search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupattur rain"

    திருப்பத்தூர் மாவட்டத்தில் இடைவிடாது கொட்டிய மழையால் வீடுகளில் சிக்கியவர்கள் படகு மூலம் மீட்கப்பட்டனர்.
    திருப்பத்தூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவரமடைந்து வருவதாலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், வாணியம்பாடி, ஆம்பூர் பகுதியில் நேற்று முன்தினம் முதல் நேற்று மதியம் வரை விடாது கனமழை கொட்டியது. இதனால் மழைநீர் ஊருக்குள் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ஏரி, கானாறுகளிலும் அளவுக்கு அதிகமான தண்ணீர் வந்ததால் மாவட்டம் முழுவதும் ஏராளமான குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    திருப்பத்தூர் நகரில் கடந்த 2 நாட்களாக விடாது கொட்டிய கனமழையால் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கு வளாகத்தில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது. இதேபோல் ஆசிரியர் நகர் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு குடியிருப்பு பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. நேற்று மதியம் வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    திருப்பத்தூர் தாலுகா கதிரம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் கர்ப்பிணிகள் உள்பட 300-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் அறை, நோயாளிகள் உட்கார வைக்கும் இடம், சிகிச்சை அளிக்கும் இடம் என அனைத்துப் பகுதிகளிலும் மேற்கூரையில் இருந்து தண்ணீர் கசிந்து முழங்கால் அளவு தேங்கியது.

    டாக்டர்‌ ஷர்மிளா நேற்று காலை நோயாளிகளை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென மேற்கூரை பூச்சு விழுந்தது. இதனால் நோயாளிகள் அலறி அடித்து வெளியே ஓடினார்கள்.

    தகவலறிந்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில், நேர்முக உதவியாளர் சங்கரன் நேரில் வந்து பார்வையிட்டனர். உடனே நோயாளிகளை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட்டதை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி ஜெயக்குமார் அருகில் இருந்த ஊராட்சி மன்ற கட்டிடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட மாற்றி கொடுத்தார்.

    ஆண்டியப்பனூர் அணை முழு கொள்ளளவான 124 அடியை எட்டியது. அணைக்கு வரும் உபரி நீர் அனைத்தும் மதகுகளில் திறந்துவிடப்படுகிறது. இதனால் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. திருப்பத்தூர் என்.ஜி.ஓ. நகரில் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வெளியே வர முடியாத நிலை இருந்தது. அவர்களை தீயணைப்பு துறையினர் ரப்பர் படகு மூலம் அழைத்து வந்தனர்.

    ஜோலார்பேட்டையை அடுத்த தாமலேரி முத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ஏரி நிரம்பி உபரிநீர் சாலை நகர் அருகில் திருப்பத்தூர் - வாணியம்பாடி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.

    திருப்பத்தூர் பெரிய ஏரி நிரம்பி உபரி நீர் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள என்.ஜி.ஓ. நகர், லட்சுமி நகர், தென்றல் நகர், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. பாதிக்கப்பட்டவர்களை தீயணைப்பு துறையினர் படகு மூலம் மீட்டு வெளியேற்றினர். 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் நேற்று வெள்ளம் சூழ்ந்து பாதிப்புக்குள்ளானது.

    ஜோலார்பேட்டை அருகே தாமலேரிமுத்தூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தாமலேரிமுத்தூர் ஏரி நிரம்பி பள்ளி கட்டிடத்தில் மழைநீர் புகுந்ததால் குளம் போல காட்சி அளித்தது.

    நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் பெய்துள்ள மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஆலங்காயம்- 134, வாணியம்பாடி- 126.20, திருப்பத்தூர்- 124.20, நாட்டறம்பள்ளி- 122.80, திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை- 113, ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை- 102.60, ஆம்பூர்- 85.70.
    ×