என் மலர்
ராமநாதபுரம்
- புதிய ரெயில் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக தேர்வு செய்த இடத்தை பார்வையிட்டனர்.
- பழைய ரெயில் பாலத்தை அகற்றுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் கடந்து செல்ல வசதியாக 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான தூக்குப்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய ரெயில் பாலத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்து தற்போது திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது. திறப்பு விழா தொடர்பாக இதுவரை 3 முறை ஒத்திகையும் நடத்தப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் பாம்பன் புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்வதற்காக தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர், மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீ வத்சவா உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று வந்தனர்.
இந்த குழுவினர் மண்டபம் ஹெலிகாப்டர் தளத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து அங்கிருந்து காரில் வந்து பாம்பன் ரோடு பாலத்தில் நின்றபடி பாம்பன் புதிய ரெயில் பாலம் மற்றும் பழைய பாலத்தை ஆய்வு செய்தனர்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே சென்று, புதிய ரெயில் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக தேர்வு செய்த இடத்தை பார்வையிட்டனர்.
ஆய்வுக்குப் பின்னர் தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் நிருபர்களிடம் கூறும்போது, "பாம்பன் புதிய ரெயில் பாலத்தை இன்னும் 2 வாரத்தில் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். பழைய ரெயில் பாலத்தை அகற்றுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. புதிய ரெயில் பாலம் திறக்கப்பட்ட பின்னர்தான் ராமேசுவரம் ரெயில் நிலைய பணிகள் முடிவடையும்" என்றார்.
- மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.
- அபராதம் கட்ட தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
ராமேசுவரம்:
ராமேசுவரம் அருகே பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் இருந்து கடந்த 6-ந் தேதியன்று விசைப்படகு ஒன்றில் 14 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று இருந்தனர். இந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.
இந்த 14 பேரும் நேற்று மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி, 14 மீனவர்களுக்கும் இலங்கை பணம் தலா ரூ.4½ லட்சம் (இந்திய மதிப்பு ரூ.1.30 லட்சம்) அபராதம் விதித்தும் அதை கட்ட தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்தும், பறிமுதல் செய்த விசைப்படகை இலங்கை அரசுடைமை ஆக்கியும் உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து 14 மீனவர்களும் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுவரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு இலங்கை பணம் தலா ரூ.2½ லட்சம் வீதம் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக இலங்கை பணம் ரூ.2 லட்சம் என ரூ.4½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கை தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- 3 கார்களில் கட்சியினருடன் வந்த எச்.ராஜாவை இளையான்குடி போலீசார் தடுத்து நிறுத்தினர்.
- எச்.ராஜா இளையான்குடி காவல் ஆய்வாளர் மணிகண்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ராமநாதபுரம் பரமக்குடிக்கு பாஜக நிர்வாகி நினைவஞ்சலிக்கு சென்ற எச்.ராஜாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
3 கார்களில் கட்சியினருடன் வந்த எச்.ராஜாவை இளையான்குடி போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த எச்.ராஜா இளையான்குடி காவல் ஆய்வாளர் மணிகண்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது, நாங்கள் என்ன பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தர்களா ? எதற்கு எங்களை தடுக்குறீர்கள் என்று எச்.ராஜா ஆவேசமாக கூறினார்.
இதைதொடர்ந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து எச்.ராஜாவை செல்ல போலீசார் அனுமதித்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- வருகிற ஏப்ரல் 1-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவு.
- சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
ராமேசுவரம்:
ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலையில் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்களில் பெரும்பாலானோர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தங்கச்சி மடத்தை சேர்ந்த கென்னடி என்பவருக்கு சொந்தமான படகில் சென்றிருந்த சங்கர், அர்ஜூனன், முருகேசன் ஆகிய மூவரையும் கைது செய்து, விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.
காங்கேசன்துறை முகாம் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் 3 மீனவர்களையும் ஒப்படைத்தனர். பின்பு அவர்களை ஊர்க்காவல் படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களை வருகிற ஏப்ரல் 1-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்கள் 3 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் மூன்று பேரையும், அவர்களின் விசைப்படகையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக ராமேசுவரத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் இந்த வேலை நிறுத்தத்தினால் ரூ.5 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலை சார்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ராமநாதபுரம் கோவிலில் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும்.
- பக்தர் இறந்ததால் கோவிலில் சிறிது நேரம் தரிசனம் நிறுத்தப்பட்டு பரிகார பூஜைகள் நடைபெற்றன.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. 12 ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் ஒன்றாகவும், தென்னகத்து காசி என்றழைக்கப்படும் இந்த கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது. இதன் காரணமாக அமாவாசை மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
ராமநாதபுரம் கோவிலில் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும். பிரசித்தி பெற்ற இந்த பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்வதில் பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக வடமாநிலத்தவர்கள் இந்த பூஜையில் அதிகளவில் பங்கேற்பார்கள்.
அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த குழுவினர் இன்று காலை ஸ்படிக லிங்க பூஜையில் பங்கேற்க கோவிலுக்கு வந்தனர். இதில் ராஜ்தாஸ் (வயது 59) என்பவரும் தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒரு மணிநேரத்துக்கு மேலாக வரிசையில் காத்திருக்கும் நிலை இருந்தது.
இந்த நிலையில் வரிசையில் நின்றிருந்த ராஜ்தாசுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கினார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை அங்கேயே ஓரத்தில் படுக்க வைத்தனர். ஆனால் அங்கு சுமார் 30 நிமிடங்களுக்கும் மேல் அவரிடம் எந்த அசைவும் இல்லை.
இதுகுறித்து பக்தர்கள் கோவில் நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த ஊழியர்கள் ராஜ்தாசை கோவில் தேவஸ்தானத்துக்குட்பட்ட ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் ராஜ்தாஸ் இறந்து 20 நிமிடங்களுக்கு மேலாகி விட்டதாக தெரிவித்தனர். ராஜ்தாஸ் வரிசயைில் நின்றிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ராமேசுவரம் கோவில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோவிலில் அதிகாலையில் நடந்த ஸ்படிக லிங்க பூஜையில் பக்தர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பக்தர் இறந்ததால் கோவிலில் சிறிது நேரம் தரிசனம் நிறுத்தப்பட்டு பரிகார பூஜைகள் நடைபெற்றன.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ஓம்குமார் என்பவர் திருச்செந்தூரில் வரிசையில் நின்றிருந்தபோது மூச்சுத்திணறி பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியத்தால் மீனவ கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில், கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த சங்கர், அர்ஜூனன், முருகேசன் ஆகியோரை இலங்கை கடற்படை கைது செய்தது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் சம்பவம் மீனவ மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
- வேலைநிறுத்தம் காரணமாக துறைமுகத்தில் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன.
மண்டபம்:
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு சென்றனர். மன்னார் வளைகுடா பகுதியில் இந்திய கடல் எல்லையை யொட்டி மீனவர்கள் வலைகளை விரித்து மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை யினர் மீனவர்களை விரட்டியடித்தனர். தொடர்ந்து எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தாக கூறி ஆரோக்கியம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் இருந்த 14 மீனவர்களை சிறைபிடித்தனர்.
மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்ட அவர்கள் நீதிமன்ற உத்தரவுபடி வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
அடுத்தடுத்து ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கைது செய்து வருகிறது. இதை கண்டித்து கடந்த வாரம் வேலைநிறுத்தம் மற்றும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. அதனை தொடர்ந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்த சம்பவம் பாம்பன் மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கைதான மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் இன்று, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். வேலைநிறுத்தம் காரணமாக துறைமுகத்தில் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன.
மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்த 3 ஆயிரம் பேர் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
- உத்திரகுமார் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து அவரது சகோதரி மற்றும் உறவினர்கள் ஓடி வந்து உடலைப் பார்த்து கதறி அழுதனர்.
- முன் விரோதத்தின் காரணமாக இக்கொலை நடந்து உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா விக்கிரபாண்டியபுரம் வலசை கிராமத்தை சேர்ந்தவர் இருளாண்டி. இவரது மகன் உத்திரகுமார் (வயது 35). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வழக்கறிஞர் சங்கத்தில் பதிவு செய்து உத்திரகுமார் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.
உத்திரகுமார் பல ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததோடு, வாரச்சந்தை, மீன் மார்க்கெட் போன்ற பொது ஏலங்களிலும் கலந்து கொண்டு ஏலம் எடுத்து வந்துள்ளார்.
இவர் மீது ரியல் எஸ்டேட் மோசடி வழக்குகள், கொலை வழக்கு, கொடுக்கல் வாங்கல் வழக்குகள், அடிதடி வழக்குகள், பொது ஏலத்தில் கலந்து கொண்டு தகராறு செய்த வழக்குகள் என பல வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் பழனிசாமி என்பவரை கொலை செய்த வழக்கில் உத்திரகுமார் சிறை சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு பரமக்குடி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள அவரது சகோதரி வீட்டிற்கு சென்று விட்டு உத்திரகுமார் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அவரை ஹெல்மெட் அணிந்து வந்த 3 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்துள்ளனர். ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது மர்ம நபர்கள் அவரை மறித்து வாளால் சரமாரியாக தலை, கழுத்து உள்ளிட்ட பகுதியில் வெட்டி விட்டு தப்பினர். இதில் உத்திரகுமார் நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வாள் வெட்டில் அவரது தலை முற்றிலும் சிதைந்து காணப்பட்டது.
உத்திரகுமார் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து அவரது சகோதரி மற்றும் உறவினர்கள் ஓடி வந்து உடலைப் பார்த்து கதறி அழுதனர். கொலை குறித்து தகவல் அறிந்ததும் பரமக்குடி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடரந்து உடலை மீட்ட போலீசார் ஆம்புலன்சில் ஏற்றி பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் பரமக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரகுமாரின் அக்கா மகன் பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் பரமக்குடி நகர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து இதில் கூலிப்படையினருக்கு தொடர்பு இருக்கிறதா? அல்லது ஏதேனும் முன் விரோதத்தின் காரணமாக இக்கொலை நடந்து உள்ளதா? அல்லது பழிக்கு பலியா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
- உத்திரகுமார் என்ற இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் உடனடியாக அப்புறப்படுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இளைஞர் ஒருவர் 3 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அந்த இளைஞர் உத்திரகுமார் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பரமக்குடி அரசு மருத்துவமனை முன்பாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் உடனடியாக அப்புறப்படுத்தினர்.
இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டம்.
- மார்ச் 21-ஆம் தேதி அனைத்து கட்சிக்கும் அழைப்பு விடுத்து ரெயில் மறியல் போராட்டம் நடத்த திட்டம்.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடத்தில் கடந்த 5 நாட்களாக மீனவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் போராட்டத்தை தங்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்.
மேலும், மார்ச் 21-ஆம் தேதி அனைத்து கட்சிக்கும் அழைப்பு விடுத்து ரெயில் மறியல் போராட்டம் நடத்த மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
- மீனவர்களை விடுதலை செய்யவதில் மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது.
- அபராதத்தை செலுத்த முடியாமல் சிறையில் தவித்து வருகிறார்கள்.
ராமேசுவரம்:
எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யக்கோரியும், அவர்களின் விசைப்படகுகளை விடுவிக்க வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்கள் கடந்த மாதம் 24-ந்தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.
மீனவர்கள் பிரச்சனையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கடந்த 28-ந்தேதி முதல் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.

அதன்படி உண்ணாவிரதம், காத்திருப்பு போராட்டம், கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம் நடத்திய மீனவர்கள் 4-வது நாளான நேற்று திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தினர்.
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு சிறையில் வாடும் மீனவர்களை விடுதலை செய்யவதில் மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது.
மேலும் மீனவர்களுக்கு லட்சக்கணக்கில் விதித்த அபராதத்தை செலுத்த முடியாமல் சிறையில் தவித்து வருகிறார்கள். அந்த அபராத தொகையை செலுத்த நாங்கள் பிச்சை எடுக்கிறோம் என்றனர்.
அத்துடன் இந்திய நாட்டிற்கு பல ஆயிரம் கோடியை அந்நியச் செலாவணியாக ஈட்டித்தரும் மீனவர்கள் இன்று பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று கண்ணீருடன் தெரிவித்தனர்.
இதற்கிடையே நேற்று இரவு போராட்ட பந்தலுக்கு வருகை தந்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், டெல்லியில் தி.மு.க. எம்.பி.க்கள் பிரச்சனையை முன்னிறுத்தி தீர்வுகாண உத்தரவிட்டு இருப்பதாகவும், இன்னும் 10 நாட்களுக்குள் மீனவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.
இருந்தபோதிலும் முதலமைச்சர், பிரச்சனைக்கு தீர்வு காண்பேன் என்று உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர். அதன்படி இன்று 5-வது நாளாக மீனவர்கள் போராட்டம் தொடர்கிறது.

இந்தநிலையில் இன்று தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். இதனால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் தயார் நிலையில் தீயணைப்பு வாகனம் கொண்டு வரப்பட்டு பேராட்ட பந்தல் அருகே நிறுத்தப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் தீவிர மடையும் போராட்டத்தால் ராமேசுவரத்தில் 700 விசைப்படகுகளும், மண்டபம் கோவில்வாடி பகுதியில் 150 படகுகளும் கடலுக்கு செல்லவில்லை. இதனால் தற்போது வரை ரூ.30 கோடிக்கும் மேல் மீன்பிடி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழில் சார்ந்தவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறார்கள்.
முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள விசைப்படகு உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், இலங்கை சிறையில் உள்ள மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் தின உதவித்தொகை ரூ.350-ல் இருந்து ரூ.500-ஆக உயர்த்தி வழங்கவும் உத்தரவிட்டு உள்ளார்.
- மத்திய மந்திரி நேரில் வந்து எங்களிடம் பேசி உறுதி தர வேண்டும்.
- ராமேசுவரம் தீவில் எங்கு வேண்டுமானாலும் தீக்குளிப்பு போராட்டம் நடைபெறலாம்.
ராமேசுவரம்:
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல், சிறைபிடிப்பை கண்டித்தும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 24-ந் தேதி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கினர்.
போராட்டத்தின் தொடர்ச்சியாக கடந்த வெள்ளிக்கிழமை தங்கச்சி மடம் வலசை பகுதி பஸ் நிறுத்தம் எதிரே ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தனர்.
நேற்று காத்திருப்பு போராட்டத்தை தொடங்கிய மீனவர்கள் இரவு, பகலாக கொட்டும் மழையிலும் பந்தலில் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இந்தநிலையில் தங்கச்சி மடத்தில் நேற்று 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது. தமிழக மீனவர்களை கைது செய்வது, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களுக்கு அபராதம் விதித்தும் அதை கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்து போராட்டம் தொடரும் என்று மீனவர்கள் உறுதிபட தெரிவித்தனர்.
மேலும் மத்திய மந்திரி நேரில் வந்து மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நேற்று கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைபெற்றது. இதற்காக போராட்ட பந்தல் முன்பாக கியாஸ் அடுப்பு மற்றும் பாத்திரங்கள் கொண்டு வரப்பட்டு உணவு தயார் செய்யப்பட்டது.
இதற்கிடையே பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ராமேசுவரம் சென்றிருந்த தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி மீனவர்களை திடீரென்று சந்தித்தார். அப்போது மீனவர்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுவை கவர்னரிடம் வழங்கினார்.
அப்போது அவர்களிடம் பேசிய கவர்ன மத்திய, மாநில அரசுகளிடம் பேசி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துவிட்டு சென்றார்.
காத்திருப்பு போராட்டத்தின் 4-வது நாளான இன்று திருவோடு ஏந்தி போராட்டத்தில் பங்கேற்கப் போவதாக மீனவர்கள் அறிவித்து இருந்தனர். அதன்படி போராட்ட பந்தல் முன்பாக திருவோடுகள் கொண்டு வரப்பட்டு வரிசையாக வைக்கப்பட்டன. பின்னர் மீனவர்கள் அதனை கையில் ஏந்தி போராடினர்.
இதுகுறித்து மீனவர் சங்க தலைவர் ஒருவர் கூறுகை யில், எங்கள் போராட்டத் திற்கு ஆதரவு பெருகி வருகிறது. நேற்று நேரில் வந்த கவர்னரிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து சென்றுள்ளார். இருந்தபோதிலும் மத்திய மந்திரி நேரில் வந்து எங்களிடம் பேசி உறுதி தர வேண்டும்.
இல்லையென்றால் நாளை நாங்கள் தீக்குளிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். அதனை எங்கே நடத்துவது என்பதை ரகசியமாக வைத்துள்ளோம். இந்த ராமேசுவரம் தீவில் எங்கு வேண்டுமானாலும் எங்கள் தீக்குளிப்பு போராட்டம் நடைபெறலாம் என்றார்.






