என் மலர்tooltip icon

    சேலம்

    • மது குடித்து விட்டு பாட்டில்களை அங்கேயே போட்டு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்றனர்.
    • பகல் நேரத்திலேயே பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவிகள் அந்தப் பகுதியில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.

    சேலம்:

    சேலம் கோரிமேடு பொன்நகர் பகுதியை சேர்ந்த மக்கள் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோரிமேட்டில் ஏற்கனவே 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் புதிதாக அந்த கடைக்கு எதிரே டாஸ்மாக் கடை மற்றும் பார் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே செயல்பட்டு வரும் 2 கடையினால் அந்த பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் மது குடித்து விட்டு பாட்டில்களை அங்கேயே போட்டு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்றனர். பகல் நேரத்திலேயே பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவிகள் அந்தப் பகுதியில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.

    ஏற்கனவே அந்த கடையை அகற்றச் சொல்லி வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது புதிதாக 3-வது கடை திறக்க முயற்சி செய்து வருகிறார்கள். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 2,100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • தண்ணீர் வரத்தை விட நீர்திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 1200 கனஅடியாக உள்ளது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று 389 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 147 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 2,100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    தண்ணீர் வரத்தை விட நீர்திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 47.04 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று 46.73 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 15.81 டி.எம்.சியாக உள்ளது.

    • சேலம் மாம்பழங்களுக்கு தனி சுவை உண்டு.
    • இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் விளையும் மாம்பழங்களுக்கு தனி சுவை உண்டு என்பதால் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது.

    குறிப்பாக சேலம் மாவட்டம் ஆத்தூர், வாழப்பாடி, காரிப்பட்டி, குப்பனூர், கூட்டாத்து ப்பட்டி, வரகம்பாடி, அயோத்தியாப்பட்டணம், நங்கவள்ளி, ஜலகண்டா புரம், எடப்பாடி மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் மாம்பழங்கள் சேலம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இந்த மாம்பழங்களை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள். மேலும் ஆன்லைனிலும் உலகம் முழுவதும் இந்த மாம்பழங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    வழக்கமாக மார்ச் மாதம் மாத மத்தியில் இருந்து ஆகஸ்டு மாதம் வரை மாம்பழங்கள் வரத்து சேலம் மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் இருக்கும். ஆனால் இந்தாண்டு பருவம் தவறி பெய்த மழையால் மாங்காய் உற்பத்தி கடுமையாக குறைந்தது. இதனால் சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாங்காய் வரத்து குறைவாக இருந்தது.

    இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து மாம்பழ வரத்து படிப்படியாக அதிகரித்து தற்போது சீசன் உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் சேலம் கடை வீதிகளில் உள்ள கடைகளில் மாம்பழங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக சேலம் -பெங்களூரா, சேலம் குண்டு, அல்போன்சா, மல்கோவா, நீலம், இமாம்பசந்த், பங்கணப்பள்ளி , செந்தூரா, கிளிமூக்கு, குதாதத், உள்பட பல ரகங்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளது.

    சேலம் மார்க்கெட்டுக்கு தற்போது நாள் ஒன்றுக்கு 40 டன் அளவிற்கு மாம்பழங்கள் வரத்து உள்ளது. இதனால் சேலம் மாநகர தெருக்களில் மாம்பழ வாசம் வீச தொடங்கி உள்ளது.

    சேலம் மாநகர தெருக்கள், ஏற்காடு சாலை, செவ்வாய்ப்பேட்டை கடை வீதி, அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, ஜங்சன், கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளில் கடைகளிலும், தெருவோர தள்ளுவண்டிகளிலும் மாம்பழ விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் கடை வீதிகளிலும், சேலம் மாநகர தெருக்களிலும் மாம்பழ வாசம் கம, கமக்க தொடங்கி உள்ளது.

    ேசலம் கடை வீதியில் மாம்பழங்கள் தற்போது ஒரு கிலோ 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனையாகிறது. கடந்த ஆண்டை விட விலை சற்று அதிகமாக இருந்தாலும் கடந்த வாரத்தை விட தற்போது விலை குறைந்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இது குறித்து சேலத்தை சேர்ந்த மாம்பழ வியாபாரி ஒருவர் கூறுகையில், சேலம் மார்க்கெட்டுகளில் கடந்த ஆண்டு இதே நாளில் 50 டன் வரை மாம்பழங்கள் வரத்து இருந்தது. ஆனால் இந்தாண்டு தற்போது மாம்பழ வரத்து 40 டன்னாக உள்ளது. தற்போது மாம்பழ சீசன் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது விலை குறைந்துள்ளது, இனி வரும் நாட்களில் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று புறப்படும் நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் கரூர், நாமக்கல், சேலம், திருப்பத்தூர் வழியாக புனே ஜங்சன் வரை மட்டுமே இயக்கப்படும்.
    • மும்பை முதல் புனே வரையிலான ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று புறப்படும் நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் கரூர், நாமக்கல், சேலம், திருப்பத்தூர் வழியாக புனே ஜங்சன் வரை மட்டுமே இயக்கப்படும்.

    பொறியியல் பணியால் புனே முதல் மும்பை வரையிலான ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. ஜூன் 1-ந்தேதி மும்பையில் இருந்து புறப்பட வேண்டிய மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் புனே ஜங்சனில் இருந்து புறப்பட்டு சேலம் வழியாக நகார்கோவிலை சென்றடையும். இதனால் மும்பை முதல் புனே வரையிலான ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • கறிக்கோழிகள் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டதால் விலை உயர்ந்துள்ளது.

    சேலம்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, திருப்பூர் கோவை உள்பட நாமக்கல் மண்டலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட கறிக்கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த கோழிப்பண்ணைகள் மூலம் தினசரி 30 லட்சத்திற்கும் அதிகமாக கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்தநிலையில் கறிக்கோழி விலை படிப்படியாக உயர்ந்து பண்ணை கொள்முதல் விலை ஒரு கிலோ 147 ரூபாயாக தற்போது உயர்ந்துள்ளது . இதனால் சேலம், நாமக்கல் மாவட்ட கறிக்கோழி விற்பனை சில்லரை கடைகளில் ஒரு கிலோ கறிக்கோழி 260 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தேவையை விட குறைந்த அளவே பொதுமக்கள் இறைச்சி வாங்கி செல்கிறார்கள்.

    இந்த விலை உயர்வு குறித்து கறிக்கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறுகையில், தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் கடந்த மாதம் வீசிய வெப்ப அலையால் அதிக அளவில் கறிக்கோழிகள் இறந்தன. இதனால் கறிக்கோழிகள் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டதால் விலை உயர்ந்துள்ளது. விரைவில் உற்பத்தி அதிகரித்து விலை குறையும் என்றனர்.

    இதனிடையே 520 காசுகளாக இருந்த முட்டை விலை நேற்று நாமக்கல்லில் நடந்த கூட்டத்தில் 5 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.25 ஆக நிர்ணயிக்கப்பட்டது. சில்லரை கடைகளில் 650 காசுகளுக்கு விற்கப்படுகிறது. முட்டைக்கோழி விலை ஒரு கிலோ ரூ. 98 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் (சிகா) நிர்ணயித்துள்ளது.

    • அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
    • இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

    நேற்று முன்தினம் 1,432 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மேலும் சரிந்து 795 கன அடியானது. இன்று நீர்வரத்து மேலும் சரிந்து 389 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் குடிநீர் தேவைக்காக 2 ஆயிரத்து 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 47.31 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு மேலும் சரிந்து 47.04 அடியானது.

    இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • வழக்கமாக மே மாத இறுதியில் கர்நாடகா மற்றும் கேரளாவில் வயநாடு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும்.
    • இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    சேலம்:

    மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்களில் 16.5 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மேலும் இந்த மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் மேட்டூர் அணை திகழ்கிறது. அணையை நம்பி பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக குறுவை சாகுபடிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும், இந்த தண்ணீர் திறப்பு நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை மற்றும் நீர் இருப்பை பொறுத்து மாறுபடும். மேட்டூர் அணைக்கு நீர்பிடிப்பு பகுதிகளாக கர்நாடகா மற்றும் கேரளா மாநிலம் முக்கிய பகுதியாக உள்ளது .

    வழக்கமாக மே மாத இறுதியில் கர்நாடகா மற்றும் கேரளாவில் வயநாடு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும். அப்போது அங்கிருந்து காவிரியில் வரும் தண்ணீர் கரை புரண்டு ஓடி ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடையும். அணையின் நீர் இருப்பு 100 அடிக்கு மேல் இருக்கும்பட்சத்தில் அணைக்கு நீர்வரத்தும் திருப்தியாக இருந்தால் மேட்டூர் அணையில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.

    ஆனால் நடப்பாண்டில் நேற்று 1,432 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 795 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரியில் 2 ஆயிரத்து 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 47.31 அடியாக உள்ளது.

    இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி மழை தொடங்கினாலும் இனி வரும் நாட்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து காவிரியின் குறுக்கே உள்ள கர்நாடக அணைகள் நிரம்பி பின்னர் தான் மேட்டூர் அணைக்கு வந்தடையும். இதனால் வருகிற 12-ந் தேதிக்குள் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டுமா, டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா? தற்போது விவசாய பணிகளை தொடங்கலாமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

    • ஏற்காட்டில் இன்று 47-வது மலர் கண்காட்சி கடந்த 22-ம் தேதி தொடங்கியது.
    • இந்த கண்காட்சி தொடர்ந்து வருகிற 26-ந் தேதி வரை 5 நாட்கள் இந்த மலர் கண்காட்சி நடைபெறுகிறது.

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நிலவி வரும் குளுகுளு சீசனை அனுபவிக்க ஆண்டு தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும்.

    இதையடுத்து சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க கோடை விழா மலர் கண்காட்சி நடைபெறும். இந்த மலர் கண்காட்சியை தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினமும் கண்டு ரசித்து செல்வார்கள்.

    ஏற்காட்டில் இன்று 47-வது மலர் கண்காட்சி கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இந்த கண்காட்சி தொடர்ந்து வருகிற 26-ந் தேதி வரை 5 நாட்கள் இந்த மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மலர் கண்காட்சியையொட்டி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு இன்று வருகை தந்துள்ளனர்.

    இந்நிலையில், பொது மக்களின் கோரிக்கையை ஏற்று ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி மே 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • கேரளா, கர்நாடகா போன்ற இடங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.
    • ஏற்காட்டில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது.

    ஏற்காடு:

    ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி 3-வது நாளான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை காண திரண்டு வந்தனர்.

    தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா போன்ற இடங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.

    ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 வாரமாக பரவலாக மழை பெய்து சீதோசன நிலை மிகவும் குளுமையாக மாறி உள்ளது.

    இதனால் ஏற்காட்டில் குளிர் அதிகமாக காணப்படுகிறது தற்போது கோடை விழா மலர் கண்காட்சி நடைபெற்று வருவதால் இந்தகால சூழ்நிலையை இங்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்து வருகின்றனர்.

    பூத்துக் குலுங்க மலர்களையும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள உருவங்களையும் கண்டு ரசித்து செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். ஏற்காட்டில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது. சுற்றுலா பயணிகள் பனிமூட்டத்தை போட்டோ எடுத்தும் செல்பி எடுத்தும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • கோகுல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் சுகமதியை மிரட்டியதாக கூறப்படுகிறது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள புள்ளாகவுண்டம்பட்டி வினோபாஜி நகரை சேர்ந்தவர் கோகுல் (30), ஆட்டோ டிரைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த சுகமதி (24) என்பவரை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து கலப்பு திருமணம் செய்தார். இவர்களுக்கு சஞ்சனாஸ்ரீ (6), ரிஷ்மிகா (2) என 2 குழந்தைகள் இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குழந்தைகளுக்கு ஐஸ்கிரீமில் விஷம் கலந்து சுகமதி கொடுத்து கொன்று விட்டு அவரும் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று சுகமதி வீட்டில் இருந்து வெளியில் வராததை அறிந்த அவரது தந்தை பாபு அங்கு சென்று பார்த்த போது சுகமதி மற்றும் அவரது குழந்தைகள் இறந்து கிடந்தனர்.

    இதற்கிடையே அங்கு வந்த தேவூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கோகுல் சொந்தமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் வாங்கி உள்ளார். இதற்காக 40 ஆயிரம் ரூபாய் சுகமதியின் தந்தை பாபுவிடம் வாங்கியதாக கூறப்படுகிறது.

    கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மகளிர் சுய உதவிக்குழுவில் கோகுல் தம்பதி கடன் வாங்கினர். அந்த பணத்தை தனது தந்தையிடம் வாங்கிய கடனுக்கு கொடுக்குமாறு சுகமதி கேட்டுள்ளார். ஆனால் அதனை கொடுக்க கோகுல் மறுத்தார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் மாறி மாறி தாக்கி கொண்டனர்.

    பின்னர் கோகுல் கோபித்து கொண்டு அருகில் உள்ள தனது பெரியம்மா வீட்டிற்கு சென்று அங்கேயே கடந்த ஒரு மாதமாக தங்கி விட்டார். பின்னர் சுகமதி பல முறை கோகுலிடம் பேச முயன்றும், அவர் போனை எடுக்க வில்லை. மேலும் கோகுல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் சுகமதியை மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவங்களால் மனம் உடைந்த சுகமதி வாழ்க்கையில் வெறுப்படைந்து குழந்தைகளுக்கு ஐஸ்கிரீமில் விஷத்தை கலந்து கொடுத்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து கோகுல் மீது தற்கொலைக்கு தூண்டியதாகவும், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை பிரிவிலும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நேற்றிரவு சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    மேலும் இந்த சம்பவத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா ? என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே சுகமதி மற்றும் அவரது குழந்தைகளின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்கு செய்யப்பட்டது.

    • பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கோர்ட்டில் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    • பணம் கொடுத்த சேந்தமங்கலத்தை சேர்ந்த தொழில் அதிபர் இறந்து விட்டதாக சாபீர் கூறியதால் அவர் உண்மையாக இறந்து விட்டாரா? என்பது குறித்தும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை ராமலிங்கம் தெருவை சேர்ந்தவர் சாபீர் (32), பிரபல ரவுடியான இவர் மீது கஞ்சா வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இந்தநிலையில் சேலம் வீராணம் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அம்மாப்பேட்டை போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா வைத்திருந்த 8 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில், ரவுடி சாபீரும் கஞ்சா விற்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் நேற்று சாபீர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது வீட்டில் இருந்த பையை சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தது. அனைத்தையும் எண்ணிய போது 1000 ரூபாய் நோட்டுகள் 7400-ம், 500 ரூபாய் நோட்டுகள் 5000-ம் என 99 லட்சம் மதிப்பிலான மதிப்பிழப்பு செய்யப்பட்ட செல்லாத பழைய ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரிய வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் விசாரித்தனர்.

    அப்போது பிரபல ரவுடியான சாபீர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக கூறினார். மேலும் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்த தொழில் அதிபர் பணத்தை மாற்றி தருமாறு கூறி தன்னிடம் கொடுத்தார். ஆனால் அதனை மாற்ற முடியாத நிலையில் பணம் கொடுத்தவர் இறந்து விட்டார்.

    இதனால் அந்த பணத்தை தனது வீட்டிலேயே வைத்திருந்ததாகவும் கூறினார். இதையடுத்து சாபீரை கைது செய்த போலீசார் 99 லட்சம் மதிப்பிலான அந்த ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கோர்ட்டில் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் பணம் கொடுத்த சேந்தமங்கலத்தை சேர்ந்த தொழில் அதிபர் இறந்து விட்டதாக சாபீர் கூறியதால் அவர் உண்மையாக இறந்து விட்டாரா? என்பது குறித்தும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    • காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அவர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
    • அவரது உடலுக்கு அனைத்து அரசியல் கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ஆறகளூரை சேர்ந்த வையாபுரி மனைவி ராஜம்மாள் (வயது 84).

    இவர் 1980-ல் அப்போதைய தலைவாசல் சட்டமன்ற தொகுதியில் (தற்போது கெங்கவல்லி) காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1984-ல் மீண்டும் வெற்றி பெற்றார்.

    பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அவர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். 1989-ல் அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தபோது ஜெயலலிதா அணியில் தலைவாசல் தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

    இந்த நிலையில் வயது முதிர்வு, உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க., உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    ×