என் மலர்
சேலம்
- கலெக்டரின் நடவடிக்கைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று வருவாய்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- தமிழக அரசு இதனை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டன கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.
சேலம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆதி திராவிட நலத்துறை தாசில்தார் மனோஜ் முனியப்பன் தலைமையிலான அதிகாரிகள் உச்ச நீதிமன்றம் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதற்கு அந்த தொகுதி எம்.எல்.ஏ.,எதிர்ப்பு தெரிவித்தார். இதை அடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர், மனோஜ் முனியப்பனை சஸ்பெண்டு செய்தார். இதனால் வருவாய்துறை ஊழியர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி கலெக்டரின் நடவடிக்கைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று வருவாய்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறை ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் நுழைவாயில் அருகே படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிகாரியின் சஸ்பெண்டை ரத்து செய்து உடனடியாக மீண்டும் அவரை பணியில் சேர்க்க வேண்டும், தமிழக அரசு இதனை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டன கோஷங்கள் எழுப்பி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வருவாய்த்துறை ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி கூறுகையில்:-
கள்ளக்குறிச்சி ஆதிதிரா விடர் நலத்துறை தாசில்தார் மனோஜ் முனியப்பன் பணியிடை நீக்கத்தினை ரத்து செய்யக் கோரியும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஏற்கனவே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த நிலையில் இன்று பணியை புறக்கணித்து தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று மனோஜ் முனியப்பனுக்கு ஆதரவாக கள்ளக்குறிச்சிக்கு போராட சென்ற வருவாய் துறை ஊழியர்களை போலீசார் கைது செய்து இன்று காலை தான் விடுவித்தனர்.
இது மிகவும் கண்டிக்கத்தக்கது. மனோஜ் முனியப்பனை மீண்டும் பணியில் சேர்க்கும் வரை போராட்டம் தொடரும். இதில் எந்த சமரசத்திற்கும் உடன்பாடு இல்லை. வருவாய் துறை ஊழியர்கள் இரவு, பகல் பாராமல் முழு நேரமும் பணியாற்றி வருகிறோம்.
ஒவ்வொரு புதிய திட்டங்களுக்கும் புதியதாக ஆட்கள் நியமிக்காமல் பணியில் இருப்பவர்களே செய்து வருகிறோம்.இதனால் பணிச்சுமை அதிகமாக உள்ளது. இப்படி பணி செய்யும் மனோஜ் முனியப்பனை எந்த விசாரணையும் செய்யாமல் பணி இடை நீக்கம் செய்தது கண்டிக்கத்தக்கது.
மாவட்டம் முழுவதும் இருந்து வருவாய் துறை ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர். இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார் அலுவலக பணிகளும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 650-க்கும் மேற்பட்ட தாசில்தார் அலுவலக பணியாளர்கள் வட்டாட்சியர்கள் மற்றும் கிராம உதவியாளர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பணிகள் முழுமையாக பாதிப்பு அடைந்துள்ளது. அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம், மகளிர் உரிமை தொகை திட்டம், உள்பட வருவாய்த்துறை பல்வேறு பணிகள் இந்த போராட்டத்தால் முடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- நேற்று சோபிகா தனது கணவர் வீட்டில் உள்ள மின்விசிறி கொக்கியில் சேலை கட்டப்பட்டு கழுத்து இறுகிய நிலையில் பிணமாக தொங்கினார்.
- சோபிகாவின் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி இன்று காலை பெற்றோர் கவிதா- முருகேசன் மற்றும் உறவினர்கள் சோபிகா உடலை வாங்க மறுத்து அரசு ஆஸ்பத்திரியில் கதறி அழுதனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் பேரூராட்சி 14-வது வார்டு சுகந்தம் நகர் பகுதியை சேர்ந்தவர் அஜித் (வயது 25). இவர் அதே பகுதியை சேர்ந்த சோபிகா (17) என்பவரை காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் நேற்று சோபிகா தனது கணவர் வீட்டில் உள்ள மின்விசிறி கொக்கியில் சேலை கட்டப்பட்டு கழுத்து இறுகிய நிலையில் பிணமாக தொங்கினார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோபிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் சோபிகாவின் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி இன்று காலை பெற்றோர் கவிதா- முருகேசன் மற்றும் உறவினர்கள் சோபிகா உடலை வாங்க மறுத்து அரசு ஆஸ்பத்திரியில் கதறி அழுதனர்.
பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்த அவர்கள் கலெக்டர் அலுவலக வளாக பிரதான நுழைவு வாயில் முன்பு அமர்ந்து சோபிகாவின் கணவர் அஜித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அழுது புரண்டு போராட்டம் நடத்தினர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சோபிகாவின் பெற்றோர் கவிதா-முருகேசன் தம்பதி கண்ணீர் மல்க போலீசாரிடம் கூறியதாவது:-
எங்களது மகளுக்கு 17 வயது தான் ஆகிறது. இதனால் திருமணத்திற்கு முன்பு நாங்கள் அஜித்க்கு திருமணம் ெசய்து கொடுக்க மறுப்பு தெரிவித்து தர்மபுரியில் உள்ள உறவினர் ஒருவடைய வீட்டில் சோபிகாவை மறைத்து வைத்தோம். இதை அறிந்த அஜித் அங்கு வந்து சோபிகாவை கட்டாயப்படுத்தி அவரை அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு அஜித் அடிக்கடி சோபிகாவிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தார். நேற்று அஜித் சோபிகாவிடம் ரூ.10 ஆயிரம் பெற்றோரிடம் இருந்து வாங்கி வருமாறு கூறினார். ஆனால் எங்களின் குடும்ப கஷ்டத்தை பார்த்து மகள் பணம் வாங்கி கொடுக்கவில்லை. இதனால் அஜித் அவரை திட்டியுள்ளார்.
சோபிகா தற்கொலை செய்யவில்லை. அவரது கழுத்தில் கயிறு போட்டு இறுக்கப்பட்டுள்ளது. கழுத்தில் காயம் உள்ளது. எனவே மகளின் சாவில் சந்தேகம் இருக்கிறது. அஜித் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சோபிகா உடலை வாங்க மாட்டோம். இவ்வாறு பெற்றோர் கூறினர்.
இது தொடர்பாக போலீசாா் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுப்பெண் திருமணம் ஆகி 4 மாதங்களிலேயே மர்மமான முறையில் இறந்து விட்டதால் மேட்டூர் உதவி கலெக்டர் தணிகாசலமும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.
- பல்கலைக்கழகத்துக்கு எதிராக உள்ள கோட்ட கவுண்டம்பட்டியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருகிறார்.
- 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து உதவி பேராசிரியை சுகன்யா அணிந்து இருந்த 2 பவுன் நகையை பறித்து சென்றனர்.
சேலம்:
சேலம் அரசு என்ஜினீயரிங் கல்லூரி உதவி பேராசிரியையாக சுகன்யா (35) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பல்கலைக்கழகத்துக்கு எதிராக உள்ள கோட்ட கவுண்டம்பட்டியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் இவர் பணி முடிந்து தனது மொபட்டில் பல்கலைக்கழகம் பகுதியில் உள்ள பாலத்தின் கீழே சென்று கொண்டு இருந்தார். அங்கு இருந்த 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து உதவி பேராசிரியை சுகன்யா அணிந்து இருந்த 2 பவுன் நகையை பறித்து சென்றார்.
இதுகுறித்து தெரியவந்ததும் கருப்பூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அப்போது உதவி பேராசிரியை சுகன்யாவிடம் நகையை பறித்து சென்றது ஓமலூர் மாட்டு காரன்புதூர் பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் உள்பட 2 பேர் என்று தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான வாலிபர் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ரெயில்களில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் கடத்தப்படுகிறா? என அடிக்கடி சோதனை செய்வது வழக்கம்.
- மொரப்பூர் அருகே ரெயில் வந்தபோது பொதுபெட்டியில் இருந்த 2 பைகளை போலீசார் திறந்து பார்த்தனர்.
சேலம்:
சேலம் ரெயில்வே போலீஸ் நிலைய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ரெயில்களில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் கடத்தப்படுகிறா? என அடிக்கடி சோதனை செய்வது வழக்கம்.
அதன்படி ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு வந்த பிலாஸ்பூர் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் விரைவு வண்டியில் சேலம் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர். இதில் மொரப்பூர் அருகே ரெயில் வந்தபோது பொதுபெட்டியில் இருந்த 2 பைகளை போலீசார் திறந்து பார்த்தனர். அதில் 16 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த பைகளை கொண்டு வந்த சேலம் சிவதாபுரம் பகுதியை சேர்ந்த சிவா (50) என்பவரிடம் விசாரணை நடத்தினர். இதில் விஜயவாடாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததாக அவர் தெரிவித்தார். இதையடுத்து அவரை சேலம் ரெயில்வே போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் மாவட்டம், பூலாம்பட்டி பேரூராட்சி பகுதியில் மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் கணேஷ்ராம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- தூய்மை பணிகள், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்து அங்கிருந்த ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம், பூலாம்பட்டி பேரூராட்சி பகுதியில் மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் கணேஷ்ராம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அவர் பூலாம்பட்டி பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் திட்ட பணிகள் மற்றும் பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் தூய்மை பணிகள், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்து அங்கிருந்த ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து அவர் பூலாம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு பகுதியில் உள்ள தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட சமையல் கூடத்தில் திடீரென நுழைந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த உணவுப் பொருட்களின் தரம், பயன்படுத்தப்படும் காய்கறி அளவு, இருப்பு பதிவேடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த உதவி இயக்குனர் அங்கிருந்த சமையல் பணியாளர்களுக்கு சுகாதாரமான முறையில் உணவுகளை தயாரித்தல் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். மேலும் அவர் அங்கு தயாரிக்கப்பட்டு இருந்த உணவு வகைகளையும் ருசி பார்த்தார். குழந்தைகளுக்காக இந்த உணவினை மிகுந்த கவனத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயார் செய்திட வேண்டுமென உத்தரவிட்டார்.
இந்த திடீர் ஆய்வின்போது பூலாம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவானந்தம், பேரூராட்சி தலைவர் அழகுதுரை, துணைத் தலைவர் முரளி மற்றும் முன்னாள் கவுன்சிலர் பழனிசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
- தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் அருகில் சிறியதாக துணிக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
- சம்பவத்தன்று துணி கடைக்கு வந்த ஒரு வாலிபர் மூதாட்டி வசந்தாவிடம் துண்டு வாங்குவது போல் பேச்சு கொடுத்துள்ளார்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் 17-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மனைவி வசந்தா (65).
துணிக்கடை
இவர் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் அருகில் சிறியதாக துணிக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று துணி கடைக்கு வந்த ஒரு வாலிபர் மூதாட்டி வசந்தாவிடம் துண்டு வாங்குவது போல் பேச்சு கொடுத்துள்ளார். இதையடுத்து மூதாட்டி துண்டை எடுத்து அவரிடம் காண்பித்தக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வாலிபர் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி கூச்ச லிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுகுறித்து வசந்தா தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தரமற்ற உணவுகள் ஓட்டல்களில் விநியோகிப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
- ஆய்வின்போது 8 ஓட்டல்களில் கெட்டுப்போன சட்னி, மோர், உணவுகள் பொதுமக்களுக்கு வழங்கியது தெரியவந்தது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் தரமற்ற உணவுகள் ஓட்டல்களில் விநியோகிப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி கதிரவன் தலைமையில் அதிகாரிகள் மாவட்ட முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 39 ஓட்டல்களில் உணவு பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 8 ஓட்டல்களில் கெட்டுப்போன சட்னி, மோர், உணவுகள் பொதுமக்களுக்கு வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஓட்டல்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் இதுேபான்று சோதனை தொடரும் என்றும், தரம் இல்லாத உணவுகள் ஓட்டல்களில் வைக்கப்பட்டால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும் வழக்குப் பதிவு செய்து உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
- சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் - ஓமலூர் பிரதான சாலையில் உள்ள அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்புக்கான பொது ஏலம் நடைபெற்றது.
- தற்போது வழக்கத்தைவிட கூடுதலான விலை கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் - ஓமலூர் பிரதான சாலையில் உள்ள அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்புக்கான பொது ஏலம் நடைபெற்றது.
இதில் சுமார் 152 குவிண்டால் எடையுள்ள 303 மூட்டை தேங்காய் பருப்புகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் முதல் தர தேங்காய் பருப்புகள் குறைந்தபட்ச விலையாக குவிண்டால் ஒன்று ரூ.7,556 முதல் ரூ.7,810 வரை விற்பனையானது. 2-ம் தர தேங்காய் பருப்புகள் குவிண்டால் ஒன்று ரூ.6,175 முதல் ரூ.7,475 வரை விலை போனது. இதன்படி மொத்தம் ரூ.11 லட்சத்து 23 ஆயிரத்து 771-க்கு தேங்காய் பருப்புகள் விற்பனையானது.
தற்போது வழக்கத்தைவிட கூடுதலான விலை கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
- சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி அம்பேத்கர் தெரு செல்லும் பகுதியில் பி.எஸ்.என்.எல். கேபிள் பதிப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
- நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் அந்த பகுதியில் மண்ணை தோண்டியபோது திடீரென பாறை உடைபடுவது போன்ற சத்தம் கேட்டது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி அம்பேத்கர் தெரு செல்லும் பகுதியில் பி.எஸ்.என்.எல். கேபிள் பதிப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் அந்த பகுதியில் மண்ணை தோண்டியபோது திடீரென பாறை உடைபடுவது போன்ற சத்தம் கேட்டது.
கருங்கல் சிலை
இதையடுத்து அங்கு பார்த்தபோது கருங்கல் சிலை மண்ணுக்குள் தென்பட்டது. உடனடியாக இதுபற்றி வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய் துறை அதிகாரிகள் சிலையை மீட்டு பார்த்தபோது அது 10 கைகளுடன் 2 அடி உயரம் கொண்ட பத்ரகாளியம்மன் கற்சிலை என்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த சிலையை நங்கவள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவ லகத்திற்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர்.
மக்கள் வழிபாடு
சிலை கண்டெடுக் கப்பட்டது குறித்து தகவல் அறிந்து சுற்றுவட்டார கிராம பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் சாமி சிலைக்கு புடவை மற்றும் மாலை அணிவித்து வழிபட்டு சென்றனர்.
ஒப்படைப்பு
இதனிடையே மீட்கப்பட்ட பத்ரகாளியம்மன் சிலை சேலம் தொல்லியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இதன்படி இன்று வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு வந்த தொல்லியல் துறை அதிகாரிகளிடம் சிலை ஒப்படைக்கப்பட்டது.
இப்பகுதியில் பழமையான கோவில்கள் ஏராளமாக உள்ளதால் தொல்லியல் துறையினர் இந்த பகுதிகளில் ஆய்வு நடத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நேற்றிரவு எடப்பாடி, வீரகனூர், ஆத்தூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி, சங்ககிரி உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது.
- தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகள் உள்பட எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருந்தது. இதை தொடர்ந்து நேற்று மதியம் சேலத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இதனால் அனல்காற்று வீசியதால் பொது வாகன ஓட்டிகள், கடும் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்றிரவு எடப்பாடி, வீரகனூர், ஆத்தூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி, சங்ககிரி உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.
குறிப்பாக எடப்பாடி, வீரகனூர் , ஆத்தூர் பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகள் உள்பட எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
எடப்பாடி பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாத நிலையில் நேற்று பெய்த மழை அந்த பகுதிகளில் உள்ள கடலை பயிருக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம் மாநகரில் நேற்றிரவு 7 மணிக்கு தொடங்கிய மழை அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி, ஜங்சன் என அனைத்து பகுதிகளிலும் சாரல் மழையாக பெய்தது. தொடர்ந்து மாநகரில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக எடப்பாடியில் 30 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. வீரகனூர் 27, ஆத்தூர் 23.8, தம்மம்பட்டி 22, கெங்கவல்லி 15, சங்ககிரி 10.4, ஆனைமடுவு 8, கரியகோவில் 7, சேலம் 2.2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 145.40 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மாவட்டம் முழுவதும் இன்று காலை வானம் மேக மூட்டமாக காட்சி அளித்தது.
நாமக்கல் நகரில் நேற்று மாலை 5.30 மணியளவில் தொடங்கிய மழை இன்று அதிகாலை 1.30 மணி வரை கன மழையாக கொட்டிது. இந்த மழையால் நாமக்கல்-சேலம் சாலை, திருச்செங்கோடு சாலை, பரமத்தி, திருச்சி சாலை உள்பட அனைத்து சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் உள்பட எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
இதே போல எருமப்பட்டி, சேந்தமங்கலம், கொல்லிமலை உள்பட பல பகுதிகளிலும் 5 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் ஓடைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையை தொடர்ந்து எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது .
மாவட்டத்தில் அதிகபட்சமாக நாமக்கல் நகர பகுதியில் 10.8 செ.மீ. மழை பெய்துள்து. எருமப்பட்டி 80, குமாரபாளையம் 2.6, மங்களாபுரம் 18.30, மோகனூர் 38, பரமத்திவேலூர் 27, ராசிபுரம் 5.2, சேந்தமங்கலம் 63, திருச்செங்கோடு 5, கலெக்டர் அலுவலக பகுதி 64.50, கொல்லி மலை 70 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 498.60 மி.மீ. மழை பெய்துள்ளது.
- நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
- அணைக்கு நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. பாசன தேவைக்கு ஏற்றார் போல் அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதே போல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவ மழை பொய்த்து போனதால் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
அவ்வப்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் காவிரி டெல்டா மாவட்டத்தில் பயிரிட்டுள்ள சுமார் 3 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி முழுமை பெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதே போல் மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டத்தில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 1-ந் தேதி இதற்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டில் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 51 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு வெறும் 792 கனஅடி தண்ணீரே வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து தொடர்ந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 18.44 டி.எம்.சி. தண்ணீரே இருப்பு உள்ளது.
அணைக்கு நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
- மாணவன் தனது நண்பர்களுடன் தெப்பக்குளத்திற்கு குளிக்க சென்றதாக கூறப்படுகிறது.
- தெப்பக்குளத்தில் குளித்தபோது விஜய் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம் அருகே கட்டிநாயகன்பட்டி எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன்.
இவர் மகன் விஜய் (17). ஜலகண்டாபுரம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று கட்டிநாயகன்பட்டி மாரியம்மன் கோவிலில் பொங்கல் பண்டிகையையொட்டி விஜய் தனது தாய் பழனியம்மாளுடன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து சென்ற மாணவன் வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை.
இதையடுத்து குடும்பத்தினர் அவரை அக்கம்பக்கத்தில் தேடி உள்ளனர். அப்போது மாரியம்மன் கோவில் அருகே உள்ள தெப்பக்குளம் அருகே விஜயின் சட்டை, பேண்ட் இருப்பதை பார்த்த ஊர் பொதுமக்கள் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் இது குறித்து ஜலண்டாபுரம் போலீசார் மற்றும் நங்கவள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
மாணவன் தனது நண்பர்களுடன் தெப்பக்குளத்திற்கு குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த நங்கவள்ளி தீயணைப்பு துறையினர் தெப்பக்குளத்தில் தேடி பார்த்தனர். பின்னர் மாணவன் விஜயை பிணமாக மீட்டனர்.
தெப்பக்குளத்தில் குளித்தபோது விஜய் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. மாணவன் உடலை பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






