என் மலர்
சிவகங்கை
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள அரசுடமை வங்கிக்குள் கடந்த புதன்கிழமை புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் அங்கு தங்கமணி என்பவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது.
இதை தடுக்க சென்ற அவரது நண்பர் கணேசன் என்பவரும் அரிவாளால் வெட்டப்பட்டார். அப்போது வங்கி காவலாளி செல்ல நேரு தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டார். இதில் அரிவாளுடன் வந்த தமிழ்செல்வம் என்பவரின் காலில் குண்டடிபட்டு கீழே விழுந்தார். மற்ற 3 பேர் தப்பியோடினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார், சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ரோகித்நாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சில மாதங்களுக்கு முன்பு மானாமதுரை அ.ம.மு.க. பிரமுகர் சரவணன் படுகொலையில் கைதாகி ஜாமீனில் வந்த தங்கமணியை பழிக்குப்பழி வாங்கும் வகையில் கொலை செய்ய கூலிப்படையை ஏவியது தெரியவந்தது.
காலில் குண்டு காயம் அடைந்த தமிழ்செல்வம் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மற்றவர்களை போலீசார் தேடி வந்தனர். இதனிடையே திருப்பாச்சேத்தி அருகே உள்ள சலுப்பனோடை பகுதியில் குற்றவாளி பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று பதுங்கியிருந்த தங்கராஜ் என்பவரை நேற்று இரவு கைது செய்தனர். தமிழ்செல்வம், தங்கராஜ் கொடுத்த தகவலின்படி கொலையான அ.ம.மு.க. பிரமுகர் சரவணனின் தந்தை ஊமைத்துரையும் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது கொலைக்கு சதி திட்டம் தீட்டியது உள்பட பல்வேறு பதிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. தலைமறைவான கூலிப்படையை சேர்ந்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சிவன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் அழகப்பன். இவரது மகன் சிவமணி அய்யப்பன் (வயது 33). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த வினோத் (28) என்பவரும் பள்ளி பருவத்தில் இருந்தே நண்பர்கள். இருவரும் ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபாடு கொண்டவர்கள்.
இந்த நிலையில் சில பிரச்சனைகளால் சிவமணி அய்யப்பன் தனக்கு சூனியம் வைத்ததாக வினோத் கருதினர்.
இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த முன் விரோதத்தால் சில மாதங்களுக்கு முன்பு சிவமணி அய்யப்பனின் சகோதரரை வினோத் அரிவாளால் வெட்டினார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வினோத்தை கைது செய்தனர்.
சில நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்த வினோத் மீண்டும் சிவமணி அய்யப்பனிடம் தகராறு செய்தார்.
நேற்று இரவு தேவகோட்டை-திருப்பத்தூர் சாலையில் உள்ள தியேட்டர் அருகில் ஓட்டலுக்கு சிவமணி அய்யப்பன் தனது நண்பருடன் சென்றார்.
அப்போது அங்கு வந்த வினோத் கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் சிவமணி அய்யப்பனின் தலையில் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தேவகோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி உமா, சப்-இன்ஸ்பெக்டர்கள் மருதுபாண்டி, செல்லமுத்து தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வருகின்றனர்.
சிவகங்கை:
மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் போக்குவரத்து விதியை மீறி வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராத தொகை பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் இந்த புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தபடாத நிலையில் தமிழகத்திலும் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலனையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் போக்கு வரத்து விதி மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது தமிழகத்தில் தீவிரம் அடைந்து வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தினமும் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்திலும் இருசக்கர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 17-ந்தேதி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் போக்குவரத்து விதி மீறியதாக சுமார் 2500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதிக வேகமாக வந்த 69 பேர் மீதும் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியதாக 1395 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
செல்போனில் பேசிய படி வாகனம் ஓட்டியதாக 6 பேர் மீதும், சீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதாக 409 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அதிக பாரம் ஏற்றியதாக 6 வழக்குகளும், 629 இதர வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
இந்த சோதனையின் போது ரூ.2 லட்சத்து 6 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து சாலைகளில் போக்குவரத்து விதியை மீறுபவர்கள் மீது போலீசார் சோதனை நடத்தி அபராதம் வசூலித்து வருகிறார்கள்.
சிவகங்கை மாவட்ட பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளையொட்டி முன்னிட்டு சேவா வார தொடக்கவிழா, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். சிவகங்கை நகர் தலைவர் தனசேகரன் முன்னிலை வகித்தார். தேவகோட்டை சந்திரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
காஷ்மீர் மாநிலத்தில் 370-வது சட்டப் பிரிவு நீக்கப்பட்ட பின்னர் இந்தியாவில் தமிழகத்தை சேர்ந்த ஒரு சிலரை தவிர அனைவரும் ஆதரித்தனர். இந்த 370-வது சட்டப் பிரிவு நீக்கம் என்பது நடக்காது என்று சில அரசியல் கட்சியினர் கூறி வந்தனர். ஆனால் அதை நடத்தி காட்டியது மத்தியில் ஆளும் மோடி அரசு.
தேசிய அளவில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை தற்போது மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்த ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கைதாகி சிறையில் இருப்பது போல் தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சியை சேர்ந்த இன்னும் ஒருவர் ஏற்கனவே செய்த ஊழல் வழக்கில் விரைவில் கைது செய்யப்பட உள்ளார்.
ப.சிதம்பரம் கடந்த 1984-ம் ஆண்டில் இருந்து இந்த சிவகங்கை தொகுதியில் எம்.பி.யாக இருந்தார். ஆனால் இந்த மாவட்டம் பின் தங்கிய மாவட்டமாகவே உள்ளது. தி.மு.க. இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். முதலில் தி.மு.க. மற்றும் திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் நடத்தி வரும் 44 பள்ளிக்கூடங்களில் சமச்சீர் கல்வி திட்டத்தை செயல்படுத்திவிட்டு அதன் பின்னர் அவர்கள் போராட்டம் நடத்தட்டும். அதை வரவேற்போம்.
பொதுவாக திராவிடர் கழகம் முதல் தி.மு.க. வரை தமிழுக்கும், தமிழர்களுக்கும் எதிராகவே செயல்பட்டு வந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு தயாராக உள்ளார்களா என்பதை அறிய தமிழக அரசு தற்போது 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வை நடத்துகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கோட்ட பொறுப்பாளர் சண்முகராஜா, மாநில அமைப்பு செயலாளர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் சுப.சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ஏராளமானோர் கணக்கு வைத்துள்ளனர்.
இன்று காலை வங்கிக்கு வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவும், செலுத்தவும் வந்து வரிசையில் நின்றனர். அப்போது ஒரு கும்பல் அங்கு வந்தது. அவர்களை வங்கி வாசலில் துப்பாக்கியுடன் நின்ற காவலாளி தடுத்துள்ளார்.
ஆனால் அவரை தள்ளிவிட்டு உள்ளே புகுந்த கும்பல் குறிப்பிட்ட ஒரு வாடிக்கையாளரை அரிவாள் மற்றும் ஆயுதங்களால் தாக்க முயன்றது.
இதனால் வங்கியில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கூச்சலிட்டனர். தொடர்ந்து வங்கிக்குள் நுழைந்த காவலாளி தான் வைத்திருந்த துப்பாக்கியால் தற்காப்புக்காக சுட்டார். இதில் வங்கி வாடிக்கையாளர் தமிழ்ச்செல்வன் காயமடைந்தார்.
காவலாளி துப்பாக்கியால் சுட்டதால் அதிர்ச்சியடைந்த கொலை கும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டது. இந்த சம்பவம் மானாமதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலை முயற்சி மற்றும் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் காயமடைந்த தமிழ்ச்செல்வனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளிகள் யார்? யாரை பழி தீர்க்க வந்தனர்? என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதில் கிடைத்த விவரம் வருமாறு:-
மானாமதுரையைச் சேர்ந்த ஊமத்துரை மற்றும் தங்கமணி இடையே முன் விரோதம் உள்ளது. இந்த விரோதத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊமத்துரையின் மகன் சரவணன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவர் அ.ம.மு.க. முன்னாள் ஒன்றியச் செயலாளர் ஆவார்.
இதற்கு பழி வாங்கும் நோக்கத்தில் ஊமத்துரை, அவரது தம்பி ஆண்டிச்செல்வம் மற்றும் சிலர் செயல்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று பகல் தங்கமணி வங்கிக்கு வந்திருப்பதாக ஊமத்துரை கோஷ்டிக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் ஆயுதங்களுடன் அங்கு வந்து தங்கமணியை கொலை செய்ய முயன்றனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பி விட்டார்.
தப்பி ஓடிய கொலை கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வங்கியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகள் மூலம் கொலையாளிகள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.
ஆண்டு தோறும் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த தினத்தையொட்டி போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்குதமிழக அரசின் சார்பில் அண்ணா பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது மாவட்டத்தில் பணிபுரியும் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
அதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிபவர் மங்களேஸ்வரன். இவருக்கு இந்த ஆண்டு அண்ணா பதக்கம் கிடைத்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கையை சேர்ந்த இவர், தஞ்சாவூர், நெல்லை மாவட்டத்திலும் பணிபுரிந்துள்ளார். தற்போது சிவகங்கையில் தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிகிறார்.
இதேபோல மாவட்ட குற்றபிரிவு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவின் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரியும் இளங்கோவிற்கும் இந்த ஆண்டுக்கான அண்ணா பதக்கம் கிடைத்துள்ளது.
பதக்கம் பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் உள்பட போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.
சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் அனுமதியின்றி சட்ட விரோதமாக விளம்பர பலகைகள், டிஜிட்டல் பேனர்கள் வைப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் பிற விழாக்களுக்கு பேனர்கள் வைக்க விரும்புவோர் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) மற்றும் நகராட்சி அலுவலகங்களில் உரிய கட்டணம் செலுத்தி சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்களிடம் 15 நாட்களுக்கு முன்னதாக முன்அனுமதி பெறவேண்டும்.
அவ்வாறு அனுமதி பெறாமல் வைக்கப்படும் பேனர்கள் சட்ட விரோதமானது. பேனர்கள் வைக்கப்படும் இடத்தின் உரிமையாளர் மற்றும் காவல் துறையிடம் தடையில்லா சான்று பெறுவது அவசியமானதாகும்.
சமூக, மத, கலாசார அரசியல், வர்த்தகம் உள்ளிட்ட எந்த காரணத்திற்காக பேனர்கள் வைக்கப்படுகிறது என்பதை விண்ணப்பப் படிவத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
பேனர்கள் வைக்க முன் அனுமதி படிவத்தை சம்பந்தப்பட்ட உதவி இயக்குநர் (ஊராட்சிகள், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) மற்றும் நகராட்சி அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
அவ்வாறு வைக்கப்படும் பேனர்களின் அளவு, வைக்கப்படும் நாள், பதிப்பாளர் பெயர், பேனர்கள் அகற்றப்படும் தேதி உள்ளிட்ட விபரங்களும் சேர்த்து அச்சிடப்பட வேண்டும்.
எந்த காரணத்திற்காகவும் போக்குவரத்து வழித் தடங்கள், நெடுஞ்சாலை, சாலைகளில் மக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கக் கூடாது.
சட்டத்திற்கு புறம்பாக அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்கள் அகற்றப்படுவதோடு அதனை வைப்பவர்களின் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி குற்ற வழக்குகள் பதிவு செய்து ரூ. 5 ஆயிரம் அபராதம் மற்றும் ஓராண்டு சிறைத்தண்டனை வழங்க வழிவகை உள்ளது.
ஆகவே உரிய முன் அனுமதியுடன் அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டுகிறேன்.
மேற்கண்டவாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சிவகங்கை அருகே கோவானூர் கண்மாயில் 18-ம் நூற்றாண்டின் முற்பகுதியை சேர்ந்த குமிழி மடைத்தூண் கல்வெட்டை கொல்லங்குடியை சேர்ந்த ஆசிரியர் பயிற்றுனரும், தொல்லியல் ஆய்வாளருமான காளிராசா கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- சிவகங்கை ஒன்றியம் கோவானூரில் வசிக்கும் ஆசிரியர் அழகுபாண்டி அளித்த தகவலின் பேரில், கோவானூர் பெரிய கண்மாய் எனப்படும் மேலக்கோவானூர் கண்மாயில் அப்போதைய மக்களால் அளவைக்கல் அல்லது குத்துக்கல் என்றழைக்கப்பட்ட இரட்டைத்தூண் குமிழிமடை காணப்பட்டது. இந்த தூண்களின் உள்பகுதியில் கல்வெட்டு எழுத்து உள்ளது.
கோவானூரில் உள்ள குமிழி மடை கண்மாயின் பள்ளமான நடுப்பகுதியில் இந்த தூண் உள்ளதால், இது குமிழி மடைத்தூண் எனப்படுகிறது. தூணை ஆய்வு செய்த போது, சுண்ணாம்பு செங்கல் காரைக்கட்டு, அரை வட்ட வடிவில் மடைத்தூணிலிருந்து கரையை நோக்கி செல்கிறது. மடைத்தூண் 9 அல்லது 10 அடி உயரமுள்ள 2 தூணிற்கும் இடைப்பட்ட படுக்கைக்கற்கள் உடைந்து கிடக்கின்றன.
பொதுவாக மன்னர்கள் ஆண்ட காலத்தில் மக்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றித்தருவதை முதன்மையான பணியாக கருதியுள்ளனர். அதிலும் வானம் பார்த்த பூமியாக இருந்த இந்த பகுதிக்கு மழை பெய்யும் போது மழைநீரை கண்மாய், ஏரி, குளங்கள் ஆகியவற்றில் தேக்கி வைத்து பாசனத்திற்கு பயன்படுத்தியுள்ளனர்.
சோழ பாண்டிய மன்னர்கள் காலந்தொட்டு குமிழிமடை அமைப்பு ஏரி, குளங்கள், கண்மாய்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நீரையும் வண்டலையும் தனித்தனியே வெளியேற்றுகிற வகையில் இவை அமைந்துள்ளன. ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதிகள் அவர்களின்ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் கண்மாய்கள் பலவற்றை அமைத்ததோடு, சோழர்கள், பாண்டியர்கள் போல மடைத்தூணையும் அமைத்திருந்தனர்.
அந்த மடைத்தூண் கரையோரங்களில் அமைக்கப்பட்டன. ஆனால் கோவானூரில் உள்ள குமிழிமடை கண்மாயின் பள்ளமான நடுப்பகுதியில் இந்த மடைத்தூண் காணப்படுகிறது. பொதுவாக மடைத்தூணின் மேற்பகுதி அரைவட்ட வடிவில் காணப்படும். ஆனால் இந்த தூணின் வெளிப்புறத்தில் முகம் போன்ற அழகிய வடிவமைப்பு 2 தூண்களிலும் காணப்படுவதுடன், அதில் கல்வெட்டும் உள்ளது.
கிழக்கு பகுதியில் உள்ள தூணின் உள்பகுதியில் ‘சகாத்தம் 1630 மேல் செல்லா நின்ற விரோதி ஆண்டு வைகாசி மாதம் 12-ந் தேதி ரகுனாத முத்து வீரத்தேவராகிய பூவண்ணாத தேவர் கட்டி வச்ச ரகுனா’ என்றும், மேற்கு பகுதியில் உள்ள தூணின் உள்பகுதியில் பழவன மடை காளிசுரம் பிள்ளை மணியாச்சில் நட்ட மடை தூண் என்றும் கல்வெட்டாக எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. 2-வது தூணில் உள்ள எழுத்துக்கள் மிகவும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
சிவகங்கை முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணியிட மாறுதல் மற்றும் குறிப்பாணை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செயலாளரும் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான நாகராஜ் தலைமை தாங்கினார். சங்க பொதுச்செயலாளர் சங்கர், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலச் செயலாளர் சேதுசெல்வம், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொருளாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளருமான ரவிச்சந்திரன் மீதான தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.
இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன், இடைநிலை ஆசிரியர் மாவட்ட தலைவர் தவமணிசெல்வம் மற்றும் பல்வேறு சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சென்னையைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 48). தனியார் நிறுவன ஊழியரான இவர், தனது நண்பர்கள் பூபதி, சண்முகநாதன், பொன்னையா ஆகியோருடன் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் நடக்கும் திருமணத்தில் பங்கேற்பதற்காக ரெயில் மூலம் நேற்று நள்ளிரவு காரைக்குடிக்கு வந்தனர். பின்னர் அமராவதி புதூரில் உள்ள சண்முகநாதன் வீட்டில் அவர்கள் தங்கினர்.
இன்று காலை சந்தோஷ் குமார் உள்பட 4 பேர் காரில் தேவகோட்டையில் நடக்கும் திருமண நிகழ்ச்சிக்கு புறப்பட்டனர். காரை சண்முகநாதன் ஓட்டினார்.
திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சடையங்காடு விலக்கில் கார் வந்து கொண்டிருந்தது.
அப்போது நடுரோட்டில் வைக்கப்பட்டிருந்த பேரிகாட் மீது இடிக்காமல் இருக்க காரை திருப்பியதாக தெரிகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி தலை குப்புற கவிழ்ந்தது.
உள்ளே இருந்தவர்கள் கூக்குரலிட்டனர். உடனே அந்தப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் விபத்தில் சிக்கய 4 பேரை மீட்டு தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சந்தோஷ்குமார் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக ஆராவயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






