என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1120 கனஅடியாக அதிகரிப்பு
- கடந்த சில நாட்களாக தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
- தற்போது அணையில் 17.68 டி.எம்.சி. தண்ணீரே இருப்பு உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணையின் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இது தவிர ஏராளமான கூட்டுகுடிநீர் திட்டப்பணிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அணைக்கு போதிய நீர்வரத்து இல்லாததாலும், மழை இல்லாததாலும் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது. இதன் காரணமாக அணையின் நீர்த்தேக்க பகுதிகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் பருவமழையை எதிர்பார்த்து பொதுமக்கள், விவசாயிகள் காத்து உள்ளனர்.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று மாலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 822 கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து வினாடிக்கு 1120 கனஅடியாக அதிகரித்து உள்ளது.
மேலும் அணையின் நீர்மட்டம் 49.79 அடியாகவும், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறப்பு வினாடிக்கு 2 ஆயிரத்து 100 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது அணையில் 17.68 டி.எம்.சி. தண்ணீரே இருப்பு உள்ளது.






