search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துப்பாக்கி சூடு
    X
    துப்பாக்கி சூடு

    வங்கிக்குள் நடந்த கொலை முயற்சி- துப்பாக்கி சூடு நடத்தி தடுத்த காவலாளி

    வங்கிக்குள் புகுந்து வாடிக்கையாளரை கொலை செய்ய மர்ம கும்பல் முயன்றது. அவர்களை காவலாளி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ஏராளமானோர் கணக்கு வைத்துள்ளனர்.

    இன்று காலை வங்கிக்கு வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவும், செலுத்தவும் வந்து வரிசையில் நின்றனர். அப்போது ஒரு கும்பல் அங்கு வந்தது. அவர்களை வங்கி வாசலில் துப்பாக்கியுடன் நின்ற காவலாளி தடுத்துள்ளார்.

    ஆனால் அவரை தள்ளிவிட்டு உள்ளே புகுந்த கும்பல் குறிப்பிட்ட ஒரு வாடிக்கையாளரை அரிவாள் மற்றும் ஆயுதங்களால் தாக்க முயன்றது.

    இதனால் வங்கியில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கூச்சலிட்டனர். தொடர்ந்து வங்கிக்குள் நுழைந்த காவலாளி தான் வைத்திருந்த துப்பாக்கியால் தற்காப்புக்காக சுட்டார். இதில் வங்கி வாடிக்கையாளர் தமிழ்ச்செல்வன் காயமடைந்தார்.

    காவலாளி துப்பாக்கியால் சுட்டதால் அதிர்ச்சியடைந்த கொலை கும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டது. இந்த சம்பவம் மானாமதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கொலை முயற்சி மற்றும் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் காயமடைந்த தமிழ்ச்செல்வனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலையாளிகள் யார்? யாரை பழி தீர்க்க வந்தனர்? என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதில் கிடைத்த விவரம் வருமாறு:-

    மானாமதுரையைச் சேர்ந்த ஊமத்துரை மற்றும் தங்கமணி இடையே முன் விரோதம் உள்ளது. இந்த விரோதத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊமத்துரையின் மகன் சரவணன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவர் அ.ம.மு.க. முன்னாள் ஒன்றியச் செயலாளர் ஆவார்.

    இதற்கு பழி வாங்கும் நோக்கத்தில் ஊமத்துரை, அவரது தம்பி ஆண்டிச்செல்வம் மற்றும் சிலர் செயல்பட்டு வந்தனர்.

    இந்த நிலையில் இன்று பகல் தங்கமணி வங்கிக்கு வந்திருப்பதாக ஊமத்துரை கோஷ்டிக்கு தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து அவர்கள் ஆயுதங்களுடன் அங்கு வந்து தங்கமணியை கொலை செய்ய முயன்றனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பி விட்டார்.

    தப்பி ஓடிய கொலை கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வங்கியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகள் மூலம் கொலையாளிகள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.
    Next Story
    ×