search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போக்குவரத்து வாகன சோதனை
    X
    போக்குவரத்து வாகன சோதனை

    சிவகங்கை மாவட்டத்தில் போக்குவரத்து விதி மீறியதாக ஒரே நாளில் 2500 வழக்குகள் பதிவு

    சிவகங்கை மாவட்டத்தில் போக்குவரத்து விதி மீறியதாக ஒரே நாளில் 2500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    சிவகங்கை:

    மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் போக்குவரத்து விதியை மீறி வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராத தொகை பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    பல்வேறு மாநிலங்களில் இந்த புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தபடாத நிலையில் தமிழகத்திலும் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலனையில் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் போக்கு வரத்து விதி மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது தமிழகத்தில் தீவிரம் அடைந்து வருகிறது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் தினமும் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்படுகிறது.

    சிவகங்கை மாவட்டத்திலும் இருசக்கர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 17-ந்தேதி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் போக்குவரத்து விதி மீறியதாக சுமார் 2500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதிக வேகமாக வந்த 69 பேர் மீதும் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியதாக 1395 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    செல்போனில் பேசிய படி வாகனம் ஓட்டியதாக 6 பேர் மீதும், சீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதாக 409 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அதிக பாரம் ஏற்றியதாக 6 வழக்குகளும், 629 இதர வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

    இந்த சோதனையின் போது ரூ.2 லட்சத்து 6 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து சாலைகளில் போக்குவரத்து விதியை மீறுபவர்கள் மீது போலீசார் சோதனை நடத்தி அபராதம் வசூலித்து வருகிறார்கள்.

    Next Story
    ×