என் மலர்tooltip icon

    சிவகங்கை

    திருப்பத்தூர் அருகே கள்ளக்காதல் தகராறில் மர்ம உறுப்பை துண்டித்து விவசாயி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஏ.கே.மோட்டூரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). விவசாயி. இவரது நிலத்தில் பூக்கள், மஞ்சள் பயிரிட்டுள்ளார். தினமும் பூக்களை பறித்து திருப்பத்தூர் டவுனுக்கு சென்று விற்பனை செய்த வந்தார். நேற்று இரவு பூக்களை விற்பனை செய்துவிட்டு ஏ.கே.மோட்டூர் ஏரிக்கரை வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    அப்போது கும்பல் ஒன்று அவரை வழிமறித்து கத்தியால் கழுத்து, கைகளில் வெட்டி சாய்த்தது. மேலும் அவரின் மர்ம உறுப்பை துண்டித்து வீசியுள்ளனர். படுகாயமடைந்த சிவக்குமார் சம்பவ இடத்தில் துடிதுடித்து இறந்தார்.

    அவர் பிணமாக கிடந்ததை கண்ட பொதுமக்கள் திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனையிட்டனர்.

    உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலையான சிவக்குமாருக்கு தனலெட்சுமி (35) மனைவி மற்றும் 2 மகள் ஒரு மகன் உள்ளனர். அவருக்கு முன் விரோதிகள் உள்ளார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மர்ம உறுப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் வேறு ஏதாவது காரணத்துக்காக கொலை நடந்ததா? என்ற கோணத்தில் விசாரணையில் இறங்கினர். அதில் சிவக்குமாருக்கு அவரது நிலத்தில் வேலை செய்து வந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது.

    அந்த பெண்ணுக்கும் புதுபூங்குளம் கிராமத்தை சேர்ந்த காண்ட்ராக்டர் ஒருவருடன் தொடர்பு இருந்தது. இதனால் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அந்த காண்ட்ராக்டரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். #tamilnews
    திருப்பத்தூர் அருகே இன்று காலை வேன் மரத்தில் மோதிய விபத்தில் படுகாயமடைந்த பெண் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    திருப்பத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம், கட்டலாங்குளம் அருகில் உள்ள கே.புதூரை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி வள்ளி (வயது 42).

    இவர் உறவினர்கள்17 பேருடன் சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரில் இன்று நடைபெறும் தெப்பத்திருவிழாவை காண வேனில் புறப்பட்டார்.

    இன்று காலை 6 மணியளவில் திருப்பத்தூர் அருகே உள்ள கருப்பூர் மெயின் ரோட்டில் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறு மாறாக ஓடி அங்குள்ள புளிய மரத்தில் மோதியது.

    இதில் வேனின் மேல் பகுதி தனியாக கழன்று சென்றது. அப்போது டிரைவர் மட்டும் வேனில் இருந்து குதித்து தப்பித்தார்.

    இந்த விபத்தில் வேனில் இருந்த வள்ளி படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் வந்த பெண்கள் உள்பட 14 பேர் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து திருப் பத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    மாவட்டத்தை கலக்கிய ஜெனரேட்டர் திருடர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தேவகோட்டை:

    மாவட்டத்தில் மைக்செட் நடத்தி வருபவர்களிடமும், திருமண மண்டபங்களிலும் ஏராளமான ஜெனரேட்டர்கள் மற்றும் ஸ்பீக்கர்கள், விலையுயர்ந்த விளக்குகள் ஆகியவை தொடர்ந்து திருடு போய்வருவதாக பல்வேறு போலீஸ்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் தேவகோட்டை ராம்நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர், ஸ்பீக்கர்கள், விலையுயர்ந்த விளக்குகள் ஆகியவற்றை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து தேவகோட்டை நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து திருமண மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை கொண்டு போலீசார் விசாரித்தனர். அதில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.

    இதையடுத்து போலீசார் திருப்பத்தூர் தாலுகா ஆத்திரான்பட்டி என்ற ஊரில் மைக்செட் வைத்துள்ள சேவகன் என்ற செல்வம் (வயது 26), அதே ஊரைச் சேர்ந்த வீரன் (32) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் கண்ணங்குடி, தேவகோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் நமுனை சமுத்திரம், நெற்குப்பை, கீழச்சிவல்பட்டி உள்பட பல பகுதிகளில் ஜெனரேட்டர் உள்ளிட்ட பொருட்களை திருடியது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து மாவட்டத்தை கலக்கிய ஜெனரேட்டர் திருடர்கள் 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 8 ஜெனரேட்டர்கள், தலா 10 ஸ்பீக்கர், விலையுயர்ந்த விளக்குகளை கைப்பற்றினர்.
    கீழச்சிவல்பட்டியில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் வால்வு உடைந்ததால் குடிநீர் ரோட்டில் பாய்ந்து வீணாகி வருகிறது.
    திருப்பத்தூர்:

    கீழச்சிவல்பட்டி சந்தைப்பேட்டை அருகே உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மூலம் ஊராட்சியின் பல பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டி நீண்ட நாட்களாக பராமரிப்பு இல்லாமலும், தொட்டியில் உள்ள குழாய்கள் பழுதடைந்தும் காணப்பட்டு வந்தன. இந்தநிலையில் நேற்று குடிநீர் வினியோகத்திற்காக தொட்டியில் நீர் ஏற்றப்பட்டது.

    அப்போது தொட்டியில் உள்ள கேட்வால்வு எனப்படும் குழாய் திடீரென உடைந்து அருவி போல் தண்ணீர் கொட்டியது. தொடர்ந்து கவனிப்பின்றி இருந்ததால் தண்ணீர் இளையாத்தங்குடி சாலை மற்றும் வாரச்சந்தைக்குள் புகுந்து வீணாகியது.

    நீண்ட நேரம் தண்ணீர் பாய்ந்து வீணாகியதால் மேல்நிலைத் தொட்டி முழுவதும் காலியானது. இதுகுறித்து ஊராட்சி அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டு கேட்வால்வு மாற்றும் பணி நடைபெற்றது. இந்த பணி தாமதமாக நடந்ததால் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகியது. இதுகுறித்து சண்முகம் என்பவர் கூறுகையில், உள்ளாட்சி நிர்வாகம் அமைவதற்கு தாமதம் ஆவதால் இதுபோன்ற தவறுகள் ஏற்படுகிறது.

    ஊராட்சி செயலாளர் அனைத்து வார்டு பகுதிகளையும் கண்காணிப்பது கடினம். இதே போல் தெருவிளக்கு மற்றும் சாலைப் பிரச்சினையும் மக்களை மிகவும் வேதனைக்குள்ளாக்கி வருகிறது என்றார். தற்போது அனைத்து பகுதிகளிலும் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலையில் கிடைக்கும் நீரும் வீணாகி வருவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
    திருப்பத்தூரில் அரசு கால்நடை ஆஸ்பத்திரியில் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பத்தூர்:

    காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். இவரது மகன் குமார் (வயது 42). இவர் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள அரசு கால்நடை மருத்துவ மனையில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு குமார் மருத்துவ விடுப்பில் சென்றார். விடு முறை முடிந்து நேற்று அவர் பணிக்கு திரும்பினார்.

    பணியில் சேர்ந்ததும் மனைவியிடம் பேசிய அவர் சிவகங்கை சென்று விட்டு வருவதாக கூறியுள்ளார். ஆனால் இரவில் அவர் வீட்டிற்கு வரவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை கால்நடை ஆஸ்பத்தி ரியை ஊழியர் திறந்தபோது அங்கு குமார் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து திருப்பத்தூர் நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குடும்ப பிரச்சினை காரணமாக குமார் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. #tamilnews
    சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஆனந்தவல்லி சோமநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா யாக பூஜையுடன் தொடங்கியது.
    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வைகை ஆற்றங்கரையில் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திற்கு உட்பட்ட ஆனந்தவல்லி- சோமநாதர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு 24 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    சோமநாதர் சன்னதி கால பைரவர், சதாசிவப் மேந்திராள் போன்ற சன்னதிகள் புதிதாக கருங்கல்லில் அமைக்கப்பட்டு உள்ளது. ராஜகோபுரம், விமான கோபுரம், பரிவார சுவாமி சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டும் கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளுக்கும் அழகிய கலை வேலைப்பாடுகளுடன் மர கதவுகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

    கடந்த 4-ந் தேதி எல்லை தெய்வங்களுக்கு சிறப்பு பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்று மாலை யாகசாலைக்கு புனித நீர் கலசங்களில் கொண்டு வரப்பட்டு முதல் கால யாக பூஜை தொடங்கியது.

    திருப்பரங்குன்றம் கந்த குருவேத பாடசாலை முதல்வர் ராஜா பட்டர் தலைமையில் வேத விற்பன்னர்கள் யாக சாலையில் விசே‌ஷ சாந்தி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, கும்ப அலங்காரம் மற்றும் பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது.

    அதனைத் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) 2-ம் கால யாகசாலை பூஜை, நாளை 3-ம் கால யாக பூஜை நடைபெறுகிறது.

    11-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9.15 மணிக்கு ஆனந்தவல்லி சோமநாதர் மூலவர் விமான கோபுரம், ராஜ கோபுரம், பரிவார விமான கோபுரங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.

    காலை 9.40 மணிக்கு ஆனந்தவல்லி அம்மன் சோமநாத சுவாமிக்கு மூலஸ்தான மகா கும்பாபிஷேகம்- தீபாராதனை நடைபெறுகிறது.

    கும்பாபிஷேகத்தை காணவரும் திரளான பக்தர்களுக்கு வைகை ஆற்றில் சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு மகா அபிஷேகம், 6 மணி முதல் 7 வரை திருக்கல்யாணமும், 8 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, அதனைத் தொடர்ந்து இரவு பக்தி இசை, வள்ளி திருமணம் புராண நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வைகை ஆறு சீரமைக்கப்பட்டு குடிநீர் வசதி செய்யப்பட்டு உள்ளது. கோவில் முன்பு பக்தர்கள் பாதுகாப்பாக உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்து வரவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு உள்ளனர். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை ஆனந்தவல்லி- சோமநாத சுவாமி சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    திருப்பத்தூர் அருகே ஜே.சி.பி. வாகனத்தை சுத்தம் செய்த வாலிபர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தார்.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சோலுடையான்பட்டியைச் சேர்ந்தவர் மருதுபாண்டியன் (வயது25). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் சில மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பினார். அதன் பின்னர் சொந்தமாக ஜே.சி.பி. எந்திரம் வாங்கி ஓட்டி வந்தார்.

    மருதுபாண்டியன் தனது நண்பர்களான சக்தி (வயது18), ரவி (24) ஆகியோருடன் திருக்கோஷ்டியூர் சென்று அந்த பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றினார்.

    அதன் பின்னர் ஜே.சி.பி. வாகனத்தை அங்குள்ள வாட்டர் சர்வீஸ் நிறுவனத்துக்கு கொண்டு சென்றார். அங்கு வாகனத்தை அவரே சுத்தம் செய்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது. மயங்கி விழுந்த அவரை திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மருதுபாண்டியனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    சிவகங்கை அரசு கல்லூரியில் மாணவர் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட சக மாணவர்கள் 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    சிவகங்கை:

    சிவகங்கையை அடுத்த பில்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அஜீத் ராஜ் (வயது 19). இவர் சிவகங்கை அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. 2–ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், அதே கல்லூரியில் 2–ம் ஆண்டு படிக்கும் மற்றொரு மாணவருக்கும் இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. அப்போது சக மாணவர்கள் சமாதானம் செய்து 2 பேரையும் அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் அஜீத் ராஜா கல்லூரிக்கு வந்தார். அப்போது கல்லூரி வளாகத்திற்குள் வைத்து 3 மாணவர்கள் சேர்ந்து அவரை வழிமறித்தனர். மேலும் கண்இமைக்கும் நேரத்தில் 3 பேரும் அஜீத் ராஜாவை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்து நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்தில் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதை அறிந்து மற்ற மாணவர்கள் அலறினர். பின்னர் அந்த 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    உயிருக்கு போராடிய அஜீத்குமாரை சக மாணவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அவர் கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கல்லூரி வளாகத்தில் மாணவர், சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக மாணவ–மாணவிகள் வகுப்புகளை விட்டு வெளியேறி, தங்களது வீடுகளுக்கு சென்றனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல்கபூர், இன்ஸ்பெக்டர் அழகர், சப்–இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், முன்விரோத தகராறில் அஜீத் ராஜாவை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இது தொடர்பாக மகாதேவன், சதீஸ், ராஜாமணி ஆகிய 3 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
    இளையான்குடி அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய்-மகளிடம் நகைகளை பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
    இளையான்குடி:

    இளையான்குடி அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி (வயது 57). இவர்களது மகள் அனிதா (28). இவரது கணவரும், தந்தை கேசவனும் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். இதனால் அனிதா தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். அவருக்கு நிவேதா என்ற மகள் உள்ளாள்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு தமிழ்ச்செல்வி, தனது மகள், பேத்தியுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் தூங்கிக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகை மற்றும் அனிதா அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்தனர். அப்போது கண்விழித்த 2 பேரும் நகையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு திருடர்கள் என்று கூச்சல் போட்டனர். இதனால் அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் மர்ம ஆசாமிகள் நகைகளை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர்.

    மர்ம ஆசாமிகள் நகைகளை பறித்ததில் தாயும், மகளும் பலத்த காயமடைந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக இளையான்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகள் பறித்த நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இளையான்குடி பகுதியில் சமீப காலமாகவே வழிப்பறி, நகை பறிப்பு, வீடுபுகுந்து திருட்டு, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

    எனவே திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
    திருப்புவனம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கொத்தனார் பலியானார்.
    திருப்புவனம்:

    மதுரை மாவட்டம் சக்குடியை சேர்ந்தவர் பழனிக்குமார் (வயது 38). இவர் திருப்புவனம் அருகே நெல்முடிகரையில் வசித்து வந்த நிலையில், கொத்தனாராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் மோட்டார்சைக்கிளில் மதுரைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    திருப்புவனம் 4 வழிச்சாலை பாலத்தின் அருகே வந்த போது, அங்கிருந்த வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியது. அப்போது நிலைதடுமாறிய பழனிக்குமார் தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவர் மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    டிரைசைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் 2 இளநீர் வியாபாரிகள் பலியானார்கள்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரம்புதூரைச் சேர்ந்தவர் சமயத்துரை (வயது55). அதே பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா (55). 2 பேரும் இளநீர் வியாபாரம் செய்து வந்தனர்.

    வியாபார தேவைக்காக மதுரை சென்று டிரை சைக்கிள் வாங்கிக்கொண்டு அதனை ஓட்டியபடி ஊருக்கு புறப்பட்டனர்.

    இன்று அதிகாலை இருவரும் மானாமதுரை அருகே துத்திக்குளம் பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து ராமேசுவரம் நோக்கி செல்லும் அரசு பஸ் வந்தது.

    பஸ் எதிர்பாராதவிதமாக டிரைசைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் டிரை சைக்கிளை ஓட்டிச் சென்ற சமயத்துரை மற்றும் கருப்பையா தூக்கி வீசப்பட்டனர்.

    விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் பலத்த காயம் அடைந்த சமயத்துரை மற்றும் கருப்பையா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டனர்.

    விபத்து குறித்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மானாமதுரை அருகே பயிர் இழப்பீட்டு தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
    மானாமதுரை:

    மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. கடந்த 2017–ம் ஆண்டிற்குரிய இழப்பீட்டு தொகை வழங்கப்படாததால் விவசாயிகள் பல்வேறு பேராட்டங்களை நடத்தி வந்தனர். இதையடுத்து மாவட்ட கூட்டுறவு வங்கி மூலம் அந்தந்த விவசாயிகளின் வங்கி கணக்கில் இழப்பீட்டு தொகை வரவு வைக்கப்பட்டது. அதில் ஏக்கருக்கு 12 ஆயிரம் ரூபாய் முதல் 28 ஆயிரம் ரூபாய் வரை பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஏற்றவாறு வழங்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து விவசாயிகள் கிராமங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் பணம் பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் சில கிராமப்புற கூட்டுறவு வங்கி செயலாளர்கள் இழப்பீட்டு தொகையை விவசாயிகளிடம் தெரிவிக்காமல் மானாமதுரை கூட்டுறவு வங்கிக்கு வரவழைத்தனராம்.

    தொடர்ந்து அவர்கள் மானாமதுரை அருகே உள்ள சூரக்குளம், கல்குறிச்சி உள்ளிட்ட கிராம மக்களை மானாமதுரை கூட்டுறவு வங்கிக்கு வரவழைத்து அலைக்கழித்தனராம். இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது, விவசாயிகளை வங்கிக்குள் அனுமதிக்காமல் வெளியே தள்ளி கதவை பூட்டிவிட்டனர். இதனால் பலரும் வங்கி வாசலில் காத்துகிடந்தனர். கொளுத்தும் வெயிலில் பலரும் வங்கியில் பணம் எடுக்க காலை எட்டு மணி முதல் மதியம் ஒரு மணி வரை காத்துகிடந்தனர்.

    மதியத்திற்கு மேல் விவசாயிகள் ஒவ்வொருவராக வரவழைத்து பணம் வழங்கினர். மேலும் கிராமப்புற கூட்டுறவு வங்கி செயலாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கினால் மட்டுமே இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று கூறுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இழப்பீட்டு தொகையை முழுமையாக கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம் என்றனர். #tamilnews
    ×