என் மலர்
ராமநாதபுரம்
- தி.மு.க.வினருக்கு மக்கள் பிரச்சனை குறித்து எந்த கவலையும் இல்லை.
- மீனவர் பிரச்சனையை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் கழுகூரணி தனியார் மகாலில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.தரணி முருகேசன் இல்ல திருமண விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:-
அமைச்சர் சேகர்பாபு என்னை கர்நாடகா டூப் போலீஸ் என விமர்சித்துள்ளார். அமைச்சர் சேகர்பாபு அந்தத் துறைக்கு சம்பந்தமே இல்லாத நபர். வேண்டுமென்றால் அமைச்சர், நான் வேலை பார்த்தது தொடர்பாக சோதனை செய்து கொள்ளட்டும். அதுமட்டுமல்லாது பொழுது விடிந்தால் போதும் பா.ஜ.க.வினரை விமர்சிப்பதே தி.மு.க.வினரின் தொழிலாக உள்ளது.
தி.மு.க. சார்பில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. திருமணத்திற்கு செல்கிறோம் என்றால் திருமணத்திற்கு தான் செல்கிறோம் என தெரிந்து செல்வோம். ஆனால் எதற்காக அனைத்து கட்சி கூட்டம் என தெரியாமல் அதில் எப்படி கலந்து கொள்வது? எந்த விதத்திலும் தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்திற்கான தொகுதி எண்ணிக்கை குறையாது என பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் திட்டவட்டமாக தெரிவித்தும் கூட விதண்டா வாதமாக பேசி வருவது அவர்களின் வாடிக்கை. அப்படி இருக்க அந்த கூட்டத்தில் எப்படி கலந்து கொள்வது?
திராவிட மாடலை அகற்றும் வரை காலில் செருப்பு அணியப் போவதில்லை என சபதம் எடுத்துள்ளேன். செந்தில் பாலாஜி குறித்த விமர்சனம் என்பது காலில் செருப்பு போடாமல் நடக்கலாம் அதில் தவறில்லை, ஜெயிலுக்கு தான் போகக்கூடாது.
மேலும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலையே இரு மொழிக் கொள்கையில்தான் படித்ததாக கூறியுள்ளார். நான் மும்மொழி கொள்கையில் தான் படித்தேன். விருப்பமொழியாக தமிழை தேர்வு செய்தேன். படிக்காத நபர்களுக்கெல்லாம் இதைப்பற்றி என்ன தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த 24-ந்தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
- 87 விசைப்படகுகளையும் விடுவிக்க வேண்டும்.
ராமேசுவரம்:
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல்கள், சிறைபிடிப்பு, விசைப்படகுகள் பறிமுதல் உள்ளிட்ட அத்துமீறல்களை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப் பட்டுள்ளன. இருந்தபோதி லும் மீனவர்கள் பிரச்சி னைக்கு தற்போது வரை நிரந்தர தீர்வு மட்டும் எட்டப்படவில்லை.
கடந்த மாதம் 16-ந்தேதி ராமேசுவரத்தில் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மீனவர்களை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் இலங்கை அரசை கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு அதன் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் டெல்லியிலும் போராட்டம் நடத்தப்படும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
இந்தநிலையில் கடந்த வாரம் 2 நாட்களில் ராமேசு வரம் மீனவர்கள் 42 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர் அவர்களது 8 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத் தப்பட்ட அவர்கள் வவு னியா, யாழ்ப்பாணம் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தரையில் படுக்க கூட இடமில்லாமல் மிகவும் குறுகிய அறைகளில் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
மேலும் சரியான தூக்கம், உணவின்றி தவித்து வருவதாக கிடைத்த தகவல்கள் அவர்களின் குடும்பத்தினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இலங்கை கடற்படையை கண்டித்தும், மத்திய அரசு உடனடியாக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கடந்த 24-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
இதன் காரணமாக ராமேசு வரம் பகுதியில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழில் சார்ந்தவர்கள் நேரடியாகவும், மறைமுக மாகவும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகி றார்கள். தினமும் ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலும் வர்த்தகம் முடங்கியுள்ளது.
போராட்டத்தின் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் தங்கச்சிமடம் வலசை பகுதி பஸ் நிறுத்தம் எதிரே ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் மீனவர்கள், அவர்களின் குடும்பத்தினர், குழந்தைகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நேற்று காத்திருப்பு போராட்டத்தை தொடங்கிய மீனவர்கள் இரவு, பகலாக கொட்டும் மழையிலும் பந்தலில் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
மீனவர்கள் பிரச்சி னைக்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி பேச்சுவார்த்தைக்கு கலெக்டர் நேற்று அழைத்திருந்தார். அதில் மீனவர் சங்க பிரதிநிதிகள் 5 பேர் கலந்து கொண்டனர். அப்போது கலெக்டர் பேசுகையில், உங்கள் கோரிக்கைகள் குறித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். எனவே காத்திருப்பு போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஆனால் அதனை ஏற்க மறுத்த மீனவர்கள் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும், மத்திய மந்திரி நேரில் வந்து உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று உறுதிபட தெரிவித்தனர்.
அத்துடன் 6 மாதம், ஒரு ஆண்டு சிறை தண்டனையுடன் பல லட்சம் அபராதம் விதிக்கப்படும் போது அவற்றை செலுத்த முடியாத மீனவர்கள் தொடர்ந்து சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.
எனவே இலங்கை கோர்ட்டு விதிக்கும் அபராத தொகையை தமிழக அரசு செலுத்த வேண்டும், 87 விசைப்படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று கூறினர்.
இந்தநிலையில் தங்கச்சி மடத்தில் இன்று மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டம் தொடர்கிறது. தமிழக மீனவர்களை கைது செய்வது, அவர்களது படகுகளை நாட்டுடைமை ஆக்குவது, ஏலத்தில் விட்டு படகுகளை உடைப்பது, அதில் இருக்கும் இரும்பு களை ஏற்றுமதி செய்வது, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களுக்கு அதிகப்படியான அபதாரங்களை விதித்து இலங்கை அரசு தமிழக மீனவர்களை வஞ்சித்து வருவது, அதை கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்து போராட்டம் தொடரும் என்று மீனவர்கள் உறுதிபட தெரிவித்தனர்.
போராட்டத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று கஞ்சி காய்ச்சும் போராட்டமும் நடைபெறும் என்று மீனவர்கள் அறிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையில் இன்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகவும், கோவிலில் சுவாமி தரிசனம் செய்யவும் ராமேசுவரம் வருகை தருகிறார். செம்மமடம் பகுதியில் தனியார் காப்பகத்தை புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
இதற்கிடையே மீன வர்கள் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருவதால் ராமேசுவரத்தில் பரபரப்பான சூழல் நிலவுகி றது. அதனால் போராட்டம் நடைபெறும் இடத்தில் இரண்டடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
- மீனவர்கள் அதனை ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- மழையையும் பொருட்படுத்தாமல் காத்திருப்பு பந்தலில் தொடர்ந்து மீனவர்கள் உள்ளனர்.
ராமேசுவரம்:
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டும் மற்றும் நீதி மன்ற காவலிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இலங்கையில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் மீனவர்களுக்கு சொந்தமான பல லட்சம் மதிப்பிலான நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளும் இலங்கை வசம் உள்ளது.
இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் ராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள், நாட்டுப்படகு மீனவர்கள், சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர், முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் காலை முதல் இரவு வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாலை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்ட மீனவர்கள் அதே உண்ணாவிரத பந்தலில் நேற்று இரவில் இருந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய மந்திரி அல்லது மத்திய அரசு அதிகாரிகள் மீனவர் பிரச்சனையில் நிரந்தர தீர்வு பெற்று தருவதாக உறுதியளிக்கும் வரை இந்த காத்திருப்பு போராட்டம் இரவு, பகலாக தொடரும் என மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் போராட்டத்தை கைவிடுமாறு ராமேசுவரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தமூர்த்தி, தாசில்தார் ஜாபர் உள்ளிட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட கலெக்டரை சந்திக்க வருமாறு அழைத்தனர். ஆனால் மீனவர்கள் அதனை ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் தங்கச்சிமடத்தில் நேற்று மாலை முதல் விட்டுவிட்டு அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இருப்பினும் அந்த மழையையும் பொருட்படுத்தாமல் காத்திருப்பு பந்தலில் தொடர்ந்து மீனவர்கள் உள்ளனர்.
இந்த காத்திருப்பு போராட்டத்தை அடுத்து தங்கச்சிமடம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். நாளை இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அ.தி.மு.க., எஸ்.டி.பி.ஐ., மனித நேய மக்கள் கட்சி, மே 17 இயக்கம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆதரவு தர இருப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
- 12 ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது.
- அதிகாலை முதல் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவில் 12 ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.
குறிப்பாக ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது புண்ணியமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் ராமேசுவரத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
அதன்படி மாசி மாத அமாவாசையான இன்று அதிகாலை முதல் திரளான பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடற்கரையில் குவிந்து புனித நீராடி பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
பின்னர் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் பல்வேறு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. மகா சிவராத்திரி திருவிழாவில் இன்று காலை சுவாமி-அம்பாள் இந்திர வாகனத்தில் எழுந்தருளினர். மாலையில் தங்க ரிஷப வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
- 700-க்கும் மேற்பட்ட விசை படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
- வேலை நிறுத்தத்தால் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராமேசுவரம்:
ராமேசுவரம் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து கடந்த வாரம் கடலுக்கு சென்ற 42 மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது. மேலும் 5 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவம் ராமேசுவரம் பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
42 மீனவர்களை விடு தலை செய்ய வலியுறுத்தி கடந்24-ந்தேதி முதல் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3-வது நாளாக இன்றும் வேலை நிறுத்தம் தொடர்கிறது.
ராமேசுவரம் துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களில் 700-க்கும் மேற்பட்ட விசை படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு உள்ளன.
5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் வேலை நிறுத்தத்தால் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். 3 நாட்களாக வேலை நிறுத்தம் தொடர்வதால் ராமேசு வரத்தில் இதுவரை ரூ.30 கோடிக்கும் மேல் மீன் வர்த்தம் பாதிக்கப்பட்டு உள்ளது. வேலை நிறுத்தம் காரணமாக ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்த நிலையில் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் கைதான மீனவர்களை விடுதலை செய்ய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசு களை வலியுறுத்தி வருகிற 28-ந்தேதி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கால வரையற்ற உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மீனவர்களை விடு விக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என மீனவ சங்கங்கள் தெரிவித்து உள்ளன.
- மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
- மீனவர்கள் 4 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் (19-ந் தேதி) மீன்துறை அலுவலக அனுமதி பெற்று 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1,200 மீனவர்கள் கடலுக்கு சென்றிருந்தனர். இதில் பாம்பன் பகுதியைச் சேர்ந்த சூசை மற்றும் அவரது விசைப்படகையும், அதில் இருந்த ஜான்முத்து (44), பவுல்ராஜ் (55), லவ்சன் (52) மற்றும் தங்கச்சிமடத்தை சேர்ந்த ஆல்ட்ரின் விசைப்படகு அதிலிருந்த தொன் போஸ்கோ (60), அந்தோணி (45), செல்வராஜ் (62) ஆகிய ஆறு பேரும் நெடுந்தீவு அருகே வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
அவர்களை யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஸ்கரன், மீனவர்களை வருகிற மார்ச் 5-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் ஆறு பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதேபோன்று ராமேசுரம் பேக்கரும்பு பகுதியைச் சேர்ந்த முனியேந்திரன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஜோதி ராஜன் (55), படகு ஓட்டுநர் ராமு (62) அருள்ராஜ் (60) கென்னடி (57) ஆகிய நான்கு பேரும் தலைமன்னார் தனுஷ்கோடி பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களின் படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் 4 மீனவர்களையும் கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ரபீக் மீனவர்களை வரும் மார்ச் 7-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் 4 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இதுபற்றி ராமேசுவரம் மீனவர் சங்கத் தலைவர் சகாயம் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி புதிய பாம்பன் தூக்கு பாலம் திறப்பு விழாவிற்கு வரும்பொழுது மீனவர்களை சந்திக்க வேண்டும். அவர் வருவதற்கு முன்பே இலங்கையில் உள்ள மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் வருகின்ற 28-ந்தேதி அனைத்து மீனவர்களையும் ஒன்றிணைத்து கடும் போராட்டம் நடத்துவோம்.
தமிழக முதல்வரை நான்கு முறை சந்தித்தோம். அவர் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் இலங்கையில் பிடிபட்ட படகுகளுக்கு ரூ.6 லட்சம், ரூ.5 லட்சம் என்று படகுகளுக்கு ஏற்றவாறு வழங்கினார். தற்பொழுது ரூ.360 கோடி செலவில் தங்கச்சிமடம் பகுதியில் படகுகளை நிறுத்தும் தூண்டில் வளைவு அமைப்பதற்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால் மத்திய அரசு எங்களை கண்டு கொள்வதே இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
- இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தற்போது வரை 70-க்கும் மேற்பட்டவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர்.
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்களின் 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான மீனவர்களை யாழ்ப்பாணம் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தற்போது வரை 70-க்கும் மேற்பட்டவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர்.
மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் குறித்து அறிந்த மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கைதானவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
- காவல் முடிந்ததை தொடர்ந்து இன்று மீண்டும் மீனவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
- 2-வது முறையாக எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட மீனவர் அந்தோணி ஆரோன் என்பவருக்கு 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மண்டபம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து கடந்த 8-ந்தேதி 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நள்ளிரவில் சுமார் 20 விசைப்படகுகளை சேர்ந்த மீனவர்கள் இந்திய கடல் எல்லையான கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக ஜான் போஸ் மற்றும் சுதன் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். அந்த படகுகளில் இருந்த ஜான் போஸ் (வயது 39), அந்தோணி இஸ்ரோஸ் (20), நிலாகரன் (44), அந்தோணி ஆரோன் உள்பட 14 மீனவர்களையும் சிறைபிடித்தனர்.
பின்னர் அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் 14 பேரையும் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். காவல் முடிந்ததை தொடர்ந்து இன்று மீண்டும் அந்த மீனவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, 14 பேரில் 12 மீனவர்களை அபராதத்துடன் விடுதலை செய்ய உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் அனைவரும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் படகோட்டியான ஜான் போஸ் என்பவருக்கு அதிகபட்சமாக இலங்கை மதிப்பில் ரூ.1.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
அதேபோல் இரண்டாவது முறையாக எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட மீனவர் அந்தோணி ஆரோன் என்பவருக்கு 18 மாத சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் கைதாகி இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் ராமேசுவரத்தில் கனிமொழி எம்.பி. தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
வருகிற 28-ந்தேதி முதல் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில் கைதானவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன.
- மார்ச் 1-ந் தேதி அன்று சண்டிகேசுவரர் வீதி உலாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரி திருவிழா மற்றும் ஆடித்திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான மாசி மகா சிவராத்திரி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை 10.45 மணி அளவில் சுவாமி சன்னதி எதிரே நந்தி மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. கொடிமர மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி-அம்பாளுக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. விழாவில் 2-ம் நாளான இன்று(புதன்கிழமை) காலை சுவாமி-அம்பாள் தங்க கேடயத்திலும், இரவில் வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் தங்க காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
3-ம் நாளான நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு சுவாமி-அம்பாள் தங்க கேடயத்தில் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்ந்து காலை 6 மணிக்கு மேல் சுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் கெந்த மாதன பர்வதம் (ராமர் பாதம்) மண்டகப்படிக்கு செல்கிறார்கள். அங்கு பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன.
இதை முன்னிட்டு, கோவில் நடையானது நாளை அதிகாலை 3.30 மணிக்கு திறக்கப்பட்டு 4.30 மணி வரை ஸ்படிகலிங்க தரிசனம் நடைபெற்று தொடர்ந்து, மற்ற கால பூஜைகள் நடைபெறுகின்றன. பின்னர் காலை 6 மணிக்கு மேல் கோவில் நடையானது சாத்தப்பட்டு இரவு வரையிலும் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் நீராடவும் சாமி தரிசனம் செய்யவும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்துள்ளார்.
திருவிழாவின், 9-ம் நாளான வருகிற 26-ந்தேதி சிவராத்திரி அன்று சுவாமி-அம்பாள் தேரோட்டம் நடைபெறுகிறது.
10-ம் நாளான வருகிற 27-ந்தேதி அன்று சாமி- அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச் 1-ந் தேதி அன்று சண்டிகேசுவரர் வீதி உலாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
- மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர், கடந்த 3-ந் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
- மீனவர்கள் அனைவரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர், கடந்த 3-ந் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அனைவரையும் கைது செய்து மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்கள் 10 பேரையும் காவலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இன்று மீனவர்கள் அனைவரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 28-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து அனைவரும் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
- மீனவர்கள் கைது நடவடிக்கையில் மத்திய அரசு இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காதது மிகுந்த வேதனை அளிக்கிறது.
- தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் ஒரு பேச்சுவார்த்தை கூட நடத்தவில்லை.
ராமேசுவரம்:
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து சிறை பிடிக்கப்பட்டு வருகிறார்கள். அதிலும் கடந்த 2 மாதங்களில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை அரசு, அவர்களுக்கு சொந்தமான பல லட்சம் மதிப்பிலான விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
எல்லை தாண்டியதாக வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்படும் மீனவர்கள் அவ்வப்போது விடுதலை செய்யப்பட்ட போதிலும் அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 கோடி வரை அபராதம் விதித்தும், அதனை கட்டத்தவறினால் மீண்டும் சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளிலும் இலங்கை ஈடுபட்டுள்ளது.
பாரம்பரிய பகுதியில் பாதுகாப்பான முறையில் மீன் பிடிக்கும் உரிமையை தமிழக மீனவர்களுக்கு பெற்றுத்தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கையை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ராமேசுவரத்தில் மீன்பிடி தொழிலை நம்பி மீனவர்கள் மட்டுமின்றி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
மீனவர்கள் கைது நடவடிக்கையில் மத்திய அரசு இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காதது மிகுந்த வேதனை அளிக்கிறது. இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதமும் அனுப்பியுள்ளார்.
ஆனாலும் மத்திய அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை. தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் ஒரு பேச்சுவார்த்தை கூட நடத்தவில்லை. இது கண்டனத்திற்குரியது என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., நவாஸ்கனி எம்.பி., மீனவர் சங்க பிரதிநிதிகள், நிர்வாகிகள், மீனவர்கள், அவர்களது குடும்பத்தினர் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தையும், ராமேசுவரத்தையும் இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் புதிய ரெயில் பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் உறுதி தன்மை குறித்து தொடர் ஆய்வுகள் நடை பெற்று வருகின்றன.
ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் நடத்திய ஆய்வின் போது கண்டறியப்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டன. தொடர்ந்து இரும்பால் ஆன இணைப்பு பகுதியை செங்குத்தாக மேலே தூக்கி இறக்கி கப்பல்கள், ரெயில்களை இயக்கி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையில் பொது மக்கள் விரைவில் புதிய ரெயில் பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பாம்பன் புதிய ரெயில் பாலம் இந்த மாத இறுதியில் பிரதமர் மோடி திறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து பாம்பன் பாலத்தில் இறுதிகட்ட ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இன்று காலை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் மற்றும் அதிகாரிகள் மண்டபம் வந்தனர். அங்கிருந்து புதிய ரெயில் பாலத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பாலத்தின் உறுதித்தன்மை, தூக்கு பாலத்தின் தரம் உள்ளிட்ட வைகளை இறுதி கட்டமாக ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து ராமேசுவரம் ரெயில் நிலையத்திலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதற்கிடையே பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி வருகிற 28-ந்தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பிரதமர் அலுவலகம் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
திறப்பு விழாவில் பங்கேற்க உள்ள நிலையில் மண்டபம் மற்றும் பாம்பனில் அதற்கான ஏற்பாடுகளை ரெயில்வே அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.






