என் மலர்
சிவகங்கை
நெற்குப்பை:
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் செம்மொழி பூங்கா உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். காலை, மாலை வேளைகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடை பயிற்சியும் செல்வார்கள். பெரும்பாலான மக்களின் பொழுது போக்கு அம்சமாக உள்ள இந்த பூங்காவில் மழைநீர் சேகரிப்பு தொட்டியும் உள்ளது.
இந்த தொட்டியில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் நிரம்பி இருப்பது, பூங்காவுக்கு வருபவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.
அண்ணா சாலையில் தற்காலிகமாக செயல்படும் பஸ் நிலையம் வளாகத்தில் அமைந்துள்ள பொது கழிப்பிடத்தின் கழிவுநீர், பூங்காவுக்குள் திருப்பி விடப்பட்டிருப்பது தான் இந்த அவலத்திற்கு காரணம்.
சிறுவர் முதல் பெரியவர் வரை வந்து செல்லும் பூங்காவில் கழிவுநீர் வருவதால் பலருக்கும் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் கரியமாணிக்கம் பெருமாள் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். வயல்வெளி பகுதியையொட்டி உள்ள இந்த கோவிலில் உரிய பாதுகாப்பு வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந் தேதி நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கருவறை கதவை உடைத்தனர்.
பின்னர் அங்கிருந்த ஐம்பொன்னாலான பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவி சிலைகளை திருடிக் கொண்டு தப்பினர். சிலைகளின் மதிப்பு பல லட்சம் ரூபாய் ஆகும்.
இதுகுறித்து கோவில் அர்ச்சகர் சீனிவாசன் கொடுத்த புகாரின்பேரில் மானாமதுரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை கோவிலை திறக்க அர்ச்சகர் சீனிவாசன் வந்தார். அப்போது கோவில் வாசல் முன்பு திருட்டுபோன 3 ஐம்பொன் சிலைகள் கிடந்தன.
அதிர்ச்சி அடைந்த அர்ச்சகர் உடனே போலீசாருக்கும், அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிலைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
திருடியவர்கள் போலீசில் சிக்கிக்கொள்வோம் என்ற பயத்தில் சிலைகளை வீசி விட்டுச் சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இருப்பினும் சிலைகளை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுதொடர்பாக அர்ச்சகர் சீனிவாசன் கூறுகையில், திருட்டுபோன சிலைகள் மீண்டும் கோவிலுக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆகம விதிப்படி பூஜைகள், பரிகாரம் செய்து கோவிலுக்குள் வைக்கப்படும் என்றார்.
திருட்டு சம்பவம் நடந்த பின்னரும் கோவிலில் இதுவரை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமல் உள்ளது. கோவிலின் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும், கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும் என இந்து சமய அற நிலையத்துறைக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ‘வேலைவாய்ப்பு வெள்ளி” என்ற தலைப்பின் கீழ் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இதில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். வேலைநாடுநர்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பினைப் பெறலாம். அதன் அடிப்படையில் 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் முகாம் நடைபெறவுள்ளது.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை . (ஐ.டி.ஐ, டிப்ளமோ உள்பட).
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவர்களுக்கும், பதிவினை தொடர்ந்து புதுப்பித்து வருபவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் கல்விச் சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் முகாமில் கலந்து கொள்ளலாம்.
முகாமில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவுமூப்பு ரத்து செய்யப்படமாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிவகங்கை ஊராட்சி ஒன்றிய பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் கட்டப்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழா அமைச்சர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.
தமறாக்கி தெற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.14.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடத்தையும், பில்லூர் ஊராட்சியில் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையும், பொன்னாங்குளம் ஊராட்சியில் ரூ.4.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையும், காஞ்சிராங்கால் ஊராட்சி, டி.புதூர் கிராமத்தில் ரூ.4.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நாடக மேடை கட்டிடத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்.
காஞ்சிரங்கால் ஊராட்சி, இலந்தங்குடிபட்டி கிராமத்தில் ரூ.8.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தையும், மேலப்பூங்குடி ஊராட்சி, வில்லிப்பட்டி கிராமத்தில் ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தையும், மலம்பட்டி ஊராட்சி, கன்னிமார்பட்டி கிராமத்தில் ரூ.8.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக் கட்டிடத்தையும் என மொத்தம் ரூ.52.80 லட்சம் மதிப்பீட்டிலான புதிய கட்டிடங்களை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார். விழாவில் அமைச்சர் பேசிய தாவது:-
வறுமையிலுள்ளவர்கள் குடும்பம் முன்னேற்றம் பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு ஜெயலலிதா திட்டங்களை செயல் படுத்தினார்.
அவர் மறைந்தாலும் அவரின் திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவே அம்மா கண்ட கனவு முழுமையாக நிறைவேறும் என்பதேயாகும். அந்த வகையில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் கடைக்கோடி கிராமப் பகுதிகளிலும் அரசு திட்டங்கள் முழுமையாக சென்றடையும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று சிவகங்கை ஊராட்சி ஒன்றியப்பகுதியில் மக்களின் அடிப்படைத் தேவைகள் முழுமையாக நிறைவேறும்விதமாக முடிக்கப்பட்ட திட்டப் பணிகளை செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பொதுமக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் துறைரீதியாக உரியநடவடிக்கை எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், மாவட்டத்தில் அனைத்துப்பகுதிகளிலும் அரசின் திட்டங்கள் முழுமையாக பெற்றுத் தன்னிறைவு பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், மாவட்ட சமூகநல அலுவலர் வசந்தா, வட்டார வளர்ச்சி அலுவலர் ரஜினிதேவி, சிவகங்கை வட்டாட்சியர் கண்ணன், உதவிப் பொறியாளர் ராஜா, சிவகங்கை மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் சந்திரன், கூட்டுறவு வங்கி இயக்குநtர்கள் கருணாகரன், சசிக்குமார், அய்யனார், பாண்டி, பலராமன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் மாநில அளவில் எவ்வித ஜல்லிக்கட்டுகளும் நடைபெற அனுமதிக்கக்கூடாது எனவும், அதை மீறி நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள் ளது. எனவே சிவகங்கை மாவட்டத்தில் கடந்த மே மாதம் 31-ந்தேதிக்கு பின்னர் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு, வடமாடு, எருதுவிடும் விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு அனுமதி கிடையாது. இதையும் சிலர் மீறி தங்கள் பகுதியில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.
எனவே அனுமதியின்றி ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்துபவர்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். எனவே மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தேவகோட்டை:
தேவகோட்டை அருகே உள்ள கள்ளிக்குடியைச் சேர்ந்தவர் குப்புசாமி (வயது 65). இவர் மோயன்வயல் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். தினமும் காலையில் பால் வியாபாரத்திற்காக தேவகோட்டைக்கு குப்புச்சாமி மொபட்டில் செல்வது வழக்கம்.
இன்று அதிகாலை வழக்கம் போல் குப்புச்சாமி மொபட்டில் தேவகோட்டைக்கு புறப்பட்டார். பாவனாக்கோட்டை பகுதியில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் குப்புசாமியை வழிமறித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர் அணிந்திருந்த 5¼ பவுன் செயின் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு தப்பினர்.
கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த குப்புசாமி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக வேலாயுத பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி செல்லதுரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. அப்போது ஜங்சன் அருகே திடீரென 40 வயது மதிக்கத்தக்க பெண் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் அவர் மீது மோதியது. இதில் உடல் சிதறி அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவலறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து போலீசார் இறந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது விபத்தா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் காரைக்குடி அருகே உள்ள தேவகோட்டை ரஸ்தா ரெயில் நிலைய தண்டவாள பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இன்று காலை அந்த வழியாக வந்தவர்கள் முதியவர் பிணம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றினர். இறந்தவர் யார்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது விபத்தா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, திருப்பத்தூர் ரோட்டில் தனியார் பள்ளி உள்ளது. இதன் அருகே பல்பொருள் அங்காடி உள்ளது.
நேற்று இரவு வழக்கம் போல் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டுச் சென்று விட்டனர். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் கல்லாவில் இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடினர்.
தொடர்ந்து அந்த கும்பல் அருகில் உள்ள மருந்து கடையிலும் கதவை உடைத்து அங்கிருந்த ரூ. 20 ஆயிரத்தை திருடிக் கொண்டு தப்பியது.
இன்று காலை கடை திறக்க வந்த ஊழியர்கள் கதவு உடைக்கப்பட்டு பணம், பொருட்கள் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த புகாரின் பேரில் தேவகோட்டை டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி செல்லதுரை வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.
அடுத்தடுத்து 2 இடங்களில் நடந்த கொள்ளை சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ‘வேலைவாய்ப்பு வெள்ளி’ என்ற தலைப்பின் கீழ் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இந்த முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். வேலைநாடுநர்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பினைப் பெறலாம்.
அதன் அடிப்படையில் வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை (ஐ.டி.ஐ. டிப்ளமோ உள்பட)
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவர்களுக்கும், பதிவினை தொடர்ந்து புதுப்பித்து வருபவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் கல்விச் சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.
இம்முகாமில் பணி வாய்ப்பு பெறுவோருக்கு பதிவுமூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2 மற்றும் 3-ம் ஆண்டு படிக்கும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கக் கோரி நேற்று காலை திடீரென வகுப்புகளை புறக்கணித்துவிட்டு கல்லூரி வளாகத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மடிக்கணினி வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர். தகவல் அறிந்ததும் காரைக்குடி தாசில்தார் பாலாஜி, காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அருண், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் ஆகியோர் கல்லூரிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாணவர்கள் தங்களது கோரிக்கையை எழுத்து மூலம் எழுதிக் கொடுத்தால் அதை அரசுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் பாலாஜி உறுதியளித்தார். அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலான மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கல்லூரியில் இருந்து வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.
இதேபோல் காரைக்குடி அருகே உள்ள செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் 2 மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும் என்று கூறி கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு சென்ற செட்டிநாடு போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.






