search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில் முன்பு கிடந்த ஐம்பொன் சிலைகள்.
    X
    கோவில் முன்பு கிடந்த ஐம்பொன் சிலைகள்.

    மானாமதுரை அருகே திருட்டுப்போன ஐம்பொன் சிலைகளை கோவில் முன்பு வீசிச்சென்ற கொள்ளையர்கள்

    மானாமதுரை அருகே கடந்த மாதம் திருட்டு போன ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் கோவில் முன்பு வீசி விட்டுச்சென்றுள்ளனர்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் கரியமாணிக்கம் பெருமாள் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் விசே‌ஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். வயல்வெளி பகுதியையொட்டி உள்ள இந்த கோவிலில் உரிய பாதுகாப்பு வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை.

    இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந் தேதி நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கருவறை கதவை உடைத்தனர்.

    பின்னர் அங்கிருந்த ஐம்பொன்னாலான பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவி சிலைகளை திருடிக் கொண்டு தப்பினர். சிலைகளின் மதிப்பு பல லட்சம் ரூபாய் ஆகும்.

    இதுகுறித்து கோவில் அர்ச்சகர் சீனிவாசன் கொடுத்த புகாரின்பேரில் மானாமதுரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை கோவிலை திறக்க அர்ச்சகர் சீனிவாசன் வந்தார். அப்போது கோவில் வாசல் முன்பு திருட்டுபோன 3 ஐம்பொன் சிலைகள் கிடந்தன.

    அதிர்ச்சி அடைந்த அர்ச்சகர் உடனே போலீசாருக்கும், அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிலைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    திருடியவர்கள் போலீசில் சிக்கிக்கொள்வோம் என்ற பயத்தில் சிலைகளை வீசி விட்டுச் சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இருப்பினும் சிலைகளை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதுதொடர்பாக அர்ச்சகர் சீனிவாசன் கூறுகையில், திருட்டுபோன சிலைகள் மீண்டும் கோவிலுக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆகம விதிப்படி பூஜைகள், பரிகாரம் செய்து கோவிலுக்குள் வைக்கப்படும் என்றார்.

    திருட்டு சம்பவம் நடந்த பின்னரும் கோவிலில் இதுவரை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமல் உள்ளது. கோவிலின் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும், கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும் என இந்து சமய அற நிலையத்துறைக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×