலை மீட்பதற்கு பணிகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் தற்போது அதன் மூலம் மீட்பதில் சிக்கல் உருவாகியுள்ளது.

    இதற்கிடையே மேலும் ஒரு இழுவை கப்பலை கொழும்புவில் இருந்து கொண்டு வர ஏற்பாடுகள் நடந்த நிலையில் தற்போது அந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தரை தட்டிய மிதவை கப்பல் பாறைப்பகுதியில் சிக்கியுள்ளதால் அதில் பல இடங்களில் சேதம் அடைந்துள்ளது. அந்த சேதத்தை சரி செய்த பின்பு தான் மிதவைப் கப்பலை மீட்க முடியும் என்பதால் அதிகாரிகள் அதுவரை மீட்பு பணிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

    அதே நேரத்தில் ராட்சத கிரேன்கள் மூலமாக மிதவை கப்பலில் உள்ள நீராவி உற்பத்தி கலனை மீட்க முடியுமா எனவும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

    • அடித்த கடல் அலையின் காரணமாக மிதவை படகின் ஒரு பகுதியானது அருகில் இருந்த பாறையின் ஒரு பகுதியில் அமர்ந்து சரிந்த நிலையில் காணப்பட்டது.
    • கலனில் எந்தவிதமான பாதிப்பும் இதுவரை இல்லை என அணுமின் நிலைய உயர் மட்ட ஆய்வுக் கூட்டத்தில் தகவலை தெரிவித்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5-வது மற்றும் 6-வது அணு உலைகள் கட்டுமான பணிகள் சுமார் ரூ.49 ஆயிரத்து 621 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

    வருகிற 2027-ம் ஆண்டுக்குள் இதன் கட்டுமான பணிகளை முடித்து மின் உற்பத்திகள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஏற்கனவே உக்ரைன்-ரஷ்ய போரின் காரணமாக இந்த அணு உலைகளுக்கு வர வேண்டிய உதிரி பாகங்கள் வருவதில் மிகுந்த கால தாமதம் ஏற்பட்டது.

    இதனால் இதன் திட்ட காலம் மேலும் சில ஆண்டுகள் ஆகும் எனவும், 2030-ல் தான் மின் உற்பத்தி தொடங்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகின. இந்த சூழ்நிலையில் கடந்த 7-ந்தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இழுவை கப்பல் மூலமாக 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான தலா 300 டன் எடை கொண்ட 2 ஸ்டீம் ஜெனரேட்டர்கள் கடல் மார்க்கமாக எடுத்து வரப்பட்டது.

    கூடங்குளம் அணுமின் நிலைய சிறிய துறைமுக நுழைவு வாயில் பகுதியில் வரும்போது இழுவை கப்பலின் பின்னால் இழுத்து வரப்பட்ட பார்ஜி எனப்படும் மிதவை கப்பல் பாறை இடுக்கில் சிக்கியதால் இழுவை கப்பலில் உள்ள உலகத்தரத்திலான கயிறு அறுந்து தரை தட்டி நின்றுவிட்டது. அப்பொழுது அடித்த கடல் அலையின் காரணமாக மிதவை படகின் ஒரு பகுதியானது அருகில் இருந்த பாறையின் ஒரு பகுதியில் அமர்ந்து சரிந்த நிலையில் காணப்பட்டது.

    இதனை மீட்கும் பணிகள் 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னை துறைமுக பகுதியில் இருந்து நேற்று காலை வல்லுனர் குழுவினர் வந்து ஆராய்ந்து 3 பரிந்துரைகளை செய்தனர். அதன் பின் மும்பை துறைமுகத்தை சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களும் வரவழைக்கப்பட்டு படகை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    மிதவை படகு பாறையில் மோதியதினால் 3 இடங்களில் சேதம் அடைந்துள்ளதாகவும், அதனை கடலுக்குள் மூழ்கி சென்று வெல்டிங் செய்யும் பணிகளை செய்வதற்காக நேற்று மதியத்திற்கு பிறகு வந்த மும்பை துறைமுக தொழில்நுட்ப குழுவினர், தொடர்ந்து அந்த பணியில் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து மிதவை கப்பலின் உள்ளே தண்ணீர் அடைக்கப்பட்டு சாய்ந்த நிலையில் இருந்த மிதவைக் கப்பலை சமன் செய்த பணிகள் முடிவடைந்தன. உடனடியாக இழுவை கப்பலை கொண்டு அதனை மீட்கும் பணிகள் மாலை 3 மணி அளவில் தொடங்கினர். ஆனாலும் மிதவை கப்பலின் ஒரு பகுதி பாறையின் மேல் அமர்ந்திருந்ததினால், இழுவை கப்பலால் அதனை இழுக்க முடியாமல் மீண்டும் உலோக கயிறு அறுந்துவிட்டது.

    இதனால் நேற்று மாலையில் மீண்டும் பணிகள் நிறுத்தப்பட்டது. அதிக விசை கொண்ட இழுவை கப்பல்கள் மும்பை அல்லது கொச்சின் துறைமுகத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட பின்னர் தான் இந்த மீட்டுப் பணிகள் இனி தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்திய அனுமின் உற்பத்திக்கழக விஞ்ஞானிகளும், கூடங்குளத்தில் தங்கியிருக்கும் ரஷ்ய அணுசக்தி ஏற்றுமதி கழகம் எனப்படும் அட்டம்ஸ்ட்ராய் நிறுவனத்தின் ரஷ்ய விஞ்ஞானிகளும் மிதவை கப்பலில் உள்ள நீராவி உற்பத்தி கலனை ஆய்வு செய்தனர். ஸ்டீம் ஜெனரேட்டர் எனப்படும் அந்த கலனில் எந்தவிதமான பாதிப்பும் இதுவரை இல்லை என அணுமின் நிலைய உயர் மட்ட ஆய்வுக் கூட்டத்தில் தகவலை தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் மும்பையில் இருந்து மீட்பு கப்பல் வந்த பின்னரே மிதவை கப்பலை மீட்க முடியும் என்பதால், மேலும் சில நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது.

    • கூடங்குளம் அணுமின் நிலைய துறைமுகப் பகுதிகளின் நுழைவு வாயில் பகுதியில் பாறையில் சிக்கியது.
    • காற்றின் வேகம் அதிகமாக இருந்ததினால் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டன.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான நீராவி உற்பத்தி கலன் ஏற்றி வந்த மிதவைக் கப்பல் ஆனது கூடங்குளம் அணுமின் நிலைய துறைமுகப் பகுதிகளின் நுழைவு வாயில் பகுதியில் பாறையில் சிக்கியது.

    இதனை மீட்கும் பணிகள் நேற்று நடைபெற்றது என்றாலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததினால் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த சூழ்நிலையில் இதற்கான வல்லுனர் குழுவினர் கூடங்குளம் அணுமின் நிலையம் வந்து உள்ளனர். அவர்கள் இதனை மீட்கும் பணியை இன்று காலை முதலே தொடங்கி உள்ளனர். பாறையில் சிக்கி உள்ள மிதவைக் கப்பலை இழுப்பதற்கு வல்லுநர் குழுவினர் 3 பரிந்துரைகளை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த வல்லுனர் குழுவினர் கடல் பகுதிகளில் இதுபோன்ற கப்பல்கள் சிக்கும் பொழுது அதனை மீட்கும் பணியில் அனுபவம் பெற்றவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×