என் மலர்
தேனி
- பெண் காவலர்களை அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருந்தது.
- கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றம் அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்திருந்தது.
கஞ்சா வைத்திருந்தது தொடர்பான வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. தேனி பி.சி.பட்டி போலீசார மற்றும் மாவட்ட எஸ்.பி. பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது தொடர்பான உத்தரவு மதுரை சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் நேற்று புழல் சிறையில் இருந்து மதுரை சிறைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
சவுக்கு சங்கர் மீது ஏற்கனவே போடப்பட்ட குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
பெண் போலீஸ்க்கு எதிராக அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் தேனி மாவட்டத்தில் தங்கியிருந்தபோது கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்தனர். அதன்பின் தொடர்ந்து பல வழக்குகள் அவர் மீது போடப்பட்டன.
அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிக்கும்படி சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கார் பந்தயம் முடியும் வரை நான் ஜாமினியில் வெளியில் வரக்கூடாது என உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் என்மீது தினந்தோறும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறார். எல்லா கைதுக்கும் காரணம் உதயநிதி ஸ்டாலின்தான் என சவுக்கு சங்கர் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழக விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- வலைதளங்களில் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.
152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. பல வருடங்களாகவே முல்லைப்பெரியாறு அணை குறித்து கேரள அரசியல் வாதிகள் மற்றும் தன்னார்வலர்கள் என்ற பெயரில் உலாவும் நபர்கள் வதந்தி கிளப்பி வருகின்றனர்.
கேரளாவில் அமைந்திருந்தாலும் அணை தமிழக நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு பலகோடி செலவில் தமிழக அரசு அணையை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்த பணி முடிந்தபின்னர் 152 அடி வரை உயர்த்த முயற்சி செய்தனர். ஆனால் கேரளா அரசு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. உச்சநீதிமன்றம் அமைத்த குழுக்கள் தொடர்ந்து அணைப்பகுதியில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
கடந்த 2006-ம் ஆண்டு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடி வரை தேக்கிக்கொள்ளலாம் என இவர்கள் பரிந்துரையின் பேரில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஆனால் இதனை அமல்படுத்தாமல் கேரள அரசு தொடர்ந்து தாமதப்படுத்தி வந்தது. இதனால் கடந்த 2010ம் ஆண்டு டிசம்பரில் தேனி மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடைபெற்றது.
கடந்த 2024ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம். பேபி அணையை பலப்படுத்திய பின்னர் 152 அடியாக உயர்த்தலாம் என தெரிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து கண்காணிப்பு குழுவினர் தொடர்ந்து அணைப்பகுதியை ஆய்வு செய்து வருகின்றனர். ஒவ்வொரு பருவமழையின்போது அணைப்பகுதியை ஆய்வு செய்து அணை பலமாக உள்ளது என்ற அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வருகின்றனர்.
சமீபத்தில் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் வீடுகள், உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முல்லை ப்பெரியாறு அணை விவகாகரத்தை நிலச்சரிவுடன் ஒப்பிட்டு கேரள அரசியல் வாதிகள், தன்னார்வலர்கள் வலைதளங்களில் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இது தமிழக விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே தொடர்ந்து வதந்தி பரப்பி வரும் கேரளாவை கண்டித்து தமிழக-கேரள எல்லையான குமுளியில் முற்றுகை போராட்டம் நாளை நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.
கடந்த 2006 மற்றும் 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கேரளா சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எர்ணாகுளம் எம்.பி. முல்லைப்பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என பாராளுமன்றத்தில் பேசி உள்ளார்.
எங்கு இயற்கை பேரழிவு நடந்தாலும் அதனை பெரியாறு அணையுடன் ஒப்பிட்டு பேசுகின்றனர். எனவே இதனை கண்டித்து நாளை குமுளியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களும் இணைந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
- ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
- மெத்தபட்டமைன் மற்றும் கஞ்சா சிகரெட் ஆகியவற்றை விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஏ.புதுப்பட்டி புறவழிச்சாலையில் கடந்த ஜூன் மாதம் 29ம் தேதி பெரியகுளம் வடகரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையிலான போலீசார் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது கேரள பதிவெண் கொண்ட ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 2 கிலோ கஞ்சா மற்றும் மெத்தப்பட்டமைன் போதைப்பொருள் 30 பாக்கெட்டுகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட எஸ்.பி. சிவப்பிரசாத் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு இந்த போதைப்பொருள் விற்பனை மற்றும் சப்ளையில் யார்? யார்? ஈடுபட்டுள்ளனர் என விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது தனிப்படை போலீசார் கோவை, ஈரோடு, கம்பம், கொடைக்கானல் ஆகிய பகுதிகளை சேர்ந்த 5 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த லேப்டாப், செல்போன், கார் மற்றும் போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இவர்களுக்கு மூளையாக செயல்பட்டவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பதுங்கி இருப்பது தனிப்படை போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் விற்பனைக்கு ஆட்களை நியமித்து அவர்கள் கொடுக்கும் முன் பணத்தை வைத்து கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து விலை உயர்ந்த மெத்தபட்டமைன் மற்றும் கஞ்சா சிகரெட் ஆகியவற்றை விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களில் இருந்து முக்கிய தடயங்களை கண்டுபிடித்த போலீசார் திருவனந்தபுரத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் மோகன் நோர்பட் (வயது28), ஆதர்ஸ் (25) ஆகிய 2 பேரை திருவனந்தபுரத்தில் தனிப்படை போலீசார் ஒரு மாதத்திற்கு பின்பு கைது செய்து பெரியகுளத்திற்கு அழைத்து வந்தனர். அவர்கள் கஞ்சா, மெத்தப்பட்டமைன் விற்பனைக்காக பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் போதைப்பொருள் விற்பனையில் கிடைத்த பணத்தின் மூலம் அங்கு சொகுசுவாழ்க்கை வாழ்ந்ததும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர்களை பெரியகுளம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது. அணைக்கு நீர்வரத்தும் திறப்பும் இல்லை.
- மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 969 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
கூடலூர்:
கேரளாவில் பெய்த கனமழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் வேகமாக உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
தற்போது மழை ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து 1145 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 131.75 அடியாக உள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
இந்த தண்ணீர் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாய பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வைகை அணையை வந்து சேருகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணை ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட விவசாய பாசனத்திற்கு ஆதாரமாக உள்ளது. கூடுதல் தண்ணீர் திறப்பால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.
கடந்த 10 நாட்களில் 2½ அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 56.50 அடியாக உள்ளது. மழை கை கொடுக்கும் பட்சத்தில் விரைவில் 57 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கு 1266 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 969 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது. அணைக்கு நீர்வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 115.96 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 0.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
- லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 126 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
கூடலூர்:
கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்ததால் இடுக்கி மாவட்டத்தில் கனமழை பெய்தது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்தது.
இந்த நிலையில் தற்போது மழை குறைந்துள்ளதால், அணைக்கு நீர்வரத்தும் சரிந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 131.55 அடியாக உள்ள நிலையில் வரத்து 2483 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 5059 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
கனமழை பெய்ததால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடி வரை உயரும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல் சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 126 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும் அமாவாசை உள்ளிட்ட தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
கடந்த 3 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுருளி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யானைகள் நடமாட்டம் காரணமாக 2 நாட்கள் தடை நீட்டிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர். இன்று ஆடி பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுருளி அருவியில் புனித நீராட வந்தனர்.
ஆனால் தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நாளை ஆடி அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள் சுருளி அருவி மற்றும் முல்லைப்பெரியாற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். எனவே நாளை சுருளி அருவிக்கு செல்ல அனுமதி வழங்கப்படுமா? என அவர்கள் எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர்.
- பா.ஜ.க.வுக்கு ஆதரவான நிலையில் உள்ளதால் அவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்துவிட்டனர்.
- ராகுல் காந்தி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினால் அதனை காங்கிரஸ் கட்சியினர் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
போடி:
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஜனநாயகத்தை காப்பதற்காக யார் குரல் கொடுத்தாலும் அவர்களை சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ஆகியவை மூலம் நசுக்கும் பணியில் மத்திய பா.ஜ.க. அரசு ஈடுபட்டு வருகிறது.
ராகுல் காந்தி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினால் அதனை காங்கிரஸ் கட்சியினர் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். தெலுங்குதேசம் கட்சி எம்.பி.க்கள் சிலர் வீட்டில் மத்திய பா.ஜ.க. அரசு அமலாக்கத்துறையை ஏவி முன்பு சோதனை நடத்தினர். தற்போது அந்த கட்சியினர் பா.ஜ.க.வுக்கு ஆதரவான நிலையில் உள்ளதால் அவர்கள்மீதான வழக்குகளை ரத்து செய்துவிட்டனர்.

மக்களவையில் ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்து ராகுல்காந்தி பேசியபோது அவருக்கு எதிராக பா.ஜ.க. எம்.பி. அனுராக்தாக்கூர் பேசியது ஆணவத்தின் உச்சம்.
வயநாடு நிலச்சரிவில் பேரிடர் குறித்து ஏற்கனவே எச்சரித்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் தெரிவித்தார். ஆனால் அவ்வாறு பேரிடர் நடப்பதாக தெரிந்திருந்தால் ஏன் அங்கு தேசிய பேரிடர் மேலாண்மைக்குழு, ராணுவத்தை அனுப்பி வைக்கவில்லை. வயநாடு நிலச்சரிவிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மனமில்லாமல் பா.ஜ.க. அரசியல் செய்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு 2 நாட்களாக முகாமிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி வீடுகளை இழந்தவர்களுக்கு கட்சியின் சார்பில் வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோவில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.
- தமிழகத்தின் முக்கிய சனிபகவான் பரிகாரத்தலமாக விளங்குகிறது.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோவில் தமிழகத்தின் முக்கிய சனிபகவான் பரிகாரத்தலமாக விளங்குகிறது. இந்தக் கோவில் இந்து அறநிலையத் துறை மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த கோவிலில் தமிழகம் மட்டுமன்றி தென் மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தங்கள் குடும்பத்தில் உள்ள சனி தோஷம் நீங்கவும், திருமணத் தடைகள் காரியத் தடைகள் விலகவும் இங்கு வந்து பரிகாரம் செய்து சனீஸ்வரனை வழிபட்டு செல்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வருகின்ற 5 சனிக்கிழமைகளில் குச்சனூர் சனீஸ்வரர் பெருமான் கோவிலில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று ஆடி 3-வது சனிக்கிழமை மற்றும் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு அதிகாலையிலேயே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
தங்கள் தோஷம் விலக அருகில் உள்ள சுரபி நதிக்கரையில் நீராடி காகத்திற்கு எள் சாதம் வைத்து நல்லெண்ணெய் மற்றும் எள் தீபங்கள் ஏற்றி காக வாகனம் வாங்கி தலையை சுற்றி வைத்து பரிகாரங்கள் செய்தனர்.
- அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1311 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
- வைகை அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.
கூடலூர்:
கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் இடுக்கி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழைபெய்து வருகிறது. மேலும் சாலைகளில் பாறைகள் உருண்டும், நிலச்சரிவு ஏற்பட்டும் இயல்பு வாழ்க்கை கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக கன மழை கொட்டி வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது.
நேற்று அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 128.90 அடியாக இருந்தது. இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் 1½ அடி உயர்ந்து 130.45 அடியாக உள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 2½ அடி உயர்ந்து ள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் நீர்வரத்து 3216 கன அடியில் இருந்து 5339 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1311 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 4802 மி.கன அடி. நீர் இருப்பு உள்ளது.
வைகை அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 55.38 அடியாக உள்ளது. அணைக்கு 1913 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 969 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2780 மி. கன அடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 116.60 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு அணை 33.8, தேக்கடி 22.4, சண்முகாநதி 2.4, போடி 0.4, உத்தமபாளையம் 2.2, கூடலூர் 4.6, வீரபாண்டி 2.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- வைகை அணையின் நீர்மட்டம் 54.89 அடியாக உள்ளது. வரத்து 1485 கன அடி.
- சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை பரவலாக மழை பெய்த நிலையில் அதன்பிறகு படிப்படியாக குறைந்து முற்றிலும் நின்று விட்டது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் அளவும் குறைந்தது.
தற்போது தேனி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 128.90 அடியாக உள்ளது. வரத்து 3216 கன அடி. திறப்பு 1333 கன அடி. இருப்பு 4460 மி.கன அடி.
வைகை அணையின் நீர்மட்டம் 54.89 அடியாக உள்ளது. வரத்து 1485 கன அடி. திறப்பு 969 கன அடி. இருப்பு 2701 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 57 அடி. வரத்து மற்றும் திறப்பு 10 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 116.76 அடி. திறப்பு 3 கன அடி.
பெரியாறு 78.4, தேக்கடி 44.6, சண்முகாநதி அணை 12.6, ஆண்டிபட்டி 10.6, அரண்மனைபுதூர் 21, பெரியகுளம் 13, சோத்துப்பாறை 12, வைகை அணை 9.6, போடி 26.4, உத்தமபாளையம் 8.6, கூடலூர் 9.2.
கனமழை காரணமாக சுருளி அருவியில் நேற்று சீரான நீர்வரத்து வந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் இன்று காலை முதல் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதேபோல் போடி அருகில் உள்ள அணைப்பிள்ளையார் நீர் வீழ்ச்சியிலும் அதிக அளவு தண்ணீர் தடுப்புகளை தாண்டி செல்வதால் அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
- கொலை செய்யப்பட்ட நாயின் உடல் பிரேத பரிசோனைக்கு பின் புதைக்கப்பட்டது.
கம்பம்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்தவர் கிரண் (வயது26). இவர் தேங்காய் வெட்டும் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் கைதாகி தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார். இவர் அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் சுற்றித்திரிந்த நாயை பிடித்து தரையில் அடித்து கொன்றுள்ளார்.
இதனை தட்டிக்கேட்ட அப்பகுதி மக்களையும் கத்தியை காட்டி மிரட்டி நான் ஏற்கனவே கொலை வழக்கில் உள்ளே சென்று வந்தவன் என மிரட்டி உள்ளார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
விசாரணையில் கிரண் சிறைச்சாலையில் இருக்கும்போது அந்த நாய் அவரது தாயை கடித்ததாவும் இதனால் ஆத்திரத்தில் இருந்த தான் அந்ததெருநாயை தேடி பிடித்து அடித்து கொன்றதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட நாயின் உடல் பிரேத பரிசோனைக்கு பின் புதைக்கப்பட்டது.
- திராட்சை தோட்டங்கள், பழியன்குடி மலை அடிவாரப்பகுதி என சுற்றிக்காட்டி வருகின்றனர்.
- மாட்டு வண்டி சுற்றுலாவை தமிழக வனத்துறையின் ஆசியோடு செய்து வருகின்றனர்.
கூடலூர்:
தேனி மாவட்ட எல்லையையொட்டி கேரளாவில் பெரியாறு புலிகள் காப்பகம் உள்ளது. இந்த காப்பகம் மூலம் தேக்கடியில் யானை சவாரி, படகு சவாரி, டிரக்கிங் ஆகியவை இயக்கப்பட்டு வருகிறது.
இதன்மூலம் அம்மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ. பல கோடி வருவாய் கிடைக்கிறது. மேலும் வருவாயை பெருக்கும் வகையிலும், வடமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையிலும், மாட்டு வண்டி சவாரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இதற்கான அலுவலகத்தை தமிழக பகுதியான லோயர்கேம்ப் அருகே காஞ்சிமரத்துறையில் தொடங்கி மாட்டு வண்டி மூலம் திராட்சை தோட்டங்கள், பழியன்குடி மலை அடிவாரப்பகுதி என சுற்றிக்காட்டி வருகின்றனர். கேரளாவில் உள்ள பெரியாறு புலிகள் காப்பகம் எவ்வித அனுமதியின்றி தமிழக பகுதியில் கிளை அலுவலகத்தை செயல்படுத்த வருவதற்கு தமிழகத்தை சேர்ந்த வனத்துறை அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர் என்று விவசாயிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் தெரிவிக்கையில், கேரளாவை மையமாக கொண்ட பெரியாறு புலிகள் காப்பக்கம் அத்துமீறி தமிழக பகுதியில் 2 கட்டிடங்களை கட்டி அங்கு கேரள ஊழியர்களையும் தங்க வைத்துள்ளது. பெரியாறு அணைக்கு செல்லும் வழியான தேக்கடி மற்றும் வல்லக்கடவில் கேரள வனத்துறை சோதனைச்சாவடி அமைத்து அனுமதியின்றி உள்ளே நுழைய முடியாத வகையில் கெடுபிடி செய்கின்றனர். அதே வேளையில் தமிழக பகுதிக்குள் எவ்வித அனுமதியின்றி கட்டிடங்களை கட்டி மாட்டு வண்டி சுற்றுலாவை தமிழக வனத்துறையின் ஆசியோடு செய்து வருகின்றனர்.
எனவே இந்த அலுவலகத்திற்கு உடனடியாக சீல் வைக்கா விட்டால் விவசாயிகள் சங்கத்தினர் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடும் நிலை ஏற்படும் என்றார்.
- ராயன் திரைப்படம் ஜூலை மாதம் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்திற்கு தணிக்கை குழு A சான்றிதழை அளித்துள்ளனர்.
நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் ராயன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிரச் செய்துள்ளது. அவரின் 50 ஆவது படமான இதை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதற்கிடையில் கடந்த ஜூலை 16 ஆம் தேதி படத்தின் அதிரடியான டிரைலர் வெளியானது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படம் ஜூலை மாதம் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கு தணிக்கை குழு A சான்றிதழை அளித்துள்ளனர்.
இந்நிலையில் 'ராயன்' திரைப்படம் வரும் 26ம் தேதி வெளியாவதை ஒட்டி, ஆண்டிப்பட்டியில் உள்ள குலதெய்வ கோயிலில் நடிகர் தனுஷ் தனது குடும்பத்துடன் இன்று சாமி தரிசனம் செய்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






