என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    வீட்டுமனை மோசடி வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் தஞ்சை மாப்பிள்ளை நாயக்கர் பட்டியைச் சேர்ந்தவர் தனசாமி (வயது 67). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர்புதுக்கோட்டை பாலன்நகர் பகுதியை சேர்ந்த தனபாக்கியம் மற்றும் 11- க்கும் மேற்பட்ட நபர்களிடம் வீட்டு மனை  வழங்குவதாக கூறி, ரூ. 11 லட்சத்து 75 ஆயிரம் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.   

    இது தொடர்பாக பணம் கட்டியவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் பணம் திருப்பித்தராமலும், வீட்டு மனை வழங்காமலும் தனசாமி  காலதாமதம் செய்தார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தனபாக்கியம் தலைமையில் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு  இன்ஸ் பெக்டர் லட்சுமியிடம் புகார் செய்தனர். 

    இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் உதவி ஆய்வாளர் பிச்சை ஆகியோர் தனசாமி  மற்றும் அவரது குடும்பத்தினர் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் தனசாமியை நேற்று கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கந்தர்வக்கோட்டை பகுதியில் நாளை மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
    கந்தர்வக்கோட்டை:

    கந்தர்வக்கோட்டை அடுத்த ஆதனக்கோட்டை ,புதுப்பட்டி மற்றும் பழைய கந்தர்வக்கோட்டை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பாரமரிப்பு பணிகள் (12.10.2018) வெள்ளி கிழமை நடைபெறுவதால் இந்த துணைமின் நிலையங்களில் மின்விநியோகம் பெறும் ஆதனக்கோட்டை,மின்னாத்தூர்,கணபதிபுரம்,பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர்,அண்டக்குளம், மணவிடுதி, சோத்துப்பாளை, சொக்கநாதப்பட்டி,மாந்தான்குடி,காட்டுநாவல்,மட்டையன்பட்டி,மங்களத்துப்பட்டி, கந்தர்வக்கோட்டை,அக்கசிப்பட்டி,கல்லாக்கோட்டை, மட்டங்கால்,வேம்பண்பட்டி, சிவந்தான்பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புராண்பட்டி, மோகனூர், பல்லவராயன் பட்டி,பழைய கந்தர்வக்கோட்டை,பிசானத்தூர்,துருசப்பட்டி,மெய்குடிப்பட்டி, ஆகிய பகுதிகளுக்கு காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை மின் விநியோகம் இருக்காது என கந்தர்வக்கோட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சேவியர் தெரிவித்துள்ளார். 

    கீரனூர் குன்றாண்டார் கோவில் துணை மின் நிலையத்தில் நாளை வெள்ளிக்கிழமை (12.10.18) மாதாந்திர பணிகளுக்காக காலை 9.45 மணி முதல் மாலை 4.45 வரை குன்றாண்டார் கோவில், தெம்மாவூர், செங்களுர், கிள்ளுக்கோட்டை, உடையாளிப்பட்டி, ராக்கதாம்பட்டி, ஒடுகம் பட்டி, வாழமங்களம் ஆகிய ஊர்களில் மின் விநியோகம் இருக்காது என கீரனூர் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார்.
    ஆலங்குடியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கலிபுல்லா நகர் 3-ம் வீதியைசேர்ந்த ராஜா முகமது.  வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தவுலத் நிஷா. இந்த தம்பதிக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் 2-வது மகள் அனிஷா (7, பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஆலங்குடியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் பெரியம்மா நூர் நிஷா. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருச்சியிலிருந்து தன் தங்கையை பார்க்க ஆலங்குடி வந்துள்ளார். 

    அப்போது அனிஷா, தன் பெரியம்மா நூர்நிஷாவிடம் தாத்தா அஸ்ரப் அலி தன்னை தூங்கும்போது தூக்கிக் கொண்டுபோய் தனி அறையில் வைத்து தன்னை பாலியல் தாக்குதல் மூன்று முறை செய்ததாக கூறியுள்ளார்.

    இதனைத்தொடர்ந்து, நூர்நிஷா தனது தங்கை தவுலத் நிஷாவிடம் கேட்டதற்கு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று தெரிவித்துள்ளார். காலாண்டு தேர்வு விடுமுறைக்காக அனிஷாவை திருச்சியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு தவுலத் நிஷா அனுப்பி வைத்துள்ளார். 

    அங்கு குழந்தை அனிஷாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் திருச்சி அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். இதற்கிடையே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு குறித்து நூர்நிஷா ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். 

    அதன் பேரில் போலீசார் ஆலங்குடி கலிபுல்லா நகர் 3-ம் வீதியை சேர்ந்த அஸ்ரப் அலி (68) என்ற மீன் வெட்டும்  தொழிலாளியை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆலங்குடி மாவட்ட உரி மையியல் மற்றும் நடுவர் நீதிமன்ற நீதிபதி கலைநிலா முன்  ஆஜர்படுத்தப்பட்ட அஸ்ரப் அலி சிறையில் அடைக்கப்பட்டார்.
    கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு சீரமைத்தல் பணிகளுக்கு அரசின் நிதி உதவி வழங்கப்படும் என புதுக்கோட்டை கலெக்டர் கணேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கலெக்டர் கணேஷ் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிறிஸ்தவ தேவாலயங்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கு அரசு நிதி உதவி வழங்கும் திட்டம் 2016- 17-ம் ஆண்டு முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிறிஸ்தவ தேவாலயங்களை இந்த திட்டங்களின் கீழ் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்வதற்கு அந்த தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்திருக்க வேண்டும், தேவாலயமும் பதிவு செய்திருக்க வேண்டும்.

    தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருக்கக் கூடாது. சீரமைப்பு பணிக்காக ஒரு முறை நிதி உதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதி உதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படும். விண்ணப்ப படிவத்தை அனைத்து உரிய ஆவணங்களுடன் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டருக்கு வருகிற 25&ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பபடிவம் மற்றும் சான்றிதழ்  WWW.bcmbcmw@tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டு உள்ளது. இதனை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். மேலும் 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலான தேவாலயங்களுக்கு ரூ.1 லட்சமும், 15 முதல் 20 ஆண்டுகள் வரையிலான தேவாலயங்களுக்கு ரூ.2 லட்சமும், 20 ஆண்டுகளுக்கு மேல் உள்ள தேவாலயங்களுக்கு ரூ.3 லட்சமும் சீரமைத்தல் பணிகளுக்கு அரசின் நிதி உதவியாக வழங்கப்படுகிறது. கலெக்டர் தலைமையிலான குழு சார்பில் விண்ணப்பங்கள் அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து அங்கு ஆய்வு மேற்கொள்ளப்படும்.
    எனவே தகுதியான கிறிஸ்தவ தேவாலயங்கள் உரிய காலத்திற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    புதுக்கோட்டையில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 4 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் கணேஷிடம் மனு கொடுக்கப்பட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார்.

    கூட்டத்தில் மாக்சிஸ்ட் லெனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் விடுதலைக்குமரன் தலைமையில் அக்கட்சியினர் கொடுத்த மனுவில், தஞ்சாவூரில் இருந்து மதுரை வரை அமைக்க இருக்கும் 4 வழிச்சாலை திட்டத்திற்காக புதுக்கோட்டை மாவட்ட விவசாய நிலங்களில் அதன் உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே இரவோடு இரவாக கல் ஊன்றியவர்கள் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள இரு வழி தேசிய நெடுஞ்சாலையிலேயே போதிய அளவு வாகன போக்குவரத்து இல்லாததால் கந்தர்வக்கோட்டை சுங்கச்சாவடியில் நாள் ஒன்றுக்கு ரூ.68 ஆயிரம் இழப்பு என்று கூறப்படும் நிலையில், இந்த திட்டம் தேவையற்றது. எனவே நான்குவழி சாலைக்காக விளை நிலங்களை அபகரிக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காத இந்த திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும். என்று கூறப்பட்டு இருந்தது.

    இதேபோல தி.மு.க. நகர செயலாளார் நைனாமுகமது தலைமையில் அக்கட்சியினர் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை நகராட்சி 42-வது வார்டு பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தினசரி வழங்க வேண்டிய குடிநீர் முறையாக வழங்கப்படுவதில்லை. கழிவுநீர் கால்வாய் வசதியை முறையாக செய்து தர வில்லை. மேலும் சாலை வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை.எனவே இனியாவது முறையாக நகராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும். மேலும் அந்த பகுதியில் பழுதடைந்துள்ள மின்கம்கம்பத்தை மாற்றி தர வேண்டும், என கூறப்பட்டிருந்தது.

    அரிமளம் பசுமை மீட்புக்குழு சார்பில் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில் தெரிவித்திருப்பதாவது, அரிமளத்தில் உள்ள நீர்நிலை வரத்து வாரிகளை தூர்வாரும் பணிகள் பசுமை மீட்புக் குழுவினரால் தொடங்கி வைக்கப்பட்டது. அந்த பணிகள் முடிந்த பிறகு இரண்டு முறை மழை பெய்தும் வரத்து வாரிகளில் மழை நீர் வரவில்லை. இதுகுறித்து இங்கு களப்பணியாற்றிய இளைஞர்கள் ஆய்வு செய்தபோது, வனப்பகுதியினரால் பல இடங்களில் நீர்வரும் பாதைகளில் பெரிய வரப்பு அணைகள் அமைக்கப் பட்டிருப்பதை கண்டறிந்தனர். எங்கள் குழு வரத்து வாரிகளை தூர்வாரிய பிறகு அரிமளத்தில் 6 செ.மீ மழை பெய்தும் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரவில்லை. இதற்கு காரணம் வனத்துறையினரால் ஏற்படுத்தப்பட்ட வரப்பணைகள் தான். எனவே இந்த வரப்பணைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.

    மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் கணேஷ் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
    புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் டெங்கு கொசு ஒழிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் டெங்கு கொசு ஒழிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று புதுக்கோட்டையில் உள்ள நிஜாம்காலனி, பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி பகுதி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை கலெக்டர் கணேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கொசு மருந்து அடிக்கும் பணி, தூய்மை பணிகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது புதுக்கோட்டை நகர் பகுதிகளில் தினமும் காலை, மாலை இரு வேளைகளில் கொசு மருந்து அடிக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தி தொடர்ந்து தினமும் சுத்தம் செய்ய வேண்டும். தனிநபர் இல்லங்களில் டெங்குகொசு உருவாகும் லார்வா கண்டறியும் பணியினை மேற்கொண்டு டெங்குகொசு உருவாகும் காரணிகளை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, நகரமைப்பு ஆய்வாளர் செல்வராஜ் உள்பட நகராட்சி பணியாளர்கள் பலர் உடன் இருந்தனர்.
    விராலிமலை தொகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கிய அமைச்சருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    அன்னவாசல்:

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல் அருகே உள்ள சீகம்பட்டி, குடுமியான்மலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அவற்றை மனுக்களாக பெற்று கொண்டனர். பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட மருங்கிப்பட்டி, அரிய முத்துப்பட்டி அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தொண்டர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் திடீரென ஏறி சென்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    அப்போது அங்கு கூடிநின்ற பெண்கள் அமைச்சருக்கு ஆரத்தி எடுத்தும், நெற்றியில் குங்கும் வைத்தும் அமைச்சர் விஜயபாஸ்கரை வரவேற்றனர். திடீரென அமைச்சர் விஜயபாஸ்கர் மோட்டார் சைக்கிளில் வந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டது அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அப்போது அந்தப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தெரு விளக்கு வசதி, சாலைவசதி பசுமைவீடு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கொடுத்தனர். இதையடுத்து அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்றார்.

    இதைத்தொடர்ந்து குடுமியான்மலையில் மக்களை சந்திக்க சென்ற பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறுகையில், “மக்களின் குறைகளை நேரடியாக கேட்கும் வகையில் தான் இது போன்ற மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். தற்போது ஆட்சியிலும் சரி, கட்சியிலும் சரி எந்த குழப்பமும் இல்லை. யாராலும் எந்தவித குழப்பத்தையும் ஏற்படுத்த முடியாது. மக்களும், தொண்டர்களும் தெளிவாக உள்ளனர். மக்கள் ஆட்சிக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்திருப்பது போதாது. மத்திய அரசு நினைத்தால் பெட்ரோல், டீசல் விலையை 10 ரூபாய் வரை குறைக்க முடியும். விலை குறைப்பை மத்திய அரசு தான் செய்ய வேண்டும். துணை முதல் அமைச்சர் பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரன் பிரச்சினை தொடர்பாக பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கவர்னர் சந்திப்பு என்பது வழக்கமான ஒன்று தான். இந்த சந்திப்பில் 7 பேர் விடுதலை குறித்தும் முதல்-அமைச்சர் பேசி இருக்கலாம்” என்றார்.
    புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் உயிரிழந்தனர். டாக்டர்களை கண்டித்து உறவினர்கள் நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஏ.மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் நிரோஷ்குமார். இவரது மனைவி அனுசியா (வயது 20). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் கடந்த 2-ந்தேதி பிரசவத்திற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை அனுசியாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். அப்போது அவருக்கு இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது.

    இதனையடுத்து மருத்துவர்கள், குழந்தை இறந்து பிறந்ததாகவும், அனுசியாவிற்கு ரத்தப்போக்கு அதிகமாக இருப்பதால் கர்ப்ப பையை அகற்ற வேண்டும் எனவும், அதை அகற்றினால் தான் அனுசியா உயிர் பிழைப்பார் எனவும் உறவினர்களிடம் கூறியதாக தெரிகிறது. பின்னர் அனுசியாவின் கர்ப்பபையை டாக்டர்கள் அகற்றினர். தொடர்ந்து உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த 10-க்கும் மேற்பட்டோர் அனுசியாவிற்கு ரத்தமும் கொடுத்தனர். இந்நிலையில் அனுசியாவும் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    டாக்டர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததால் தான் அனுசியாவும், குழந்தையும் இறந்ததாகவும், மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால், இங்கு சிகிச்சைக்கு வரும் பலர் இறக்கின்றனர் எனக்கூறி அனுசியாவின் உறவினர்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மருத்துவமனைக்கு பாதுகாப்பு பணிக்காக வந்த போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட அனுசியாவின் உறவினர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் மற்றும் டாக்டர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று காலை பிரசவத்தில் தாய் மற்றும் குழந்தை உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஏ.மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் நிரேஷ்குமார். இவரது மனைவி ஹன்சிகா (வயது 22). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் கடந்த 2-ந்தேதி பிரசவத்திற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை ஹன்சிகா திடீரென உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது. இதனால் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    டாக்டர்களின் தவறான சிகிச்சையால்தான் ஹன்சிகா மற்றும் குழந்தை இறந்ததாக கூறி அவரது உறவினர்கள் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் டாக்டர்களுக்கும், ஹன்சிகாவின் உறவினர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் மருத்துவமனை முன்பு முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இதனிடையே அங்கு ஒரு வழக்கு தொடர்பாக விசாரணைக்காக வந்திருந்த போலீசார், ஹன்சிகாவின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருடனும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலையாமல் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    இது குறித்து மருத்துவக்கல்லூரி மகப்பேறு துறை தலைவர் கற்பகம் கூறும்போது, அனுசுயா கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவர் ஏற்கனவே மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அந்தநிலையில் தான் அவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

    நாங்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தோம். இருப்பினும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப் பட்டு இருந்ததாலும், ரத்த அணுக்கள் மிகக்குறைவாக இருந்ததாலும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை. குழந்தையும் இறந்து விட்டது.

    இதுகுறித்து அவரது உறவினர்களிடம் முன்கூட்டியே தெரிவித்து விட்டதாகவும், சரியான புரிதல் இல்லாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். இதனிடையே போலீசார் மற்றும் மருத்துவமனை டாக்டர்கள் தொடர்ந்து நடத்திய பேச்சு வார்த்தையை அடுத்து ஹன்சிகாவின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் தாய்-சேய் உடலை பெற்று சென்றனர்.

    பிரசவத்தின் போது தாய்- சேய் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி அருகே அண்ணனை பள்ளிக்கு அனுப்ப வந்த தம்பி வேன் சக்கரத்தில் சிக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ராஜேந்திரபுரம் முஸ்லீம் தெருவை சேர்ந்தவர் அஜ்மல் கான். இவருக்கு முகமது ஆபின் (வயது 5), முகமது ஐமன் (3) என்ற 2 மகன்கள் இருந்தனர்.

    இதில் முகமது ஆபின் அறந்தாங்கியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான். தினமும் வேன் மூலம் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.

    இன்று காலை முகமது ஆபின் வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டான். அதே சமயம் பள்ளி வேனும் வந்தது. பள்ளிக்கு செல்லும் அண்ணனை வழியனுப்புவதற்காக முகமது ஐமனும் வந்தான். முகமது ஆபின் வேனில் ஏறியதும் டிரைவர் வேனை பின்னோக்கி நகர்த்தினார்.

    வேனுக்கு பின்னால் சிறுவன் முகமது ஐமன் நின்றதை கவனிக்கவில்லை. இதில் வேனின் பின்சக்கரத்தில் சிக்கி முகமது ஐமன் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானான்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முகமதுஐமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து வேன் டிரைவர் அறிவழகன் (55) என்பவரை கைது செய்தனர்.

    அண்ணனை பள்ளிக்கு அனுப்ப வந்த தம்பி வேன் சக்கரத்தில் சிக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



    கந்தர்வகோட்டை அருகே பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை மருத்துவர் நகர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் கார்த்தி(வயது 18). இவர் பிளஸ்-2 வரை படித்து முடித்து விட்டு, தஞ்சாவூரில் உள்ள ஒரு செல்போன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் தினமும் வேலைக்கு கந்தர்வகோட்டையில் இருந்து தஞ்சாவூருக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம். அதேபோல நேற்றும் ஒரு அரசு பஸ்சில் கந்தர்வகோட்டையில் இருந்து தஞ்சாவூருக்கு சென்று கொண்டிருந்தார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கார்த்தி பஸ்சின் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் கந்தர்வகோட்டை அருகே உள்ள சுங்கச்சாவடி அருகே வேகத் தடையில் பஸ் ஏறி இறங்கியபோது, பஸ்சின் படிக்கட்டில் நின்ற கார்த்திக் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த கார்த்தியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு பஸ் டிரைவர் செல்லத்துரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    பஸ்சில் தொங்கியபடி சென்ற வாலிபர் சுங்கசாவடி தடுப்பு கம்பியில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
    கந்தர்வக்கோட்டை:

    கந்தர்வக்கோட்டை பெரியகடை வீதியை சேர்ந்தவர் குமார். டெய்லர். இவரது மகன் கார்த்தி (வயது 18). இவர் தஞ்சாவூரில் வேலை பார்த்து வந்தார். 

    தினமும்பஸ்சில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். இன்றும் வழக்கம் போல் தஞ்சாவூருக்கு செல்லும் அரசு பஸ்சில் ஏறி வேலைக்கு சென்றார். பஸ்சில்  கூட்டம் அதிகமாக இருந்ததால் கார்த்தி படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்ததாக கூறப்படுகிறது. 

    பஸ் இன்று காலை 9 மணியளவில் கந்தவர்க்கோட்டை புதுநகர் அருகே உள்ள சுங்கசாவடியை கடந்து சென்றது. அப்போது கார்த்திக்கின் தலை எதிர் பாராதவிதமாக அங்கிருந்த தடுப்பு கம்பியில் பலமாக மோதியது. இதில் தலையில் பலத்த அடிபட்டு கார்த்தி கீழே விழுந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் கார்த்தி பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து கந்தர்வக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குபதிவு செய்து அரசு பஸ் டிரைவர் செல்லத்துரையிடம் விசாரணை நடத்தி வருகிறார். 
    ×