என் மலர்
சிவகங்கை
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சிவகங்கையில் உள்ள அரண்மனை வாசலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு, காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது:
இந்த சிவகங்கை தொகுதியில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடவிருக்கும் கார்த்தி சிதம்பரத்திற்கு வாரிசு அடிப்படையில் வாய்ப்பளிக்கப்படவில்லை, தகுதி அடிப்படையில் தான் தேர்வு செய்யப்பட்டார்.

இதன் காரணமாகவே காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தியிருக்கக்கூடிய கார்த்திக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கூறுகிறேன். பெரியார், அறிஞர் அண்ணா, மற்றும் திராவிட இயக்கத்தினை மிகவும் கொச்சைப்படுத்தி பேசுகிற ராஜாவை விடுத்து, நீங்கள் அனைவரும் கார்த்திக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
பிரதமர் மோடியின் இந்த ஆட்சியில், பாஜக கார்பரேட் நிறுவனங்களுக்கு வழங்காத சலுகைகளே இல்லை. எனவே பாரதீய ஜனதா என அழைக்காமல் கார்ப்பரேட் ஜனதா என்றே கூறுங்கள். வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்டு இந்திய மக்களின் பேரில் வங்கிகளில் வைப்புத் தொகையாக ரூ.15 லட்சம் போடுவேன் என கூறினார். யாருக்கேனும் போட்டுள்ளாரா? அப்படி போட்டிருந்தால் சொல்லுங்கள் நான் மன்னிப்பு கேட்கிறேன்.
பிரதமர் மோடி வாக்குறுதிகளை வாரி வாரி வழங்குவார். ஆனால் செயல் ஒன்றும் இருக்காது. பாஜகவிற்கு எதிராக யாரும் பேசினால் தேச துரோகி என கூறுகிறார்களே ,இது முறையா? 5 ஆண்டுகளுக்கு முன் மதச்சார்பற்ற இந்தியா உருவாகும் என கூறினார்களே, அப்படி செய்தார்களா? நாற்காலி தான் இவர்களது நோக்கம்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார். #MKStalin #DMK #LoksabhaElections2019
காரைக்குடி:
சிவகங்கை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
நீண்ட இழுபறிக்கு பின்னர் இந்த அறிவிப்பு வெளியானது. கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்.பி.யுமான சுதர்சன நாச்சியப்பன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
நிருபர்களிடம் அவர் கூறும்போது, நான் தமிழக காங்கிரஸ் தலைவராக வருவதை ப.சிதம்பரம் தடுத்து நிறுத்திவிட்டார். மேலும் கட்சியிலும் பொறுப்புகள் கிடைக்க விடாமல் செய்தார். மொத்தத்தில் எனது வளர்ச்சியை தடுத்து விட்டர்.
ப.சிதம்பரம் குடும்பத்தை மக்கள் வெறுக்கின்றனர். கோர்ட்டுக்கு போக வேண்டியவர் வேட்புமனு தாக்கல் செய்ய வருகிறார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பு ஏற்படப் போவது உண்மை என்றார்.
இந்த நிலையில் காரைக்குடியில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் தேர்தல் அலுவலகத்துக்கு சுதர்சன நாச்சியப்பன் திடீரென வந்தார். அவரை சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.ஆர்.ராமசாமி வரவேற்றார்.
சுதர்சன நாச்சியப்பன் கட்சி அலுவலகத்துக்கு வந்தது குறித்து புதுவயலில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த கார்த்தி சிதம்பரத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் காரைக்குடி தேர்தல் அலுவலகத்துக்கு வந்து சுதர்சனநாச்சியப்பனை சந்தித்தார்.
அதன்பின்னர் சுதர்சன நாச்சியப்பன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சியின் கூட்டம் இங்கு நடைபெறுகிறது என்பதை அறிந்து ஒரு தொண்டனாகவே இங்கு வந்தேன். காங்கிரசுக்கு எதிராக தீய சக்திகள் வதந்திகளை பரப்பி வருகின்றனர். அதனை மக்கள் நம்ப வேண்டாம். கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற அவரோடு இணைந்து பணியாற்றுவேன். சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும்.
மேற்கண்டவாறு அவர் கூறினார். #karthichidambaram #congress #sudharsananatchiappan
தேவகோட்டை:
தேவகோட்டை நகராட்சி அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் சேவுகன். இவரது உறவினர் பிரபு (வயது 26). நேற்று இரவு நடராஜபுரம் பகுதியில் நின்றபோது 10 பேர் கும்பலால் பிரபு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பான தகவல் கிடைத்ததும் தேவகோட்டை போலீஸ் உதவி சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.
இதில் பா.னதா முன்னாள் நகரச் செயலாளர் ஜெயராமன் தரப்புக்கும், சேவுகன் தரப்புக்கும் முன் விரோதம் இருந்ததும், இதில் ஏற்பட்ட மோதலில் தான் கொலை நடந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
கொலை செய்யப்பட்ட பிரபு வெளிநாட்டில் இருந்து 10 நாட்களுக்கு முன்பு தான் ஊருக்கு வந்தார். நாளை மறுநாள் வெளிநாடு செல்ல இருந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை தொடர்பாக பிரபுவின் தாயார் பாண்டியம்மாள் (50) போலீசில் புகார் கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கொலை தொடர்பாக ஜெயராமன் (48), அவரது மனைவி பிரேமா (39), மகன்கள் பிரவீன் (27), பிரகாஷ் (25) மற்றும் காரையார் கோட்டையைச் சேர்ந்த முத்துக்குமார் (28), அவரது சகோதரர் முருகானந்தம் (27), நடராஜபுரம் பாபு (30), செந்தில் (29), அருணகிரி பட்டினம் சந்தோஷ் (31), முத்துச்சாமி (32) ஆகிய 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் பிரகாஷ் தவிர மற்ற 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான பிரகாசை போலீசார் தேடி வருகின்றனர்.
பாராளுமன்ற தேர்தலுடன் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக இலக்கியதாசன் போட்டியிடுகிறார். எம்.ஏ., பி.எச்.டி. முடித்துள்ள இவர் இதுவரை செல்போன் பயன்படுத்தியதில்லை. குடும்பத்தில் உள்ளவர்கள் மூலமாகத்தான் அவரை தொடர்புகொள்ள முடியும். வெளியில் எங்காவது சென்றால் மனைவியிடம் கூறிவிட்டு செல்வார்.
தேர்தலில் போட்டியிடுவதால் தற்போது செல்போன் வாங்கியுள்ளார். எளிமையான தோற்றம், இயல்பான பேச்சு, பழக்க வழக்கம் கொண்ட இவர் தற்போது தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். #DMK #IlakiyaDasan
பாராளுமன்ற தேர்தலையொட்டி மாவட்டம் முழுவதும் வாகன சோதனை நடந்து வருகிறது. இந்நிலையில் திருப்புவனத்தை அடுத்த திருபாச்சேத்தி நான்கு வழிச்சாலை சுங்கச்சாவடி அருகே பறக்கும் படை தாசில்தார் செந்தில்வேல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரபாரதி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராமேசுவரத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணம் இல்லாமல் அந்த காரில் ரூ.85ஆயிரம் கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த காரில் சென்றவர், ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவருக்கு படகு உபகரண பொருட்கள் வாங்க சென்றதாக தெரிவித்தார்.
திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் விதிமுறைகள் மற்றும் வாக்குப்பதிவு எந்திரத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் விதிமுறைகள் குறித்தும் வாக்குப்பதிவு எந்திரங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுவது என்பது குறித்த விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியினை தேர்தல் குறித்த விளக்க விரிவுரையாளர் தாசில்தார் கந்தசாமி பேசினார்.
தேர்தல் விதிமுறைக்கான கையேடு கொண்டு தேர்தல் பணி அலுவலர்கள் எவ்வாறு பணிகளை மேற்கொள்ள வேண்டும். வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர் மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தார். இதில் பஞ்சவர்ணம், தங்கமணி, சுப்பிரமணியன், தனலெட்சுமி, முருகேஸ்வரி உள்ளிட்ட 26 மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டு பயிற்சி எடுத்துக் கொண்டனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் குடும்ப பெண்களை ஒரு கும்பல் காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்த விவகாரம் தமிழகத்தில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளுக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பொள்ளாச்சியில் நடைபெற்ற இந்த சம்பவத்தை கண்டித்தும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு அதிக தண்டனை வழங்கக்கோரியும் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைகல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுசெயலாளர் சங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீதும், இதன் பின்னணியில் உள்ளவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தொழில் நுட்ப வளர்ச்சியை தவறாக கையாள்வதால், இளம்பெண்கள் மற்றும் மாணவிகள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
இந்த சம்பவம் தமிழகத்திற்கு மிகப்பெரிய தலை குனிவை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சமூகத்தில் இது போன்ற இழிசெயல்கள் இனிமேலும் நடைபெறாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் அதிகபட்சமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் சம்பவம் மிகவும் கொடூரமானது. ஆசிரியர்கள் மத்தியில் இந்த சம்பவம் பெருங்கோபத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் சுமூக உறவு நிலவும் வகையில் சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவதுடன், கல்வி முறைகளிலும் மாற்றம் கொண்டு வரவேண்டும்.
குறிப்பாக கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கும் வகையில் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். மேலும் இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட அனைவரையும் எவ்வித பாரபட்சம் இல்லாமல் அவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறினார்.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் மற்றும் மானா மதுரை சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது.
தேர்தல் நன்னடத்தை விதி நடைமுறைக்கு வந்த 24 மணி நேரத்தில் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மற்றும் மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், 12 பறக்கும் படை குழுவும், 12 நிலையான கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த குழுவானது வாகன தணிக்கை மேற்கொள்ளும். தேர்தல் ஆணைய அறிவுரைப்படி வாகனங்களில் செல்பவர்கள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் வைத்திருந்தால் அதற்குரிய ஆவணங்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும்.
மேலும் தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க தேர்தல் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு 1950 கட்டணமில்லா தொலைபேசி சேவை 24 மணி நேரமும் இயங்கும். இதுமட்டுமன்றி மாவட்டத்தில் 10 இடங்களில் சோதனைச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகளையும் காவல்துறை மேற்கொண்டு வருகிறது.
அதேபோல் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தேர்தல் நன்னடத்தை விதிமுறை முடியும் வரை காவல் நிலையத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடி என 122 மையங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குப் பதிவு மையங்களுக்கு மைக்ரோ அப்சர்வர் தலைமையில் மத்திய காவல் பிரிவு பணிகளை மேற்கொள்வார்கள்.
தேர்தல் குறித்த சுவர் விளம்பரங்களை பொறுத்தவரை நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளுக்கு அனுமதி கிடையாது. ஊராட்சிப் பகுதிகளில் விளம்பர செய்யக்கூடிய இடத்திற்கு இடத்தின் உரிமையாளர் அனுமதி பெற்று அனுமதிச் சான்றின் நகலை அலுவலகத்தில் காண்பித்து அனுமதி பெற்ற பின்னர் தேர்தல் குறித்த சுவர் விளம்பரங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தேர்தல் பணிக்காக 6300 பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுகிறார்கள். மேலும் பணியாளர் தேவைப்பட்டால் கூடுதலாக நியமிக்க பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
பாராளுமன்றத் தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை 22 ஆயிரம் புதிய வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமபிரதீபன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






