என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • ராமநாதபுரத்தில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
    • ஏற்பாடுகளை பொன் பெரியார் மோதிலால் நேரு செய்திருந்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரண்மனை முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தியின் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து பொறுப்புக்குழு தலைவர் முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன் தலைமையில் ேபாராட்டம் நடந்தது.

    இதில் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ரமேஷ்பாபு, தெய்வேந்திரன், ராஜாராம் பாண்டியன், கோட்டை முத்து, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் செந்தாமரைக்கண்ணன், முத்துக் கிருஷ்ணன், மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் பெமிலா விஜயகுமார், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் வேலுசாமி, வட்டாரத் தலைவர்கள் காருகுடி சேகர், கோவிந்தன், ஆதி, மேகநாதன், மாநில பேச்சாளர் விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டுனர்.

    இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ராகுல்காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பினர்.இதற்கான ஏற்பாடுகளை பொன் பெரியார் மோதிலால் நேரு செய்திருந்தார்.

    • சாலையோரம் கழிவுகள் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே வெண்ணத்தூர் ஊராட்சி சம்பை கிராம பகுதியில் நெடுஞ்சாலையோரம் கெமிக்கல் கழிவுகள் கொட்டப்படுவதாகவும், அதனால் துர்நாற்றம் வீசுகிறது என ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதா உடையநாயகம் தலைமையில் கலெக்டர் ஜானிடாம் வர்கீசிடம் முறையிட்டனர். கிராம பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிறுத்தப்படுவதில்லை என்றும், கடலோரப்பகுதியாக உள்ளதால் உப்புநீர் தான் நிலத்தடியில் உள்ளது. ஆகையால் நிரந்தர குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு கொடுத்தார்.

    சம்பை கிராமத்தில் வருவாய்த்துறை சார்பில் நடந்த மக்கள் தொடர்பு முகாமுக்கு வந்த கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    • அரசு பள்ளியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • 40 அரசு பள்ளிகளில் அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், வெண்ணத்தூர் ஊராட்சி ஒன்றியம், சம்பை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மாணவர்களின் திறன் மேம்பாட்டை உயர்த்தும் வகையில் மாணவர்கள் குழு அமைத்து செயல்பட்டு வருவதை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் திறன் மேம்பாட்டை வெளிக்கொணரும் வகையில் தற்போது 40 அரசு பள்ளிகளில் அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சிவப்பு, மஞ்சள், ஊதா, பச்சை என 4 வண்ணங்களில் 4 அணிகளாக பிரித்து மாணவ-மாணவிகளின் திறன் மேம்பாட்டை வளர்கும் வகையில் செயல்பட தொடங்கி உள்ளன. 4 அணிகளிலும் உள்ள மாணவ, மாணவர்களின் கல்வித்திறன், விளையாட்டு, பொது அறிவு குறித்தும் திறமைகளை வெளிக்கொண்டு வருபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மேலும் திறனை மேம்படுத்துவதற்கு ஏதுவான பயிற்சிகள் வழங்குவதே இந்த அணிகள் தொடங்கியதன் நோக்கமாகும். அந்த வகையில் மாவட்டத்தில் 40 பள்ளிகளில் உருவாக்கப்பட்டு ஆசிரியர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாணவ-மாணவிகள் நல்ல முறையில் திட்டத்தை பயன்படுத்தி திறனை மேம்படுத்தி தங்கள் சார்ந்த அணிக்கு முதலிடம் பெற்றுத் தரும் வகையில் திறமையை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • அபிவிருத்தி திட்ட மேம்பாட்டுக்கு நிதி வழங்கல் நிகழ்ச்சி நடந்தது.
    • நிர்வாக மேலாளர் சரவணன்,துணை மேலாளர்கள் ஈஸ்வரன், முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கடலோர சதுப்பு நில காடுகளின் அபிவிருத்தி திட்ட மேம்பாட்டிற்காக ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் மூலம் சி.எஸ்.ஆர். திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சத்தை மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஸ் சுதாகர் வழங்கினார். இது குறித்து மாவட்ட வன அலுவலர் கூறுகையில், தனியார் நிறுவனங்கள் நீர்வள ஆதாரங்களை பாதுகாக்கும் வகையில் திட்ட பணிகளை மேற்கொள்ள தங்கள் நிறுவனத்தில் இருந்து பெறக்கூடிய லாபத்தில் அதாவது சமூக கூட்டாண்மை பொறுப்புணர்வு திட்டம் (சி.எஸ்.ஆர்.) மூலம் 2 சதவீதம் நிதி உதவி வழங்குவது வழக்கம். அந்த அடிப்படையில் கடற்கரை ஓரமுள்ள வனப்பகுதிகளை பாதுகாப்பதற்கான பணிகளுக்கு ரூ.50 லட்சத்தை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் மூலம் வழங்கி உள்ளனர் என்றார்.

    இதில் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத் தலைவர் எஸ்.ராமலிங்கம், உதவி தலைவர் மணிகண்டன், நிர்வாக மேலாளர் சரவணன்,துணை மேலாளர்கள் ஈஸ்வரன், முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று நவாஸ்கனி எம்.பி. கூறினார்.
    • விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 90 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பில் நெல், சிறுதானியங்கள், தென்னை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் 70 சதவீத நெற்பயிர்கள் வடகிழக்கு பருவ மழையையே நம்பி சாகுபடி செய்யப்படுகிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது.

    2022-ம் ஆண்டில் வட கிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்யாத காரணத்தால் ஏறத்தாழ 1 லட்சம் ஹெக்டர் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் மழையின்றி கருகி வீணாகி உள்ளன. இதனால் விவசாயிகள் நஷ்டத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

    எனவே ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எம்.எல்.ஏ. சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
    • முன்னாள் ஊராட்சி தலைவர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள கீழச்செல்வனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் பாபு. இவர் மாற்றுத்திறனாளிக்கான சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். 26-ந் தேதி லண்டனில் நடைபெறும் உலகக் கோப்பை சக்கர நாற்காலி போட்டியில் வினோத்பாபு தலைமையில் இந்திய அணி கலந்து கொள்கிறது. வறுமையில் உள்ள வினோத் பாபு லண்டன் செல்ல உதவி கேட்டு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர்- காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.விடம் உதவி அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    அதன்பேரில் எம்.எல்.ஏ. கொடுத்த நிதியை வினோத்பாபு வீட்டுக்கு சென்று கடலாடி தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் மாயகிருஷ்ணன் வழங்கினார். அப்போது கீழச்செல்வனூர் முன்னாள் ஊராட்சி தலைவர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • மான் வேட்டை சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
    • மான் வேட்டையில் முதியவர் மட்டும் ஈடுபடுவது இயலாத செயல். ஒரு சிறிய மான்கூட 10 கிலோ முதல் 15 கிலோ வரை இருக்கும்.

    கமுதி:

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நெருஞ்சிப்பட்டி, தோப்படைப்பட்டி, கோவிலாங்குளம், மண்டலமாணிக்கம் உள்ளிட்ட கிராமங்களில் குண்டாடு படுகையில் ஏராளமான மான்கள் உள்ளன.

    இந்த நிலையில் நெருஞ்சிப்பட்டி கிராமம் கருவேலங்காட்டு பகுதிக்கு இரைத்தேடி வந்த ஒரு மான் வேட்டையாடப்பட்டதாக கோவிலாங்குளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவிலாங்குளம் போலீசார் நெருஞ்சிப்பட்டியை சேர்ந்த கண்ணாயிரம் (வயது 70) என்பவரை பிடித்தனர்.

    அவர் வேட்டையாடிய மானை சமைத்து கொண்டிருந்தபோது மப்டி உடையில் போலீசார் சென்று அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் வந்திருப்பது போலீசார் என்பது தெரியாமல் மான் இறைச்சியை சமைத்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். அவர்கள் போலீசார் என்று தெரிந்ததும் தான் சமைத்து கொண்டிருப்பது ஆட்டு இறைச்சி என்று கூறி உள்ளார்.

    அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர் வைத்திருந்த ஒரு கிலோ இறைச்சியை போலீசார் பறிமுதல் செய்து சாயல்குடி வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். அது ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த மான் வேட்டை சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலையிட்டு மான் வேட்டையில் ஈடுபட்ட அனைவரும் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன விலங்கு ஆர்வலர்கள் வற்புறுத்தி உள்ளனர்.

    இந்த மான் வேட்டையில் முதியவர் மட்டும் ஈடுபடுவது இயலாத செயல். ஒரு சிறிய மான்கூட 10 கிலோ முதல் 15 கிலோ வரை இருக்கும். தற்போது ஒரு கிலோ மான் இறைச்சிதான் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எனவே மேலும் சிலருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்றும், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தென் மாநில அளவிலான ஆக்கி போட்டி நடந்தது.
    • 216 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர்.

    ராமநாதபுரம்

    ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பில் தென் மாநில அளவிலான 18 வயதுக்குட்பட்டோருக்கான முதலாவது ஆக்கி சாம்பியன் ஷிப் போட்டி ராமநாதபுரம் வேலு மாணிக்கம் ஆக்கி விளையாட்டு அரங்கில் 19-ந் தேதி தொடங்கி நாளை (26-ந் தேதி) வரை நடக்கிறது.

    இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 216 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதுகுறித்து ஆக்கி இந்தியா அமைப்பின் செயலாளர் செந்தில் ராஜ்குமார் கூறியதாவது:-

    இந்திய ஆக்கி அணியில் விளையாட திறமையான வீரர்களை கண்டறிய முதல் முதல்முறையாக இந்திய அளவில் 4 மண்டலங்களாக பிரித்து 18 வயதிற்குட்பட்ட சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கிறது.

    ராமநாதபுரத்தில் தென்னிந்திய மண்டல அளவிலான போட்டி ஆண்கள், பெண்கள் தனித்தனியாக நடக்கிறது. சிறந்த வீரர்களை தேர்வு செய்து கால் இறுதி, அரையிறுதி, இறுதி போட்டிகள் நாளை (26-ந் தேதி) நடக்கிறது.தேர்வாளர் குழுவினர் 30 சிறந்த வீரர்களை அடையாளம் காணுவார்கள்.

    இவர்களுக்கு 4 மண்டல அணிகள், 2 அகாடமி அணிகள் மண்டலங்களுக்கு இடையிலான சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்படும். இதில்,ஆக்கி இந்தியா தேர்வாளர்கள் 45 திறமையான வீரர்களை தேர்வு செய்து,பல்வேறு போட்டிகளில் பங்கேற்க செய்து பயிற்சி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு உப்பு நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • பொதுச் செயலாளர் குமரவடிவேல், பொருளாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர்.

    சாயல்குடி

    சாயல்குடி அருகே வாலிநோக்கத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் உப்பு நிறுவனத்தில் பணிக்கொடை வழங்க வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்கத் தலைவர் பச்சமால் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் குமரவடிவேல், பொருளாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர்.

    சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சிவாஜி பேசினார். 2022-ல் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு உடனடியாக பணிக்கொடை வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நிர்வாகிகள் தனி ராம், முருகவேல், வடிவேல், அற்புதமணி, காட்டு ராஜா, கலாவதி, சசிகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நாளை நடந்தது.
    • கருணாநிதி நூற்றாண்டுவிழா, உறுப்பினர் சேர்க்கை, சார்பு அணி மற்றும் சமூக வலைதள பயன்பாடு குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நாளை (26-ந் தேதி) மாலை 3.30 மணி அளவில் ராமநாதபுரம் பாரதிநகர் பீமாஸ் மகாலில் அவைத்தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இதில் கருணாநிதி நூற்றாண்டுவிழா, உறுப்பினர் சேர்க்கை, சார்பு அணி மற்றும் சமூக வலைதள பயன்பாடு குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

    • மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலனாக மு.க.ஸ்டாலின் உள்ளார்.
    • மாதாந்திர உதவித்தொகை ரூ.1500 பெறும் பயனாளி நெகிழ்ச்சியடைந்தார்.



    மாற்றுத் திறனாளி கருப்பையா

    ராமநாதபுரம்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திற னாளிகளின் நலனை கருத்தில் கொண்டு பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.அதனடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் மாற்றத்தை கொண்டு வரும் திறனாளிகள் என்ற உயர்ந்த நோக்கத்தை மனதில் கொண்டு அவர்களுக்கான திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி வருகிறார்.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சுய தொழில் தொடங்கிட அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி, மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், சுய வேலை வாய்ப்பினை உருவாக்கிட கைபேசி, கணினி போன்ற எண்ணற்ற பயிற்சிகள் கல்வி பயின்று வரும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, மாதாந்திர உதவித் தொகை, திருமண நிதி உதவி வழங்கப்படுகிறது.

    காது கேளாத மன வளர்ச்சி குன்றிய குழந்தை களுக்கு அடிப்படை பயிற்சி, கட்டண மில்லா பஸ் பயண அட்டை, மின்கல சக்கர நாற்காலிகள், இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட மோட்டார் வாகனம், நவீன செயற்கை கால் மற்றும் நவீன ஒப்பு காதொலி கருவி, முடம் நிக்கும் சாதனம் போன்ற எண்ணற்ற உதவி உபகரணங்கள் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப் பட்டு வருகின்றன.

    ராமநாதபுரம் வட்டத்தில் 1583 மாற்றுத்திறனாளி களுக்கும்,ராமேசுவரம் வட்டத்தில் 429 மாற்றுத்திற னாளிகளுக்கும், திருவாடானை வட்டத்தில் 1033 மாற்றுத்திறனாளிக ளுக்கும், கீழக்கரை வட்டத்தில் 803 மாற்றுத்திற னாளிகளுக்கும், ஆர்.எஸ்.மங்கலம் வட்டத்தில் 725 மாற்றுத்திறனாளிகளுக்கும், கடலாடி வட்டத்தில் 1138 மாற்றுத்திறனாளிகளுக்கும், கமுதி வட்டத்தில் 838 மாற்றுத்திறனாளிகளுக்கும், முதுகுளத்தூர் வட்டத்தில் 1001 மாற்றுத்திறனாளி களுக்கும், பரமக்குடி வட்டத்தில் 1336 மாற்றுத்திற னாளிகளுக்கும் என மொத்தம் 8886 மாற்றுத்திற னாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ. 1000-ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் 32 ஆயிரத்து 378 நபர்கள் மாற்றுத்திறன் கொண்ட வர்களாக கண்டறியப்பட்டு, அவர்களுக்கு மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடை யாள வழங்கப்பட்டுள்ளது.

    14 ஆயிரத்து 905 நபர் களுக்கு மத்திய அரசின் UDID திட்டத்தின் கீழ் அடையாள அட்டைகளும் வழங்கப் பட்டுள்ளது. கடந்த மே 2021 முதல் பிப்ரவரி 2023 வரை மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்கிட வங்கிக்கடன் மானியமாக 70 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15 லட்சத்து 89 ஆயிரத்து 528 மதிப்பிலான மானியத் தொகையும், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 49 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.38.63 லட்சம் மதிப்பிலும், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி 2 மாற்றுத்திற னாளிகளுக்கு ரூ.2.12 லட்சம் மதிப்பிலும், மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் 136 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9.30 லட்சம் மதிப்பிலும், நவீன செயலிகளுடன் கூடிய கைபேசி 124 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15.50 லட்சம் மதிப்பிலும், முடநீக்கியல் கருவி 62 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.47 ஆயிரத்து 120 மதிப்பிலும், 3 சக்கர சைக்கிள் மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.90 ஆயிரத்து 500 மதிப்பி லும், சக்கர நாற்காலி 14 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து10 ஆயிரத்து 600 மதிப்பிலும் என 467 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.83 லட்சத்து 90 ஆயிரத்து 748 மதிப்பீட்டில் வழங்கப் பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசின் சார்பில் மாதாந்திர உதவித் தொகை பெறும் மாற்றுத் திறனாளி கருப்பையா கூறும்போது, மூளை வாத முடக்கு நோயால் பாதிக்கப் பட்டேன். மாற்றுதிறனாளி களுக்கான அடையாள அட்டை பெற்று மாதம் ரூ.1,000 பெற்று வந்தேன். தற்போது முதல்-அமைச்சர், மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு ஜனவரி மாதம் முதல் 1,500 வழங்கிட உத்தரவிட்டு, அதனை செயல்படுத்தி வருவதன் மூலம் எனக்கு ரூ.1,500 கிடைக்கிறது.

    மாற்றுத்திறனாளிகளின் நிலையை கருத்தில் கொண்டு இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி மாற்றுத்திற னாளிகளின் பாதுகாவ லனாக திகழ்ந்து வருகின்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன் றியை தெரிவித்துக் கொள்கி றேன் என்றார்.

    இந்த தகவலை ராமநாதபுரம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி செய்தி தொடர்பு அலுவலர் விஜய குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா நடந்தது.
    • எந்திரவியல் துறைத்தலைவர் கணேஷ்குமார் நன்றி கூறினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 43-வது ஆண்டு விழா கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி துணை முதல்வர் சேக்தாவூது ஆண்டறிக்கை வாசித்தார். விழாவையொட்டி மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

    சாதனை படைத்த முதல், 2-ம் மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு சென்னை கே.வி.எஸ். தொழிற்சாலை நிர்வாக இயக்குநரும், தொழில் அதிபரும், முன்னாள் மாணவருமான வெற்றிசெழியன் பரிசு வழங்கினார். கல்லுாரி முதுநிலை விரிவுரையாளர் மரியதாஸ் வரவேற்று பேசினார். எந்திரவியல் துறைத்தலைவர் கணேஷ்குமார் நன்றி கூறினார்.

    கல்லூரி துணை முதல்வர் சேக் தாவூது, அமைப்பியல் துறை தலைவர் (பொறுப்பு) செந்தில்ராஜன், எந்திரவியல் துறைத்தலைவர் டாக்டர் கணேஷ்குமார், மெரைன் துறை தலைவர் (பொறுப்பு) சுதேவ், மின்னியல் துறை தலைவர் (பொறுப்பு) நாகராஜன், கணினி துறை தலைவர் (பொறுப்பு) நாகராஜன் மற்றும் முதலாம் ஆண்டு துறை தலைவர் (பொறுப்பு) உமையாள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் செய்திருந்தனர். இதில் அனைத்து துறை ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ×