என் மலர்
நீங்கள் தேடியது "ஏற்காடு கோடை விழா"
- கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெறுகிறது.
- 29-ந் தேதி கலையரங்கத்தில் நையாண்டி மேளம், கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விழா நடத்தப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக 48-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை (23-ந் தேதி) தொடங்கி 29-ந் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் பல்வேறு துறைகள் சார்பில் கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
நாளை காலை 7 மணிக்கு ஏற்காடு மலைப்பாதையில் ஆண்கள், பெண்களுக்கான மலையேற்றம் நடக்கிறது. தொடர்ந்து ஏற்காடு கலையரங்கத்தில் புலியாட்டம், சிலம்பாட்டம், நாட்டுப்புற மற்றும் மேற்கத்திய நடன நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளன.
நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு ரெட்டிரீட் விளையாட்டு மைதானத்தில் ஆண்களுக்கான கால்பந்து போட்டியும், ஏற்காடு கலையரங்கத்தில் குழந்தைகளுக்கான இளம் தளிர் நடைபோட்டி, அடுப்பில்லா சமையல், நடைவண்டி, உப்பு மூட்டை தூக்குதல், தவளும் போட்டிகளும் நடக்கிறது. இதையடுத்து கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
25-ந் தேதி திறந்தவெளி அரங்கத்தில் நாய்கள் கண்காட்சியும், மிமிக்கிரி, செமி கிளாசிக் நடனம், கோலாட்டம், பம்பை இசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும், 26-ந் தேதி காலை 10 மணிக்கு ரெட்டிரீட் விளையாட்டு மைதானத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளும், படகு இல்லத்தில் படகுப்போட்டியும் நடக்கிறது.
27-ந் தேதி காலை 10 மணிக்கு ரெட்டிரீட் விளையாட்டு மைதானத்தில் பத்திரிகையாளர்களுக்கான கிரிக்கெட் போட்டியும், கலையரங்கத்தில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியும், 28-ந் தேதி கதக் மற்றும் குச்சிபுடி நடனமும், பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சியும், 29-ந் தேதி கலையரங்கத்தில் நையாண்டி மேளம், கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.
கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் மண்டலம் மூலம் பொதுமக்களின் வசதிக்காக ஏற்காட்டுக்கு இயக்கப்படும் 12 பஸ்களுடன் கூடுதலாக 32 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளின் நலனுக்காக ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான ஏற்காடு ஏரி, பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், லேடீஸ் சீட் ஆகியவற்றை இணைக்கும் வகையில் கூடுதலாக 2 உள்வட்ட பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
- கோடை விழாவை முன்னிட்டு 2-வது நாளான இன்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர்.
- ஏற்காட்டில் கடந்த ஒரு வார காலமாக மாலை நேரம் மற்றும் இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் சார்பாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 47-வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை தமிழக அரசு முதன்மை செயலாளர் அபூர்வா நேற்று தொடங்கி வைத்தார். இந்த விழா வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது.
தோட்டக்கலை துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்களை கொண்டு இயற்கை வளங்கள் மூலம் மின்சாரம் உருவாக்குவதை எடுத்துரைக்கும் வகையில் பிரம்மாண்ட காற்றாலை, பவளப்பாறைகள், நண்டு, சிற்பி, ஆக்டோபஸ், நட்சத்திர மீன், கடல் குதிரை போன்றவைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் குழந்தைகளிடம் மரம் நடுவதை ஊக்குவிக்கும் வகையில் கார்ட்டூன் கதாபாத்திரங்களான டொனால்ட் டக், மிக்கி மௌஸ், டாம் அண்ட் ஜெர்ரி மரங்களை நடுவது போலவும், நீர் பாய்ச்சுதல் போலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று 30,000-க்கும் மேற்பட்ட வண்ணமலர் தட்டிகளை கொண்டு மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஏற்காட்டில் விளையும் காபி ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப சுவைத்து அந்த காபி ரகங்களை வாங்கி செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அண்ணா பூங்காவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வளைவை சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் செல்பி எடுத்தனர்.
இக்கோடை விழாவில் ஒவ்வொரு நாளும் ஓவியங்கள் உள்ளிட்ட அரிய புகைப்பட கண்காட்சி, கலைநிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள், செல்லப் பிராணிகள் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும், இளைஞர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
அதன்படி ஏற்காடு படகு இல்ல ஏரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பாக நேற்று மாலையில் சுற்றுலா பயணிகளுக்கான படகு போட்டி நடத்தப்பட்டது. இந்த படகு போட்டியில் பல்வேறு ஊர்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.
பெண்கள் பிரிவில் முதல் பரிசை சென்னையை சேர்ந்த கரோலின் சில்வியா, கேத்தரின் ஆகியோரும் 2-ம் பரிசை ராசிபுரத்தை சேர்ந்த கஜலட்சுமி, கலைச்செல்வி, 3-ம் பரிசை சேலத்தை சேர்ந்த மலர்கொடி, யாழினி ஆகியோர் பெற்றனர்.
ஆண்கள் பிரிவில் முதல் பரிசை சேலத்தை சேர்ந்த பிரவீன், விஸ்வநாதன், 2-ம் பரிசு ராகுல், விக்கி, 3-ம் பரிசை திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கவுதம், சந்தோஷ் ஆகியோர் பெற்றனர்.
தம்பதியர் பிரிவில் முதல் பரிசை சென்னையை சேர்ந்த பானு-லியாஸ், 2-ம் பரிசை நாமக்கல்லை சேர்ந்த சீனிவாசன்-உஷா தேவி, 3-ம் பரிசை சேலத்தை சேர்ந்த மலர்கொடி-விஜயகுமார் ஆகியோர் தட்டி சென்றனர்.
கோடை விழாவை முன்னிட்டு 2-வது நாளான இன்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர். இன்று மதியம் ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி ஏற்காடு மான்போர்ட் பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது.
ஏற்காட்டில் கடந்த ஒரு வார காலமாக மாலை நேரம் மற்றும் இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. நேற்றும் இரவில் மழை கொட்டியது. இதனால் ஏற்காடு மிகவும் குளிர்ச்சியான நிலையில் காணப்படுகிறது. இது சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குளிர்ந்த காற்றை சுவாசித்தப்படி கோடை விழாவை சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர்.






