என் மலர்
சிவகங்கை
சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் மூலம் ஆப்டிகல் பைபர் கேபிள் மூலம் அதிக வேகம் கொண்ட இன்டர் நெட் சேவை தொடங்கப்பட்டுள்ளது. சிவகங்கையில் உள்ள தொலைபேசி நிலையத்தில் இந்த சேவையை முதன்மை பொதுமேலாளர் ராஜம் தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மாவட்டத்தில் இதுவரை காப்பர் கம்பிகளின் மூலம் இன்டர்நெட் வசதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஆப்டிகல் பைபர் கேபிள் மூலம் அதிக வேகம் கொண்ட இன்டர் நெட் இணைப்பு வழங்கப்படுகிறது. தனியார் கேபிள் ஆபரேட்டர் மூலம் இந்த இணைப்புகள் வீடுகளுக்கு வழங்கப்படும்.
இதன் மூலம் தொலைபேசி, டி.வி., கம்ப்யூட்டர் ஆகியவைகளுக்கு இணைப்பு பெறலாம். இந்த சேவையை பெற விரும்புபவர்கள் சிவகங்கையில் உள்ள தொலைபேசி நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் இந்த திட்டத்தில் அதிவேக இணைப்பு பெறுபவர்களுக்கு ஒரு ஆண்டிற்கான வாடகையை மொத்தமாக செலுத்தும் போது 10 மாத வாடகையை செலுத்தினால் போதும். 2 மாத வாடகை தள்ளுபடியாகும். இந்த இணைப்பு கேட்பவர்களுக்கு அமைப்பு கட்டணம் கிடையாது. இந்த சேவையை எத்தனை பேர் பெற்றாலும், அனைவருக்கும் இணைப்பின் வேகம் குறையாமல் கிடைக்கும்.
தற்போது வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்கள் உறவினர்களுடன் பேச வாட்ஸ்-அப் அல்லது ஐ.எம்.ஓ. என்ற இணைப்பை பயன்படுத்தி பேசுகின்றனர். சவுதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளில் வாட்ஸ்-ஆப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் தடை உள்ள நாடுகளில் இருந்து பேச முடியாமல் அவதிப்படுபவர்களுக்கு உதவிட பி.எஸ்.என்.எல். நிறுவனம் விங்ஸ் வாய்ஸ் கால் என்ற ஒரு செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலியை ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த செயலியை பயன்படுத்த வருடத்திற்கு ரூ.1099 கட்டணமாக செலுத்த வேண்டும். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த செயலி மூலம் வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் எளிதாக பேசலாம். மாவட்டத்தில் வசிக்கும் ஏராளமானவர்கள் வெளிநாடுகளில் வேலையில் உள்ளனர். அவர்கள் குறைந்த கட்டணத்தில் உறவினர்களுடன் பேச இந்த செயலி மிக பயனுள்ளதாக இருக்கும். இதில் சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள தொலைபேசி நிலையங்களில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் துணை பொது மேலாளர் ராஜேந்திரன், கோட்டபொறியாளர் யுவராஜ், உதவி பொது மேலாளர் பாண்டியன், துனை கோட்ட பொறியாளர் சரஸ்வதி ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை முதன்மை பொது மேலாளர் தொடங்கி வைத்தார்.
மானாமதுரை ரெயில் நிலையத்தில் பெண்கள் பாதுகாப்பிற்காக காவலன் எஸ்.ஓ.எஸ். என்ற செயலி குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. மகளிர் தினத்தையொட்டி நடந்த முகாமிற்கு ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் நாச்சி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறும் போது, ஸ்மார்ட் போனில் பெண்கள் காவலன் எஸ்.ஓ.எஸ். என்ற புதிய செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
ரெயிலில் பயணம் செய்யும் போதும், ரெயில் நிலையத்தில் நிற்கும் போதும் பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகள், இடையூறு குறித்து பதிவு செய்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும், இந்த செயலி மூலம் வரும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம், எனவே பெண்கள் பயமின்றி ரெயிலில் பயணம் செய்யலாம் என்றார்.
காரைக்குடி அருகே உள்ள பாரத் சி.பி.எஸ்.சி. பள்ளியில் மகளிர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் காளிச்சரண் தலைமை தாங்கி பேசினார். அதில் பெண்கள் எதிர்காலத்தில் தேச தலைவர்களாகவும் எல்லா துறைகளிலும் சாதிக்க வல்லவர்களாகவும் இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் உலக மகளிர் தின விழா குறித்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின்னர் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் அனில்குமார், பாலா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இளையான்குடி டாக்டர் சாகீர்உசேன் கல்லூரியில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ஜீபா வரவேற்றார். கல்லூரி செயலர் ஜபருல்லாகான், தமிழ்துறைத்தலைவர் இபுராஹிம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் அனிஷ்பர்வீன் அறிமுக உரை நிகழ்த்தினார். இதில் சிறப்பு விருந்தினராக அருப்புக்கோட்டை ஜெயவிலாஸ் சுப்புராஜ் மில்ஸ் நிர்வாக இயக்குனர் உமாதேவி மாணவிகளிடம் கலந்துரையாடினார்.
பின்பு நெருப்பில்லா சமையல் எனும் தலைப்பில் மாணவிகள் தயாரித்த ஆரோக்கிய உணவுகளை தேர்வு செய்தார். மாணவிகளுக்கு பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் கல்லூரி ஆட்சி மன்றக்குழு பொருளாளர் அப்துல்அஹத், உறுப்பினர்கள் ஜப்பார்அலி, அபுபக்கர்சித்திக், பள்ளி துணை முதல்வர் ஜஹாங்கீர் சுயநிதிபாடப்பிரிவு இயக்குனர் பினுல்லாகான் உள்பட அலுவலர்கள் விழாவில் கலந்துகொண்டனர். தாவரவியல் துறைத்தலைவர் அஸ்மத்து பாத்திமா தலைமையில் பெண் பேராசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். முடிவில் பொருளியல் உதவிப்பேராசிரியர் நர்கிஸ்பேகம் நன்றி கூறினார்.
சிவகங்கையில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ராமச்சந்திரனார் பூங்கா அருகில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் லதா தலைமை தாங்கினார். பி.ஆர்.செந்தில்நாதன் எம்.பி. முன்னிலை வகித்தார். தமிழக கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். புகைப்பட கண்காட்சியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், முக்கிய நிகழ்வுகள் குறித்த புகைப்படங்கள், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் ஆகியவை இடம் பெற்று இருந்தது.
இதை தொடர்ந்து அதி நவீன மின்னணு விளம்பர வாகனத்தில் திரையிடப்பட்ட முதல்-அமைச்சரின் சாதனை விளக்க செய்தி மலரை அமைச்சர் பாஸ்கரன், செந்தில்நாதன் எம்.பி. மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். இதில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, சிவகங்கை தாசில்தார் ராஜா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கருப்பணராஜவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தேவகோட்டை தாலுகாவை சேர்ந்த சிறுவத்தி, விஜயாபுரம், பரையநேந்தல், ஒரசூர், கற்களத்தூர், விருசூர், நாகமத்தி, கல்லங்குடி ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களுக்கு அரசு அறிவித்த பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று தேவகோட்டை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது காப்பீட்டு தொகை எப்போது வழங்கப்படும் என்பது குறித்து விளக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சங்கர், ராஜேந்திரன், மாணிக்கம், கண்ணன், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை நகர் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நகர் செயலாளர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. இளைஞரணி செயலாளர் ஜெயச்சந்திரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது:- முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பின்பு ஜெயலலிதா தான் தமிழகத்தை சிறப்பாக வழி நடத்தினார். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. இந்த தொகுதியில் பலமுறை எம்.பி.யாக இருந்த ப.சிதம்பரம் தொகுதிக்கு என்ன செய்தார். ஏதாவது திட்டங்களை கொண்டு வந்துள்ளாரா. சாமானிய மக்களால் அவரை சந்திக்க தான் முடியுமா.
இன்று (புதன்கிழமை) கிராமம் கிராமமாக சென்று மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறோம். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முருகானந்தம், சந்திரன், எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் கருணாகரன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கோபி, மாணவரணி செயலாளர் என்.எம்.ராஜா, மருத்துவ அணி செயலாளர் கோட்டையன், முன்னாள் தலைவர் மானாகுடி சந்திரன், மகளிரணி பொருளாளர் கயல்விழி, எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் எறும்பகுடி ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முத்துபாண்டி நன்றி கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தேவகோட்டை பகுதிக்கு கடல் அட்டைகள் கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தேவகோட்டை போலீஸ் ஏட்டுகள் ராமச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, இளங்கோ, நடராஜன் மற்றும் போலீசார் தேவகோட்டை அருகே உள்ள மூப்பையூர் ரோட்டில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இன்று காலை அந்த வழியாக வந்த மினி லாரியை போலீசார் மறித்து விசாரணை நடத்தினர். அப்போது அதில் இருந்த 5 பேர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மினிலாரியை சோதனை செய்தனர்.
அதில் தடை செய்யப்பட்ட கடல் அட்டை, கடல் பல்லிகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.70 லட்சம் ஆகும். இதையடுத்து போலீசார் அதனையும், மினி லாரியையும் பறிமுதல் செய்தனர்.
கடல் அட்டைகளை கடத்தி வந்த திருவாடானை அஞ்சுக்கோட்டை செங்கலான்வயலைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது43), தொண்டியைச் சேர்ந்த விக்னேஷ் (23), திருவாடானை தம்பிக்கோட்டை சிவா (27), எஸ்.பி.பட்டினம் அருகே உள்ள பாசிபட்டணத்தைச் சேர்ந்த காளீஸ்வரன் மற்றும் தேவகோட்டை வாடிநன்னீயூரைச் சேர்ந்த வேடப்பன் (60) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொண்டி கொடிபங்கு கிராமத்தைச் சேர்ந்த காசி என்பவரை தேடி வருகின்றனர்.
இளையான்குடியை அடுத்த பூச்சியேந்தல் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் தனபாபு (வயது 35). இவர் திருவேங்கடம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று விடுமுறை தினம் என்பதால் அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாலா (27) என்பவருடன் ஒரு மோட்டார்சைக்கிளில் காளையார்கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
இளையான்குடி-காளையார்கோவில் நெடுஞ்சாலையில் மாதவநகர் அருகே எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. அப்போது 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராத நிலையில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அதில் தனபாபு தலையில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே பலியானார். பாலா பலத்த காயத்துடன் இளையான்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் மோதிய மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர் காயமின்றி அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து இளையான்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் சவுமிய நாராயண பெருமாள் ஆலயம் உள்ளது. புகழ் பெற்ற இந்த ஆலயத்தில் கடந்த 19-ந் தேதி மாசி மகத்தெப்பத்திரு விழா நடந்தது.
அதன் பின்னர் தினமும் தெப்பத்தில் பெண்கள் விளக்கேற்றி வழிபட்டு வருகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து விளக்கேற்றுகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் உடல், தெப்பக்குளத்தில் மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து திருக்கோஷ்டியூர் கிராம நிர்வாக அலுவலர் வசந்தகுமாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து பார்வையிட்டார். இது தொடர்பாக திருக்கோஷ்டியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
திருப்பத்தூர் துணை சூப்பிரண்டு அண்ணாத்துரை, திருக்கோஷ்டியூர் இன்ஸ்பெக்டர் மலையரசி மற்றும் போலீசார் பெண் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக மிதந்த பெண் யார்? அவவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கையில் கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டு விட்டது. த.மா.கா ஒத்தக் கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும். மேலும் மக்கள் மற்றும் நிர்வாகிகளின் கருத்துகள் கேட்கப்பட்டு இன்னும் 2 நாட்களில் கூட்டணி குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.
த.மா.கா பலம் பெற வேண்டும். நாடு வலிமையடைய வேண்டும், மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து தான் கூட்டணி அமைக்கப்படும்.
நம்முடைய நாட்டை பாதுகாக்கும் வீரர்களை கோழைத்தனமாக தாக்குதல் நடத்தி கொலை செய்தது பயங்கரவாதத்தின் உச்சக்கட்டம். இதற்கு அனைத்து நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இது அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிரான மன நிலையில் உள்ளதை காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #GKVasan






