என் மலர்tooltip icon

    சேலம்

    • கடந்தாண்டு ரூ.200 முதல் ரூ.400 வரை விலை போன பலாப்பழங்கள், தற்போது பருமன் மற்றும் தரத்திற்கேற்ப ரூ.400 முதல் ரூ.800 வரை விலை போகிறது.
    • முக்கனிகளில் ஒன்றான ருசி மிகுந்த பண்ருட்டி பலாப்பழங்களை வாங்கி சுவைப்பதில் மக்கள் ஆர்வம் காட்டி வருவதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் கல்வராயன்மலை, அருநூற்றுமலை சந்துமலை, நெய்யமலை, ஜம்பூத்துமலை, மண்ணூர் மலை கிராமங்களில் பலா மரங்கள் உள்ளன. இப்பகுதியில் கடந்தாண்டு இறுதியில் போதிய மழையில்லாததால், இவ்வாண்டில் பலாப்பழம் விளைச்சல் குறைந்து போனது.

    இந்நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் பலாப்பழம் அறுவடை தொடங்கியுள்ளது. வாழப்பாடி பகுதியை சேர்ந்த வியாபாரிகள் பண்ருட்டி பகுதிக்கு சென்று, விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் பலாப்பழங்களை கொள்முதல் செய்து சரக்கு வாகனங்களில் கொண்டு வந்து வாழப்பாடி பகுதியில், ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்து வருகின்றனர். வாழப்பாடி, பேளூர், அயோத்தியாப்பட்டணம், ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய வாரச்சந்தைகளில் பண்ருட்டி பலாப்பழங்களை தோலுரித்து, பலாச்சுளையை தனியாக பிரித்தெடுத்து ஒரு கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்தாண்டு ரூ.200 முதல் ரூ.400 வரை விலை போன பலாப்பழங்கள், தற்போது பருமன் மற்றும் தரத்திற்கேற்ப ரூ.400 முதல் ரூ.800 வரை விலை போகிறது. விலை இருமடங்கு உயர்ந்துள்ள நிலையிலும், ஆண்டுக்கு ஒரு முறை கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும் முக்கனிகளில் ஒன்றான ருசி மிகுந்த பண்ருட்டி பலாப்பழங்களை வாங்கி சுவைப்பதில் மக்கள் ஆர்வம் காட்டி வருவதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து வாழப்பாடி பலாப்பழம் வியாபாரி ஒருவர் கூறுகையில்,

    நிகழாண்டு சேலம் மாவட்டம் சேர்வராயன்மலை ஏற்காடு, கல்வராயன்மலை கருமந்துறை மற்றும் நாமக்கல் கொல்லிமலை பகுதியில் பருவமழை ஏமாற்றியதால், பலாப்பழம் விளைச்சல் குறைந்து போனது. எனவே, பண்ருட்டி பகுதி கிராமங்களுக்கு சென்று, விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் நேரடியாக பலாப்பழம் கொள்முதல் செய்து கொண்டு வந்து வாழப்பாடி பகுதியில் விற்பனை செய்து வருகிறோம்.

    பண்ருட்டி பகுதி பலாப்பழம் விலை இந்தாண்டு இரு மடங்கு உயர்ந்துள்ளது. இருப்பினும், கல்வராயன்மலை மற்றும் கொல்லிமலை பகுதியில் இருந்து பலாப்பழங்கள் விற்பனைக்கு வரத்து குறைந்ததாலும், பண்ருட்டி பலாப்பழங்கள் ருசி மிகுந்து காணப்படுவதாலும், மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர் என்றனர்.

    • வாடகைவீட்டில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
    • பூசாரிப்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடியில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, கூலிப் உள்ளிட்ட போதைப்பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக, வாழப்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த் உத்தரவின் பேரில், வாழப்பாடி இன்ஸ்பெக்டர் பாஸ்கரபாபு தலைமையிலான போலீசார், நேற்று மாலை வாழப்பாடி கிழக்குக்காடு பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது, கிழக்குக்காடு சமயபுரம் மாரியம்மன் கோயில் அருகே செல்வராஜ் என்பவர் குடியிருந்து வரும் வாடகைவீட்டில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 68 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, ரூ.2.30 லட்சம் மதிப்புள்ள 744 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை போலீஸார் கைப்பற்றினர்.

    இதையடுத்து பூசாரிப்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    வாழப்பாடி பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் புழக்கத்தை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று இரவு சந்தோஷ்குமார் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
    • மூளைச்சாவு அடைந்த சந்தோஷ்குமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முன் வந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்ககிரி சந்தைப்பேட்டை பால்வாய் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் சந்தோஷ்குமார் (22) கூலித்தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள பனைமரத்தில் நுங்கு வெட்டுவதற்காக மரத்தின் மீது ஏறி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சந்தோஷ்குமார் மரத்தின் மேலிருந்து கீழே விழுந்துள்ளார். தலையில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்து வந்தனர். தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று இரவு சந்தோஷ்குமார் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து மூளைச்சாவு அடைந்த சந்தோஷ்குமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முன் வந்தனர். தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உடனடியாக தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், மருத்துவக் குழுவினர் மூளைச்சாவடைந்த சந்தோஷ்குமார் உடலில் இருந்து இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் 2, சிறுகுடல், கார்னியா ஆகியவை எடுக்கப்பட்டது. இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கும், கல்லீரல் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் மற்றும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், சிறுகுடல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கார்னியா சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.

    மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் செய்த சந்தோஷ்குமாருக்கு சேலம் அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சார்பாக அரசு மரியாதை வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

    • வெயிலின் தாக்கத்தாலும், வெப்ப அலை வீசுவதாலும் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
    • சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சே ர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஏற்காட்டில் இன்று காலை முதலே குவிந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி முதல் நேற்று வரை தொடர்ந்து 48 நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. இதில் குறிப்பாக கடந்த 2-ந் தேதி அதிக பட்சமாக 108 டிகிரி வெயில் பதிவானது நிலையில் நேற்று 105 .5 டிகிரி வெயில் பதிவானது.

    வெயிலின் தாக்கத்தாலும், வெப்ப அலை வீசுவதாலும் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் அதிக வெப்பத்தால் பாதிக்கப்பட்டு வந்தனர். அதனால் பொது மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளில் முடங்கினர்.

    இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. பல மாதங்களுக்கு பிறகு பெய்த இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    குறிப்பாக இந்த மழை காடையாம்பட்டி, மேட்டூர், சேலம் மாநகர், ஆனைமடுவு , ஏற்காடு உள்பட பல பகுதிகளில் கன மழையாக ஒரு மணி நேரத்திற்கும் மேல் கொட்டியது. இந்த மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. மேலும் கோடை காலத்தில் பெய்த இந்த மழை விவசாய பயிர்களுக்கும் உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஏற்காட்டில் நேற்றிரவு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாரல் மழை பெய்தது. மழையை தொடர்ந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சே ர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஏற்காட்டில் இன்று காலை முதலே குவிந்தனர்.

    சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கிச்சிப்பாளையம், தாதாகாப்பட்டி, ஜங்சன், கொண்டலாம்பட்டி என பெரும்பாலான பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையை தொடர்ந்து வீசிய குளிர்ந்த காற்றால் கடந்த சில மாதங்களாக கடும் உஷ்ணத்தில் தவித்த பொதுமக்கள் இன்று அதிகாலை நிம்மதியாக தூங்கினர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக காடையா ம்பட்டியில் 34 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மேட்டூர் 23.6, சேலம் 20.3, ஆனைமடுவு 17, ஓமலூர் 16, ஏற்காடு 13, சங்ககிரி 9, பெத்தநாயக்கன்பாளையம் 3.5, கரிய கோவில் 2, எடப்பாடி 1.4 மி.மீ. மழை என மொத்தம் 139.80 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    • வேல்கம்பியில் பதிவாகியுள்ள கைரேகையை அதிகாரிகள் எடுத்தனர்.
    • கொள்ளையர்கள் ஏதாவது தடயங்களை விட்டு சென்றுள்ளார்களா என ஆய்வு செய்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகில் உள்ள ஆரூர்பட்டி கிராமம் கணக்குப்பட்டி பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பெரமனார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கணேசன் (33) என்பவர் பூசாரியாக உள்ளார்.

    இவர் அதிகாலை 5 மணிக்கு கோவிலுக்கு வந்து கோவிலை திறந்து பூஜைகளை முடித்துவிட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.

    அதுபோல் அதிகாலையில் கோவிலை திறந்து பூஜைகள் செய்துவிட்டு 11 மணியளவில் கணேசன் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு மாலை 5 மணி அளவில் கோவில் அருகில் வசிக்கும் கோவில் நிர்வாகத்தை சேர்ந்த செல்வம் மகன் ராஜரத்தினவேல் கோவிலை பூட்டி சாவியை வீட்டுக்கு எடுத்து சென்றார்.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் கோவிலுக்கு வந்த பூசாரி கணேசன் கோவிலை திறந்து உள்ளே சென்றபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த சில்லரை காசுகள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி அக்கம் பக்கத்தில் வசிக்கும் கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனே அவர்கள் அங்கு வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் கடப்பாரை மற்றும் கோவில் முன்பு நடப்பட்டிருந்த இரும்பு வேல் ஆகியவற்றை கொண்டு உண்டியலை உடைத்து அதில் பக்தர்கள், பொதுமக்கள் காணிக்கை செலுத்திய பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்தது.

    இது பற்றி கோவில் நிர்வாகத்தினர் தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தியபோது உண்டியலில் இருந்த ரூ.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தங்க நகை மற்றும் பணம் கொள்ளை போயிருப்பதும், கோவிலில் சி.சி.டி.வி.கேமரா பொருத்தப்படவில்லை. இதை நோட்டமிட்டு கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியுள்ளதும் தெரியவந்தது.

    கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் கோவிலுக்கு வந்து உண்டியல் மற்றும் கதவு உள்ளிட்டவைகளில் மர்ம நபர்களின் கைரேகை பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்தனர்.

    கோவில் முன்பு நடப்பட்டிருந்த வேல்கம்பியை பிடுங்கி எடுத்து உண்டியலில் இருந்த பூட்டை நெம்பி உடைத்து விட்டு மீண்டும் அதே இடத்தில் வேல்கம்பியை கொள்ளையர்கள் நட்டுள்ளனர். இந்த வேல்கம்பியில் பதிவாகியுள்ள கைரேகையை அதிகாரிகள் எடுத்தனர். மேலும் கொள்ளையர்கள் ஏதாவது தடயங்களை விட்டு சென்றுள்ளார்களா? என ஆய்வு செய்தனர்.

    கோவில் அருகாமையில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்கள் நடமாட்டம் பதிவாகி இருக்கிறதா? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சாலையில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை சந்தேகத்துக்கு இடமான வகையில் யாராவது சென்றார்களா? என அக்கம், பக்கத்தினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவிலுக்குள் மர்ம நபர்கள் புகுந்து உண்டியலை உடைத்து பணம், நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் மக்கள், பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • சேலம் மாநகரில் மதியம் 2 மணி முதல் வெயிலின் தாக்கம் குறைந்தது.
    • நீதிபுரம், லக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 7ஆயிரம் வாழைகள் முறிந்து சேதமானது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் வரலாறு காணாத அளவுக்கு கொளுத்தியது . குறிப்பாக கடந்த 2-ந் தேதி அதிக பட்சமாக 108 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் பொது மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளில் முடங்கினர்.

    இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கியது. இதனால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று பொது மக்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால் அதற்கு மாறாக வெயிலின் தாக்கம் சற்று குறைந்து 104.9 டிகிரியாக பதிவானது. மேலும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்ததுடன் பல பகுதிகளில் லேசான மழை பெய்தது.

    ஏற்காட்டில் நேற்று காலை வெயிலின் தாக்கம் இருந்த நிலையில் மதியம் 1 மணியளவில் தொடங்கிய மழை 2.40 மணி வைர இடியுடன் கொட்டி தீர்த்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கல்வராயன் மலை, கருமந்துறை பகுதியில் மதியம் 1 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. இதே போல சேலம் வலசையூர், சுக்கம்பட்டி, குப்பனூர் பகுதிகளிலும் மழை பெய்தது.

    சேலம் மாநகரில் மதியம் 2 மணி முதல் வெயிலின் தாக்கம் குறைந்தது. குளிர்ந்த காற்று வீசியது. மழை வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது.

    மேட்டூரை அடுத்த கொளத்தூர் லக்கம்பட்டி, நீதிபுரம், காரைக்காடு, கண்ணாமூச்சு ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 4.30 மணிக்கு இடி, மின்னலுட்தன் தொடங்கிய மழை அரை மணி நேரத்திற்கும் மேலாக சூறை காற்றுடன் கன மழையாக கொட்டியது. இந்த காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் கொளத்தூர் அருகே உள்ள தண்டா, நீதிபுரம், லக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 7ஆயிரம் வாழைகள் முறிந்து சேதமானது.

    இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதற்கிடையே மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. சதாசிவம் அங்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக மேட்டூரில் 19 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஏற்காடு 14.8, ஆனைமடுவு 8, பெத்தநாயக்கன்பாளையம் 6, காடையாம்பட்டி 4.8, கரியகோவில் 2, சேலம் 0.2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 54.80 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    • அ.தி.மு.க. ஆட்சியில் 14 ஆயிரத்து 500 புதிய பஸ்கள் வாங்கப்பட்டன.
    • தி.மு.க. அரசு அரசு மதுபான வருமானத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.

    சேலம்:

    ஏற்காடு மலைப்பாதையில் கடந்த 30-ந் தேதி மாலை 60 அடி பள்ளத்தில் தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

     சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவர்களை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஏற்காடு பஸ் விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு நிவாரண உதவியை உடனடியாக வழங்கவேண்டும்.

    விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்கள் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.

    தி.மு.க. அரசு 2021-2022 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 5 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்குவதாக அறிவித்தனர். 2022-23-ல் ஆயிரம் பஸ்கள் வாங்குவதாக அறிவித்தனர். எனக்கு தெரிந்து 400 முதல் 500 பஸ்கள் வரை மட்டுமே புதியதாக வாங்கப்பட்டுள்ளது.

    கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் 14 ஆயிரத்து 500 புதிய பஸ்கள் வாங்கப்பட்டன. அரசு பஸ்கள் பழுதடைந்து விட்டது. அரசு பஸ்களில் பயணிகள் அச்சத்துடன் பயணிக்கிறார்கள். சில நேரங்களில் மழைகாலங்களில் பஸ்சில் ஒழுகிறது.

    மின்சார பஸ் ஜெர்மன் நாட்டுன் அ.தி.மு.க. ஆட்சியில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. வறட்சியின் காரணமாக பொது மக்கள் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். ஆனால் இந்த அரசு மதுபான வருமானத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.

    கோடைகாலத்தில் மின்தேவை அதிகரிக்கும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

    அத்திக்கடவு அவினாசி திட்டம் அ.தி.மு.க. ஆட்சிகாலத்தில் 85 சதவீதம் நிறைவுற்ற நிலையில் இன்னும் அந்த திட்டம் நிறைவு பெற வில்லை. அதேபோல் சேலம் மாவட்டத்திலும் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஏராளமான திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன.

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த குடிமராமத்து திட்டத்தை தொடர்ந்து இருந்தாலே தற்போது கோடை காலத்தில் அந்த நீரை பயன்படுத்தி இருக்கலாம்.

    ரூ. 1000 கோடியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா கட்டப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் பூட்டி கிடக்கிறது. இதை இதுவரை திறக்கவில்லை. ஒற்றை செங்கல் உதயநிதி ஆயிரகணக்கான செங்கலால் கட்டப்பட்ட இந்த பூங்காவை ஏன் திறக்க வில்லை.

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்த திட்டம் என்பதால் இதை முடக்கி விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முட்டை விலை மேலும் 20 காசுகள் உயர்ந்தது.
    • முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 480 காசுகளாக உயர்ந்தது.

    சேலம்:

    நாமக்கல் மண்டலத்தில் 5 கோடிக்கும் அதிகமாக முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்கிறது. அதன் அடிப்படையில் பண்ணையாளர்கள் முட்டையை விற்பனை செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன்படி க டந்த 30-ந் தேதி 420 காசுகளாக முட்டை விலை மே 1-ந் தேதி 20 காசு உயர்ந்தது. பின்னர் 2-ந் தேதி 20 காசுகள் உயர்ந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை விலை மேலும் 20 காசுகள் உயர்ந்தது. இதனால் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 480 காசுகளாக உயர்ந்தது.

    இதில் முட்டை விலை கடந்த 3 நாட்களில் மட்டும் 60 காசுகள் உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது. கடும் வெயிலால் முட்டை உற்பத்தி குறைந்ததால் இந்த விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விலை உயர்வால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சில்லறை விற்பனை கடைகளில் ஒரு முட்டை 550 காசுகளுக்கு விற்கப்படுகிறது. கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை 124 ரூபாயாக இருந்த நிலையில் நேற்று மேலும் 3 ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ ௧௨௭ ரூபாயாகவும், முட்டை கோழி விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் ஒரு கிலோ 90 ரூபாயாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மேம்பாலத்தின் அடியில் இருந்து இன்று கடும் துர்நாற்றம் வீசியது.
    • அழுகிய நிலையில் பிணமாக கிடந்த 3 பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம்-சின்னப்பம்பட்டி செல்லும் சாலையில் உள்ளது பணிக்கனூர். இங்கு ராஜரத்தினம் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு அருகே மேம்பாலம் ஒன்று உள்ளது.

    இந்த மேம்பாலத்தின் அடியில் இருந்து இன்று கடும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து தோட்ட உரிமையாளர் ராஜரத்தினம் சென்று எட்டி பார்த்துள்ளார். அப்போது ஒருவர் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து ஜலகண்டாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பது தெரிய வந்தது. அவர்களுக்கு சுமார் 50 முதல் 60 வயது வரை இருக்கும் என்று தெரிய வந்தது.

    பிணமாக கிடந்த அவர்கள் அருகில் ஒரு மொபட்டும், மதுபாட்டில், தண்ணீர் இருந்தது. அவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. மேலும் அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த 3 பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 4 மாதமாக ஏற்காடு பகுதியில் மழை இல்லாததால் கடுமையான வறட்சி நிலவியது.
    • 4 மாதத்துக்கு பிறகு ஏற்காட்டில் மீண்டும் மழை பெய்ததால் ஏற்காடு பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் நிலவும் குளுகுளு சீசனை அனுபவிக்க ஆண்டு தோறும் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கிறார்கள். குறிப்பாக வாரவிடுமுறை நாட்கள், தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும்.

    சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஆண்டு தோறும் மே மாதத்தில் கோடை விழா மலர்கண்காட்சி நடத்தப்படும். இதற்காக ஆயிரக்கணக்கான பூந்தொட்டிகளில் பூச்செடிகள் நடவு செய்யப்பட்டு அவை கோடை விழா மலர்கண்காட்சி நேரத்தில் பூத்து குலுங்கும். இந்த மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வார்கள்.

    இந்த நிலையில் கடந்த 4 மாதமாக ஏற்காடு பகுதியில் மழை இல்லாததால் கடுமையான வறட்சி நிலவியது. மேலும் மலைப்பாதையில் உள்ள வனப்பகுதிகளில் மரங்கள், செடிகள், கொடிகளில் இலைகள் உதிர்ந்து சருகாக மாறியது. இதனால் கொளுத்தும் கோடை வெப்பத்தால் அடிக்கடி காட்டுத்தீயும் ஏற்பட்டு வருகிறது.

    ஆனாலும் சமவெளி பகுதிகளில் அனல் காற்று வீசிவருவதால் ஏற்காடுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. மழை இல்லாவிட்டாலும் சுற்றுலா தலங்கள் ஓரளவுக்கு பசுமையாக காட்சி அளித்து வருகிறது.

    கோடை மழை பெய்தால் தான் சுற்றுலா தலங்கள் மீண்டும் தனது பழைய பசுமையை திரும்ப பெறும் என்பதால் கோடை மழையை எதிர்பார்த்து சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர்.

    நேற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு வந்திருந்தனர். அவர்கள் படகு சவாரி செய்தும், அண்ணாபூங்காவில் ஊஞ்சல் விளையாடியும், பூத்து குலுங்கும் மலர்களை கண்டு ரசித்தும் கொண்டு இருந்தனர். அப்போது திடீரென மாலை குளிர்ந்த காற்று வீசி மழை வருவது போல் மேக கூட்டங்கள் திரண்டது. பின்னர் சிறிது நேரத்தில் கோடை மழை பெய்ய தொடங்கியது. இதனால் உற்சாகம் அடைந்த சுற்றுலா பயணிகள் மழையில் நனைத்து கொண்டே படகு சவாரி செய்தும், மழையில் துள்ளி குதித்தும் விளையாடினர். சுமார் 30 நிமிடம் தொடர்ந்து மழை பெய்தது. பின்னர் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. 4 மாதத்துக்கு பிறகு ஏற்காட்டில் மீண்டும் மழை பெய்ததால் ஏற்காடு பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையும் ஏற்பட்டது. இது குறித்து ஏற்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது. கோடை மழை பெய்ய தொடங்கினாலே சீசன் களை கட்டும். அந்த வகையில் இனி வரும் நாட்களிலும் மாலை நேரங்களில் கோடை மழை பெய்யும். இதனால் வனப்பகுதிகள் மீண்டும் பசுமையாக மாறி சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் என்று கூறினர்.

    • மாரியம்மன் கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறுகிறது.
    • கலவரத்தில் ஈடுபட்டதாக இருதரப்பையும் சேர்த்து 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்

    சேலம் மாவட்டத்தில் உள்ள தீவட்டிப்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலுக்குள் நுழைய ஒரு தரப்பினருக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்படவில்லை எனற பிரச்சனை கடந்த 4 ஆண்டுகளாக நீடித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

    இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இந்த கோவில் செயல்பட்டு வருவதால் அறநிலையத்துறை அதிகாரிகள் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

    இந்த மாரியம்மன் கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறுகிறது. அதனையொட்டி இந்த ஆண்டு மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் நடைபெற இருந்த நிலையில் மீண்டும் அந்த கோயிலில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வன்முறை வெடித்துள்ளது.

    இந்த மோதலில் 5 கடைகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தீவப்பட்டிப்பட்டி பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அனைத்து கடைகளும் அங்கு அடைக்கப்பட்டன.

    கலவரத்தில் ஈடுபட்டதாக இருதரப்பையும் சேர்த்து 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். காவல்துறையினர் பெண்கள் சிலரையும் தாக்கியதாக அப்பகுதியில் புகார் கூறிய பொதுமக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த மோதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்நிலையில், கோவில் கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நபர்களை விடுவிக்க வலியுறுத்தி தீவட்டிப்பட்டி பகுதியில் பெங்களூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • வாங்கிய கடனுக்கு இன்னும் 10 வாரங்கள் மட்டுமே தவனை உள்ளது.
    • வங்கி ஊழியர் கடன் தொகையை கட்ட சொல்வதற்காக பிரசாந்தை தொடர்புக் கொண்டுள்ளார்.

    சேலம் மாவட்டம், வாழப்பாடியை சேர்ந்த கூலித் தொழிலாளி பிரசாந்த் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஐடிஎப்சி வங்கியில், ரூ.35 ஆயிரம் கடன் தொகை பெற்றுள்ளார்.

    அவர், வாரந்தோறும் பணத்தை வட்டியுடன் சரியாக செலுத்தி வந்துள்ளார். அவரது மனைவி கவுரிக்கு உடல் நலம் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்த இரண்டு வாரங்களாக ரூ.770 தவனை தொகையை வங்கியில் செலுத்த முடியாமல் போயுள்ளது.

    வாங்கிய கடனுக்கு இன்னும் 10 வாரங்கள் மட்டுமே தவனையும் உள்ளது.

    இந்நிலையில், ஐடிஎப்சி வங்கியின் பெண் ஊழியர் சுபா என்பவர் நேற்று பிரசாந்தை தொடர்புக் கொண்டுள்ளார். பிரசாந்த் செல்போன் எடுக்கவில்லை. இதனால், பிரசாந்த் வீட்டிற்கு சென்ற சுபா வெகு நேரம் காத்திருந்த நிலையில், பணம் செலுத்திவிட்டு மனைவியை அழைத்துச் செல்லட்டும் என்று கவுரியை தன்னுடன் ஐடிஎப்சி வங்கிக்கு சுபா அழைத்துச் சென்றுள்ளார்.

    பின்னர், பிரசாந்த் நண்பரின் செல்போன் எண்ணை தொடர்புக் கொண்ட கவுரி விவரத்தை தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து, நேற்று இரவு 7.30 மணியளவில் பணத்துடன் வங்கிக்கு விரைந்த பிரசாந்த் தவனை தொகையை செலுத்திவிட்டு மனைவியை மீட்டுள்ளார்.

    தனியார் வங்கி பெண் ஊழியர் சுபா, கூலித் தொழிலாளியிடம் அடாவடியாக கடனை வசூலித்து அத்துமீறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும், இந்த விவகாரம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

    ×