என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்க கோரி போராட்டம்.
    • போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    புதுக்கோட்டை அருகே கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்பதை கண்டறிந்து, கருக்கலைப்பு செய்தபோது பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து பென்னாமராதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்க கோரி பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கருவில் இருப்பது பெண் குழந்தை என்பது தெரியவந்ததால், கருக்கலைப்பு செய்தபோது பெண் உயிரிழந்துள்ளார்.

    உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு கோரியும், மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போராட்டம் நடத்தப்பட்டது.

    பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • வகுப்பறைகுள் கரும்பலகையின் மேல் பாம்பு சுற்றி கொண்டிருந்ததை கண்டு மாணவர்கள் கூச்சலிட்டனர்.
    • தீயணைப்புத் துறையினர் பாம்பை லாவகமாக பிடித்து சாக்குப்பைக்குள் அடைத்தனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி கிழக்கு தொடக்கப்பள்ளி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. எம்.ஜி.ஆர். சிலை அருகே உள்ள குட்டைக்குளத்தின் மேற்கு கரையில் பள்ளி செயல்பட்டு வருகின்ற நிலையில், இக்குளத்தை பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் குளத்தில் ஆகாய தாமரை உள்ளிட்ட பல்வேறு செடிகள் மண்டி புதர்போல் காட்சியளிக்கிறது.

    இந்த நிலையில் மாலையில் வகுப்பறைகுள் கரும்பலகையின் மேல் பாம்பு ஒன்று சுற்றி கொண்டிருந்ததை சில மாணவர்கள் கண்டு கூச்சலிட்டனர். அதனை தொடர்ந்து அங்கிருந்து மாணவ, மாணவியர்கள் அலறியடித்துக் கொண்டு பள்ளியை விட்டு வெளியேறினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அறந்தாங்கி தீயணைப்புத் துறையினர் பாம்பை லாவகமாக பிடித்து சாக்குப்பைக்குள் அடைத்தனர். தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் தண்ணீர் பகுதியை விட்டு கதகதப்பான இடத்தை நோக்கி பாம்பு தஞ்சமடைந்துள்ளது.

    எனவே நகராட்சி கிழக்கு தொடக்கப்பள்ளி மாணவர்களின் நலன் கருதி குட்டைக்குளத்தை உடனடியாக தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • மீனவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
    • அரசு கடல் பசுவை அழிவின் விளிம்பில் இருந்து மீட்க முன்னுரிமை அளிக்கிறது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள தெற்கு புதுக்குடியை சேர்ந்த கருப்பையா என்பவர் நாட்டுப் படகில் மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மீனவர்களின் வலையில் அரிய வகை உயிரினமான கடற்பசு சிக்கியது.

    அதனை அறிந்த மீனவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதிகாரிகளின் அந்த கடற்பசுவை பத்திரமாக மீட்டு, அதனை மீண்டும் கடலுக்குள் விடுமாறு மீனவர்களிடம் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து மீனவர்கள் அந்த கடல்ப சுவை பத்திரமாக மீண்டும் கடலுக்குள் விட்டனர். மீனவர்களின் நேர்மையான இந்த செயலை திருச்சி மண்டல தலைமை வனபாது காவலர் சதீஷ், மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம், அறந்தாங்கி வனச்சரக அலுவலர் மணிவெங்கடேஷ் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில்

    தமிழக கடற்பகுதியில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை காப்பது தொடர்பாக வனத்துறை சார்பில் மீனவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி போன்ற பகுதிகளில் காணப்படும் அரிய வகை உயிரினங்களான கடற்பசு, கடல் ஆமை, கடல்அட்டை போன்றவற்றை பாதுகாக்கும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    கடல் பசு' எண்ணிக்கையில் மிகவும் குறைவாக உள்ளதால் அரசு கடல் பசுவை அழிவின் விளிம்பில் இருந்து மீட்க முன்னுரிமை அளிக்கிறது. இந்த சூழலில் தெற்கு புதுக்குடி மீனவர் கருப்பையா வலையில் சிக்கிய கடற்பசுவை மீண்டும் கடலிலேயே விட்டது மிகுந்த பாராட்டுக்கு உரியது என்றனர்.

    • விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர்.
    • இளைஞர்களுடன் கைப்பந்து விளையாடி உற்சாகப்படுத்தினார்.

    விராலிமலை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், விராலிமலை எம்.எல்.ஏ.வுமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள வலையப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. நிர்வாகி வடிவேல் இல்ல காதணி விழாவிற்கு சென்றார்.

    அப்போது வலையப்பட்டி பகுதியில் இளைஞர்கள் சிலர் கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை பார்த்தவுடன் காரை விட்டு இறங்கிச் சென்ற டாக்டர் சி.விஜயபாஸ்கர் இளைஞர்களுடன் கைப்பந்து விளையாடி உற்சாகப்படுத்தினார்.

    விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தனது பெயரில் சி.வி.பி. ஸ்போர்ட்ஸ் அகடமி நடத்தி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விளையாட்டு வீரர்களை பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று பல்வேறு பதக்கங்களை பெற உதவியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிட த்தக்கது.

    அவர் இளைஞர்களுடன் சேர்ந்து வாலிபால் விளையாடிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • பஸ் நிலையம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
    • அவர்கள் ஏதும் சதிச்செயலில் ஈடுபட்டுள்ளார்களா? என்றும் விசாரணை நடந்து வருகிறது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் குற்றசெயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக எஸ்.பி.வந்திதா பாண்டே மேற்பார்வையில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை பஸ் நிலையம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் 5 பேர் ஆயுதங்களுடன் தங்கியிருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ்(26), மணிகண்டபிரபு(29), நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த சுரேஷ் பாண்டியன்(23), இசக்கி பாண்டியன்(24), ராஜவல்லிரம் மகாதேவன்(32) என்பது தெரியவந்தது.

    அவர்களிடம் இருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரும் கூலிப்படையை சேர்ந்தவர்களா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் ஏதும் சதிச்செயலில் ஈடுபட்டுள்ளார்களா? என்றும் விசாரணை நடந்து வருகிறது.

    • கம்ப ராமாயணம் சொல்வது திராவிட மாடல் ஆட்சியைத்தான் சொல்கிறது.
    • ராமன் அனைவருக்கும் பொதுவானவனாக இருந்தான்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் நடைபெற்ற கம்பன் கழகத்தின் 10-வது நாள் விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்றார். விழாவில் அவர் பேசியதாவது:-

    கம்ப ராமாயணத்தை உற்றுநோக்கி உள்நோக்கி சமுதாயக் கண்ணோட்டத்தோடு பார்த்தால், அங்கே நமக்கு தெரிவது, சமத்துவம், சமூகநீதி, எல்லோருக்கும் எல்லாம், நாம் அனைவரும் அண்ணன் தம்பிகள், நமக்குள் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது, இதுதான் கம்ப ராமாயணம்.

    இதைத்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி என்கிறார். கம்ப ராமாயணம் சொல்வது திராவிட மாடல் ஆட்சியைத்தான் சொல்கிறது என்பதால், இதை நான் சொல்கிறேன்.

    மற்றவர்கள் யாரும் தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம். ராமன் எந்த குலத்தில் பிறந்தான் என்று பார்ப்பது கிடையாது. ராமன் அனைவருக்கும் பொதுவானவனாக இருந்தான் என்றுதான் நாம் பார்க்கிறோம்.

    தசரதனுடைய மகனாகத்தான் விபீஷனனையும், குகனையும், சுக்ரீவனையும், ராமன் ஏற்றுக்கொண்டிருக்கிறான் என்று சொன்னால், அங்கே ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை எதிர்காலத்திலே உருவாக வேண்டும், இருக்க வேண்டும் என்ற உன்னத லட்சியத்தோடு உருவாக்கப்பட்ட காவியம்தான் ராம காவியம், கம்ப ராமாயணம் என்பதை நாம் இங்கே மனதிலே வைத்துக்கொண்டாக வேண்டும்.

    எனவே, பாதி பேருக்கு இது கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும். இருந்தாலும், அதில் இருக்கக்கூடிய பல நல்ல கருத்துக்களை எடுத்துக்கொள்ள வேண்டும். போற்றப்பட வேண்டும். அந்த வித்தியாசமான கண்ணோட்டத்திலே நாங்கள் பார்க்கிறபோது, இது எங்களுடைய திராவிட மாடலுக்கு பொருத்தமான ஒன்றாக இருக்கும் என்ற காரணத்தினாலேதான் ராமனை திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடியாக இருக்கும் என்று நாங்கள் சொல்லி வருகிறோம்.

    தந்தை பெரியாருக்கு முன்னால், பேரறிஞர் அண்ணாவுக்கு முன்னால், அண்ணல் அம்பேத்கருக்கு முன்னால், தலைவர் கலைஞருக்கு முன்னால், இன்று தலைவர் தளபதிக்கு (மு.க.ஸ்டாலின்) முன்னால், இந்த திராவிட மாடல் ஆட்சியை முன்னெடுத்துச் சென்றிருக்கின்ற சமூகநீதியின் காவலர், சமத்துவம் சமூகநீதி இவற்றையெல்லாம் போதித்து உலகத்திற்கு எடுத்துச் சொன்னவர், எல்லோரும் சமம் என்று சொன்ன ஒரே நாயகன் ராமன்.

    இதை யாரும் மறுக்க முடியாது. இதை மறுப்பதற்கான வாய்ப்பும் கிடையாது. ராமர் ஆட்சியின் நீட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெறும் தி.மு.க ஆட்சி. 2026 சட்டசபைத் தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க அறுதிப் பெரும்பான்மை பெற்று யாருடைய தயவு, இல்லாமல் மீண்டும் ஆட்சியை அமைக்கும். யாருடைய தயவையும் பெறும் சூழ்நிலை எங்களுக்கு வராது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கம்பராமாயணத்தில் ராமனை பற்றி சொல்லி இருக்கக்கூடிய கருத்துக்கள் திராவிட மாடல் ஆட்சியை ஒட்டிய கருத்துக்கள். திராவிட மாடல் கொள்கையில் கம்பன் எந்த அளவுக்கு ஈடுபட்டிருந்தார் உடன்பட்டு இருந்தார், சமரசப்பட்டு இருந்தார் என்பதைத்தான் நான் குறிப்பிட்டேன்.

    சமத்துவம் சமூக நீதி எல்லோருக்கும் எல்லாம். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. குகனோடு சேர்ந்து ஐவரானோம், சுக்கிரனோடு சேர்ந்து அறுவர் ஆனோம், விபீஷணனோடு சேர்ந்து ஏழ்வரானோம் என்று எல்லோரையும் தன்னுடன் இணைத்துக் கொள்கின்ற அந்த சகோதரபான்மையோடு ராமர் நாங்கள் எல்லாம் தசரதனின் குழந்தைகள் என்று சொல்வதோடு அனைவரையுமே தனது சகோதரர்களாக ஏற்றுக் கொண்டிருக்கின்ற அந்த பக்குவம் அதுதான் திராவிட மாடல் ஆட்சி. அதைத்தான் நாங்கள் முன்னிறுத்தி இருக்கின்றோம்

    அயோத்திக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நான் செல்வேன். நான் அனைத்து கோவிலுக்கு செல்பவன் தான். அயோத்திக்கும் சென்று பார்க்கத்தான் வேண்டும். அயோத்தியில் இருப்பது பால ராமர் தான்.

    • ராமர் ஆட்சியின் நீட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தி.மு.க.வின் ஆட்சி.
    • யாருடைய தயவிலும் ஆட்சி அமைக்கக்கூடிய சூழ்நிலை எங்களுக்கு ஏற்படாது.

    ராமர் ஆட்சியில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரும் சமம் என்று இருந்துபோல், திமுக ஆட்சியிலும் தற்போது நடைபெற்று வருகிறது என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

    புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துக் கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடியாக நாங்கள் ராமனைப் பார்க்கிறோம். ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட காவியம் ராம காவியம்.

    சமத்துவத்தையும், சமூக நீதியும் எல்லோருக்கும் சமம் என்று போதித்தவர் ராமன்.

    ராமர் ஆட்சியின் நீட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தி.மு.க.வின் ஆட்சி. 2026 சட்டப்பேரவை தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள சாதனையால் அருதி பெரும்பான்மையோடு தி.மு.க. ஆட்சி அமைக்கும்.

    யாருடைய தயவிலும் ஆட்சி அமைக்கக்கூடிய சூழ்நிலை எங்களுக்கு ஏற்படாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் என்கவுன்ட்டர்.
    • போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது என்கவுன்ட்டர்.

    புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பகுதியில் திருச்சி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த பிரபல ரவுடி துரைசாமி போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

    துரைசாமி மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளது.

    துரைசாமி, போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    வம்பன் காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த ரவுடியை பிடிக்கச் சென்றபோது சம்பவம் நடந்துள்ளது.

    ஏற்கனவே ஒரு முறை ரவுடி துரையை போலீசார் துப்பாக்கியில் சுட்டுப்பிடித்துள்ளனர்.

    ரவுடி துரை என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேரில் ஆய்வு செய்துள்ளார்.

    • திருமண வரவேற்பு விழா இன்று மாலை நடைபெறுகிறது.
    • உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்துகின்றனர்.

    புதுக்கோட்டை:

    தமிழக சட்டத்துறை அமைச்சரும், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான எஸ்.ரகுபதியின் பேரன் டாக்டர் எஸ்.நாச்சியப்பன் ரகுபதி-டாக்டர் பி.அழகம்மை திருமணம் புதுக்கோட்டையை அடுத்த புதுப்பட்டியில் உள்ள மணமகள் இல்லத்தில் இன்று காலை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து திருமண வரவேற்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணி அளவில் புதுக்கோட்டை ஜெ.ஜெ. அறிவியல் கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

    மணமக்களை தமிழக முதல்-அமைச்சரும். தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்துகின்றனர்.

    இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4.30 மணிக்கு சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு 4.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார்.

    அங்கிருந்து மாலை 5 மணிக்கு தனி விமானத்தில் மாலை 5.50 க்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து 6 மணிக்கு காரில் புறப்பட்டு 6.45 மணிக்கு புதுக்கோட்டை செல்கிறார்.

    புதுக்கோட்டை ஜெ.ஜெ. கல்லூரியில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார். பின்பு அங்கிருந்து இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு 8 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். பின்பு 8.15 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருச்சி விமான நிலையம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட எல்லை ஆகிய இடங்களில் தி.மு.க. வினர் திரண்டு உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள்.

    • வீட்டிற்குள் புகுந்த கட்டு விரியன் பாம்பு குவினாவை தீண்டியது.
    • முன்னதாக பாம்புடன் வந்த பெற்றோரால் ஆஸ்பத்திரி வளாகத்தி பரபரப்பு நிலவியது.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த சங்கம் விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன், விவசாயி. இவரது மகள் குவினா (வயது 17 ). இவர் கல்லாகோட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குவினா தனது பெற்றவுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது நள்ளிரவு 12 மணி அளவில் வீட்டிற்குள் புகுந்த கட்டு விரியன் பாம்பு குவினாவை தீண்டியது. உடனே விழித்துக் கொண்ட மாணவி தனது பெற்றோரை எழுப்பி கூறியுள்ளார்.

    துரிதமாக செயல்பட்ட மதியழகன் தனது மகளை கடித்த பாம்பை அடித்து ஒரு பையில் போட்டுக் கொண்டு தனது மகளையும் அழைத்துக் கொண்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்.

    மருத்துவர்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு குவினா இன்று காலை கண்விழித்து தனது பெற்றோர்களிடம் பேசினார். மருத்துவர்கள் கூறும்போது மாணவி அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும் ஓரிரு நாளில் வீடு திரும்பலாம் என்றும் கூறினார்கள்.

    முன்னதாக பாம்புடன் வந்த பெற்றோரால் ஆஸ்பத்திரி வளாகத்தி பரபரப்பு நிலவியது.

    • பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழரசி, அந்த மாணவியை அழைத்து தனது இருக்கையில் அமர வைத்து, வாழ்த்தினார்.
    • தற்போது நிஜத்திலும் சில இடங்களில் ஒரு நாள் கலெக்டர், ஒரு நாள் போலீஸ் அதிகாரி என உயர் பதவிகளில் சிலர் அமர வைக்கப்படும் சம்பவமும் நடந்து வருகிறது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் ராணியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளின் படிப்பு மட்டுமில்லாமல் திறமையை ஊக்குவிப்பதற்காகவும், தலைமை பண்பை உருவாக்கும் வகையிலும் அவர்களில் சிறந்த மாணவி ஒருவரை தேர்ந்தெடுத்து அவரை பள்ளியின் தலைமை ஆசிரியையாக ஒரு நாள் பணியமர்த்த ஆசிரியர்கள் திட்டமிட்டனர். இதில் அந்த பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு உயிரியியல் பாடப்பிரிவில் ஆங்கில வழியில் படித்து வரும் மாணவி மெய்வர்சிதா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த பள்ளியில் அவர் 6-ம் வகுப்பு முதல் படித்து வருகிற நிலையில், படிப்பு மற்றும் தனித்திறமையில் சிறந்து விளங்கியதாக அவரை ஆசிரியர்கள் தேர்வு செய்தனர். மேலும் நேற்று பள்ளியின் ஒரு நாள் தலைமை ஆசிரியராக மாணவி மெய்வர்சிதா பணியமர்த்தப்பட்டார்.

    பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழரசி, அந்த மாணவியை அழைத்து தனது இருக்கையில் அமர வைத்து, வாழ்த்தினார். மேலும் ஆசிரியர், ஆசிரியைகளும் சக மாணவிகளும் அவரை பாராட்டி வாழ்த்தினர். தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர்ந்த மாணவி மெய்வர்சிதா, ஆசிரியர்கள் வருகைப்பதிவேடு மற்றும் தலைமை ஆசிரியர் மேற்கொள்ளும் அன்றாட பணிகளை பார்வையிட்டார்.

    அதன்பின் வகுப்பறைகளுக்கு சென்று மாணவிகள் மத்தியில் அவர் பேசினார். அப்போது மாணவி மெய்வர்சிதா பேசுகையில், ``ஒரு நாள் தலைமை ஆசிரியையாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். மாணவிகள் அனைவரும் நம்மிடம் உள்ள தனித்திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    பள்ளியோடு மாணவிகள் படிப்பை நிறுத்திவிடாமல் உயர்கல்வி படிக்க வேண்டும். ஆசிரியர், நீதிபதி உள்ளிட்ட பணிகளுக்கு வர வேண்டும். வாழ்க்கையில் முன்னேறி சாதிக்க வேண்டும். நீங்களும் ஒரு நாள் தலைமை ஆசிரியராக பணியாற்றக்கூடிய வகையில் திறமையை வளர்க்க வேண்டும்'' என்றார்.

    தமிழ் திரைப்பட நடிகர் அர்ஜூன் நடித்த `முதல்வன்' திரைப்படத்தில் ஒரு நாள் முதல்-அமைச்சராக அவர் பதவியேற்று செயல்படுவது போல காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இந்த காட்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. `ஒரு நாள் முதல்-அமைச்சர்' என இன்றளவும் பேசும்பொருளாக உள்ளது. இதேபோல நடிகை ஜோதிகா நடித்த `ராட்சசி' திரைப்படத்தில் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக அவர் பணிபுரிவது போலவும், அந்த பள்ளியை சிறந்த பள்ளியாக மாற்றும் முயற்சியில் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்வது போன்றும், மாணவ-மாணவிகளை சுழற்சி முறையில் ஒரு நாள் தலைமை ஆசிரியராக பணியில் இருப்பது போன்றும், அந்த மாணவ-மாணவிகள் பள்ளியை வழி நடத்துவது போலவும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இந்த காட்சிகளும் மக்களிடம் வரவேற்பை பெற்றது.

    தற்போது நிஜத்திலும் சில இடங்களில் ஒரு நாள் கலெக்டர், ஒரு நாள் போலீஸ் அதிகாரி என உயர் பதவிகளில் சிலர் அமர வைக்கப்படும் சம்பவமும் நடந்து வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டையில் அரசு பள்ளியில் ஒரு நாள் தலைமை ஆசிரியராக மாணவி ஒருவர் பணியாற்றியது மற்ற மாணவிகளிடம் ஊக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது.

    • விவசாயிகளும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.
    • பல்வேறு உணவு பொருட்களின் கண்காட்சி மக்களை பெரிதும் ஈர்த்தது.

    காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் "உணவுக்காடு வளர்ப்பு - மாபெரும் முக்கனி திருவிழா" எனும் பயிற்சி கருத்தரங்கு மற்றும் கண்காட்சி இன்று புதுக்கோட்டையில் நடைப்பெற்றது. சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளை சேர்ந்த விவசாயிகளையும் இவ்விழா ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    புதுக்கோட்டை திருவரங்குளம் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்ற இவ்விழாவை ராஜ்யசபா உறுப்பினர் அப்துல்லா அவர்கள் துவங்கி வைத்தார். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான விவசாயிகளும், பொது மக்களும் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவில் ஏற்பாடு செய்ப்பட்டு இருந்த கண்காட்சியில் இடம்பெற்று இருந்து நூற்றுக்கணக்கான முக்கனி ரகங்களை கண்டு விவசாயிகளும், பொது மக்களும் அசந்துப் போயினர்.

     

    காவேரி கூக்குரல் இயக்கம் மரம் சார்ந்த விவசாயம் குறித்து தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுற்றுச்சூழல் மற்றும் விவசாயிகளின் பொருளாதாரத்தை ஒருசேர மேம்படுத்த களத்தில் தொடர்ந்து இயங்கி வருகிறது. அந்த வகையில் முக்கனிகள் சார்ந்து உணவுக்காடு உற்பத்தி செய்வது குறித்து இவ்விழா நடத்தப்பட்டது.

     

     

    இவ்விழாவின் நோக்கம் குறித்து காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் பேசுகையில் "தற்சமயம் ஏற்பட்டுள்ள பருவ நிலை மாற்றத்தால், பெரிதும் பாதிக்கப்படுவது விவசாயிகள் தான். குறிப்பாக இந்த ஆண்டு மாம்பழத்தில் வெறும் 30% மட்டுமே மகசூல் கிடைத்துள்ளது. பலாவின் காய்ப்பு பாதியாக குறைந்து விட்டது, கணிக்க முடியாத சூறாவளிக் காற்று வீசினால் வாழை விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே இந்த அனைத்திற்கும் தீர்வாக நம் பாரம்பரியத்தில் இருக்கும் பலப் பயிர், பல அடுக்கு முறையை பின்பற்ற வேண்டும். எனவே உணவுக்காடு வளர்ப்பதன் மூலம் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கவவும், மண்ணில் நுண்ணுயிர்களை பெருக்கவும், ஆரோக்கியமான வாழ்வை பெறவும் முடியும். இதனை வலியுறுத்தும் விதமாகவே இந்த கருத்தரங்கு நடைபெறுகிறது" எனப் பேசினார்.

     

    இவ்விழாவை துவங்கி வைத்த அப்துல்லா பேசுகையில், "ஒரு நாட்டின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு வனமாக இருக்க வேண்டும். ஆனால் இன்று நம் நாட்டில் வெறும் 21% தான் வனமாக இருக்கிறது. ஒருப்பயிர் சாகுபடியில் சென்றதால் தான் இந்நிலை உருவாகி உள்ளது. எனவே இந்த சூழலை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் ஈஷா அமைப்பிற்கும், மற்ற தோழர்களுக்கும் வாழ்த்துகள்" எனப் பேசினார்.

    மேலும் இவ்விழாவில் சித்த மருத்துவர் சிவராமன் அவர்களின் 'நோய்க்கு தீர்வு நல்ல உணவுக்கான தேடலே' என்ற தலைப்பிலான காணொளி உரை திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சூழலியலாளர் ஏங்கல்ஸ் ராஜா, தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் ஆர்.செல்வராஜன், பெங்களூர் IIHR -இன் முதன்மை விஞ்ஞானி ஜி. கருணாகரன், கேரளா மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் (CTCRI) முதன்மை விஞ்ஞானி முத்துராஜ், இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்ப கழகத்தை (NIFTEM) சேர்ந்த முனைவர். வின்சென்ட் ஆகியோர் உணவுக்காடு குறித்த பல முக்கியத் தலைப்புகளில் பேசினர்.

     

    மேலும் அக்ரி.பி. ஹரிதாஸ், இயற்கை மருத்துவர் கோ. சித்தர், கர்நாடகாவை சேர்ந்த சந்திரசேகர், குருபிரசாத் ஆகிய உணவுக்காடு முன்னோடி விவசாயிகளும், வல்லுநர்களும் முக்கனி விவசாயம் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

    இந்த நிகழ்ச்சியில் 300 வகையான மாம்பழங்கள், 100 வகையான பலா மற்றும் வாழைப்பழ ரகங்கள் கண்காட்சியாகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டது. இத்துடன் முக்கனிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. மேலும் விவசாயிகள் நீண்ட வரிசையில் நின்று குறிப்பிட்ட சில வகை மா மற்றும் பலா கன்றுகளை வாங்கிச் சென்றனர். கேரளாவை சேர்ந்த சக்கை கூட்டம் அமைப்பினரின் பலாவை கொண்டு செய்யப்படும் பல்வேறு உணவு பொருட்களின் கண்காட்சி மக்களை பெரிதும் ஈர்த்தது.

    காவேரி கூக்குரல் இயக்கம் இவ்விழாவை இந்திய தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB), இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (IIHR), தேசிய உணவு தொழில்நுட்ப தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் (NIFTEM) மற்றும் மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் (CTCRI) ஆகிய 4 தேசிய ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    ×