search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் எச்.ராஜா பேசிய போது எடுத்த படம்.
    X
    பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் எச்.ராஜா பேசிய போது எடுத்த படம்.

    தேசிய அளவில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது - எச்.ராஜா பேச்சு

    தேசிய அளவில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது என்று பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசினார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளையொட்டி முன்னிட்டு சேவா வார தொடக்கவிழா, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். சிவகங்கை நகர் தலைவர் தனசேகரன் முன்னிலை வகித்தார். தேவகோட்டை சந்திரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    காஷ்மீர் மாநிலத்தில் 370-வது சட்டப் பிரிவு நீக்கப்பட்ட பின்னர் இந்தியாவில் தமிழகத்தை சேர்ந்த ஒரு சிலரை தவிர அனைவரும் ஆதரித்தனர். இந்த 370-வது சட்டப் பிரிவு நீக்கம் என்பது நடக்காது என்று சில அரசியல் கட்சியினர் கூறி வந்தனர். ஆனால் அதை நடத்தி காட்டியது மத்தியில் ஆளும் மோடி அரசு.

    தேசிய அளவில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை தற்போது மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்த ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கைதாகி சிறையில் இருப்பது போல் தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சியை சேர்ந்த இன்னும் ஒருவர் ஏற்கனவே செய்த ஊழல் வழக்கில் விரைவில் கைது செய்யப்பட உள்ளார்.

    ப.சிதம்பரம் கடந்த 1984-ம் ஆண்டில் இருந்து இந்த சிவகங்கை தொகுதியில் எம்.பி.யாக இருந்தார். ஆனால் இந்த மாவட்டம் பின் தங்கிய மாவட்டமாகவே உள்ளது. தி.மு.க. இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். முதலில் தி.மு.க. மற்றும் திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் நடத்தி வரும் 44 பள்ளிக்கூடங்களில் சமச்சீர் கல்வி திட்டத்தை செயல்படுத்திவிட்டு அதன் பின்னர் அவர்கள் போராட்டம் நடத்தட்டும். அதை வரவேற்போம்.

    பொதுவாக திராவிடர் கழகம் முதல் தி.மு.க. வரை தமிழுக்கும், தமிழர்களுக்கும் எதிராகவே செயல்பட்டு வந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு தயாராக உள்ளார்களா என்பதை அறிய தமிழக அரசு தற்போது 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வை நடத்துகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் கோட்ட பொறுப்பாளர் சண்முகராஜா, மாநில அமைப்பு செயலாளர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் சுப.சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×