search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "under the tree"

    சிங்கம்புணரி அருகே அரசு பள்ளி கட்டிடம் சேதம் அடைந்ததால், வகுப்பறையை தவிர்த்து மாணவர்கள் பள்ளி மரத்தடியில் அமர்ந்து படித்து வருகின்றனர்.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரி ஊராட்சிகளில் மிகப்பெரிய ஊராட்சி கிருங்காக்கோட்டை ஊராட்சி. இங்கு உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சுமார் 120 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் கட்டிடம் 1960-ல் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. இந்த கட்டிடத்தில் பள்ளி இயங்கி வந்த நிலையில், இடப்பற்றாக்குறை காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 2 கட்டிடங்கள் புதிதாக கட்டப்பட்டு 1, 2, 3 ஆகிய வகுப்புகள் புதுகட்டிடத்தில் இயங்கி வந்தன.

    இந்த நிலையில் பழைய ஓட்டுக்கட்டிடத்தில் 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் மட்டும் பயின்று வந்தனர். இந்த கட்டிடம் மிக மோசமாக பழுதடைந்த நிலையில், மேற்கூரை ஓடுகள் உடைந்தும், சுவர்களில் விரிசல் ஏற்பட்டும் எப்போது விழுமோ என்ற அபாயத்தில் உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் வகுப்பறையை தவிர்த்து, பள்ளி மரத்தடியில் அமர்ந்து படித்து வருகின்றனர்.

    மேலும் இந்த பள்ளி வளாகத்தில் பழமையான மரங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. இதுகுறித்து இந்த பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பழமையான இந்த பள்ளிக்கட்டிடம் மிகவும் சேதமடைந்து உள்ளது. மேலும் பள்ளியின் மேற்கூரை ஓடுகள் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே இந்த பள்ளி ஓட்டுக் கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். பள்ளி வளாகத்தில் உள்ள பழமையான மரங்களில் முறிந்த கிளைகளை வெட்ட வேண்டும்.

    இதை போர்க்கால அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றனர்.

    மேலும் இடியும் நிலையில் உள்ள இந்த பள்ளி ஓட்டுக் கட்டிடம் தான் தேர்தலின் போது வாக்குச்சாவடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    ×