என் மலர்tooltip icon

    சிவகங்கை

    சிவகங்கையில் தூய்மைப்பணி மேற்கொண்ட கவர்னர், மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். #BanwarilalPurohit

    சிவகங்கை:

    சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.

    பின்னர் அவர் சிவகங்கைக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். அவரை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார்.

    பின்னர் சிவகங்கை நகராட்சி பஸ் நிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் துப்புரவு பணியை மேற்கொண்டார்.

    இதில் கலெக்டர் ஜெயகாந்தன், அமைச்சர் பாஸ்கரன், தலைமை கூடுதல் செயலாளர் ராஜகோபால், செந்தில்நாதன் எம்.பி., மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து சிவகங்கையில் உள்ள வேலு நாச்சியார் விருந்தினர் மாளிகையில் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    சிவகங்கையில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இன்று மாலை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கவர்னர் செல்கிறார். ராமேசுவரத்திற்கு நாளை (12-ந் தேதி) காலை செல்லும் கவர்னர் அங்கு புனரமைக்கப்பட்ட 30 தீர்த்தங்களை பொது மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.  #BanwarilalPurohit

    சிவகங்கையில் வட்டார அளவில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு, ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    சிவகங்கை:

    சிவகங்கை புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அமைப்பு சார்பில் பெண் கல்வியின் முக்கியத்துவம், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வட்டார அளவில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடந்தன. 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஓவிய போட்டியும், 4, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பேச்சுப் போட்டியும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளும், 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகளும் நடைபெற்றது.

    இந்த போட்டிகளை சிவகங்கை வட்டார வளமைய மேற்பார்வையாளர்(பொறுப்பு) கந்தவேல் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுத்தொகை காசோலைகளாக வழங்கப்பட்டது. இந்த காசோலை தொகையானது மாணவர்கள் வங்கிகளுக்கு சென்று காசோலைகளை எவ்வாறு கையாள்வது என்பதை அறிந்துகொள்ளும் விதமாக வழங்கப்பட்டது. இப்போட்டிகளில் வென்ற மாணவர்கள் அனைவரும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் கரோலின் நிஷி, ஆசிரியர்கள், பயிற்றுனர்கள் சதீஷ்குமார், காளிராசா, சித்திக், பாத்திமா, கவிதா உள்ளிட்டோர் செய்திருந்தனர். 
    ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணியின்போது பழங்காலத்து செங்கல் கட்டிடங்கள், மண்ணால் செய்யப்பட்ட பொருட்களும், பானை ஓடுகள், மணிகள் உள்ளிட்ட பொருட்களும் கண்டுப்பிடிக்கப்பட்டன.
    திருப்புவனம்:

    திருப்புவனம் அருகே உள்ள லாடனேந்தல் கிராமத்தின் வழியாக டி.ஆலங்குளம் கிராமத்திற்கு செல்லும் பாதை உள்ளது. இந்த பாதையின் குறுக்கே மதுரை-ராமேசுவரம் ரெயில் தண்டவாளம் உள்ளது. இந்த வழியாக விவசாய பொருட்கள் கொண்டு செல்ல ஏதுவாக சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து, ரெயில்வே நிர்வாகம் சார்பில் ரூ.1¼கோடி மதிப்பில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    அப்போது வடக்கு பகுதியில் பழங்கால உறை கிணறும், தென்புறத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின்போது பழங்காலத்து செங்கல் கட்டிடங்கள் இருப்பதும், மேலும் மண்ணால் செய்யப்பட்ட பொருட்களும், பானை ஓடுகள், மணிகள் உள்ளிட்ட பொருட்களும் கண்டுப்பிடிக்கப்பட்டன. இதுகுறித்து கீழடியில் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டுள்ள தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதில் உறை கிணறு 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள பண்டைய காலத்து கிணறு என்று தெரிவித்தனர். இதையடுத்து கீழடி போன்று லாடனேந்தல் பகுதியிலும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
    பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை உத்தரவு விதிக்கப்பட்டதன் எதிரொலியாக சிவகங்கை நகரில் உள்ள கடைகளில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.
    சிவகங்கை:

    தமிழகத்தில் பிளாஸ்டிக்பொருட்கள் தடையை தொடர்ந்து கடைகள், வணிக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், இறைச்சிக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் பிளாஸ்டிக் பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தவதற்கு பதிலாக துணி பைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் நேற்று சிவகங்கை பஸ் நிலையம் பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு உள்ளதா என்பது குறித்து திடீர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் ஒவ்வொரு கடைக்கும் சென்று அங்கு விற்பனை செய்யப்படும் பொருட்களை பொதுமக்களுக்கு எவ்வாறு கடையின் உரிமையாளர்கள் கொடுக்கிறார்கள் என்பதையும் ஆய்வு செய்தார்.

    அதன் பின்னர் சிவகங்கை பஸ் நிலையம் பகுதியில் உள்ள பழக்கடைகளுக்கு சென்று கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார். பின்னர் அங்கு வந்த பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து சிவகங்கை பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்று பார்வையிட்ட கலெக்டர் அதை சுத்தமாக வைத்துக்கொள்ளும்படி நகராட்சி ஆணையாளருக்கு அறிவுறுத்தினார். #tamilnews
    திருப்பத்தூர் அருகே நெற்குப்பையில் மின் கசிவால் 3 கியாஸ் சிலிண்டர்கள் வெடித்ததில் ஓட்டல்-3 கடைகள் நாசமானது.

    நெற்குப்பை:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பையை சேர்ந்தவர் சேகர். இவர் ராஜவீதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் சேகர் ஓட்டலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    இன்று அதிகாலை 2 மணி அளவில் ஓட்டலில் மின்கசிவு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த பொருட்கள் மீது தீப்பற்றியது.

    ஓட்டல் சமையல் அறையில் 3 சிலிண்டர்கள் வைக்கப்பட்டு இருந்தன. எதிர் பாராதவிதமாக அதிலும் தீ பரவியது. சிறிது நேரத்தில் 3 சிலிண்டர்களும் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

    இதில் ஓட்டல் இடிந்து தரைமட்டமானது. மேலும் அருகில் இருந்த குமார் என்பவரின் சலூன் கடையும், காஜாமுகமதுவின் பெட்டிக்கடை, கதிர்வேல் என்பவரின் அடகு கடை ஆகியவையும் சேதம் அடைந்தது.

    சிலிண்டர்கள் வெடித்த சத்தத்தை கேட்ட தூங்கி கொண்டிருந்த அந்த பகுதி மக்கள் பீதியில் உறைந்தனர். தகவல் அறிந்த நெற்குப்பை போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிலிண்டர் வெடித்ததில் 4 கடைகளில் உள்ள அனைத்து பொருட்களும் சேதம் அடைந்தன. இதன் மதிப்பு பல லட்சம் ஆகும்.

    விபத்து குறித்து நெற்குப்பை போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மின்கசிவு காரணமாக இந்த விபத்து நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

    திருப்பத்தூர் அருகே மணல் லாரி பாலத்தில் மோதி கவிழ்ந்ததில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    திருப்பத்தூர்:

    புதுக்கோட்டை மாவட்டம், அறங்தாங்கி அருகே உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்தவர் காசி. இவரது மகன் மூர்த்தி (வயது 45). டிப்பர் லாரி டிரைவர்.

    இவர் புதுக்கோட்டையில் இருந்து லாரியில் மணல் ஏற்றிக் கொண்டு திருப்பத்தூர் புறப்பட்டார். நெடுமரம் அருகே வந்தபோது, எதிர் பாராத விதமாக லாரி பாலத்தில் மோதியது.

    இதனால் லாரி கவிழ்ந்தது. அதன் பின் சக்கரங்கள் தனியாக கழன்றன. இந்த விபத்தில் மூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    விபத்து குறித்து திருப்பத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    சிங்கம்புணரி அருகே அரசு பள்ளி கட்டிடம் சேதம் அடைந்ததால், வகுப்பறையை தவிர்த்து மாணவர்கள் பள்ளி மரத்தடியில் அமர்ந்து படித்து வருகின்றனர்.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரி ஊராட்சிகளில் மிகப்பெரிய ஊராட்சி கிருங்காக்கோட்டை ஊராட்சி. இங்கு உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சுமார் 120 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் கட்டிடம் 1960-ல் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. இந்த கட்டிடத்தில் பள்ளி இயங்கி வந்த நிலையில், இடப்பற்றாக்குறை காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 2 கட்டிடங்கள் புதிதாக கட்டப்பட்டு 1, 2, 3 ஆகிய வகுப்புகள் புதுகட்டிடத்தில் இயங்கி வந்தன.

    இந்த நிலையில் பழைய ஓட்டுக்கட்டிடத்தில் 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் மட்டும் பயின்று வந்தனர். இந்த கட்டிடம் மிக மோசமாக பழுதடைந்த நிலையில், மேற்கூரை ஓடுகள் உடைந்தும், சுவர்களில் விரிசல் ஏற்பட்டும் எப்போது விழுமோ என்ற அபாயத்தில் உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் வகுப்பறையை தவிர்த்து, பள்ளி மரத்தடியில் அமர்ந்து படித்து வருகின்றனர்.

    மேலும் இந்த பள்ளி வளாகத்தில் பழமையான மரங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. இதுகுறித்து இந்த பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பழமையான இந்த பள்ளிக்கட்டிடம் மிகவும் சேதமடைந்து உள்ளது. மேலும் பள்ளியின் மேற்கூரை ஓடுகள் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே இந்த பள்ளி ஓட்டுக் கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். பள்ளி வளாகத்தில் உள்ள பழமையான மரங்களில் முறிந்த கிளைகளை வெட்ட வேண்டும்.

    இதை போர்க்கால அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றனர்.

    மேலும் இடியும் நிலையில் உள்ள இந்த பள்ளி ஓட்டுக் கட்டிடம் தான் தேர்தலின் போது வாக்குச்சாவடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    திருப்புவனம் அருகே மாமனார்-மாமியார் தகராறில் திருமணம் முடிந்து 4 மாதத்தில் இளம்பெண் உயிரை பறித்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பழையனூரை அடுத்த பத்துப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். அவருடைய மனைவி இருளாயி. இவர்களது மகன் பாண்டி (வயது 25). கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த சங்கம்மாள்(19), என்ற பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் பெருமாளுக்கும், அவருடைய மனைவி இருளாயிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் பெருமாள் தனது மனைவியை திட்டினார். இதில் கோபமடைந்த இருளாயி அது குறித்து தனது மகன் பாண்டியிடம் முறையிட்டுள்ளார்.

    பெற்றோரின் தகராறால் மனம் உடைந்த பாண்டி விஷம் குடித்துள்ளார். தனது கணவர் விஷம் குடித்ததைப் பார்த்து சங்கம்மாளும் விஷம் குடித்து விட்டாராம்.

    இதையடுத்து விஷம் குடித்த புதுப்பெண்ணையும், அவருடைய கணவரையும் உறவினர்கள் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பாண்டி குணமடைந்த நிலையில், அவரது மனைவி சங்கம்மாள் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாரன் விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் முடிந்து 4 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்ததால் சப்-கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    கணவன்-மனைவி தகராறு அவரது மகனை விஷம் குடிக்க வைத்ததுடன், வாழ வந்த மருமகளின் உயிரையும் பறித்தது அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. #tamilnews
    திருப்புவனம் ரெயில் நிலையத்தின் ஸ்டேசன் மாஸ்டர் மோட்டார்சைக்கிள் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    திருப்புவனம்:

    மதுரை காளவாசல் அருகே உள்ள பொன்மேனி பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 38). இவர் திருப்புவனம் ரெயில் நிலையத்தில் ஸ்டேசன் மாஸ்டராக பணியாற்றி வந்தார். நேற்று காலை தனது வீட்டிலிருந்து மோட்டார்சைக்கிளில் பணிக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் இளையான்குடிக்கு செல்லும் ஒரு லாரி வந்தது. திருப்புவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு முன்பு வந்த போது, லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதில் கீழே விழுந்த ரவீந்திரன் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேது வழக்கு பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்த காரைக்குடி அருகே உள்ள சிறுவாலையை சேர்ந்த முருகன் (26) என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார். இறந்த ரவீந்திரனுக்கு மனைவி அங்கயற்கண்ணியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். #tamilnews
    வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண் போலீசுக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருபவர் சாவித்திரி (வயது34). இவரது கணவர் முருகப்பன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் தனது 10 வயது மகள் அபிநயாவுடன் சாவித்திரி வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக குடும்ப பிரச்சினை காரணமாக சாவித்திரி விரக்தியுடன் காணப்பட்டார். வாழ்க்கையில் வெறுப்படைந்த சாவித்திரி நேற்று இரவு தனது மகளை தேவகோட்டையில் உள்ள தாய் வீட்டில் விட்டு விட்டு காரைக்குடிக்கு வந்தார்.

    பின்னர் தனது வீட்டில் அவர் வி‌ஷம் குடித்து சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். அந்த நேரத்தில் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் அங்கு வர சாவித்திரி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அவர்கள் சாவித்திரியை காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சாவித்திரி வீட்டை சோதனை செய்ததில் தற்கொலைக்கு முன் அவர் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியதாக தெரிகிறது. அதில் இருந்த விவரங்கள் தெரியவில்லை.

    மேல் அதிகாரிகளின் டார்ச்சர் காரணமாக பெண் போலீஸ் சாவித்திரி தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது குடும்ப பிரச்சினையில் இந்த முடிவை எடுத்தாரா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதாக கூறி ரூ.2லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை:

    புதுக்கோட்டை மாவட்டம் சுந்தரபட்டி புல்வயலை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 28). இவர் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பிவருவதாக தெரிவித்துள்ளார். இதை நம்பிய மானாமதுரை அருகே உள்ள தெ.புதுக்கோட்டையை சேர்ந்த சத்தியராசு (37) என்பவர் சிங்கப்பூரில் வேலைக்கு அனுப்பி வைக்க கேட்டாராம்.

    இதற்காக கடந்த ஆகஸ்டு மாதம் 2 தவணைகளில் ரூ.2 லட்சத்தை வங்கி கணக்கு மூலம் கிருஷ்ணமூர்த்திக்கு கொடுத்தாராம்.

    அதையடுத்து நீண்ட நாட்கள் ஆகியும் சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்பவில்லையாம். மேலும் வாங்கிய பணத்தையும் திருப்பி தரவில்லையாம். இதுகுறித்து சத்தியராசு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனிடம் புகார் அளித்தார்.

    அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டிசெல்வம், இன்ஸ்பெக்டர் சாதுரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழிவர்மன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளச்சாமி, திருமுருகன் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.
    பாராளுமன்ற தேர்தலுக்குள் ப.சிதம்பரம் சிறை செல்வார் என்று எச்.ராஜா கூறினார். #hraja #PChidambaram

    சிவகங்கை:

    சிவகங்கையில் பாரதீய ஜனதா சார்பில் வாஜ்பாய் பிறந்தநாள் விழா சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசியதாவது:-

    ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் பாராளுமன்ற தேர்தல் வருவதற்குள் ப.சிதம்பரம் குடும்பத்துடன் சிறைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.

    மீண்டும் மோடி பிரதமரானால் இந்தியா 50 ஆண்டுகள் பின்னோக்கி போய் விடும் என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார். ஆனால் உலக அளவில் வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது.


    மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஆய்வு மட்டுமே நடைபெற்றுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் ஒப்புக்கொள்ளாமல் எந்தவொரு அணையும் கட்ட முடியாது. இதனால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

    ஸ்டெர்லைட் விவகாரத்தில் நிபுணர்கள் கொண்ட குழு ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கி உள்ளது. மக்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒருவிதமாகவும், சட்டமன்றத் தேர்தலுக்கு ஒருவிதமாகவும் வாக்களிப்பது எப்போதும் இருக்கின்ற வழக்கம்.

    சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும் என்பது அரசியல் அறியாமையாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் உதயா, பொது செயலாளர் செல்வராஜ், மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #hraja #PChidambaram

    ×