என் மலர்tooltip icon

    சிவகங்கை

    கீழடியில் ஆராய்ச்சி செய்யும்போது 3 கல் வரிசை கொண்ட தொழிற்கூட சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் மாதம் 13-ந் தேதி தொடங்கியது.

    இதுவரை முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு, நீதி ஆகியோரது நிலங்களில் 30-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில் மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்பு பொருட்கள், செப்பு காசுகள், உணவு குவளை, தண்ணீர் ஜக் உட்பட 600-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும் சுவர்கள், கால்வாய்கள், தண்ணீர் தொட்டி, உறைகிணறு இருப்பது கண்டறியப்பட்டது.

    இந்தநிலையில் போதகுரு நிலத்தில் ஏற்கனவே வட்டவடிவிலான ஒரு செங்கல்வரிசை சுவர் கண்டறியப்பட்டது. மீண்டும் ஆராய்ச்சி செய்யும்போது 3 கல் வரிசை கொண்ட தொழிற்கூட சுவர் போல் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சுவர் நீண்டு கொண்டே செல்வதால் இதன் தொடர்ச்சி அடுத்துள்ள நிலத்திலும் இருக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். 
    சிவகங்கை ரவுடி கொலையில் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் பனங்காடி கிராமத்தைச் சேர்ந்தவர் காளையப்பன். இவரது மகன் ராஜசேகர் (வயது 38). இவர் மீது சிவகங்கை, மதுரை போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, மிரட்டுதல் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    கடந்த 6-ந்தேதி சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக அஜரானார். பின்னர் அவர் ஊர் திரும்பியபோது அவரை சுற்றிவளைத்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது.

    இதில் படுகாயம் அடைந்த ராஜசேகர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. அப்துல் காதர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    இந்த நிலையில் ராஜசேகர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் மேலூர், காளையார்கோவில் அருகே உள்ள பையூர் பகுதிகளில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் மேலூர், பையூர் பகுதிகளில் தீவிர சோதனை நடத்தி 4 பேரை கைது செய்தனர்.

    கைதானவர்கள் திருப்புவனம் அருகே உள்ள கொத்தங்குளத்தைச் சேர்ந்த ஜெய்சிங் மகன் விக்கி (27), முருகன் மகன் மணி அருள்நாதன் (27), காளையார்கோவில் பகுதி யைச்சேர்ந்த சண்முகம் மகன் சரவணன் (35), பாலுச்சாமி மகன் தென்னரசு (24) ஆவார்கள்.

    இவர்கள் 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தொழில் போட்டி காரணமாக ராஜசேகர் கொலை செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    சிவகங்கை கலெக்டர் அலுவலகம் அருகே ஓட, ஓட விரட்டி வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 6 பேர் கும்பல் இந்த வெறிச்செயலை செய்தது.
    சிவகங்கை:

    சிவகங்கை அருகே உள்ள பனங்காடி கிராமத்தை சேர்ந்தவர் காளையப்பன். அவருடைய மகன் ராஜசேகரன் (வயது 35). இவர் மீது கடந்த 2013-ம் ஆண்டு பனங்காடி அருகே நடைபெற்ற இரட்டை கொலை வழக்கு, 2015-ம் ஆண்டு காரைக்குடியை அடுத்த சாக்கோட்டை அருகே பஸ்சில் தாய், மகனை வெட்டி கொலை செய்த வழக்கு, காளையார்கோவில் அருகே ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவரை கொலை செய்ய முயன்ற வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    சாக்கோட்டை அருகே பஸ்சில் தாய்-மகன் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை, சிவகங்கையில் உள்ள கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கு விசாரணைக்காக ராஜசேகரன் நேற்று கோர்ட்டில் ஆஜரானார். பின்னர் அவரும் நாட்டரசன்கோட்டையை சேர்ந்த மற்றொரு ராஜசேகரனும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டனர்.

    அவர்கள் 2 பேரும் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சற்று தொலைவில் சென்ற போது, 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்தது. இதை பார்த்த 2 பேரும் ரோட்டில் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு வெவ்வேறு திசைகளில் தப்பி ஓடினர்.

    இதில் பனங்காடி ராஜசேகரன் அங்குள்ள சுடுகாட்டு பகுதியில் ஓடினார். அவரை அந்த கும்பல் ஓட, ஓட விரட்டிச்சென்று, அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் கீழே விழுந்து உயிரிழந்தார். இதை தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

    சம்பவம் நடைபெற்ற பகுதி மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி ஆகும். கலெக்டர் அலுவலகம் மட்டுமின்றி, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், வங்கி, வாகன விற்பனை நிலையம் உள்ளிட்டவை அருகருகே உள்ளன. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல்கபூர், நகர் இன்ஸ்பெக்டர் மோகன், சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். ராஜசேகரன் உடலை பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பனங்காடி ராஜசேகரன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் அவர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். தப்பிச் சென்ற கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
    மதுரை ரெயில்வே கோட்டத்தில் இருந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் விரும்பிய உணவு கிடைக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென் மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மானாமதுரை:

    மதுரை ரெயில்வே கோட்டத்தில் இருந்து சென்னை மற்றும் வட மாநிலங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா வரையும் தினமும் ரெயில்கள் சென்று திரும்புகின்றன. இதில் மிக முக்கிய புண்ணியஸ்தலமாக கருதப்படும் ராமேசுவரம் ரெயில் நிலையம், பெருந்தலைவர் காமராஜரின் முயற்சியால் கொண்டு வந்த விருதுநகர்-மானாமதுரை ரெயில்பாதை என அனைத்தும் மதுரை ரெயில்வே கோட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ளது. தற்போது காரைக்குடி-திருவாரூர் ரெயில் பாதையிலும் எவ்வித ரெயில்களும் விடப்படாமல் பணிகள் முடிந்தும் பயனின்றி உள்ளது.

    தற்போது ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்ல மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்ல நள்ளிரவு ஆகி விடுகிறது. இதில் வரும் பயணிகளுக்கு உணவு கிடைக்க கேட்டரிங் வசதி இல்லாததால் உணவு கிடைக்காமல் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

    இதேபால் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு மதுரை வழியாகவும், மானாமதுரை வழியாகவும் ரெயில்கள் இயக்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு மேல் செங்கோட்டையில் இருந்து புறப்படும் ரெயில்களில் கேட்டரிங் இல்லாததால் முதியோர்கள், நோயாளிகள் இரவு உணவு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

    ரெயில் நிலைய பிளாட்பார கடைகளில் சென்று வாங்க வேண்டுமானால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 2 நிமிடம் அல்லது 5 நிமிடம் மட்டும் நிற்கிறது. உணவு வாங்க இறங்கிய பலர் ரெயில்களில் மீண்டும் ஏற முடியாமல் நடுவழியில் பயணத்தை தொடர முடியாமல் அவதிப்படுகின்றனர்.

    எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கேட்டரிங் விரும்பிய உணவு ஆர்டர் எடுப்பவர்கள் விருதுநகர், மதுரை, மானாமதுரை ரெயில் நிலையங்களில் ரெயிலில் சப்ளை செய்ய முடியும். தற்போது அந்த வசதி இல்லாததால் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிக்கும் பயணிகள் இரவு உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். ரெயில்களில் விரும்பிய உணவு கிடைக்க மதுரை ரெயில்வே கோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென் மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    காரைக்குடியில் மோட்டார் சைக்கிள் லாரியில் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    காரைக்குடி:

    காரைக்குடி தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் கவாஸ்கர் (வயது 32). டைல்ஸ் பதிக்கும் வேலை பார்த்து வந்தார். இவர் மோட்டார் சைக்கிளில் காரைக்குடியில் இருந்து கோவிலூருக்கு சென்று கொண்டிருந்தார். கோவிலூர் அருகே செல்லும்போது மாடு ஒன்று குறுக்கே வந்தது. இதில் நிலை தடுமாறிய அவர் அந்த வழியாக வந்த லாரியில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். 

    இது குறித்து குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பத்தூரில் சுமை தூக்கும் தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். பக்கத்து வீட்டு வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் கோபால் மகன் குமரேசன் (வயது 35). இவர் கடைகளுக்கு பலசரக்கு ஏற்றி செல்லும் லாரிகளில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஷீலா என்ற மனைவியும், 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர்.

    குமரேசனும், சக தொழிலாளி ஒருவரும் நேற்று மாலை வேலை முடிந்ததும் ஓரிடத்தில் அமர்ந்து கூலிப்பணத்தை பிரித்து கொண்டிருந்தனர். அப்போது குமரேசனின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் வேலுவின் மகன் சூர்யா (20) அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அவரை பார்த்த குமரேசன் இந்த வழியாக நீ ஏன் செல்கிறாய்? என கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த குமரேசன், சூர்யாவை கையால் அடித்துள்ளார்.

    நீ என்னையே அடித்து விட்டாயா? எனக் கேட்டு கடும் கோபமடைந்த சூர்யா நேராக வீட்டுக்கு ஓடிச்சென்று ஒரு கத்தியை எடுத்து வந்து குமரேசனை சரமாரியாக குத்தினார்.

    ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்த குமரேசனை அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமரேசன் பரிதாபமாக இறந்தார்.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக குமரேசனின் மனைவி ஷீலா திருப்பத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தப்பியோடிய வாலிபர் சூரியாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை குமரேசனின் உறவினர்கள் சேலம்- திருவண்ணாமலை கூட்ரோட்டில் மறியல் செய்தனர்.

    கொலையாளி சூர்யாவை கைது செய்ய வேண்டும் என கோ‌ஷம் எழுப்பினர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    விரைவில் கொலையாளியை கைது செய்வோம் என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    சிங்கம்புணரி அருகே விஷம் குடித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரி கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் பார்த்திபன் (வயது 30). பெயிண்டர் வேலை செய்து வந்த இவர் கடந்த 5 ஆண்டு முன்பு மண்டபம் முகாமில் உள்ள பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் மனைவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் வேலைக்கு சென்றவர், இதுவரை கணவரை தொடர்பு கொள்ளவில்லையாம். இதனால் மனமுடைந்து காணப்பட்டு வந்த பார்த்திபன், தன் மனைவி குறித்து அக்கம்பக்கத்தினருடன் பேசியபடியே இருப்பாராம்.

    விரக்தியடைந்த அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சிங்கம்புணரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    தேவகோட்டை காய்கறி மார்க்கெட்டில் தீ விபத்து ஏற்பட்டு 10 கடைகள் எரிந்து சேதமடைந்தன. லட்சக்கணக்கான பொருட்களும் தீக்கிரையானது.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பஸ் நிலையம் அருகில் நகராட்சிக்கு சொந்தமான தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்டோர் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். பெரும்பாலான கடைகள் கீற்று கொட்டகையில் அமைக்கப்பட்டுள்ளன.

    நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் மார்க்கெட்டில் உள்ள நாகராஜன் என்பவரின் காய்கறி கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கீற்று கொட்டகை என்பதால் தீ மளமளவென அருகில் உள்ள மற்ற கடைகளிலும் பரவியது.

    அப்போது அந்த வழியாக தேவகோட்டை டவுன் போலீசார் ரோந்து வந்தனர். மார்க்கெட்டில் தீ எரிவதை பார்த்த அவர்கள் உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 45 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் மார்க்கெட்டில் இருந்த காய்கறி, பேன்சி, இறைச்சி கடைகள் என 11 கடைகள் முற்றிலும் எரிந்து நாசமானது. கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையானது.

    தீ விபத்து சம்பவம் தொடர்பாக தேவகோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது சமூக விரோதிகள் யாரேனும் தீவைத்து சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்கம்புணரி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் தூய்மை கிராமம் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் தூய்மை கிராமம் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. 2019 ஆகஸ்டு 1 முதல் 31 வரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் முழு சுகாதார தமிழகம், முன்னோடி தமிழகம் என்ற ரீதியில் தூய்மை கிராமம் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இதில் மத்திய அரசு சார்பில் டில்லியில் இருந்து குழுவினருடன் சிங்கம்புணரி ஒன்றியத்திற்குட்பட்ட சிவபுரிப்பட்டியில் முத்துலெட்சுமி, எருமைப்பட்டியில் நல்லம்மாள், எஸ்.எஸ்.கோட்டையில் ராஜாத்தி மற்றும் அணைக்கரைப்பட்டியில் சாந்தி ஆகியோர் தலைமையில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ஊராட்சிகளில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடிகள், மருத்துவமனைகள், தபால் நிலையங்கள் மற்றும் கோவில்களில் உள்ள கழிப்பறை வசதிகளை பார்வையிட்டனர். மேலும் சுற்றுப்புற சுகாதாரம், கழிவுகளை அப்புறபடுத்துதல் போன்றவற்றை ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டனர். இதில் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரமகாலிங்கம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய பழத்தோன், வட்டார ஒருங்கிணைப்பாளர் துரைராஜ், சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோவில் கண்காணிப்பாளர் ஜெய்கணேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    முதல்-அமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம் நிகழ்ச்சி சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடந்தது. முகாமை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
    சிவகங்கை:

    முதல்-அமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம் நிகழ்ச்சி தொடக்க விழா சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடந்தது. நாகராஜன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் லதா வரவேற்றார். முகாமை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்து பேசியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் ஏற்கனவே குடிமராமத்துப் பணி திட்டத்தை தொடங்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

    இந்த திட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து கண்மாய், குளங்கள், ஊருணிகள்தூர்வாரி சீரமைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் பெரியாறு தண்ணீர் வந்தால் எந்த பாதிப்பும் இல்லாமல் செல்லும் வகையில் அனைத்து கால்வாய்களும் தூர் வராப்பட்டுள்ளன.

    தற்போது பொதுமக்களின் குறைகளை தீர்க்க வேண்டும் என்பதற்காக குறைதீர்க்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். மேலும் கிராமப்பகுதிகளில் ஒருவர் கூட விடுபடாத அளவிற்கு அரசின் நலத்திட்டங்களைப் பெற்று பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

    இங்கு பெறப்படும் மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சிவகங்கை நகராட்சியில் இன்றும் (செவ்வாய்க்கிழமை) மனுக்களை கொடுக்கலாம். அதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறப்பு முகாம்களை பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்தி தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து 10 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையினையும் அமைச்சர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் அருள்மணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமாரி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜா, சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி, தாசில்தார் கண்ணன், கூட்டுறவு வங்கி தலைவர் ஆனந்தன், நகராட்சி ஆணையாளர் அப்துல்கபூர், கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் கருணாகரன், சசிக்குமார், பாண்டி, பலராமன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    தேவகோட்டை அருகே குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி வெடி பொருட்கள் பதுக்கிய வியாபாரி கைது செய்யப்பட்டார்.

    தேவகோட்டை:

    தேவகோட்டை அருகே உள்ள மருதவயலைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (வயது 43). இவர் திருப்பத்தூர் சாலையில் பட்டாசு கடை நடத்தி வருகிறார்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆரோக்கியராஜ் ஏராளமான பட்டாசுகளை கொள்முதல் செய்துள்ளார். இவை கடையில் அடுக்கி வைக்கப்பட்டன.

    மேலும் பட்டாசு பாக்சுகள் வாங்கிய அவர், எம்.எம்.நகர் 2-வது வீதியில் ஒரு வீட்டில் அடுக்கி வைத்துள்ளார். குடியிருப்பு பகுதியில் பட்டாசு வைக்க கூடாது என வீதிகள் இருந்தும் அதனை மீறி ஆரோக்கியராஜ் வைத்துள்ளார்.

    நேற்று இரவு அவர் வெடி பொருட்கள் பதுக்கிய வீட்டிற்கு வந்தார். அப்போது அந்தப்பகுதி பெண்கள் திரண்டு வீட்டை முற்றுகையிட்டனர். இங்கு பட்டாசுகள் வைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் தேவகோட்டை நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மருதுபாண்டி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்லமுத்து ஆகியோர் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி பட்டாசுகளை வைத்திருந்ததாக ஆரோக்கியராஜ் கைது செய்யப்பட்டார். இவரது கடையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உரிமம் இன்றி நாட்டு வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு உரிமம் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    அதன் பின்னர் தற்போது உரிமம் பெற்ற நிலையில் குடியிருப்பு பகுதியில் பட்டாசுகள் பதுக்கியதாக ஆரோக்கியராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    காரைக்குடியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரைக்குடி:

    காரைக்குடி அழகப்பாபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி ஆசிகாபர்வீன் (வயது 20). இருவரும் கடந்த 1 மாதத்துக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நேற்று ஆனந்துக்கு பிறந்தநாள்.

    எனவே சாமியார் தோட்டத்தில் உள்ள அவரது சொந்த வீட்டுக்கு கணவனும், மனைவியும் சென்றனர். அப்போது ஆனந்த் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதனால் ஆசிகாபர்வீன் அவரை கண்டித்தார். இதைத் தொடர்ந்து கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் மனவேதனை அடைந்த ஆசிகாபர்வீன் ஆலங்குடியார் வீதியில் உள்ள வீட்டுக்கு வந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து காரைக்குடி தெற்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ஆசிகாபர்வீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காரைக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அருண் உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

    ஆசிகாபர்வீனுக்கு திருமணமாகி 1 மாதமே ஆவதால் அவருடைய சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.

    ×