என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    • விழாவை முன்னிட்டு ரேணுகாதேவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது
    • 24-ந் தேதி வரை மாலை அம்மனுக்கு நவராத்திரி சிறப்பு அலங்காரம் செய்யப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தெற்கு வீதி அருகில் எல்லையம்மன் என்கிற ரேணுகாதேவி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

    தஞ்சாவூரில் ரேணுகாதேவி அம்மன் என உள்ள ஒரே கோவிலாகும்.

    இன்று நவராத்திரி விழாவை முன்னிட்டு மூலவர் ரேணுகாதேவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    இக்கோவிலில் இன்று முதல் வரும் 24-ம்தேதி வரை மாலையில் வெகுவிமரிசையாக ரேணுகாதேவி அம்மனுக்கு நவராத்திரி சிறப்பு அலங்காரம் செய்யப்படும்.

    மேலும் இசைக்கச்சேரி நடக்கிறது.

    • தீ விபத்து ஏற்படாமல் இருக்க கடைகளுக்கு வெளிப்புறம் சுவிட்ச் பாக்ஸ் வைக்க வேண்டும்.
    • பட்டாசை மிகவும் ஜாக்கிரதையாக வெடிக்க வேண்டும்.

     தஞ்சாவூர்:

    தஞ்சை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் தீபாவளி பண்டிகையை விபத்து இல்லாமல் கொண்டாடுவது குறித்து பட்டாசு விற்பனையா ளர்கள், தயாரிப்பாளர்கள், தீயணைப்பு துறை பணியாளர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பட்டாசு கடைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பட்டாசுகளை வைத்திருக்கக் கூடாது.

    தீ விபத்து ஏற்படாமல் இருக்க கடைகளுக்கு வெளிப்புறம் சுவிட்ச் பாக்ஸ் வைக்க வேண்டும்.

    பிளாஸ்டிக் தொட்டியில் 200 லிட்டர் தண்ணீரை நிரப்பி வைத்திருக்க வேண்டும்.

    இருவழி பாதை கட்டாயம் இருக்க வேண்டும். உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்யக்கூடாது.

    அனைவரும் விழிப்புடனும் கவனமாகவும் இருந்து விபத்தில்லா தீபாவளியாக கொண்டாட வேண்டும்.

    பெரியவர்கள் மேற்பார்வையில் தான் குழந்தைகளை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும்.

    பட்டாசை மிகவும் ஜாக்கிரதையாக வெடிக்க வேண்டும்.

    நனைந்த பட்டாசுகளை எரிந்து கொண்டிருக்கும் கியாஸ், விறகு அடுப்பின் அருகே வைத்து உலர வைக்க கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்தக் கூட்டத்தில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் கணேசன், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு சொந்தமான வட்டார குடோன் பாபநாசத்தில் அமைந்துள்ளது.
    • குடோனில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    பாபநாசம்:

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு சொந்தமான வட்டார குடோன் பாபநாசத்தில் அமைந்துள்ளது.

    இந்த குடோனில் இருந்து பாபநாசம் தாலுகா முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை கோதுமை, பாமாயில் உட்பட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்த குடோனில் பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் ஆய்வு மேற்கொண் டார்.

    அப்போது அரிசியின் தரம், இருப்பு நிலவரம் ஆகிய வற்றை ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது வட்டார குடோன் தர கட்டுப்பாட்டு ஆய்வாளர் ராமச்சந்திரன், முதுநிலை ஆய்வாளர் அஜித்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மீன்களை ஏற்றிக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் ஆட்டோ வந்து கொண்டிருந்தது.
    • ஆட்டோவில் பயணம் செய்த 7 பேரும் பலத்த காயமடைந்தனர்.

    பேராவூரணி:

    பட்டுக்கோட்டை அருகே உள்ள ஓலைக்குன்னம் தெற்கு தெருவை சேர்ந்த சேகர் ( வயது 52), காடந்தங்குடி பகுதியை சேர்ந்த தங்கராசு (60), நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த மோகன் ராஜ் மனைவி மல்லிகா (60), மன்னங்காடு பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம் (55), துவரங்குறிச்சியை சேர்ந்த அசோகன்(48), ஒட்டங்காடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம்,(50) பரவத்துார் பகுதியை சேர்ந்த சக்திவேல்(49) இவர்கள் அனைவரும் மீன் வியாபாரிகள்,

    இவர்கள் ஒன்றாக சேர்ந்து சரக்கு ஆட்டோவை வாடகைக்கு எடுத்து மல்லிப்பட்டினம் ,சேதுபாவாசத்திரம், கட்டுமாவடி ,ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுக பகுதிகளில் மீன்களை மொத்தமாக கொள்முதல் செய்து, மதுக்கூர், துவரங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் சில்லறையாக விற்பனை செய்வார்கள்.

    இந்நிலையில் வழக்கம் போல நேற்றுமுன்தினம் காலை ஜெகதாப்பட்டினத்தில் மீன்களை வாங்கி லோடு ஆட்டோவில் மீன்களை ஏற்றிக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் பட்டுக்கோட்டையை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

    அப்போது சேதுபாவாசத்திரம் அருகே அம்மணிசத்திரத்தில் லோடு ஆட்டோ விபத்தில் சிக்கி சாலையின் வலதுபுறத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்காட்டை பாலசுப்பிரமணியன் மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த 7 பேரும் பலத்த காயமடைந்தனர்.

    உடனடியாக அருகில் உள்ளவர்கள் சேதுபாவாசத்திரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதில் தங்கராஜ் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். சேகர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு இரவு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    பூதலூர்:

    திருக்காட்டுபள்ளி -கல்லணை சாலையில் கோவிலடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ அப்பால ரெங்கநாதர் கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம் பூஜை கள் நடைபெற்றன.

    மூலவ ருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    கோவிலின் முன் மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத அப்பால ரெங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்கினார்.

    கோவிலின் ஸ்ரீ கமலவல்லி தாயார் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது.காலை முதல் இரவு வரை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • காவிரியில் தண்ணீர் திறந்து விடாமல் இருக்கும் கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
    • ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

    பூதலூர்:

    கல்லணையில் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் விடாமல் இருக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், மத்திய அரசு நிரந்தர தீர்வை மேற்கொள்ள வேண்டியும், தமிழகத்தில் ஆளும் திமுக அரசு தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ் அரசுடன் பேசி காவிரி தண்ணீரை திறந்து விட வலியுறுத்தியும் தமிழ் விவசாயிகள் சங்கம், தேசிய மக்கள் சக்தி கட்சி மற்றும் விவசாயிகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

    தமிழ் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் நாராயணசாமி தலைமை வகித்தார். தேசிய மக்கள் கட்சி தலைவர் எம்.எல் .ரவி ,தமிழ் விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் சுப்புராஜ் ,தேசிய மக்கள் கட்சி துணைத் தலைவர் ராமமூர்த்தி ,திருச்சி மாவட்ட மகளிர் அணி செயலாளர் அன்னலட்சுமி, தஞ்சை சமூக ஆர்வலர் பனசைஅரங்கன், மக்கள் பாதை அமைப்பின் திருச்சி தங்கவேல், மது ஒழிப்பு போராளி சுந்தர், ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சம்சுதீன் , நெல்லை மாவட்ட தேசிய மக்கள் சக்தி கட்சி செயலாளர் பாக்கியமுத்துஉள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் பச்சை துண்டுஅணிந்து கோஷங்களை முழக்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    • காவிரி ஆற்றில் பொதுமக்கள் புனிதநீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
    • பசுக்களுக்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபட்டனர்.

    தஞ்சாவூர்:

    ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகிய 3 அமாவாசைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாகும்.

    இந்த நாட்களில் மூதாதையர்கள் பூமிக்கு வருவதாக ஐதீகம். இந்த சமயத்தில் அவர்களை வரவேற்று திதி, நீர்க்கடன் செய்ய வேண்டும். இதனால் அவர்களது ஆசி கிடைத்து குடும்பம் முன்னேறும். நாம் செய்த பாவங்கள் நீங்கும்.

    நீர்நிலைகள் அருகே அமர்ந்து வேதமந்திரங்கள் சொல்லி திதி கொடுப்பது, மூதாதையர்கள் நினைவாக பிண்டம் செய்து உணவாக படைப்பது என்று செய்து வருகின்றனர். இந்த சடங்குகள் தஞ்சை மாவட்டம் திருவையாறு, நாகை மாவட்டம் வேதாரண்யம், கோடியக்கரை, மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் ஆகிய இடங்களில் சிறப்பாக நடைபெறும்.

    திருவையாறு

    அதன்படி, இன்று புரட்டாசி மகாளய அமாவாசை என்பதால் இன்று காலை முதலே தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திருவையாறில் உள்ள காவிரி புஷ்ய மண்டபத்தில் திரளான பொதுமக்கள் வர தொடங்கினர். நேரம் செல்ல செல்ல கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.

    காவிரி ஆற்றில் பொதுமக்கள் புனிதநீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதற்காக ஏராளமான புரோகிதர்கள் படித்துறைக்கு வந்திருந்தனர்.

    இதனால் புஷ்ய மண்டபத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இன்று ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம் கொடுத்து காவிரியில் புனித நீராடினர்.

    கும்பகோணம்

    இதேபோல், தஞ்சாவூர் கல்லணை கால்வாய் படித்துறை, கும்பகோணம் காவிரி ஆற்றின் பகவத் படித்துறை, டபீர் படித்துறை, மேலக்காவேரி படித்துறை, அரசலாற்றங்கரை உள்ளிட்ட நீர் நிலைகளில் ஏராளமான பொதுமக்கள் இன்று காலையில் இருந்து குவியத்தொடங்கினர். அங்கு அவர்கள் தங்களது முன்னோர்களின் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

    மேலும் பசுக்களுக்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபட்டனர்.   

    • 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் நடைபெற்றது.
    • 4 முதல் 10-ம் இடம் வரை பிடிப்பவர்களுக்கு தலா ரூ.250 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு தஞ்சை அன்னை சத்யா மைதானத்தில் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டியை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., கலெக்டர் தீபக்ஜேக்கப் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் இருந்து தொடங்கிய சைக்கிள் போட்டி பாலாஜி நகர், ஈஸ்வரி நகர், மருத்துவ கல்லூரி சாலை வழியாக பிள்ளையார்பட்டி புறவழி சாலை சென்று மீண்டும் அதே வழியாக விளையாட்டு அரங்கத்திற்கு வந்தடைந்தது.

    சைக்கிள் போட்டிகள் 13 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், 13 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ., 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் நடைபெற்றது.

    முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவ- மாணவிகளுக்கு பரிசு தொகையாக தலா ரூ.5000, ரூ.3000, ரூ.2000 வீதமும் 4 முதல் 10-ம் இடம் வரை பிடிப்பவர்களுக்கு தலா ரூ.250 மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    இதில் ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கற்பகம், பயிற்றுநர்கள் விளையாட்டு இயக்குனர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • 210 கொசுப்புழு தடுப்பு பணியாளர்கள் மூலம் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கடிதம் வழங்கப்பட்டது.
    • டெங்கு ஒழிப்பு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி க்குட்பட்ட 51 வார்டுகளிலும் கொசுவினால் பரவும் டெங்கு காய்ச்சல் மற்றும் இதர நோய்களை தவிர்த்திட அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நூதன முறையில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கடிதம் வழங்கும் நிகழ்ச்சியை இன்று மேயர் சண். ராமநாதன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

    துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி , ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கொசு புகை மருந்து காலை 9மணி முதல் 11மணி வரையிலும் மற்றும் மாலை 3மணி முதல் 5மணி வரையிலும் கொசு புகை மருந்து அடிக்கப்பட்டு வருகிறது.

    மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணியாக 300 வீடுகளுக்கு ஒரு பணியாளர் வீதம் மொத்தம் 210 களப்பணியாளர்களை தினக்கூலி அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு ஆண்டு முழுவதும் தொடர்ந்து மேற்படி பணி நடைபெற்று வருகிறது.

    மேலும் 20 வார்டுகளிலுள்ள 38 தெருக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டிய பகுதியாக கண்டறியப்பட்டு தனிகவனம் செலுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மாநகராட்சி பகுதிகளில் தினம்தோறும் 12 காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று டெங்கு ஒழிப்பு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதனை தொடர்ந்து இம்மாநகராட்சி பகுதிகளில் உள்ள 54234 வீடுகளிலும் 210 கொசுப்புழு தடுப்பு பணியாளர்கள் மூலம் நூதனமுறையில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கடிதம் வழங்கி அவர்களிடம் கையொப்பம் பெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் மேத்தா, கவுன்சிலர் தமிழ்வாணன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

    இதனையடுத்து காந்திபுரம் பகுதியிலுள்ள மழைநீர் வடிகால்கள் ஜே.சி.பி, ஹிட்டாச்சி உள்ளிட்ட கனகரக இயந்திரங்கள் மூலம் தூய்மை பணியாளர்களுடன் சுத்தம் செய்தனர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாநகர்நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி, உதவி செயற்பொறியாளர் ரமேஷ் , துப்புரவு ஆய்வாளர் ராமசந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • டாக்டர் சுகிா்தாவுக்கு நீதி வழங்க வேண்டும்.
    • குற்றவாளிகள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் விஷாகா குழுக்களை அமைக்கக் கோரி தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மருத்துவ மாணவா்கள் மனித சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    பயிற்சி மருத்துவர்கள் குமாரசாமி,கீர்த்தனா, மதுமிதா ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதில் தமிழ்நாடு மருத்துவ மாணவா்கள் சங்கம், சமூக சமத்துவத்துக்கான டாக்டா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற போராட்டத்தில், பாலியல் வன்முறை, கூடுதல் வேலை நேரம், கடும் உழைப்பு சுரண்டல், பகடி வதை உள்ளிட்ட காரணங்களால் தற்கொலைக்கு தள்ளப்பட்ட மருத்துவா் சுகிா்தாவுக்கு நீதி வழங்க வேண்டும்.

    குற்றவாளிகள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் விஷாகா குழுக்களை அமைக்க வேண்டும். இளநிலை, முதுநிலை மாணவா்களுக்கு தொடா்ச்சியாக 8 மணி நேரத்துக்கும் மேல் பணி வழங்கக் கூடாது.

    இளநிலை, முதுநிலை மாணவா்களுக்கு தேசிய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளுக்கு புறம்பான, அதில் குறிப்பிடப்படாத வேலைகளை வழங்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    இதில், ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

    • சிகிச்சை பலனின்றி நாகூர் பிச்சை பரிதாபமாக உயிரிழந்தார்.
    • புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் சிவன்கொல்லை தங்கத்தாய் காலனியைச் சேர்ந்தவர் நாகூர் பிச்சை (வயது 58).

    சம்பவத்தன்று இவர் சைக்கிளில் சென்றபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயமடைந்த நாகூர் பிச்சையை அக்கம் பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் .

    அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நாகூர் பிச்சை இறந்தார்.

    இது பற்றிய புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெள்ள பாதிப்பு குறித்த முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
    • ரேசன் கடைகளில் ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை இருப்பு வைத்திருக்க வேண்டும்.

    பேராவூரணி:

    பேராவூரணி தாசில்தார் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுடன் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்ககைள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தாசில்தார் சுகுமார் தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

    இதில் பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வேந்திரன் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தாசில்தார் சுகுமார் பேசுகையில்:-

    வடகிழக்கு பருவமழை க்காக புயல், மழை, வெள்ள த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    தாலுகா அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு, வெள்ள பாதிப்பு குறித்த முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    தினமும் மழையளவு, மழை நிலவரம், மழைக்கால உயிரிழப்பு, கால்நடை உயிரிழப்பு, வீடுகள் பாதிப்பு போன்ற நிலவரங்களை உடனே மாவட்ட கலெக்டருக்கு தெரிவிக்க வேண்டும்.

    கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் கிராமத்திலேயே தங்கி இருக்க வேண்டும்.

    ஊரக வளர்ச்சி துறையினர் நீர்நிலைகள், குட்டைகள், திறந்தவெளி கிணறு போன்றவற்றை விரைவில் சீரமைக்க வேண்டும்.

    பொதுமக்களை தங்க வைப்பதற்கு பள்ளிகள், சமுதாய கூடங்களை தயார்படுத்த வேண்டும்.

    அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் மணல் மூட்டைகள், மீட்பு பணிக்கான பவர் பம்புகள், ஜெனரேட்டர் போன்றவை தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    ரேசன் கடைகளில் ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை இருப்பு வைத்திருக்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் வருவாய்துறை, பொதுப்பணி துறை, தீயணைப்பு துறை, காவல் துறை, நெடுஞ்சாலை துறை, ஊராட்சி துறை, சுகாதார துறை, போக்குவரத்து துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×