என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை 2 மடங்காக அதிகரிப்பு
- இ-பாஸ் இருந்தால் தான் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
- நீர்வீழ்ச்சி உள்ளிட்டவற்றை பார்த்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி.
சேலம்:
ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா தலங்களில் இ-பாஸ் இருந்தால் தான் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் ஊட்டி, கொடைக்கானலில் சுற்றலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து விட்டது.
இந்த இடங்களை தவிர்த்து மற்ற இடங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு மற்றும் மேட்டூர் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஏற்காட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது.
வழக்கமாக சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் சுமார் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்கள். தற்போது சராசரியாக 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் சுற்றுலா பயணிகள் தினம் வருகிறார்கள்.
இன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் கார், வேன், இருசக்கர வாகனங்கள், பஸ்களில் வந்தனர்.இதுபோல் மேட்டூருக்கும் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்தனர்.
அணையை ஒட்டியுள்ள காவிரி ஆற்றில் நீராடி மகிழ்ந்த அவர்கள் பின்னர், அணைக்கட்டு முனியப்பனை தரிசனம் செய்தனர். பூங்காவில் உள்ள மீன் காட்சியகம், மான் பண்ணை, முயல் பண்ணை, பாம்புப் பண்ணை ஆகியவற்றை பார்த்து ரசித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கொல்லிமலையில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்குள்ள நீர்வீழ்ச்சி உள்ளிட்டவற்றை பார்த்து சுற்றுலாப் பயணிகள் மகிழச்சி அடைந்தனர்.






