என் மலர்tooltip icon

    சிவகங்கை

    திருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் செய்தனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த கூடபட்டு காலனியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த பல மாதங்களாக இந்த பகுதிக்கு குடிநீர் வினியோகம் முறையாக வழங்கப்படவில்லை.

    இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் இன்று காலை திருப்பத்தூர் ஆலங்காயம் செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    இதையடுத்து மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    மாவட்டம் முழுவதும் குடியரசு தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. சிவகங்கையில் கலெக்டர் ஜெயகாந்தன் தேசிய கொடியை ஏற்றினார்.
    சிவகங்கை:

    சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மைதானத்தில் குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மைதானத்திற்கு காலை 8 மணிக்கு கலெக்டர் ஜெயகாந்தன் வந்தார். அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் வரவேற்றார். பின்பு 8.05 மணியளவில் கலெக்டர் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

    பின்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, வருவாய்த்துறை, தொழில் வணிகத்துறை, தொழிலாளர் நல அலுவலகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மகளிர் திட்டம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட துறைகளின் மூலம் மொத்தம் 105 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 27 லட்சத்து 54 ஆயிரத்து 980 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 41 போலீசாருக்கு தமிழக முதல்-அமைச்சரின் விருதை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சக்திவேல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, தொழிலாளர் நலத்துறை அலுவலர் மைவிழிச்செல்வி, துணை இயக்குனர் யசோதாமணி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அப்துல்கபூர், மனோகர், சக்கரவர்த்தி, முருகேசன், சிவகங்கை தாசில்தார் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    சிவகங்கை ரமண விகாஷ் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் முத்துகண்ணன் தலைமையில், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தேசிய கொடியை ஏற்றினார். விழாவில் நேரு இளைஞர் மைய முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இடையமேலூர் விக்னேஷ்வரா வித்யாலயா பள்ளியில், பள்ளி செயலாளர் ஜானகி தலைமையில் ராணுவ வீரர் முருகேஸ்வரன் தேசிய கொடிய ஏற்றினார். முடிவில் ஆசிரியை ஜான்சி நன்றி கூறினார். சிவகங்கை அருகே உள்ள நடேசன் செட்டியார் நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் தலைமையில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமலட்சுமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

    மேட்டுபட்டி சுவாமி விவேகானந்தா மேல்நிலைபள்ளியில் பள்ளி முதல்வர் மலர்விழி தலைமையில் திருமலை அய்யனார் தேசிய கொடிய ஏற்றிவைத்தார், பள்ளி செயலர் தனலெட்சுமி முதுதுகலை ஆசிரியர் பிரேம்குமார், அஜீத்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். சிவகங்கை கிராமதான நிர்மான சங்கத்தில் பொது செயலாளர் உறுமத்தான் தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.

    சிவகங்கை ஆக்ஸ்வர்டு மேல்நிலைபள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு தாளாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பள்ளி செயலர் சியாமளா மற்றும் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை ராமகிருஷ்ணா தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை விஜயா தலைமையில் ஜஸ்டீன் திரவியம் தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.

    சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் பள்ளிச்செயலர் சேகர் தலைமையில் தேவகோட்டை கல்வி மாவட்ட கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தலைமையாசிரியர் முத்துக்குமார் வரவேற்றார். விழாவில் மாவட்ட அரிமா சங்கத் தலைவர் சுந்தரமாணிக்கம், வக்கீல்கள் ராம்பிரபாகர், அப்துல்கபூர், பாலச்சந்திரன், விஜய்ஆனந்த், பாண்டிக்கண்ணன், கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் ஆசிரியர் ராஜு நன்றி கூறினார்.

    சிவகங்கை கற்பூரசுந்தரபாண்டியன்-ராமலட்சுமி மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் பொக்கிசம் தேசிய கொடியை ஏற்றினார். கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு தமிழர் பண்பாட்டு இனிப்பு உணவான கடலை உருண்டை, எள்ளு உருண்டை வழங்கப்பட்டன. துணியாளான தேசியகொடி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

    காரைக்குடி ஸ்ரீராம் நகர் திருச்சி பை-பாஸ் ரோட்டில் அமைந்திருக்கும் பிரதமரின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி மையமான யூனிவர்சல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, திருவள்ளுவர் கல்வி மற்றும் கிராம மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் குடியரசு தினவிழா நடைபெற்றது. விழாவில் நிறுவனத் தலைவர் விஸ்வநாத கோபாலன் தேசியகொடி ஏற்றி வைத்தார். நிறுவன இயக்குனர் லயன் ஆதினம், மேலாளர் செந்தமிழ்செல்வன், சொக்கலிங்கம், மகாலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் உள்பட மாணவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. 
    ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் நிமனத்திற்கு ஏராளமானவர்கள் மனு கொடுத்தனர்.
    சிவகங்கை:

    9அம்ச கோரிக்கை தொடர்பாக ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடந்த 22-ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை, இதனால் அரசு பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிக ஆசிரியர்களை பணிக்கு நியமிக்க முடிவு செய்துள்ளது.

    அதைத்தொடர்ந்து நேற்று சிவகங்கை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பகல் 2 மணி வரை சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் தற்காலிக ஆசிரியர் பணி வேண்டி விண்ணப்பங்களை கொடுத்தனர். இது தொடர்பாக முதன்மை கல்வி அதிகாரி பாலுமுத்து கூறியதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் அரசு பள்ளிகள் 1,115-ம், உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இவைகளில் 7 ஆயிரத்து 586 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

    இவர்களில் நேற்று முன்தினம் 5ஆயிரத்து 355 பேர் பணிக்கு வரவில்லை. ஆனால் இவர்களில் நேற்று 119 பேர் மட்டும் பணிக்கு வந்து விட்டனர். பணிக்கு வராதவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 28-ந் தேதி பணிக்கு வரவில்லை என்றால் பெற்றொர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.7ஆயிரத்து 500 வழங்கப்படும். இதையடுத்து தற்போது ஏராளமானவர்கள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்காக தங்களின் விண்ணப்ப மனுவை கொடுத்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
    மானாமதுரை பகுதியில் 4 வழிச்சாலை பணி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதையடுத்து மானாமதுரையில் இயங்கி வந்த ரெயில்வேகேட் விரைவில் மூடப்பட உள்ளது.
    மானாமதுரை:

    மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தொடங்கி தற்போது இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரெயில்வே கேட் பகுதி அனைத்திலும் உயர் மட்ட மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக தற்போது மானாமதுரையை அடுத்த கமுதக்குடி மற்றும் திருப்புவனம் பாலங்கள் தவிர்த்து மற்ற பாலங்கள் வழியாக போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.

    இந்நிலையில் இந்த நான்கு வழிச்சாலையில் உள்ள மேம்பாலங்கள் கட்டப்பட்ட இடங்களில் உள்ள ரெயில்வே கேட்கள் விரைவில் மூடப்பட உள்ளன. அதன்படி மானா மதுரையில் இருந்து மதுரை செல்லும் அகல ரெயில் பாதையின் குறுக்கே தற்போது ரெயில்வே கேட் ஒன்று உள்ளது. தற்போது மானாமதுரை தல்லாகுளம் முனியாண்டி கோவிலில் இருந்து மானா மதுரை புதிய பஸ் நிலையம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை புதிய பாலம் கட்டப்பட்டு அந்த பாலத்தில் இரு பாதை வழியாக போக்குவரத்து அனுமதிக்கபட்டு வருகிறது. இதையடுத்து இனி மதுரையில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் நேரடியாக மானாமதுரை புதிய பஸ் நிலையத்திற்கு சென்று விடும். இடையில் உள்ள மானா மதுரை அண்ணா சிலை மற்றும் பை-பாஸ் சாலை பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிற்காது.

    மேலும் மானாமதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பொதுமக்கள் அனைவரும் மதுரை செல்லவும் மதுரையில் இருந்து மானாமதுரை நகருக்குள் வரவும் புதிய பஸ் நிலையம் வந்து தான் செல்ல முடியும். மேலும் ஏற்கனவே செயல்பட்டு வந்த மானாமதுரை அண்ணா சிலை மற்றும் பை-பாஸ் பஸ் நிறுத்தம் இனி பயன்பாட்டில் இருக்காது. வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் மானாமதுரை நகர் பகுதிக்குள் வர வேண்டுமானால் சிவகங்கை செல்லும் பஸ்களில் பயணம் செய்தால் தான் நகருக்குள் வரமுடியும்.

    மேலும் சிவகங்கை செல்லும் பஸ்கள் அனைத்தும் மானாமதுரை அண்ணாசிலை வழியாக சர்வீஸ் ரோட்டில் சென்று அதன் பின்னர் இடது புறத்தில் ஏறி பாலத்தை கடந்து தான் புதிய பஸ் நிலையம் செல்லும். மேலும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிவகங்கை செல்லும் வாகனங்கள் அனைத்தும் தல்லாகுளம் முனியாண்டி கோவிலை சுற்றி வந்து வலது புறமாக திரும்பி சர்வீஸ் ரோடு, அண்ணாசிலை, தேவர் சிலை, காந்தி சிலை, சிப்காட் வழியாக சிவகங்கைக்கு செல்ல வேண்டும்.

    மேலும் சரக்கு வாகனங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் சிவகங்கைக்கு செல்ல வேண்டுமானால் மானா மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, பை-பாஸ் பாலம் வழியாகத்தான் செல்ல முடியும். இந்த புதிய வழி போக்குவரத்து நடைமுறை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இந்த புதிய வழித்தட பயணத்திற்கான கருத்து கேட்பு நடத்துவதற்காக தற்போது மாவட்ட நிர்வாகத்தின் அனுமதிக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

    இந்த புதிய வழித்தடம் குறித்து மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதும் மானாமதுரையில் உள்ள ரெயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படும். மேலும் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பை-பாஸ் அண்ணாசிலை பஸ் நிறுத்தமும் மூடப்பட உள்ளது. அத்துடன் சுதந்திரத்திற்கு பின் உருவாக்கப்பட்ட 7 ரெயில்வே சந்திப்புகளில் ஒன்றான மானாமதுரை சந்திப்பில் இருந்து மதுரை செல்லும் பாதையில் உள்ள மற்றொரு ரெயில்வே கேட்டும் மூடப்பட உள்ளது.
    நவீன தொழில் நுட்பக் கருவிகளை பயன்படுத்தி குறைந்த அளவு தண்ணீரில் விவசாயப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.
    சிவகங்கை:

    மாவட்ட வேளாண்மைத் துறையின் சார்பில் வேளாண் பயிர் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. செந்தில்நாதன் எம்.பி. முன்னிலை வகித்தார். வேளாண்மை இணை இயக்குனர் சேகர் வரவேற்றார். இதில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தற்போது கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பயிர் காப்பீட்டை நம்பி உள்ளனர். குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்கவில்லை. கிணறு, ஆழ்துளை கிணறு ஆகியவைகளில் தண்ணீர் இல்லை. மாவட்டத்தில் உள்ள 13 லட்சம் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. விவசாயத்திற்கு தேவையான பருவ மழை பெய்யாமல் பொய்த்து விடுகிறது. அதுமட்டுமன்றி வறட்சி ஏற்படும் நிலையில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விடுகிறது.

    இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு விவசாயிகளுக்கு தேவையான நவீன தொழில்நுட்ப கருவிகள், உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இதில் விவசாயிகள் தங்கள் பகுதிகளில் மண்வளம் மற்றும் நீர்வள ஆதாரங்களை கருத்தில் கொண்டு அதற்கேற்ப விவசாயப் பணிகளை திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

    தற்போது மாவட்டத்திற்கு ரூ.200 கோடி பயிர் இழப்பீட்டு தொகை கிடைத்துள்ளது. அதில் ரூ.105 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விட்டது. ஒருசில இடங்களில் பயிர் இழப்பீட்டு தொகை குறைந்த அளவில் நிர்ணயம் செய்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அதிகாரிகள் சென்னை சென்று, அதை சரி செய்தனர்.

    தமிழகத்தில் விவசாய உற்பத்தியில் சிவகங்கை மாவட்டம் 3-வது இடத்தில் உள்ளதாக கூறுகின்றனர். ஆனால் தண்ணீர் இன்றி நாம் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாது. அதனால் குறைந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்யம் தொழில் நுட்பங்களை தற்போது வேளாண்மைத்துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர். அவைகளை விவசாயிகள் சரிவர பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் மானியத் திட்டத்தில் ரூ.12.55 லட்சம் மதிப்பில் வேளாண் உபகரணங்களை அமைச்சர் வழங்கினார். இதில் வேளாண் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் செந்தூர்குமரன், கண்ணன், பரமசிவம், துணை இயக்குனர்கள் ராஜேந்திரன், சசிகலா, இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரன், வேளாண்மை அலுவலர் பரமேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    திருப்பத்தூர் அரசு நிதியுதவி பள்ளியில் ஆசிரியரை கேலி செய்து டிக் டாக் வீடியோ வெளியிட்ட 6 மாணவர்களை பள்ளியிலிருந்து சஸ்பெண்டு செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார். #tiktok
    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ரெயில் நிலையம் ரோட்டில் ராமகிருஷ்ணா அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வணிகவியல் ஆசிரியரை ஏளனம் செய்தும், நாற்காலியை இழுத்து போட்டு அவரை உட்கார விடாமல் தரக்குறைவான முறையில் நடந்து கொண்டு ராக்கிங் செய்து அந்த வீடியோக்களை டிக்டாக் எனப்படும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தனர்.

    இந்த வீடியோ பொதுமக்கள் மற்றும் பெற்றோர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தும்படி கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டார்.

    அதன்படி திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் சிவா மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவர்கள் ஒழுங்கற்ற முறையில் ஆசிரியர்களிடம் நடந்து கொண்டது தெரியவந்தது.

    பின்னர் அவர்களது பெற்றோர்களை வரவழைத்து பேசி மாணவர்களின் ஒழுங்கீன தன்மையை எடுத்துக்காட்டினர்.

    ஏற்கனவே அந்த பள்ளி தலைமை ஆசிரியர் பாபு என்பவரை கத்தியால் குத்திய மாணவர்கள் மீண்டும் அதே பள்ளியில் சேர்ந்து ரகளையில் ஈடுபட்டு ஆசிரியர்களை அவதூறாக பேசியது தெரியவந்தது.

    இதையடுத்து 6 மாணவர்களை பள்ளியிலிருந்து சஸ்பெண்டு செய்து மாவட்ட கல்வி அலுவலர் சிவா உத்தரவிட்டார்.

    மேலும் அவர்களை தேர்வு நேரத்தின் போது மட்டும் தேர்வு எழுத அனுமதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவும் பள்ளி அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #tiktok
    சிவகங்கையில் ஜாக்டோ-ஜியோஅமைப் பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    சிவகங்கை:

    அங்கன்வாடி பணிக்கு ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களை பணியமர்த்தக் கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இதில் மாவட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் ஏற்கனவே செயல்பட்டு வரும் சத்துணவு மையங்களை மூடக்கூடாது.

    புதிதாக தொடங்கப்பட உள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களை பணி நியமனம் செய்யக்கூடாது. மாண்டிச்சோரி ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்.

    மாவட்டம் முழுவதும் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துப்பாண்டியன், நாகேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில், ஜாக்டோ-ஜியோவின் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்கள் செல்வக் குமார், முத்துசாமி, ரவிச்சந்திரன், மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் சங்கர், இளங்கோவன், ஜோசப் சேவியர், மாவட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் அன்பரசு, பிரபாகர், ராஜா, செல்வக்குமார், தமிழரசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    பொங்கல் விழாவையொட்டி கல்லல், சிங்கம்புணரி பகுதிகளில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
    கல்லல்:

    கல்லல் ஒன்றியம் ஏழுமாப்பட்டி கிராமத்தில் பொங்கல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் ஏழுமாப்பட்டி-மானகிரி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 38 வண்டிகள் கலந்து கொண்டு பெரியமாடு, சின்னமாடு என 2 பிரிவாக போட்டிகள் நடைபெற்றன. முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 12 வண்டிகள் கலந்து கொண்டன. அதில் முதல் பரிசை கல்லல் உடையப்பா சக்தி வண்டியும், 2-வது பரிசை காடனேரி நந்திகுமார்கேசவன் வண்டியும், 3-வது பரிசை பொய்யாதநல்லூர் அப்பாஸ் வண்டியும் பெற்றன.

    இறுதியாக நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 26 வண்டிகள் கலந்துகொண்டன. அதில் முதல் பரிசை வெட்டிவயல் சுந்தரேசன் வண்டியும், 2-வது பரிசை தானாவயல் வெங்கடாச்சலம் வண்டியும், 3-வது பரிசை சாத்திக்கோட்டை கருப்பையா வண்டியும் பெற்றன.

    இதேபோல் காரைக்குடி அருகே உள்ள தளாக்காவூர் மானகிரியில் பொங்கல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் மானகிரி-கல்லல் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 27 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு, சின்னமாடு என 2 பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 13 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை கல்லூரணி காவேரி கருப்பையா பாலாஜி வண்டியும், 2-வது பரிசை கல்லல் உடையப்பா சக்தி வண்டியும், 3-வது பரிசை கல்லணை விஸ்வாரவிச்சந்திரன் வண்டியும் பெற்றன.

    பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 14 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை ப.தனக்குடி கிராமத்தைச் சேர்ந்த சிவசாமி வண்டியும், 2-வது பரிசை வெள்ளரிப்பட்டி சமர்சித் வண்டியும், 3-வது பரிசை தானாவயல் வெங்கடாச்சலம் மற்றும் அழகிச்சிப்பட்டி பாஸ்கரன் வண்டிகளும் பெற்றன. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    சிங்கம்புணரி அருகே எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. அரளிக்கோட்டை விலக்கில் இருந்து தானியபட்டி விலக்கு வரை நடைபெற்ற போட்டியில் 12 பெரியமாட்டு வண்டிகளும் 18 சின்னமாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.பி. போட்டியை தொடங்கி வைத்தார். இதில் பெரியமாடு போட்டியில் நகரம்பட்டி கண்ணன் வண்டி முதல் பரிசையும், 2-வது பரிசை கவிதாம்பட்டி அமர்நாத் வண்டியும், 3-வது பரிசை மாம்பட்டி பாரிவள்ளல் வண்டியும் பெற்றன. சின்னமாடு போட்டியில் கள்ளஞ்சேரி சிவப்பிரபு வண்டி முதல் பரிசையும், நகர பட்டி கண்ணன் வண்டி 2-வது பரிசையும், தேவகோட்டை செல்வராஜ் வண்டி 3-வது பரிசையும் பெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பாஸ்கரன், வக்கீல் பாலா, மாவட்ட பேரவை செயலாளர் ஆவின் தலைவர் அசோகன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். விழாவில் மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜா, சிங்கம்புணரி ஒன்றிய கழக செயலாளர் வாசு, பேரவை துணை செயலாளர் திருவாசகம், ஆபத்தாரணப்பட்டி கிளை கழக நிர்வாகிகள் சகாதேவன், சுரேஷ், வீரப்பன், முருகன், கோபு, பாலசுப்பிரமணியன். இளங்குமார் மாது, ஜெகன், அருணாச்சலம் ராமசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஏரியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பிரபு, திவ்யா ஆகியோர் செய்திருந்தனர்.
    மானாமதுரை 4 வழிச்சாலை பணியின் போது விபத்துகளை தவிர்க்க எச்சரிக்கை பலகைகள், வேகத்தடைகள் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    மானாமதுரை:

    மதுரையில் இருந்து பரமக்குடி வரை 4 வழிச்சாலை பணிகள் 936 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை உள்ளிட்ட 9 இடங்களில் உயர் மட்ட மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன. மதுரையில் இருந்து பரமக்குடி வரை சாலையின் பல இடங்களில் கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் குறுக்கிடுகின்றன. இதுதவிர நகருக்குள் செல்ல சர்வீஸ் ரோடுகளும் அமைக்கப்பட்டுள்ளன. குண்டும் குழியுமாக இருந்த சாலைகள் சீரமைக்கப்பட்டு 45 மீட்டர் அகலத்தில் போக வர தலா இரு வழிச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் அனைத்தும் அதிகபட்ச வேகத்தில் செல்கின்றன.

    உள்ளூர் வாகனங்கள் சாலைகள் குறுக்கிடும் இடங்களில் வேகத்தை குறைத்து செல்கின்றன. ஆனால் வெளியூர் வாகனங்கள் நான்கு வழிச்சாலையில் அதிக வேகத்தில் செல்கின்றன. விபத்து பகுதி, சாலை குறுக்கிடும் பகுதி என தெரியாததால் அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன. மானாமதுரை அண்ணாசிலை பைபாஸ் ரோட்டில் இருந்து புதிய பஸ்நிலையம் வரை உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு இருவழிகளிலும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பாலம் முடிவடையும் இடத்தில் புதிய பஸ்நிலையம் அமைந்துள்ளது. உள்ளுர் வாகனங்களுக்கு இந்த பஸ் நிலையம் இருப்பது தெரிந்து வேகத்தை குறைத்து செல்கின்றனர். ஆனால் வெளியூர் வாகனங்கள் பஸ்நிலையம் இருப்பது தெரியாமல் அதிவேகத்தில் செல்கின்றன. இதனால் பஸ்நிலையத்திற்கு திரும்பும் வாகனங்கள், வெளியேறும் வாகனங்கள் குறித்து தெரியாமல், வெளியூர் வாகனங்கள் விபத்துகளில் சிக்குகின்றன.

    நேற்று முன்தினம் பெங்களூருவைச் சேர்ந்த சுற்றுலா வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் உயிரிழந்தார். சாலை குறுக்கிடும் இடம் தெரியாமலேயே இந்த விபத்து நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இதுபோன்ற விபத்துக்களை தடுக்க சாலை குறுக்கிடும் இடங்கள் குறித்த எச்சரிக்கை பலகைகள், வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    மாற்றுத்திறனாளிகள் வீட்டுமனை பட்டா பெற விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் பாஸ்கரன் கூறினார்.
    சிவகங்கை:

    சிவகங்கையில் மாற்றம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி தலைவர் சதீஸ்பாபு தலைமையில் நடைபெற்றது. பகீரத நாச்சியப்பன் வரவேற்று பேசினார். இதில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர நாற்காலி, வேட்டி, சேலை மற்றும் பொங்கல் பரிசு வழங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:– 

    காலச் சூழலில் நீங்கள் எந்த நிலையிலும் உயரலாம். யாருக்கும் எதுவும் நிரந்தரம் கிடையாது. வாழ்க்கையில் ஏற்றமும், இறக்கமும் உண்டு. நமக்கு நல்ல பழக்கவழக்கம், தன்னம்பிக்கை, நாணயம், நம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் உயரலாம். மாற்றுதிறனாளிகளுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது.

    நமது மாவட்டத்தில் உள்ள வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகள் கலெக்டரிடம் விண்ணப்பித்தால் அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் ஏற்கனவே மனையிடம் இருந்தால் அவர்களுக்கு வீடு கட்ட அரசு உதவி செய்யும். மாற்றுதிறனாளிகளுக்கு உதவிடும் வகையில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தி தனியார் நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு பெற்று தரப்பட்டுள்ளது. இந்த அரசு தொடர்ந்து உங்களுக்கு தேவையான உதவிகளை செய்யும். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் மாற்றுதிறனாளிகள் மாவட்ட அலுவலர் சரவணகுமார், பேராசிரியர் ஆனந்தசெல்வம், டாக்டர் தீபக், மாற்றம் மாற்றுத்திறனாளிகள் சங்க செயலாளர் பிரபாகரன், பொருளாளர் லட்சுமணன், கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் சசிகுமார், மோகன், பலராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    தேவகோட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 16 பவுன் நகையை திருடி சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேவகோட்டை:

    தேவகோட்டை காந்தி ரோட்டில் வசிப்பவர் அசன்மைதீன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரசிதாபானு. இவர் தந்தை இறந்து விட்டதால், வீட்டை பூட்டி விட்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்பு வீட்டிற்கு வந்த ரசிதாபானு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த பொருட்கள் வீடு முழுவதும் சிதறி கிடந்தது.

    மேலும் அதில் இருந்த 16 பவுன் நகைகள் திருடு போயிருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து அவர் தேவகோட்டை நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டது.
    மானாமதுரை மின்வாரியத்திலிருந்து 15 கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது.
    மானாமதுரை:

    மானாமதுரையில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் ஏ.விளாக்குளம், மேலப்பிடாவூர், கன்னிசேரி, பில்லத்தி, செய்யாலூர், சன்னதிபுதுக்குளம் உள்ளிட்ட 15 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 7 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு 36 கி.மீ தூரத்தில் உள்ள காளையார்கோவில் மின்வாரியத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.

    புதிய மின் இணைப்பு, மின்பழுது, பெயர் மாற்றம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களுக்கும் காளையார்கோவில் மின்வாரியத்திற்கு அலைந்து வந்தனர். இந்த 15 கிராமங்களை மானாமதுரையுடன் இணைக்க வலியுறுத்தி பலமுறை போராட்டம் நடத்தியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    தொடர்ந்து போராட்டம் நடத்தியதன் விளைவாக தற்போது ஏ.விளாக்குளம் உள்ளிட்ட 15 கிராமங்கள் பயன்பெறும் வகையில் 5 கி.மீ. தூரத்தில் உள்ள மானாமதுரையில் இருந்து மின் இணைப்பு வழங்க உத்தரவிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக செய்யாலூர் விலக்கில் இருந்து முத்துராமலிங்கபுரம் வரை 37 மின்கம்பங்கள் நடும் பணி நேற்று தொடங்கியது.

    செய்யாலூர் விலக்கில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து முத்துராமலிங்கபுரம் வரை மின் இணைப்பு கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் இணைப்பு வழங்கப்பட்டு 15 கிராமங்களும் மானாமதுரையுடன் இணைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் 27 ஆண்டு கால போராட்டம் அலைச்சல் முடிவிற்கு வந்துள்ளது.

    இதுகுறித்து கிராம மின்செயற்பொறியாளர் ஜெயபாண்டியம்மாள் கூறுகையில், 15 கிராம மக்கள் தொடர்ந்து மனு கொடுத்து வந்த நிலையில், அரசுக்கு பரிந்துரை செய்து தற்போது மானாமதுரை-தாயமங்கலம் ரோட்டில் இருந்து பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து 35 புதிய மின்கம்பங்கள் மூலம் 15 கிராமங்களுக்கும் மின்வினியோகம் செய்யப்படும் என்றார்.
    ×