என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • அ.தி.மு.க. மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
    • அண்ணாமலைக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மானாமதுரை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இடையே வார்த்தை போர் பல மாதங்களாக தொடர்ந்து வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கூட்டணி ஏற்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தலைவர்களின் கருத்து மோதல் அதனை பொய்யாக்கியது.

    அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் குறித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திதோடு மோதல் போக்கையும் அதிகரிக்க செய்தது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் அண்ணாமலைக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை அளித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே 2026-ம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியாது என்றும், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதவிக்கு வந்தது தொடர்பாகவும் சர்ச்சைக் குரிய கருத்துகளை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சமீபத்தில் மீண்டும் தெரிவித்து இருந்தார். இதற்கு அ.தி.மு.க. மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இந்தநிலையில் அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன சுவரொட்டிகள் திருப்புவனம், மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒட் டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் அண்ணாமலையே எச்சரிக்கிறோம். அ.தி.மு.க. பற்றியோ, கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் பற்றியோ, கழக அம்மா பேரவைச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் பற்றியோ தவறாக பேசினால், அண்ணாமலையே நீ செல்லும் இடமெல்லாம் கருப்புக்கொடி காட்டுவோம் என்று எச்சரிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. இளைஞரணி சார்பில் அண்ணாமலைக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சாலையின் நடுவில் வீட்டின் படுக்கை அறையில் படுப்பது போன்று கால்மேல் கால் போட்டு படுத்துக் கொண்டார்.
    • ரகளையால் காரைக்குடி பர்மா காலனி சாலை சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    காரைக்குடி:

    மனிதனுக்கு இரண்டு கண்கள் என்றால், சமூக வலைதளத்துக்கு பார்ப்பதெல்லாம் கண்கள்தான். பொது வெளியில் நடக்கும் சம்பவம் அடுத்த விநாடி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அதில் ஈடுபட்ட நபரை கதிகலங்க வைத்து விடுகிறது. இதனால் சிக்கிக்கொண்டோரும், பிரபலமானவர்களும் பலர்.

    அதிலும் குறிப்பாக மது போதையில் சிலர் செய்யும் வேடிக்கைகள் ஒருபுறம் ரசிக்க வைத்தாலும், அதற்கு லைக் கொடுத்து, கருத்து சொல்பவர்களின் வார்த்தைகள் சவுக்கடிக்கு சமமாகவும் இருந்துள்ளது. வேடிக்கை, வினோதங்களின் மூலம் தங்களை ஈர்ப்பதற்காகவும் ஒருசிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

    அந்த வகையில் செட்டி நாடு புகழ் காரைக்குடியிலும் ஒரு சம்பவம் அரங்கேறி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி பகுதியான காரைக்குடி அறந்தாங்கி செல்லும் சாலை நேற்று மாலை வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தது. அப்போது அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் அந்தி சாயும் மாலை வேளையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மது போதையில் அந்த பகுதிக்கு வந்தார்.


    அரைக்கால் டவுசர், பனியன் அணிந்திருந்த அவர் வெயில் குறைந்த மழை வாசம் அடித்த குளுகுளு சாலையின் நடுவில் வீட்டின் படுக்கை அறையில் படுப்பது போன்று கால்மேல் கால் போட்டு படுத்துக் கொண்டார். மேலும் தனது டவுசர் பையில் வைத்திருந்த செல்போனை எடுத்து அதனை பார்த்துக் கொண்டே அந்த சாலையை கடந்து சென்ற பெண்களை பார்த்து கேலி, கிண்டலும் செய்தார்.

    தலைக்கேறிய போதை, தடுமாற்றத்துடன் கூடிய நடை, போதைக்கு ஊறு காயாக கேலி, கிண்டல் வேறு என்று அந்த வாலிபரின் எல்லை அத்துமீறி போனது. பலர் வேடிக்கை பார்க்க, சிலர் செல்போன்களில் வீடியோ எடுக்க, இதெல்லாம் நமக்கு எதற்கு என்று கண்டுகொள்ளாமல் சென்றனர் மற்றும் பலர். அறிவுரை கூறி அப்புறப்படுத்த நினைத்து அருகில் சென்றவர்கள் அச்சத்துடன் திரும்பி வந்தனர்.

    ஏதாவது அசம்பாவித சம்பவத்தில் அவர் இறங்கினால் என்று எண்ணி, நமக்கேன் வம்பு வந்த வழியாக திரும்பினர். இருந்தபோதிலும் பொதுமக்களுக்கு இடையூறாகவும், அவர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் நடந்து கொண்ட வாலிபரை அங்கிருந்து அனுப்பி வைக்க அதே பகுதியைச் சேர்ந்த சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சொக்கலிங்கம் முயற்சி மேற்கொண்டார்.

    உடனடியாக இதுபற்றி அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தும் யாரும் வர வில்லை. இதற்கிடையே சாலையில் நடுவில் படுத்திருந்த அந்த வாலிபர் எழுந்து ரோட்டில் அங்குமிங்கும் சென்றார். பின்னர் ஒரு மரத்தடியில் சென்று அமர்ந்து கொண்டார். அக்கம்பக்கத்தினர் மூலம் அவரது நண்பர்களை வரவழைத்து ஒருவழியாக போதை வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த ரகளையால் காரைக்குடி பர்மா காலனி சாலை சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • நோயாளிகளும், உறவினர்களும் பயந்து ஓடியிருக்கிறார்கள்.
    • காளையார்கோவில் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    வலைத்தள வாசிகளின் சேட்டை சில நேரங்களில் எல்லை மீறி செல்வதும் தொல்லை கொடுப்பதாக மாறுவதும் உண்டு.

    ஆனால் ஒரு உண்மையை பொய்யாக்கி திசை திருப்பும் மோசமான செயல்களில் ஈடுபடுவதுதான் சிலருக்கு வாடிக்கையாகி விட்டது. அது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

    கடந்த 2 நாட்களாக சிவகங்கை பகுதியில் ஒருவரை குரங்கு கடித்ததால் அவர் குரங்கு போலவே மாறி விட்டார். குரங்கு போல் முகத்தை வைத்து கொண்டு கிரில் கதவுகளில் தாவுகிறார். அருகே செல்பவர்களை பார்த்து உருமுகிறார் என்றெல்லாம் வீடியோ பதிவுடன் பரப்புகிறார்கள். அதை யார் பார்த்தாலும் நம்பத்தான் செய்வார்கள்.

    ஆனால் உண்மை அது வல்ல. இது தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தில் விசாரித்த போது கிடைத்த தகவல் அதிர்ச்சி அடைய வைத்தது.

    காளையார்கோவிலை சேர்ந்தவர் சரவணன். மனநல சிகிச்சை பெற்று வரும் இவர் காளையார்கோவில் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    நோய் முற்றிய நிலையில் அவரை காளையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளார்கள். அங்கு டாக்டர்கள் இல்லாததால் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார்கள். ஆம்புலன்சில் இருந்து இறங்க மறுத்த சரவணன் அங்கிருந்த கிரில் கதவில் தாவி குதித்து ஏறியிருக்கிறார். அருகில் நெருங்கியவர்களை விரட்டியிருக்கிறார்.

    இதனால் நோயாளிகளும், உறவினர்களும் பயந்து ஓடியிருக்கிறார்கள். பின்னர் பாதுகாவலர்கள் சூழ்ந்து அவரை பிடித்து கைகளை பின்னால் கட்டி சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளார்கள். இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்தவர் சமூக வலைதளத்தளங்களில் திசை திருப்பி விட்டிருக்கிறார். இதை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தார்கள்.

    இப்போது நெட்டிசன்கள் பலர் அடப்பாவிகளா? இப்படியெல்லாமா பண்வீங்க? என்று பதிலுக்கு பதிவிட்டு வறுத்து எடுக்கிறாார்கள்.

    • உதயநிதி ஸ்டாலினை எப்படியாவது துணை முதலமைச்சர் ஆக்கிடுங்க.
    • கவுன்சிலர் தம்பதி கறிவிருந்த வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

    தமிழக விளையாட்டுத் துறை, இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக பதவியேற்க உள்ளதாக தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தி.மு.க. எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர்கள் சிலரும் இதனை பொதுவெளியில் கருத்தாக கூறி வருகின்றனர்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வர் ஆவார் என்ற வகையில் தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் எப்படியாவது துணை முதலமைச்சர் ஆக வேண்டும் என்று சிவகங்கையை சேர்ந்த கவுன்சிலர் தம்பதி ஊருக்கே கறிவிருந்து வைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

    சிவகங்கை மாவட்ட, சாலைகிராமத்தை சேர்ந்த செல்வி சாத்தையா என்ற கவுன்சிலர் கூறும்போது, "விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அவர் தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஆக வேண்டியும், ஊரில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும் கிடாய் விருந்து வைத்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் கொடுக்கிறோம்," என்றார்.

    மேலும், இந்த தம்பதியின் கறி விருந்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.


    • என் தம்பிகளின் வாக்குகளை கவர்வதற்காக தமிழ்ப் புதல்வன் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.
    • சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டது, கொடுஞ்செயல்.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நாம் தமிழர் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சந்திரசேகரன் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "துணை முதல்வராக உதயநிதி வந்தால், வரவேற்போம், வாழ்த்துவோம். வேறு என்ன செய்ய முடியும்? அனைத்தையும் சகித்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்.

    என் தம்பிகளின் வாக்குகளை கவர்வதற்காக தமிழ்ப் புதல்வன் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.

    தலித்துகள் முதலமைச்சராக முடியாது எனக் கூறிய திருமாவளவனின் கருத்தை ஏற்கிறேன். ஆனால், திமுக அரசு மீது நம்பிக்கை இருக்கிறது என்ற கருத்தை எதிர்க்கிறேன்.

    விஜய் நடத்தும் மாநாட்டின் இட உரிமையாளர்களை மிரட்டுவதுதான் ஜனநாயகமா? இது சர்வாதிகாரம் என்று கூடச் சொல்ல முடியாது, கொடுங்கோன்மை என்றுதான் சொல்ல வேண்டும்.

    சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டது, கொடுஞ்செயல். கேவலமான, அசிங்கமான அரசியல் பழிவாங்கல்" என்று தெரிவித்தார்.

    • கார் மூலம் கடத்தல் தங்கம் கொண்டு செல்லப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • இரண்டு பேரை கைது செய்ததுடன் 6.6 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    இலங்கையில் இருந்து கடல் வழியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடத்தி வரப்பட்ட சுமார் 6.60 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்ததுடன், கடத்தி வந்தவர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கீழக்கரையை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    இலங்கையில் இருந்து கடத்தல் தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின்படி திருப்பாச்சேத்தி டோல்கேட் பகுதியில் சோதனை நடத்தினர்.

    இந்த தீவிர சோதனையில் சந்தேக விதமாக வந்த காரை நிறுத்தியதில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 6 கிலோ 600 கிராம் மதிப்பிலான கடத்தல் தங்கம் இருப்பதை கண்டறிந்தனர். அதன் மதிப்பு ரூ.4.56 கோடி ரூபாய். உடனே தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    • பல கோடி மதிப்புள்ள இடத்தை போலியாக பத்திரப்பதிவு.
    • காவல் உதவி ஆய்வாளர் கலைமணி மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    காரைக்குடியில் ஆள் மாறாட்டம் செய்து பல கோடி மதிப்புள்ள இடத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து மோசடி செய்த விவகாரத்தில் எஸ்.ஐ உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    காரைக்குடி கற்பக விநாயகர் நகர் பகுதியில் உள்ள சோமசுந்தரம் என்பவரின் இடத்தை, அதே பெயரில் உள்ள மற்றொருவருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    முறையாக விசாரணை செய்யாமல் தடையில்லா சான்று வழங்கியதாக காவல் உதவி ஆய்வாளர் கலைமணி மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தடையில்லா சான்றை வைத்து பவர் பத்திரம் மூலம் நிலத்தை சோமசுந்தரம் என்பவர் விற்பனை செய்துள்ளார்.

    காவல் உதவி ஆய்வாளர், சப் ரிஜிஸ்டர், நிலத்தை விற்றவர் மற்றும் வாங்கியவர் உள்பட 11 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • சிவகாசியில் தேசியக் கொடிகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • பேப்பர் கொடி மற்றும் அட்டையால் தயாரிக்கப்படும் கொடிகளின் விலை கடந்த ஆண்டை விட சற்று கூடுதலாக இருக்கும்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள அச்சகத்தில், சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தேவையான தேசிய கொடிகள் அச்சடிக்கும் பணிகளும், தயாரான கொடிகள் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிவகாசி அச்சகத்தில் துணியிலான தேசிய கொடிகள், வார்னீஸ் பேப்பர், பளபளக்கும் ஆர்ட் பேப்பர், அட்டை உள்ளிட்டவைகளில் தேசிய கொடிகள் தயாராகி வருகின்றன.

    சட்டையில் குத்தும் வகையில் பேப்பர் தேசிய கொடிகளும், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் முகப்புகளில் பொருத்தும் வகையிலான அட்டையால் தயாரிக்கப்படும் தேசிய கொடிகள் அதிகளவில் தயாராகி வருகின்றன. மேலும் இந்தியா வரை படத்துடன் கூடிய தேசிய கொடிகள், தேசத்தந்தை மகாத்மா காந்தி உருவத்துடன் கூடிய தேசிய கொடிகள், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால்நேரு உருவத்துடன் கூடிய தேசிய கொடிகள் அழகிய வடிவங்களுடன், கண்ணை கவரும் டைகட்டிங் வடிவத்துடன் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    மேலும் தொப்பி வடிவில் தலையில் மாட்டிக் கொள்ளும் வகையில் தேசிய கொடிகள், கைகளில் மாட்டிக் கொள்ளும் வகையிலான தேசிய கொடிகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.

    தேசிய கொடிகள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் அச்சக உரிமையாளர் காசிராஜன் கூறியதாவது:-


    சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய கொடிகள் தயாரிக்கும் பணிகளை செய்து வருகிறோம். தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக தேசிய கொடிகளை மொத்தமாக ஆர்டர்கள் கொடுத்து வாங்கினார்கள்.

    பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக ஸ்டேசனரி கடைகளில் பல வடிவங்களிலான தேசிய கொடிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

    படிப்படியாக தமிழகம் முழுவதும் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை சட்டைகளில் குத்திக் கொள்ளும் உற்சாகம் தொடங்கியது. இது தமிழகத்தை தாண்டி புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் பரவியது. அங்குள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் கடைகளில் விற்பனை செய்வதற்கான தேசிய கொடிகள் ஆர்டர்கள் அதிகளவில் கிடைத்தது.

    பேப்பர் கொடி மற்றும் அட்டையால் தயாரிக்கப்படும் கொடிகளின் விலை கடந்த ஆண்டை விட சற்று கூடுதலாக இருக்கும். ஆனால் இந்த சின்ன விலையேற்றம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. கடந்த 2 மாதங்களாக தேசிய கொடிகள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது எடுக்கப்பட்ட ஆர்டர்களுக்கு கொடிகள் அனுப்பி வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன என்று கூறினார்.

    • போதையில் இருந்த பணியாளர் கடையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
    • பொதுமக்களுக்கு பொருட்கள் எதுவும் வழங்காமல் போதையில் படுத்து உறங்கிவிட்டார்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை 22-வது வார்டுக்கு உட்பட்ட சொர்ணநாதன் தெரு பகுதியில் அமுதம் நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை மூலம் அப்பகுதியை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட ரேசன் கார்டுதாரர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர்.

    இந்த கடையில் நித்திய ராஜ் என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். இதற்கிடையே நித்தியராஜ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அளவுக்கு அதிகமான போதையில் கடைக்கு பணிக்கு வந்துள்ளார். மேலும் அவர் பொதுமக்களுக்கு பொருட்கள் எதுவும் வழங்காமல் போதையில் படுத்து உறங்கிவிட்டார்.

    நியாய விலை கடைக்கு ரேசன் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பல முறை அழைத்தும் அவர் எழுந்திருக்கும் நிலையில் இல்லை. இச்சம்பவம் அறிந்த நகர் மன்ற உறுப்பினர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    புகார் கூறப்பட்ட ஊழியர் நித்தியராஜ் பல மாதங்களாக ரேசன் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களிடம் தரக்குறைவாக நடந்து வந்துள்ளார். இதையடுத்து உடனடியாக போதையில் இருந்த பணியாளர் கடையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

    இதுகுறித்து செய்தி வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலானது. தகவல் அறிந்த தமிழ் நாடு குடிமைப்பொருள் விநியோக மண்டல மேலாளர் அருண் பிரசாத் விசாரணை நடத்தி பணி நேரத்தில் போதையில் தூங்கிய நியாய விலைக் கடை ஊழியர் நித்தியராஜை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    • கீழடியில் பல்வேறுச் சான்றுகள் கிடைத்துள்ளன.
    • குழியை அகழ்ந்து ஆய்வதற்கானப் பணிகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கீழடியில் நகர நாகரிகம் நிலவியது தொல்லியல் சான்றுகள் மூலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. கி.மு. 6 ஆம் நூற்றாண்டளவில் படிப்பறிவும், எழுத்தறிவுப் பெற்ற மேம்பட்ட சமூகமாக தமிழ்ச் சமூகம் விளங்கியதை கரிமப் பகுப்பாய்வு காலக்கணக்கீடு மூலம் முதன்முதலாக தொல்லியல் துறை உறுதிபடுத்தியுள்ளது. இதனை நூலாக வெளியிட்டும் உலகறியச் செய்தது.

    நகர நாகரிகம் என்பதற்கு பல்வேறு கூறுகளை கொண்டு உள்ளது. வாழ்விடப்பகுதியின் பரப்பளவு, பல்வேறு மக்கள் ஒன்றுகூடி வாழ்தல், எழுத்தறிவு, செங்கல் கட்டுமானம், தொழிற்கூடங்கள், நீர் மேலாண்மை, நுண்கலைகள், வணிகம், பெருவழிகள் போன்றவை இக்கூறுகளில் அடங்கும். கீழடியில் இத்தகைய கூறுகளுக்கான தொல்பொருட்கள் கிடைத்துள்ளது என்றும் அதன் வாயிலாக நகர நாகரிகம் நிலவியது என்றும் சான்றுகளுடன் நிறுவப்பட்டுள்ளது.

    நீர்மேலாண்மை சிறந்து விளங்கியதற்கு கீழடியில் பல்வேறுச் சான்றுகள் கிடைத்துள்ளன. அவற்றில் திறந்தவெளி வடிகால், செங்கல்லால் கட்டப்பட்ட மூடிய வடிகால், சுருள் வடிவிலான குழாய்கள், உருளை வடிவிலான குழாய்கள், பல்வேறு எண்ணிக்கைகளில் உறை கிணறுகள் போன்றவை வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவை பல்வேறு பயன்பாட்டுகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. சங்க காலத் தமிழ்ச் சமூகம் கொண்டிருந்த நீர் மேலாண்மை சிறப்பினை இதன் மூலம் அறியலாம்.

    இந்நிலையில் கீழடி அகழாய்வுக் குழி ஒன்றில் சுடுமண்ணாலான உருளை வடிவ குழாய்கள் பொருத்திய வடிகால் வெளிப்பட்டுள்ளது. இது ஆறு உறைகளுடன் காணப்படும், இச்சுடுமண் வடிகாலானது மிக நேர்த்தியாக ஒன்றுக்குள் ஒன்றாக பொருத்தப்பட்ட நிலையில் உள்ளது. ஒரு சுடுமண் உறையின் நீளம் 36 செ.மீ., அகலம் 18 செ.மீ. என்ற முறையில் காணப்படும். தற்பொழுது வெளிப்படுத்தப்பட்ட வடிகால் சுமார் 174 செ.மீ நீளத்தை கொண்டுள்ளது.

    இந்த வடிகால் குழாயின் தொடர்ச்சி அடுத்த குழிக்குள்ளும் நீள்கிறது. உருளைக்குழாய் வடிகாலின் தொடர்ச்சி, நீளம் மற்றும் பயன்பாடு பற்றி அறிய அடுத்த குழியை அகழ்ந்து ஆய்வதற்கானப் பணிகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • செல்வகுமார் கொலை வழக்கில் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
    • மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்டுள்ளர்.

    சிவகங்கையை அடுத்த வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்த செல்வக்குமார் பா.ஜ.க கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார். நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் சென்ற போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்தனர். நடுவழியில் திடீரென வழிமறித்த மர்ம கும்பல் செல்வக்குமாரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.

    பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், செல்வக்குமாரை படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய கோரி, உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மற்றும் கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் டிஎஸ்பி சாய் சவுந்தர்யன் பேச்சுவார்த்தை நடத்தினார். அரசியல் பிரமுகர் வெட்டி கொல்லப்பட்டது, உறவினர்கள் போராட்டம் என தொடர்ந்து அந்த பகுதியில் பதற்ற சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். போலீசார் குற்றவாளியை தேடும் பணியை தீவிரப்படுத்தினர்.

    இந்நிலையில் பாஜக மாவட்ட கூட்டுறவு பிரிவு செயலாளர் செல்வகுமார் கொலை வழக்கில் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது காவலரை தாக்கி விட்டு தப்ப முயன்ற வசந்த் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.

    குற்றவாளி தாக்கியதில் காயமடைந்த சார்பு ஆய்வாளர் பிரதாப் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    படுகாயம் அடைந்த காவலர் மற்றும் குற்றவாளி சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்டுள்ளனர்.

    • சேலம் வணங்கம்பாடியை சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
    • விபத்து குறித்து குன்றக்குடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் சூரக்குடியில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    மாடு முட்டியதில், சேலம் வணங்கம்பாடியை சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    மாடுபிடி வீரர் கார்த்திக் உயிரிழப்பை தொடர்ந்து வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி உடனடியாக நிறுத்தப்பட்டது.

    விபத்து குறித்து குன்றக்குடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×