என் மலர்
சேலம்
- ஓமலூரை அடுத்த ஜோடுகுழி பகுதியில் அதிவேகமாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
- அதிகாரிகள் லாரியை ஓட்டி வந்த பெங்களூரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக அதிக அளவில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திய வருவதும் அதனை போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் அடிக்கடி நடந்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக பெங்களூருவில் இருந்து நேற்றிரவு சேலம் மாவட்டத்திற்கு லாரியில் தடைசெய்யப்பட்ட புகையிலை போதை பொருட்கள் கடத்தி வருவதாக சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி கதிரவன் தலைமையிலான அதிகாரிகள் நேற்றிரவு ஓமலூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஓமலூரை அடுத்த ஜோடுகுழி பகுதியில் அதிவேகமாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரியில் தடை செய்யப்பட்ட 4 டன் போதை புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. அதனை மதிப்பீடு செய்யும் பணி தற்போது வரை நடைபெற்று வருகிறது.
இதையடுத்து லாரியுடன் அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் லாரியை ஓட்டி வந்த பெங்களூரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் விசாரணை முடிவில் டிரைவரை போலீசில் ஒப்படைக்கவும், வாகனம் மற்றும் குட்காவை கோர்ட்டில் ஒப்படைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- முண்டகம்பாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் கலெக்டர் கார்மேகம் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- குறித்த நேரத்தில் சமைத்து வழங்கிய சமையலர் சோனியாவிற்கு பாராட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
சேலம்:
ஏற்காட்டில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்ட செயல்பாடுகள் குறித்து முண்டகம்பாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் கலெக்டர் கார்மேகம் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இப்பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவினை தரமாகவும், சுவையாகவும், குறித்த நேரத்தில் சமைத்து வழங்கிய சமையலர் சோனியாவிற்கு பாராட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
மேலும், காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து பள்ளிகளிலும் நாள்தோறும் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு, திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.915 ஆக இருந்த சிலிண்டர் விலை இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 53 ரூபாய் 50 காசு உயர்த்தப்பட்டது.
- கடந்த 6 மாதங்களாக சமையல் கியாஸ் இதே விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வந்தது.
சேலம்:
பெண்கள் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் கியாஸ் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே சென்றது. ஒவ்வொரு ஆண்டும் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை அதிகரித்துக் கொண்டே சென்று கடந்த மார்ச் மாதம் 1118 ரூபாய் 50 காசாக உயர்ந்தது.
2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.915 ஆக இருந்த சிலிண்டர் விலை இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 53 ரூபாய் 50 காசு உயர்த்தப்பட்டது. இதன் மூலம் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை முதல் முறையாக ரூ. ஆயிரத்தை தாண்டியது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.1068.50 ஆக இருந்தது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் சிலிண்டரின் விலை ரூ.50 அதிகரித்தது. இதன் மூலம் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை மேலும் உயர்ந்து ரூ.1118.50 ஆனது.
கடந்த 6 மாதங்களாக சமையல் கியாஸ் இதே விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இப்படி சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ஏறிக் கொண்டே சென்றதால் குடும்ப தலைவிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
இந்த சிலிண்டர் விலை உயர்வு நடுத்தர மற்றும் ஏழை மக்களை கடுமையாக பாதித்தது. தங்களது மாத வருவாயில் குறிப்பிட்ட தொகைைய கியாஸ் சிலிண்டருக்கே ஒதுக்க வேண்டியுள்ளது என்று கூறி அவர்கள் வேதனைப்பட்டு வந்தனர்.
இப்படி சிலிண்டர் விலை தாறுமாறாக ஏறி இருந்ததால் கிராமப்புறங்களில் பலர் விறகு அடுப்புகளுக்கும் மாறினார்கள். பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை வெகுவாக குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. சிலிண்டர் விலை குறையுமா? என இல்லத்தரசிகளும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்த நிலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப் பட்டிருக்கிறது. இதன் மூலம் சேலத்தில் ரூ.1190 ஆக இருந்த கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.990 ஆக குறைந்திருக்கிறது. கடந்த 1½ ஆண்டுகளுக்கு பிறகு சிலிண்டர் விலை 1000-க்கும் கீழ் குறைந்திருக்கிறது.
இந்த விலை குறைப்பு இன்று முதல் (புதன்கிழமை)அமலுக்கு வந்துள்ளது. இது இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் பெண்கள் பலர் சிலிண்டர் விலையை மேலும் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பெண்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் வருமாறு:-
சேலம் புதுரோடு பகுதியை சேர்ந்த குடும்ப தலைவி கவுசல்யா (25): மின்சாரம், காய்கறிகள் மற்றும் அத்தியா வசிய பொருட்கள் விலை உயர்ந்தி ருக்கும் நிலையில் கியாஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை வரவேற்கிறோம்.
சேலத்தை சேர்ந்த வங்கி ஊழியர் கலைமதி (30): அரசு இலவசமாக எந்த பொருளையும் தர வேண்டாம். விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைக்க வேண்டும். அந்த வகையில் கியாஸ் விலையில் ரூ.200 குறைத் துள்ளது வரவேற்கதக்கது. இதேபோல் காய்கறி உள்ளிட்டவற்றின் விலையை யும் கட்டுப் படுத்த வேண்டும்.
அம்மாபேட்டையை சேர்ந்த பெரியநாயகி (40): ஏழை மக்கள் விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப் பட்டு உள்ளனர். குழந்தை களை படிக்க வைக்கவே சிரமப்பட்டு வருகிறோம். கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு என்பது ஒவ்வொரு மாதமும் பெரும் சுமையாகவே இருந்தது. தற்போது இந்த விலை குறைப்பு வரவேற்கத்தக்கது தான். மேலும் ரூ.200 குறைத்தால் நன்றாக இருக்கும்.
மத்திய அரசு எந்த இலவசமும் கொடுக்காமல் பொதுமக்கள் வாழ்க்கை தரம் உயர நல்ல திட்டங்களை கொண்டு வந்து நாட்டு மக்கள் வளர்ச்சிக்கு வழிவகை செய்ய வேண்டும்.
- கலெக்டரின் நடவடிக்கைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று வருவாய்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- தமிழக அரசு இதனை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டன கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.
சேலம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆதி திராவிட நலத்துறை தாசில்தார் மனோஜ் முனியப்பன் தலைமையிலான அதிகாரிகள் உச்ச நீதிமன்றம் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதற்கு அந்த தொகுதி எம்.எல்.ஏ.,எதிர்ப்பு தெரிவித்தார். இதை அடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர், மனோஜ் முனியப்பனை சஸ்பெண்டு செய்தார். இதனால் வருவாய்துறை ஊழியர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி கலெக்டரின் நடவடிக்கைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று வருவாய்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறை ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் நுழைவாயில் அருகே படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிகாரியின் சஸ்பெண்டை ரத்து செய்து உடனடியாக மீண்டும் அவரை பணியில் சேர்க்க வேண்டும், தமிழக அரசு இதனை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டன கோஷங்கள் எழுப்பி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வருவாய்த்துறை ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி கூறுகையில்:-
கள்ளக்குறிச்சி ஆதிதிரா விடர் நலத்துறை தாசில்தார் மனோஜ் முனியப்பன் பணியிடை நீக்கத்தினை ரத்து செய்யக் கோரியும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஏற்கனவே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த நிலையில் இன்று பணியை புறக்கணித்து தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று மனோஜ் முனியப்பனுக்கு ஆதரவாக கள்ளக்குறிச்சிக்கு போராட சென்ற வருவாய் துறை ஊழியர்களை போலீசார் கைது செய்து இன்று காலை தான் விடுவித்தனர்.
இது மிகவும் கண்டிக்கத்தக்கது. மனோஜ் முனியப்பனை மீண்டும் பணியில் சேர்க்கும் வரை போராட்டம் தொடரும். இதில் எந்த சமரசத்திற்கும் உடன்பாடு இல்லை. வருவாய் துறை ஊழியர்கள் இரவு, பகல் பாராமல் முழு நேரமும் பணியாற்றி வருகிறோம்.
ஒவ்வொரு புதிய திட்டங்களுக்கும் புதியதாக ஆட்கள் நியமிக்காமல் பணியில் இருப்பவர்களே செய்து வருகிறோம்.இதனால் பணிச்சுமை அதிகமாக உள்ளது. இப்படி பணி செய்யும் மனோஜ் முனியப்பனை எந்த விசாரணையும் செய்யாமல் பணி இடை நீக்கம் செய்தது கண்டிக்கத்தக்கது.
மாவட்டம் முழுவதும் இருந்து வருவாய் துறை ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர். இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார் அலுவலக பணிகளும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 650-க்கும் மேற்பட்ட தாசில்தார் அலுவலக பணியாளர்கள் வட்டாட்சியர்கள் மற்றும் கிராம உதவியாளர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பணிகள் முழுமையாக பாதிப்பு அடைந்துள்ளது. அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம், மகளிர் உரிமை தொகை திட்டம், உள்பட வருவாய்த்துறை பல்வேறு பணிகள் இந்த போராட்டத்தால் முடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- நேற்று சோபிகா தனது கணவர் வீட்டில் உள்ள மின்விசிறி கொக்கியில் சேலை கட்டப்பட்டு கழுத்து இறுகிய நிலையில் பிணமாக தொங்கினார்.
- சோபிகாவின் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி இன்று காலை பெற்றோர் கவிதா- முருகேசன் மற்றும் உறவினர்கள் சோபிகா உடலை வாங்க மறுத்து அரசு ஆஸ்பத்திரியில் கதறி அழுதனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் பேரூராட்சி 14-வது வார்டு சுகந்தம் நகர் பகுதியை சேர்ந்தவர் அஜித் (வயது 25). இவர் அதே பகுதியை சேர்ந்த சோபிகா (17) என்பவரை காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் நேற்று சோபிகா தனது கணவர் வீட்டில் உள்ள மின்விசிறி கொக்கியில் சேலை கட்டப்பட்டு கழுத்து இறுகிய நிலையில் பிணமாக தொங்கினார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோபிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் சோபிகாவின் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி இன்று காலை பெற்றோர் கவிதா- முருகேசன் மற்றும் உறவினர்கள் சோபிகா உடலை வாங்க மறுத்து அரசு ஆஸ்பத்திரியில் கதறி அழுதனர்.
பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்த அவர்கள் கலெக்டர் அலுவலக வளாக பிரதான நுழைவு வாயில் முன்பு அமர்ந்து சோபிகாவின் கணவர் அஜித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அழுது புரண்டு போராட்டம் நடத்தினர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சோபிகாவின் பெற்றோர் கவிதா-முருகேசன் தம்பதி கண்ணீர் மல்க போலீசாரிடம் கூறியதாவது:-
எங்களது மகளுக்கு 17 வயது தான் ஆகிறது. இதனால் திருமணத்திற்கு முன்பு நாங்கள் அஜித்க்கு திருமணம் ெசய்து கொடுக்க மறுப்பு தெரிவித்து தர்மபுரியில் உள்ள உறவினர் ஒருவடைய வீட்டில் சோபிகாவை மறைத்து வைத்தோம். இதை அறிந்த அஜித் அங்கு வந்து சோபிகாவை கட்டாயப்படுத்தி அவரை அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு அஜித் அடிக்கடி சோபிகாவிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தார். நேற்று அஜித் சோபிகாவிடம் ரூ.10 ஆயிரம் பெற்றோரிடம் இருந்து வாங்கி வருமாறு கூறினார். ஆனால் எங்களின் குடும்ப கஷ்டத்தை பார்த்து மகள் பணம் வாங்கி கொடுக்கவில்லை. இதனால் அஜித் அவரை திட்டியுள்ளார்.
சோபிகா தற்கொலை செய்யவில்லை. அவரது கழுத்தில் கயிறு போட்டு இறுக்கப்பட்டுள்ளது. கழுத்தில் காயம் உள்ளது. எனவே மகளின் சாவில் சந்தேகம் இருக்கிறது. அஜித் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சோபிகா உடலை வாங்க மாட்டோம். இவ்வாறு பெற்றோர் கூறினர்.
இது தொடர்பாக போலீசாா் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுப்பெண் திருமணம் ஆகி 4 மாதங்களிலேயே மர்மமான முறையில் இறந்து விட்டதால் மேட்டூர் உதவி கலெக்டர் தணிகாசலமும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.
- பல்கலைக்கழகத்துக்கு எதிராக உள்ள கோட்ட கவுண்டம்பட்டியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருகிறார்.
- 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து உதவி பேராசிரியை சுகன்யா அணிந்து இருந்த 2 பவுன் நகையை பறித்து சென்றனர்.
சேலம்:
சேலம் அரசு என்ஜினீயரிங் கல்லூரி உதவி பேராசிரியையாக சுகன்யா (35) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பல்கலைக்கழகத்துக்கு எதிராக உள்ள கோட்ட கவுண்டம்பட்டியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் இவர் பணி முடிந்து தனது மொபட்டில் பல்கலைக்கழகம் பகுதியில் உள்ள பாலத்தின் கீழே சென்று கொண்டு இருந்தார். அங்கு இருந்த 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து உதவி பேராசிரியை சுகன்யா அணிந்து இருந்த 2 பவுன் நகையை பறித்து சென்றார்.
இதுகுறித்து தெரியவந்ததும் கருப்பூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அப்போது உதவி பேராசிரியை சுகன்யாவிடம் நகையை பறித்து சென்றது ஓமலூர் மாட்டு காரன்புதூர் பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் உள்பட 2 பேர் என்று தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான வாலிபர் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ரெயில்களில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் கடத்தப்படுகிறா? என அடிக்கடி சோதனை செய்வது வழக்கம்.
- மொரப்பூர் அருகே ரெயில் வந்தபோது பொதுபெட்டியில் இருந்த 2 பைகளை போலீசார் திறந்து பார்த்தனர்.
சேலம்:
சேலம் ரெயில்வே போலீஸ் நிலைய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ரெயில்களில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் கடத்தப்படுகிறா? என அடிக்கடி சோதனை செய்வது வழக்கம்.
அதன்படி ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு வந்த பிலாஸ்பூர் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் விரைவு வண்டியில் சேலம் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர். இதில் மொரப்பூர் அருகே ரெயில் வந்தபோது பொதுபெட்டியில் இருந்த 2 பைகளை போலீசார் திறந்து பார்த்தனர். அதில் 16 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த பைகளை கொண்டு வந்த சேலம் சிவதாபுரம் பகுதியை சேர்ந்த சிவா (50) என்பவரிடம் விசாரணை நடத்தினர். இதில் விஜயவாடாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததாக அவர் தெரிவித்தார். இதையடுத்து அவரை சேலம் ரெயில்வே போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் மாவட்டம், பூலாம்பட்டி பேரூராட்சி பகுதியில் மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் கணேஷ்ராம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- தூய்மை பணிகள், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்து அங்கிருந்த ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம், பூலாம்பட்டி பேரூராட்சி பகுதியில் மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் கணேஷ்ராம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அவர் பூலாம்பட்டி பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் திட்ட பணிகள் மற்றும் பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் தூய்மை பணிகள், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்து அங்கிருந்த ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து அவர் பூலாம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு பகுதியில் உள்ள தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட சமையல் கூடத்தில் திடீரென நுழைந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த உணவுப் பொருட்களின் தரம், பயன்படுத்தப்படும் காய்கறி அளவு, இருப்பு பதிவேடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த உதவி இயக்குனர் அங்கிருந்த சமையல் பணியாளர்களுக்கு சுகாதாரமான முறையில் உணவுகளை தயாரித்தல் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். மேலும் அவர் அங்கு தயாரிக்கப்பட்டு இருந்த உணவு வகைகளையும் ருசி பார்த்தார். குழந்தைகளுக்காக இந்த உணவினை மிகுந்த கவனத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயார் செய்திட வேண்டுமென உத்தரவிட்டார்.
இந்த திடீர் ஆய்வின்போது பூலாம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவானந்தம், பேரூராட்சி தலைவர் அழகுதுரை, துணைத் தலைவர் முரளி மற்றும் முன்னாள் கவுன்சிலர் பழனிசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
- தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் அருகில் சிறியதாக துணிக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
- சம்பவத்தன்று துணி கடைக்கு வந்த ஒரு வாலிபர் மூதாட்டி வசந்தாவிடம் துண்டு வாங்குவது போல் பேச்சு கொடுத்துள்ளார்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் 17-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மனைவி வசந்தா (65).
துணிக்கடை
இவர் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் அருகில் சிறியதாக துணிக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று துணி கடைக்கு வந்த ஒரு வாலிபர் மூதாட்டி வசந்தாவிடம் துண்டு வாங்குவது போல் பேச்சு கொடுத்துள்ளார். இதையடுத்து மூதாட்டி துண்டை எடுத்து அவரிடம் காண்பித்தக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வாலிபர் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி கூச்ச லிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுகுறித்து வசந்தா தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தரமற்ற உணவுகள் ஓட்டல்களில் விநியோகிப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
- ஆய்வின்போது 8 ஓட்டல்களில் கெட்டுப்போன சட்னி, மோர், உணவுகள் பொதுமக்களுக்கு வழங்கியது தெரியவந்தது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் தரமற்ற உணவுகள் ஓட்டல்களில் விநியோகிப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி கதிரவன் தலைமையில் அதிகாரிகள் மாவட்ட முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 39 ஓட்டல்களில் உணவு பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 8 ஓட்டல்களில் கெட்டுப்போன சட்னி, மோர், உணவுகள் பொதுமக்களுக்கு வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஓட்டல்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் இதுேபான்று சோதனை தொடரும் என்றும், தரம் இல்லாத உணவுகள் ஓட்டல்களில் வைக்கப்பட்டால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும் வழக்குப் பதிவு செய்து உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
- சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் - ஓமலூர் பிரதான சாலையில் உள்ள அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்புக்கான பொது ஏலம் நடைபெற்றது.
- தற்போது வழக்கத்தைவிட கூடுதலான விலை கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் - ஓமலூர் பிரதான சாலையில் உள்ள அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்புக்கான பொது ஏலம் நடைபெற்றது.
இதில் சுமார் 152 குவிண்டால் எடையுள்ள 303 மூட்டை தேங்காய் பருப்புகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் முதல் தர தேங்காய் பருப்புகள் குறைந்தபட்ச விலையாக குவிண்டால் ஒன்று ரூ.7,556 முதல் ரூ.7,810 வரை விற்பனையானது. 2-ம் தர தேங்காய் பருப்புகள் குவிண்டால் ஒன்று ரூ.6,175 முதல் ரூ.7,475 வரை விலை போனது. இதன்படி மொத்தம் ரூ.11 லட்சத்து 23 ஆயிரத்து 771-க்கு தேங்காய் பருப்புகள் விற்பனையானது.
தற்போது வழக்கத்தைவிட கூடுதலான விலை கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
- சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி அம்பேத்கர் தெரு செல்லும் பகுதியில் பி.எஸ்.என்.எல். கேபிள் பதிப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
- நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் அந்த பகுதியில் மண்ணை தோண்டியபோது திடீரென பாறை உடைபடுவது போன்ற சத்தம் கேட்டது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி அம்பேத்கர் தெரு செல்லும் பகுதியில் பி.எஸ்.என்.எல். கேபிள் பதிப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் அந்த பகுதியில் மண்ணை தோண்டியபோது திடீரென பாறை உடைபடுவது போன்ற சத்தம் கேட்டது.
கருங்கல் சிலை
இதையடுத்து அங்கு பார்த்தபோது கருங்கல் சிலை மண்ணுக்குள் தென்பட்டது. உடனடியாக இதுபற்றி வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய் துறை அதிகாரிகள் சிலையை மீட்டு பார்த்தபோது அது 10 கைகளுடன் 2 அடி உயரம் கொண்ட பத்ரகாளியம்மன் கற்சிலை என்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த சிலையை நங்கவள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவ லகத்திற்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர்.
மக்கள் வழிபாடு
சிலை கண்டெடுக் கப்பட்டது குறித்து தகவல் அறிந்து சுற்றுவட்டார கிராம பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் சாமி சிலைக்கு புடவை மற்றும் மாலை அணிவித்து வழிபட்டு சென்றனர்.
ஒப்படைப்பு
இதனிடையே மீட்கப்பட்ட பத்ரகாளியம்மன் சிலை சேலம் தொல்லியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இதன்படி இன்று வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு வந்த தொல்லியல் துறை அதிகாரிகளிடம் சிலை ஒப்படைக்கப்பட்டது.
இப்பகுதியில் பழமையான கோவில்கள் ஏராளமாக உள்ளதால் தொல்லியல் துறையினர் இந்த பகுதிகளில் ஆய்வு நடத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






