search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Salem news: Struggle"

    • நேற்று சோபிகா தனது கணவர் வீட்டில் உள்ள மின்விசிறி கொக்கியில் சேலை கட்டப்பட்டு கழுத்து இறுகிய நிலையில் பிணமாக தொங்கினார்.
    • சோபிகாவின் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி இன்று காலை பெற்றோர் கவிதா- முருகேசன் மற்றும் உறவினர்கள் சோபிகா உடலை வாங்க மறுத்து அரசு ஆஸ்பத்திரியில் கதறி அழுதனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் பேரூராட்சி 14-வது வார்டு சுகந்தம் நகர் பகுதியை சேர்ந்தவர் அஜித் (வயது 25). இவர் அதே பகுதியை சேர்ந்த சோபிகா (17) என்பவரை காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

    இந்த நிலையில் நேற்று சோபிகா தனது கணவர் வீட்டில் உள்ள மின்விசிறி கொக்கியில் சேலை கட்டப்பட்டு கழுத்து இறுகிய நிலையில் பிணமாக தொங்கினார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோபிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் சோபிகாவின் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி இன்று காலை பெற்றோர் கவிதா- முருகேசன் மற்றும் உறவினர்கள் சோபிகா உடலை வாங்க மறுத்து அரசு ஆஸ்பத்திரியில் கதறி அழுதனர்.

    பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்த அவர்கள் கலெக்டர் அலுவலக வளாக பிரதான நுழைவு வாயில் முன்பு அமர்ந்து சோபிகாவின் கணவர் அஜித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அழுது புரண்டு போராட்டம் நடத்தினர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சோபிகாவின் பெற்றோர் கவிதா-முருகேசன் தம்பதி கண்ணீர் மல்க போலீசாரிடம் கூறியதாவது:-

    எங்களது மகளுக்கு 17 வயது தான் ஆகிறது. இதனால் திருமணத்திற்கு முன்பு நாங்கள் அஜித்க்கு திருமணம் ெசய்து கொடுக்க மறுப்பு தெரிவித்து தர்மபுரியில் உள்ள உறவினர் ஒருவடைய வீட்டில் சோபிகாவை மறைத்து வைத்தோம். இதை அறிந்த அஜித் அங்கு வந்து சோபிகாவை கட்டாயப்படுத்தி அவரை அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார்.

    திருமணத்திற்கு பிறகு அஜித் அடிக்கடி சோபிகாவிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தார். நேற்று அஜித் சோபிகாவிடம் ரூ.10 ஆயிரம் பெற்றோரிடம் இருந்து வாங்கி வருமாறு கூறினார். ஆனால் எங்களின் குடும்ப கஷ்டத்தை பார்த்து மகள் பணம் வாங்கி கொடுக்கவில்லை. இதனால் அஜித் அவரை திட்டியுள்ளார்.

    சோபிகா தற்கொலை செய்யவில்லை. அவரது கழுத்தில் கயிறு போட்டு இறுக்கப்பட்டுள்ளது. கழுத்தில் காயம் உள்ளது. எனவே மகளின் சாவில் சந்தேகம் இருக்கிறது. அஜித் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சோபிகா உடலை வாங்க மாட்டோம். இவ்வாறு பெற்றோர் கூறினர்.

    இது தொடர்பாக போலீசாா் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுப்பெண் திருமணம் ஆகி 4 மாதங்களிலேயே மர்மமான முறையில் இறந்து விட்டதால் மேட்டூர் உதவி கலெக்டர் தணிகாசலமும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

    ×