என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,430 கன அடியாக அதிகரிப்பு
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,430 கன அடியாக அதிகரிப்பு

    • மேட்டூர் அணைக்கு நேற்று முதல் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
    • மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    சேலம்:

    கர்நாடகா மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து போதிய அளவில் நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படவில்லை. தென்மேற்கு பருவ மழையும் தீவிரம் அடையாததால் கடந்த ஆகஸ்டு மாதம் முழுவதும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்தின் அளவு பெரிய அளவில் இல்லை.

    இந்த நிலையில் காவிரி நதி நீர் ஆணையம் கடந்த 29-ந்தேதி முதல் அடுத்த மாதம் 12-ந்தேதி வரை அதாவது 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் காவிரி நீர் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டது.

    அதன்படி கடந்த 29-ந்தேதி கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரும், 30-ந்தேதி 6 ஆயிரத்து 398 கன அடி தண்ணீரும், 31-ந்தேதி 9 ஆயிரத்து 279 கன அடி தண்ணீரும், 1-ந்தேதி 9 ஆயிரத்து 180 கன அடி தண்ணீரும் நேற்று (2-ந்தேதி) 9 ஆயிரத்து 128 கன அடி நீரும் திறந்து விடப்பட்டது.

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுவில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று முதல் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் காலையில் நீர்வரத்து வினாடிக்கு 562 கன அடியாக இருந்த நிலையில் நேற்று 5,018 கன அடியாக அதிகரித்தது.

    மேலும் இன்று காலையில் நீர்வரத்து அதிகரித்து 6,430 கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் நீரின் அளவை விட அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று 48.48 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 48.24 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 16.72 டி.எம்.சி.யாக உள்ளது. ஒரு வாரத்தில் மேட்டூர் அணையில் 5 அடிக்கு கீழ் நீர்மட்டம் சரிந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    Next Story
    ×